நல்லறத்தைக் கைக்கொண்டு பிறருக்குநன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். ஆனால் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும் சிலர் பொருள், புகழ் செல்வாக்கு பெற்று நீண்டகாலம் வாழ்கிறார்கள். இவற்றைப் பார்க்கும் நமக்கு இதன் காரணம் புரிவதில்லை. ஏன் இவ்வாறு நல்லோர் மடிவதும் தீயோர் நீடூழி வாழ்வதும் நடக்கிறது? வினைப்பயன் தான் இதற்குக் காரணம்.
வினைப்பயன் என்ற அளவில் பார்த்தால் பாரம்பரியப் பதிவின் காரணமாகச் சிலர் நீண்ட நாள் வாழக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய முன்னோர்கள் 80,90 வயது வரை வாழ்ந்திருப்பார்கள். அதற்கு மேலும் சிலர் தம்முடைய முயற்சியாலும், ஒழிக்கத்தாலும் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்வதும் உண்டு.
தீயோர்கள் பணமும் புகழும் கொண்டு நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்று கூறுவது பொறாமையால் உண்டாகும் உணர்வின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் பணமும் புகழும் உடையவர் மனதில் அமைதி இருக்கின்றதா? உடலில் சுகம் இருக்கிறதா? இரவில் தூக்கம் வருகின்றதா? அவற்றைக் காத்துக் கொள்ள அவர் எவ்வளவு துன்பபடுகிறார் இதெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது.
ஒருவரது ஆயுள் நீளத்தைக் கொண்டோ, பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவற்றைக் கொண்டோ ஒருவர் புண்ணியவான் என்று நினைப்பது ஒரு மயக்கமே!
உண்மையில் எதிரி உங்களுக்கு உண்டு எனில் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே ஆகும்.
எவரும் எதுவும் பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை. இறக்கும் போது கொண்டு போஅதும் இல்லை. மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல் உடலாற்றல் இரண்டின் மூலம் கடனாற்ற வேண்டும்.
பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும். தாழவும் முடியும். வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும்.
கோயில்களில் வழிபாடு என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் ஆடு மாடுகளைப் பலியிடுவதால் அந்த இடம் மனித வாழ்க்கைக்குத்தகுதியற்ற இடமாக இருக்கும். மிருகங்களுடைய உயிர்கள் மனித உடலோடு இணைந்து செயல்பட முடியாது. அதே போன்று மனிதனுடைய உயிரும் மிருகங்களின் உடலில் புகுந்து கொள்ள முடியாது. காரணம் இரண்டினுடைய தன்மையும், பரிணாமமும் வேறுபட்டவை.
ஆனால் அங்கே கொலையை நிகழ்த்துகிற மனிதனுடைய எண்ணமும், கொலையுறுகின்ற உயிரினுடைய அலறலும் துடிதுடிப்பான உணர்வலைகளும் அந்த இடத்தை மாசுபடுத்தி இருக்கும். இவை ஆதிகால மக்கள் ஆன்மீக அறிவின் வளர்ச்சியில்லாத போது தொடங்கப்பட்ட பழக்கங்கள். அத்தகைய பழக்கங்களிலிருந்து மக்கள் மெதுவாக வெளியேறி ஆன்ம அமைதியை நாடும் வழிபாட்டு முறையை கைக்கொள்வது நலம்!
- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி.
1 comment:
Excellent advice. thanks.
Post a Comment