Saturday, June 8, 2013

ஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை!
தத்துவங்களை விளக்குகிற போது கதாரூபம் கொடுப்பதுண்டு. அதாவது கதை உருவம். அப்போது தான் அவை சுலபமாக பாமர ஜனங்களுக்கு புரியும். தத்துவம் அப்படியே பொது ஜனங்களிடம் ஏறாது. ஒன்று கதாரூபம் தரவேண்டும், அல்லது ஒரு சடங்காக அதை ஆக்கி காரியத்தில் செய்யும் படியாக பண்ணவேண்டும். இம்மாதிரி சமய கர்மானுஷ்டானங்களை செய்யும் போதே அவற்றினுள்ளே 'சிம்பாலிக்காக' இருக்கிற தத்துவங்கள் புரியும். சடங்குகள் எல்லாமே ரூபகம் (ஸிம்பல்) தான். உள்பொருளை புரிந்து கொண்டாலே போதும்

ஆனால் நாள்பட்ட வழக்கத்தில் இப்படிப்பட்ட கதைகள் அல்லது சடங்குகள் அவற்றின் உள்ளுரைப் பொருளாக இருக்கப்பட்ட தத்துவங்களில் இருந்து விலகிவிடக்கூடும் அல்லது அதை மறந்தே போகக்கூடும். சடங்கே வேண்டாம் என்று சொல்லவில்லை. பலன் தரும் சடங்குகளோடு தத்துவங்கள் உட்பொருளாக உள்ளன என்கிறேன். ஆனால் அதன் மூலத் தன்மையை தத்துவத்தை மறந்து அச்சடங்கு வழி மாறி பயனிக்கக்கூடும்.

வெளி தேசங்களில் பல ஆயிரம் வருஷங்கள் முன்னால் பரவி இருந்த வேத மதமே பின்னால் அதன் அடித்தள தத்துவத்தில் இருந்து விலகி பின் சம்பந்தமே இல்லாத புதிய மதமாக உருவாயின. உதாரணமாக ஹீப்ரூ மதங்களில் ஆதாம் ஏவாள் கதை என்று கேட்டிருப்பீர்கள். "அறிவு மரம் என்று ஒன்று இருந்தது. அதன் பழத்தை புசிக்கக்கூடாது என்பது ஆண்டவன் கட்டளைஆதம் அப்படியே சாப்பிடாமல் இருந்தான். ஆனால் ஈவ் அதை சாப்பிட்டாள். அதன் பிறகு வாழ்வோ தாழ்வோ அவளுக்கு என்ன சம்பவிக்கிறதோ அதுவே தனக்கும் சம்பவிக்கட்டும் என்று ஆதாமும் அந்த பழத்தை சாப்பிட்டான்" என்பது பைபிள் பழைய ஏற்பாட்டின் முதல் கதை (Genesis). 

நம் உபநிஷ தத்துவங்களில் ஒன்று தான் இப்படி கதாரூபமாக இருக்கிறது. அப்படி ஆகும் போது காலம் தேசம் இவற்றின் மாறு பாட்டால் குளறுபடியும் உண்டாகி இருக்கிறதுமூலத்தத்துவமே மறைந்து போகிறார் போல, உபநிஷத்தில் என்ன சொல்லி இருக்கிறது? பிப்பல மரத்தில் இரண்டு பட்சிகள் இருக்கின்றன. ஒன்று பிப்பலத்தை சாப்பிடுகிறது. இன்னொன்று சாப்பிடாமல் மற்றதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது என்று உபநிஷத் சொல்லுகிறது. சரீரம் தான் அந்த விருக்ஷம். அதில் ஜீவாத்மாவாக ஒருத்தன் தன்னை நினைத்துக் கொண்டு விஷயானுபவங்கள் என்ற பழத்தை தின்று கொண்டு இருக்கிறான். இவன் ஒரு பக்ஷி

இந்த சரீரத்திலேயே பரமாத்மா இன்னொரு பட்க்ஷியாக இருக்கிறான். அவன் தான் ஜீவனை ஆட வைக்கிறவன். ஆனாலும் அவன் ஆடுவதில்லை. சர்வ சாட்க்ஷியாக அவன் ஜீவனின் காரியங்களைப் பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிறான். இந்த ஜீவனுக்கு அவனே ஆதாரம் ஆனாலும் அவன் விஷயங்களை அனுபவிப்பதோ பழத்தை சாப்பிடுவதோ அதற்கான கர்ம பலனை அனுபவிப்பதோ இல்லை. இதை உபநிஷதம் அதை சாப்பிட்ட பக்ஷி சாப்பிடாத பட்க்ஷி என்று கவித்துவத்தோடு சொல்கிறது

சப்பிடுபவன் ஜீவன், சாப்பிடாதவன் பரம்பொருள் தன்னை ஆன்மாவாக உணர்ந்திருக்கிறவன். இந்த ஜீவன் தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகி இருக்கிறான். ஜீ என்பது ஆவது ஒரு வியாகரன விதி. வரிசை சப்தங்கள் யாவரிசையாக மாறி விடுவது சகஜம். இப்படித்தான் யமுனா ஜமுனா. யோகிந்திர் என்பது ஜோகிந்தா என்றாயிற்று.

ஜீவ என்பது ஈவ் என்றாயிற்று. ஆத்மா என்பது ஆதம் ஆக மாறி விட்டதும். பிப்பலம் என்பது ஆப்பிள் என்றாயிற்று. அறிவு விருட்ஷம் என்பதும் நம் போதி விருட்ஷம் தான். போதம் என்றால் ஞானம் என்று பொருள். புத்தருக்கு போதி விருட்ஷத்தின் கீழ் தான் ஞானம் உண்டாயிற்று என்பதுஎல்லோருக்கும் தெரிந்தது தானே. ஆனால் அவருக்கும் முந்தியே அரச மரத்திற்கு போதி விருட்ஷம் என்று பெயர் இருந்தது.  உபநிஷதம் ஆனது தூர தேசம் ஒன்றில் எத்தனையோ காலத்திற்கு பின்னால் மாறி மாறி புது ரூபம் எடுக்கிற போது மூல தாத்பரியம் மாறி போனது.

ஒரு போதும் விஷயானு போகத்திற்கு ஆளாக முடியாத ஆத்மாவும் பழத்தைச் சாப்பிட்டதாக பைபிள் கதை திசை திரும்பி விடுகிறது. இப்படி ஆத்மா ஆதம் (Adam) ஆகி,  'ஜீ'வன் ('Jeev'van) 'ஈவ்' (Eve) ஆகி, 'பிப்பலம்' ஆப்பிள் ஆகி ஒரு புதிய கதையே உண்டாகிவிட்டது.

பாரதத்திலிருந்த வேத மதங்கள் பல நாடுகளில் இருந்தன என்பதும் அது காலப்போக்கில் மறுவி தொடர்பற்ற அர்தத்துடன் பிறந்த நாட்டுக்கே வேறு உருவில் வேறு அர்தத்தில் உருமாறி வந்திருக்கிறது என்பதும் இதன் மூலம் அறியலாம்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்No comments: