Friday, January 15, 2010

சம்பவாமி யுகே யுகே!


அர்ஜுனன் கேட்கிறான்:

பகவானே! சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவன். நீங்கள் சூரியனுக்குப் பிறகு பிறந்தீர்கள். ஆனால் முதலில் நீங்கல் சூரியனுக்கு உபதேசித்ததாகக் கூறுகிறீர்கள். இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது?

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்:

அர்ஜுனா கேள்! நானும், நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.

நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன். இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் நான் அவதாரம் செய்கிறேன்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் மேலும் கூறுகிறார்..

"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"

அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.

"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.

என்னுடைய தெய்வீகமான பிறப்பு, செயல் ஆகியவற்றை உள்ளபடி அறிந்தவன் இந்த மனித உடலைவிட்டு நீங்கிய பிறகு மறுபிறவி அடைவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை வந்து அடைகிறான்.

காமம், ஆசை, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களும், என்னையே நினைத்து, என்னையே சரனாக அடைந்து, ஞானமாகிய அக்னிப் பரீட்சையால் பொசுக்கப்பட்டு புனிதர்களாய்ப் பலர் என்னுடன் ஒன்றாகி ஐக்கியம் அடைந்திருக்கிறார்கள்.

மனிதர்கள் எந்த வழியில் என்னை நாடினாலும், அதே வழியில் நான் அவர்களுக்கு அருள் புரிகிறேன். அர்ஜுனா! மக்கள் எங்கும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

இங்கே ஒரு விஷயம் கவனிக்கத்தக்கதாகிறது. பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் "நானும், நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்" என்று உரைக்கிறார்.

பல பிறவிகள் என்று சொல்லும் போது பெரும்பாலும் அதில் நம்பிக்கை உண்டாவதில்லை. ஏனெனில் நம்முடைய இன்றைய இருப்பிற்கு முன்னால் என்ன இருந்தது என்றும் அதற்கு பின்னால் என்ன இருக்கப் போகிறது என்றும் நமக்குத் தெரிவதில்லை. அதனால் நமக்கு அதில் நம்பிக்கை உண்டாவதில்லை. ஆனால் பல பிறவிகள் இருப்பது உண்மை என்பதையே பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் எடுத்துரைக்கிறார்.

உபநிஷத்துக்கள் முழுவதுமே ஆத்மாவின் நிரந்தரத் தன்மையையும் பிறவி மற்றும் மறுபிறவி பற்றிய தத்துவ போதனைகளையே எடுத்துச் சொல்கின்றன. அவை இன்றைய வாழ்விருப்பின் தன்மைக்கேற்ப 'நீ மறுபிறவி அடைவாய்' என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

உதாரணமாக சில விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். இரண்டரை வயது குழந்தை தன்னுடைய முற்பிறவி பற்றி கூறுவதும் நான் இன்னார், எனது மனைவி இவள் நான் இந்த ஊர்க்காரர் என்று சொல்வது அவை ஆராயப்படும் போது நிஜமாக இருப்பதும் நடந்திருக்கிறது. அவர்களின் உடல் அழிந்திருக்கிறதே தவிற ஆத்மா அழிவதில்லை. மீண்டும் பிறப்பெய்தி இருக்கிறது.

ஒரு குழந்தை பிறந்தது முதல் மூன்று அல்லது நான்கு வயது வரை புனர்ஜென்ம ஞாபம் இருக்கும். பிறகு அவை வாழும் சூழ்நிலைகளுக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகளை இழந்து விடும். மிகச்சிலரே அவற்றைப் பேசும் அளவுக்கு ஆற்றல் கொண்டிருப்பார்கள். பலருக்கு அவை எது பற்றிய நினைவு என்பதையே உணர முடியாது. இவையாவும் மனிதன் ஜென்ம ஜென்மங்களாக பிறப்பெடுப்பதையே காட்டுகிறது.

சில குழந்தைகள் மழலைப் பேச்சு மாறுவதர்குள்ளாகவே சிறந்த அறிவாற்றலை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் பூர்வ ஜென்ம தொடர்ச்சியாகவே அது கருதப்படுகிறது.

சிலர் குழந்தைப் பருவத்திலேயே மிகவும் கோபக்காரர்களாகவும், திருடும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் மிகவும் சாந்தமான குணம் கொண்டதாக இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருக்கும். இவை யாவும் முற்பிறவியில் அவர்களின் இயல்புகளை ஒட்டியே அமைவதாகக் கூறப்படுகிறது.

ஆக நம்மைப் போன்ற பிறவிப்பெருங்கடலில் சிக்கி நிரந்தர நினைவுகள் மறந்து போனவர்களால் அவற்றை ஞாபகப் படுத்தி பார்ப்பது இயலாததாகி இருக்கிறது. எனவே "'அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்" என்று பகவான் அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறுவது நமக்கே சொல்வதாகும்.

ஸ்ரீ க்ருஷ்ணரின் பிறப்பிற்கும் நமது பிறப்பிற்கும் அதுவே வித்தியாசம். அவர் அறிந்தே பிறக்கிறார். நாம் அறியாமல் (அறியாமையால்) பிறக்கிறோம். "நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன். இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் நான் அவதாரம் செய்கிறேன்", அதாவது நிரந்தரமான தன்மையை உடையவர் தனது சக்தியினால் பிறப்பை உணர்ந்து அவதரிக்கிறார். ஆக எப்பொழுது தொடர்ச்சியான சாதகத்தால் நாம் பிறப்பையும் இறப்பையும் உணரும் தன்மையைப் பெறுகிறோமோ அப்பொழுது நாமும் ஸ்ரீ க்ருஷ்ணராகியிருப்போம்.

அப்படியென்றால் 'மறுபிறவி அடையாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்' என்ற கேள்வி உண்டானால் மறக்காமல் கீதையைப் படியுங்கள். கீதை முழுவதிலும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் பாதை காட்டுகிறார்.

படிப்போம், தொடர்வோம்!


No comments: