Tuesday, February 9, 2010

கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் யாவை?


மீனாட்சி அம்மன் கோவில், மதுரை.


கோவிலுக்குச் சென்றால் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

1. நீராடாமலும் கை கால்களை சுத்தம் செய்யாமலும் சமயக்குறி இல்லாதும் செல்லக்கூடாது

2. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்

3. விளக்கேற்றும் பொழுதும் விளக்கில்லாத போதும் செல்லக்கூடாது

4. புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக்கூடாது

5. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை இறைவனுக்கு அர்பணிக்கக் கூடாது

6. இறைவனின் மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது

7. மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது

8. கோவிலுள் குப்பை கூளம் இடலாகாது (வைத்தீஸ்வரன் கோவில் ஒரு குப்பை மேடாகவே
காட்சி தருகிறது)

9. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.

10. துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லல் ஆகாது.

11. தரிசனம் முடிந்து திரும்பும் போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது.

12. கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக்கூடாது.

13. அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது. இறைவன் பிரசாதத்தை பிறர் கால்களில் படுமாறு கீழே பொடுவது நல்லதல்ல.

14. ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும். சிலர் கோவில்களுக்கு செல்லும் போது தான் நிறைய நகைகளும் பட்டுப் புடவைகளும் அணிந்து தகதகவென்று செல்வார்கள். அதைத் தவிர்க்க வேண்டும்.

15. ஆமணக்கு எண்ணையை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது.

இவ்வாறு பெரியவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

இதில் சில விஷயங்களை சற்று விளக்கமாக பார்க்க வேண்டும்.

கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது. இவை மிகவும் முக்கியக கவனிக்கப் பட வேண்டிய விஷயங்கள் ஆகும்.

தற்காலத்தில் கோவிலுக்கு வருபவர்களில் பலர் அங்கே கிடைக்கும் நேரத்தை நிறைய வம்பு பேச உபயோகப்படுத்துகிறார்கள். கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் கொஞ்சம் பெரிய கோவிலாகவும் அமைதியாகவும் இருந்தால் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடமாக மாறிவிடுகிறது.

தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலில் எப்பொழுதும் பள்ளிச் சிறார்களும் காதலர்களும் கோவில் பிரகாரங்களில் படுத்துக் கிடப்பதும் விளையாடிக் கொண்டிருப்பதையும் வம்பு பேசிக்கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.

ஆயிரம் வருஷம் பழமைவாய்ந்த தஞ்சைப் பெரிய கோவிலின் சிவனை முதல் முறை அருகே நின்று பார்ப்பவர்கள் அரைமணி நேரம் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள். அவ்வளவு பிரம்மாண்டம், பிரமிப்பு. கோவிலாயிற்றே என பக்தியோடு வருபவர்கள் கோவில் வளாகத்திற்குள் கூட்டம் கூட்டமாக பள்ளிச் சீருடைகளுடன் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் இது கோவிலா இல்லைப் பொழுது போக்குப் பூங்காவா என்று தோன்றிவிடுகிறது.

ஓரமாக உட்கார்ந்திருந்தாலும் பரவாயில்லை. சிறு சன்னதிகளின் வாசல்களிலேயே சாமிக்கு முன்பாகவே கூட்டமாக அடைத்துக் கொண்டு பள்ளி மாணவர்கள் அமர்ந்து விடுவார்கள். நாம் சென்று சாமி கும்பிட்டால் என்ன இவன் நம்மைக் கும்பிடுகிறான் என்பது போல பார்த்து பிறகு போனால் போகிறது கும்பிட்டுப்போ என்பதுபோல ஒதுங்குவார்கள்.

இவ்வாறு நடந்து கொள்வதால் கோவில் என்ற மரியாதையும் பக்தி என்ற உணர்வும் குறைந்து போய்விடும். கோவிலுக்கு மரியாதை இல்லாமல் பொழுது போக்கு பூங்காவாக மாற்றி விட்டால் பக்திக்கு எந்த இடம் போவார்கள்? ஒரு இடத்திற்கு செல்லும் போது முதலில் நாம் என்ன உணர்வை பெறுகிறோமோ அதுவே நமது ஆழ்மனதில் பதிந்து விடும். பிறகு மீண்டும் அந்த இடம் செல்லும் போது அதே உணர்வு நம்மைத் தொற்றிக் கொள்ளும். அதனால் தான் கோவிலுக்குச் சென்றால் அமைதியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். பின் எத்தனை முறை கோவிலுக்குச் சென்றாலும் அமைதி நம்மைத் தொற்றிக் கொள்ளும். அதனால் தான் இன்றும் பலருக்கும் கோவிலுக்குச் சென்று வந்தால் தான் மனது அமைதியாக இருக்கிறது என்று கூறுவார்கள். இந்த அமைதியான உணர்வு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அனைவருமே கோவிலில் அமைதி காப்பதை தமது கடமையாகவே கொள்ள வேண்டும்.

திருனக்கர அம்பலம், கோட்டயம்.

கேரளாவில் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே மக்கள் சன்னதி வாசலில் பேசுவதில்லை. கோவிலின் மற்ற பிரகாரங்களில் நின்று பேசினாலும் குசுகுசுவென்றே பேசுவார்கள். இந்த நாகரீகமும் கட்டுப்பாடும் தமிழர்களிடம் காணாமல் போன மர்மம் என்னவோ?

சிலர் கோவிலுக்குள் கோபம் கொள்வார்கள். மன அமைதிக்காக வந்த இடத்தில் 'கொஞ்சம் முன்னாடி போங்க சார், அப்படி திரும்பி நில்லுங்க சார், எவ்வளவு நேரம் பாப்பீங்க நகருங்க சார்' என்று பிறருக்குக் கட்டளை போடுவதிலேயே குறியாக இருப்பார்கள். கட்டளைக்குப் படியவில்லை என்றால் உரத்த குரலில் சண்டைபிடிப்பார்கள். இவையெல்லாம் கோவிலுக்குள் செய்யக் கூடாத காரியங்களாகும். இவர்கள் தன்னுடைய அமைதியைக் தொலைத்துக் கொண்டு பிறர் அமைதியையும் கெடுப்பவர்களாவார்கள். சில பூசாரிகளே பக்தர்களிடம் கோபித்துக் கொள்வதும் உண்டு. அது இன்னும் மோசம். இவர்கள் இறைவன் சன்னதியில் நிற்பதற்கே தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்.

கோவிலுக்குள் ஜாதி வேறுபாடு பார்த்து ஒதுங்கி நிற்பதும், ஏற்றத்தாழ்வு கொள்வதும் அறவே கூடாது. இறைவன் முன் எல்லோரும் சமம் என்கிற உனர்வு தீர்க்கமாக இருக்க வேண்டும்.

கோவிலுக்குள் ஒருவர் காலில் மற்றவர் விழுந்து ஆசி பெறக்கூடாது என்றும் சொல்வார்கள். ஏனெனில் கோவிலுக்குள் இறைவனைத் தவிற யாரும் பெரியவர் இல்லை.


மேலும் கோவிலில் அதிர்ந்து நடத்தலே கூடாது என்று குறிப்பிட்டு, பிரதக்ஷணம் செய்து வலம் வரும் பொழுது எப்படி பவ்யமாக நடக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுவர். அதாவது "நிறை மாத கர்பிணி ஒருத்தி தலையில் எண்ணைக் குடம் வைத்து, காலில் விலங்கு அணிந்திருந்தால்" எப்படி மெதுவாக நடப்பாளோ அந்த அளவிற்கு மெதுவாக நடக்க வேண்டுமாம்.

சரி ஏன் இப்படி மெதுவாக சுற்றிவர வேண்டும் என்கிறார்கள். ஒருமித்த கருத்துடனும், மனத்துடனும் இறைவனை நினைப்பதற்க்காக சொல்லப்பட்டது. கடமையே என்று வேகமாக மனம் ஈடுபாடின்றி ஓடுவதால் பயனில்லை தானே.

சிலர் அலுவலகம் போகும் போது அல்லது வேலை முடிந்து வீட்டிற்ச் செல்லும்
போதும் கோவிலுக்குச் செல்வதுண்டு. அல்லது சிலர் கோவிலில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று தீர்மானித்தே கோவிலுக்குள் நுழைவதும் உண்டு. இவர்கள் வேகவேகமாக சன்னதியை பிரதக்ஷணம் வருவார்கள். இதனால் மனதில் கோவிலுக்குச் சென்று திரும்பியதற்கான அமைதி இருக்கவே இருக்காது. நாம் வாழ்க்கைச் சக்கரத்திற்கு அடிமைகளாக இருக்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும். கால நேரத்தின் பால் கட்டுண்டு கிடக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றில் இருந்து வெளிப்பட்டால் தான் மனம் அமைதியை அடைய வழி பிறக்கும் என்பதை உணர வேண்டும். அதற்கான பயிற்சிகள் தான் கோவில் ப்ரார்தனைகளும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற வழி முறைகளும். இதில் மூடத்தனம் எதுவும் இருக்க முடியாது. அனுபவித்தால் மட்டுமே உணரக்கூடியது அல்லவா.

ஆக மிகவும் மெதுவாக ப்ரதக்ஷணம் வரும் போது இந்த கால நேர கட்டுக்களை உடைக்கிறோம். நிஜ வாழ்வில் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரம் கரையக் கூடியது. ஆனால் காலம் என்பது நிரந்தரமானது. அது ஆரம்பிப்பதும் இல்லை கரைவதும் இல்லை என்ற ஒரு மன அமைதிக்கு வருகிறோம்.

நடைமுறை வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு எல்லைக் கோடு இருக்கும். காலை முதல் இரவு வரை ஓட்டம் இருக்கும். இங்கே தொடங்கி இங்கே முடிக்க வேண்டும் என்ற திட்டம் இருக்கும். ஆரம்பமும் முடிவும் இருக்கும். பிறகு அடுத்த நாள் என்று தொடங்கும். நாம் நேரம் ஆகிறதே என்கிற பரபரப்பை அடக்கி மிகவும் மெதுவாக கோவிலைச் சுற்றி வரும்போது ஒரு எல்லைக் கோடு இல்லாத காலத்தை உணரமுடியும். பிரபஞ்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது சுற்றி வருகிறது அவ்வளவே. அது எதற்கும் அவசரப்படுவதில்லை. பூமியும் சூரியனும் மற்ற கிரகங்களும் வெறுமனே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை தத்தமது இயக்கங்களை எண்ணிக்கையில் கொள்வதில்லை.

நாள் கணக்கும் வருடக்கணக்கும் நமக்குத்தான் பூமிக்கு இல்லை. சூரியனுக்கும் இல்லை. சந்திரனுக்கும் இல்லை. அவைகள் சுற்றுக் கணக்கை நேரம் பார்த்துச் செய்யவில்லை. சுற்றுக் கணக்கை எண்ணிப்பார்த்துச் சுற்றுவதில்லை. ஆனால் அவைகள் சுற்றி வருகின்றன. நிரந்தரமாக அங்கேயே இன்னும் சுற்றப்போகின்றன. இத்தனாவது சுற்றுக்குப் பிறகு நிறுத்திவிடுவோம் என்ற திட்டங்கள் அவைகளுக்கு இல்லை. அவைகள் கால நேரங்களில் கட்டுப்படுவதில்லை. எண்ணிக்கைகளில் அடங்குவதில்லை.

ஆக உங்கள் கைக்கடிகாரத்தை நிறுத்திவிட்டு கோவில் பிரகாரத்தைச் சுற்றிப்பாருங்கள். நீங்களும் பிரபஞ்சக் காலத்தோடு கலக்கத் துவங்குவீர்கள். பிறகு உங்கள் கடிகார நேரம் உங்களுக்கு இரண்டாம் பட்சமாகவே படும். கால நேர எண்ணிக்கைகள் என்ற கட்டுக்களை விட்டு நிரந்தரமான இயக்கத்தைப் புரிந்து கொள்வதற்க்காகவே கோவிலில் மிகவும் மெதுவாகவும் அமைதியாகவும் ப்ரதக்ஷணம் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கின்றனர்.

நேரம் பார்க்காமல் அமைதியாக ப்ரதக்ஷணம் வாருங்கள். நீங்களும் பிரபஞ்சத்தின் அமைதியை உணர்வீர்கள். மற்றவர்கள் "சார், கொஞ்சம் வேகமா போங்க" என்றால் அவர்களுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.

மேலும் சுற்றிய அசதியும் தெரியாமல் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு வரவேண்டும் என்றுக் கூறுவர். மொத்தத்தில் ஒரு முறை கோவிலுக்குள் நுழைந்து திரும்பினால் ஆழ்மனம் அமைதியும், களைப்பற்ற மகிழ்ச்சியான உணர்வும் கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது முழுக்க முழுக்க மனோவைத்தியம் தானே அன்றி வேறில்லை.

மீனாட்சி அம்மன் கோவில், மதுரை.

கோவிலுக்குச் சென்றால் மனதை அமைதியாக வைத்திருக்க இத்தகைய பயிற்சிகளை நமக்கு நம் முன்னோர்கள் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் அவமதிக்காமல் முறையாக பயிற்சி எடுத்து மனதை அமைதிப்படுத்தினாலே நாம் முழுமையான மனிதர்களாக வாழ நல்ல வழி கிடைக்கும்.

இவற்றைப் புரிந்து கொள்ளாமல் புறந்தள்ளுகிறவர்கள் பின்னாட்களில் மன அமைதிக்கான பயிற்சிக் கூடங்களிலும், மனநல மருத்துவரின் கவுன்ஸிலிங்கிற்கும் பணம் செலவு செய்து மாள்கிறார்கள்.

ஆக அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது சத்தம் இல்லாமலும், கடிகார முள்ளை பார்க்காமலும் மனதை கோவிலிலும், ப்ரகாரச் சுற்றிலும் லயிக்கச் செய்யுங்கள். மனதின் மாற்றத்தை உணருங்கள். உணர்ந்ததைக் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்கள்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

11 comments:

LK said...

nalla pathivu

hayyram said...

thanks Mr.LK. Welcome.

karthik said...

I am verymuch impressed with your post.

Thank you for your good work.

This is my first visit to your blog, but now i am not able to quit/ leave your pages.

I'm mad on it.

Keep it up.

hayyram said...

thanks karthik. u r welcome.

Raja said...

Very nice and informative blog.. Very much impressed.. Keep on with ur good work hayyram..

Raja said...

This blog restricts copying its contents.. it will be better if such access are permitted. by doing so the message and moto of blog will spread fast and reach many people. please think about it..

Manoharan said...

Nice...,

senthil kumar said...

oru chinna pathivu. thulasi pondra pathrangalai (ilaigal-leaves eg. vilvam, vanni,panneer ....) vendumaanal neeril alasalaam. aanal malargalai alasuvathu sasthirathil vilakkapattathu. pukalai suthamaaga nanhavanathil sekarikkavendum andri athanai suthiyin porutu neeraal alampuvathu koodaathu ayya

chinnu said...

I HAVE BEEN WITH THAMILISH WITH LAST ONE YEAR BUT I DONT KNOW HOW I MISSED U.GOOD ARTICLE ON HINDUISM, NEW GENERATION MUST READ.

chinnu said...

PLEASE INCLUDE ME WITH YOUR SUBSCRIBER LIST.

hayyram said...

நன்றி சின்னு. அடிக்கடி வாருங்கள். நிறைய பகிர்ந்து கொள்ளலாம்.