இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கும் பொழுது, இத்தனை எதிர்ப்பிற்கிடையிலும் திரு நரேந்திர மோதி எப்படி அசாத்திய வெற்றியைக் கண்டார் என அவரைப் பிடிக்காத பலர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. பகவத் ஸங்கல்பம் என்று ஒன்று உண்டு. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என இறைவன் நிச்சயித்திருந்தால் அதை நம்மால் மாற்ற முடியாது என்பார்கள். சமீபத்தில் அப்படி நடந்த ஒன்று தான் மோதி பாரதப்பிரதமர் ஆனது எனலாம். ஆம், எத்தனை அவதூறுகள் எத்தனை குற்றச்சாட்டுகள், எத்தனை எதிர்ப்புகள், எத்தனை விமர்சனங்கள் - அத்தனையையும் தாண்டி இந்த பெரிய ஜனநாயக்க நாட்டின் எதிர்ப்பாரற்ற பிரதமர் ஆவதென்றால் சும்மாவா? இது தான் ஈஸ்வரனின் விருப்பம் என்றால் பகவத் சங்கல்பத்தை யாரால் மாற்ற முடியும்?
என்னதான் புத்தியை உபயோகித்து சில பரிகாரங்கள் செய்து விதியை மாற்றலாம் என்று நினைத்தாலும் இறைவன் நிச்சயித்தது எதுவோ அதுவே நடக்கும் என்பதற்கு பாஸ்கராச்சாரியாரின் கதையை உதாரணமாகச் சொல்லுவார்கள்.
யார் இந்த பாஸ்கராச்சாரியார் என்கிறீர்களா? நம் நாட்டில் முதன் முதலில் ஏவப்பட்ட இரண்டு வின்கலத்திற்கு ஆர்யபட்டா என்றும் பாஸ்கரா என்றும் பெயர் வைத்தார்கள் ஞாபகம் இருக்கிறதா? அதில் ஒருவர் தான் இந்த பாஸ்கராச்சார்யார். மிகப்பெரிய கணித மேதை, ஜோதிஷ வல்லுனர். வின்வெளி ஆராய்ச்சியாளர். அவரது வாழ்க்கையில் நடந்த ஸ்வாரஸ்யமான சம்பவத்தை திரு சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இப்படி அழகாக விளக்குகிறார்.
"எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராச்சாரியார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக்காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்ற முடியாது என்பதற்கு திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந்தது. அவருடைய பெண்ணுக்கு லீலாவதி என்று பெயர். ஜாதகப்படி அவளுக்கு ரொம்பவும் மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராச்சாரியார் அறிந்திருந்தார். ஆனாலும் தமது கெட்டிக்காரத்தனத்தினால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான ஒரு லக்னத்தைக் கண்டுபிடித்து அதிலே புத்ரிக்கு விவாஹம் செய்து விட்டால் அவள் தீர்க்க ஸுமங்கலியாக இருக்கச் செய்து விடலாம் என்று நினைத்தார். அந்த மாதிரியான க்ரஹ சேர்க்கை உடைய ஒரு லக்னத்தில் லீலாவதிக்குக் கல்யாண முஹ¨ர்த்தம் வைத்தும் விட்டார்.
அந்தக் காலத்தில் இப்போது போல் கடிகாரம் கிடையாது. வாஸ்தவத்தில் அக்காலத்தில் இருந்ததுதான் அசல் கடிகா. கடம், கடிகா, கடிகை என்பதெல்லாம் பானை மாதிரியான தீர்த்த பாத்திரத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜல பாத்திரமே பூர்வகாலத்திய கடிகா அல்லது கடிகாரம். அதிலே மேல்பாகம், கீழ்பாகம் என்று பிரிந்திருக்கும். மேல் பாகத்தில் துளித்துளியாக விழும். மருந்து பாட்டிலில் டோஸ் மார்க் பண்ணியிருக்கிற மாதிரி, கீழ் பாகத்தில் அளவுக்கோடுகள் போட்டிருக்கும். துளித்துளியாய் விழும் ஜலம் இன்ன கோடுவரை வந்தால் இத்தனை நாழிகை என்று கணக்குப் பண்ணிவிடுவார்கள். அதிலுள்ள டோஸ் மார்க் ஒருநாளில் அறுபதில் ஒரு பங்காகும். 'நாழிகை'என்று தமிழில் சொல்லப்படும் இந்தக் கால அளவுக்கு ஸம்ஸ்கிருதத்தில் 'நாடிகா'என்பதோடு 'கடிகா'என்றே இன்னொரு பெயர் உண்டு. அது 24 நிமிஷம் கொண்டது. Water -clock, Water glass என்று இங்கிலீஷிலும் சொல்வார்கள். ஜலம் சீதோஷ்ணத்தைப் பொறுத்து evaporate (ஆவி) ஆவதால், இதில் ஏதாவது கணக்குத் தப்பு வரும் என்று, ஜலத்துளிக்குப் பதில் 'எவாபொரேட்'ஆகாத மண் துகள் விழுகிற மாதிரிச் செய்யும் கடிகாரத்துக்கு hour - glass என்று பெயர்.
அந்நாள் வழக்கப்படி, லீலாவதி விளையாட்டுப் பெண்ணாக இருந்த சின்ன வயசிலேயே கல்யாணம் நிச்சயித்திருந்தது. அந்தக் குழந்தை மேலே சொன்ன மாதிரியான ஜல கடிகாரத்திடம் வந்து, குனிந்து பார்த்து ஏதோ சேஷ்டை பண்ணிற்று. அப்போது அதன் மூக்குத்தியிலிருந்து ஒரு சின்ன முத்து கடிகாரத்துக்குள் விழுந்து, மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் நடுவேயுள்ள துவாரத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.
இதனால் விழுகிற துளி சின்னதாகி விடும் அல்லவா? இப்படி, இருக்க வேண்டியதை விடச் சின்னதான துளிகளாக விழுந்து முஹூர்த்த லக்னக் கோட்டுக்கு ஜலம் வந்தபோது, வாஸ்தவத்தில் அந்த சுபநேரம் தப்பி, அடுத்த லக்னம் வந்து விட்டது!அது கெட்ட லக்னம். அந்த லக்னத்தில் விவாஹமானதால் லீலாவதி ஜாதகப்படியே ரொம்பவும் பிஞ்சு வயஸில் பதியை இழந்து விட்டாள்!
முத்து விழுந்ததை அந்தக் குழந்தை உள்பட ஒருத்தரும் முதலில் கவனிக்காதலால் இத்தனை பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அப்புறம் விஷயம் தெரிய வந்தபோது விதியை யாரும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டார்கள்."
- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
இதைத்தான் ரஜினி ஸ்டைல்ல சொல்லுவாங்களோ? "அவன் குடுக்க நினைக்கிறதை யாராலும் தடுக்க முடியாது, அவன் தடுக்க நினைக்கிறதை யாராலும் குடுக்க முடியாது"!! இதெப்டி இருக்கு?