Showing posts with label சங்கசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். Show all posts
Showing posts with label சங்கசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். Show all posts

Saturday, May 31, 2014

இறைவன் நிச்சயித்ததை யாரால் தடுக்க முடியும்?



இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கும் பொழுது, இத்தனை எதிர்ப்பிற்கிடையிலும் திரு நரேந்திர மோதி எப்படி அசாத்திய வெற்றியைக் கண்டார் என அவரைப் பிடிக்காத பலர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. பகவத் ஸங்கல்பம் என்று ஒன்று உண்டு. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என இறைவன் நிச்சயித்திருந்தால் அதை நம்மால் மாற்ற முடியாது என்பார்கள். சமீபத்தில் அப்படி நடந்த ஒன்று தான் மோதி பாரதப்பிரதமர் ஆனது எனலாம். ஆம், எத்தனை அவதூறுகள் எத்தனை குற்றச்சாட்டுகள், எத்தனை எதிர்ப்புகள், எத்தனை விமர்சனங்கள் - அத்தனையையும் தாண்டி இந்த பெரிய ஜனநாயக்க நாட்டின் எதிர்ப்பாரற்ற பிரதமர் ஆவதென்றால் சும்மாவா? இது தான் ஈஸ்வரனின் விருப்பம் என்றால் பகவத் சங்கல்பத்தை யாரால் மாற்ற முடியும்? 

என்னதான் புத்தியை உபயோகித்து சில பரிகாரங்கள் செய்து விதியை மாற்றலாம் என்று நினைத்தாலும் இறைவன் நிச்சயித்தது எதுவோ அதுவே நடக்கும் என்பதற்கு பாஸ்கராச்சாரியாரின் கதையை உதாரணமாகச் சொல்லுவார்கள்.

யார் இந்த பாஸ்கராச்சாரியார் என்கிறீர்களா? நம் நாட்டில் முதன் முதலில் ஏவப்பட்ட இரண்டு வின்கலத்திற்கு ஆர்யபட்டா என்றும் பாஸ்கரா என்றும் பெயர் வைத்தார்கள் ஞாபகம் இருக்கிறதா? அதில் ஒருவர் தான் இந்த பாஸ்கராச்சார்யார். மிகப்பெரிய கணித மேதை, ஜோதிஷ வல்லுனர். வின்வெளி ஆராய்ச்சியாளர். அவரது வாழ்க்கையில் நடந்த ஸ்வாரஸ்யமான சம்பவத்தை திரு சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இப்படி அழகாக விளக்குகிறார்.

"எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராச்சாரியார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக்காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்ற முடியாது என்பதற்கு திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந்தது. அவருடைய பெண்ணுக்கு லீலாவதி என்று பெயர். ஜாதகப்படி அவளுக்கு ரொம்பவும் மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராச்சாரியார் அறிந்திருந்தார். ஆனாலும் தமது கெட்டிக்காரத்தனத்தினால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான ஒரு லக்னத்தைக் கண்டுபிடித்து அதிலே புத்ரிக்கு விவாஹம் செய்து விட்டால் அவள் தீர்க்க ஸுமங்கலியாக இருக்கச் செய்து விடலாம் என்று நினைத்தார். அந்த மாதிரியான க்ரஹ சேர்க்கை உடைய ஒரு லக்னத்தில் லீலாவதிக்குக் கல்யாண முஹ¨ர்த்தம் வைத்தும் விட்டார்.

அந்தக் காலத்தில் இப்போது போல் கடிகாரம் கிடையாது. வாஸ்தவத்தில் அக்காலத்தில் இருந்ததுதான் அசல் கடிகா. கடம், கடிகா, கடிகை என்பதெல்லாம் பானை மாதிரியான தீர்த்த பாத்திரத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜல பாத்திரமே பூர்வகாலத்திய கடிகா அல்லது கடிகாரம். அதிலே மேல்பாகம், கீழ்பாகம் என்று பிரிந்திருக்கும். மேல் பாகத்தில் துளித்துளியாக விழும். மருந்து பாட்டிலில் டோஸ் மார்க் பண்ணியிருக்கிற மாதிரி, கீழ் பாகத்தில் அளவுக்கோடுகள் போட்டிருக்கும். துளித்துளியாய் விழும் ஜலம் இன்ன கோடுவரை வந்தால் இத்தனை நாழிகை என்று கணக்குப் பண்ணிவிடுவார்கள். அதிலுள்ள டோஸ் மார்க் ஒருநாளில் அறுபதில் ஒரு பங்காகும். 'நாழிகை'என்று தமிழில் சொல்லப்படும் இந்தக் கால அளவுக்கு ஸம்ஸ்கிருதத்தில் 'நாடிகா'என்பதோடு 'கடிகா'என்றே இன்னொரு பெயர் உண்டு. அது 24 நிமிஷம் கொண்டது. Water -clock, Water glass என்று இங்கிலீஷிலும் சொல்வார்கள். ஜலம் சீதோஷ்ணத்தைப் பொறுத்து evaporate (ஆவி) ஆவதால், இதில் ஏதாவது கணக்குத் தப்பு வரும் என்று, ஜலத்துளிக்குப் பதில் 'எவாபொரேட்'ஆகாத மண் துகள் விழுகிற மாதிரிச் செய்யும் கடிகாரத்துக்கு hour - glass என்று பெயர்.

அந்நாள் வழக்கப்படி, லீலாவதி விளையாட்டுப் பெண்ணாக இருந்த சின்ன வயசிலேயே கல்யாணம் நிச்சயித்திருந்தது. அந்தக் குழந்தை மேலே சொன்ன மாதிரியான ஜல கடிகாரத்திடம் வந்து, குனிந்து பார்த்து ஏதோ சேஷ்டை பண்ணிற்று. அப்போது அதன் மூக்குத்தியிலிருந்து ஒரு சின்ன முத்து கடிகாரத்துக்குள் விழுந்து, மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் நடுவேயுள்ள துவாரத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.

இதனால் விழுகிற துளி சின்னதாகி விடும் அல்லவா? இப்படி, இருக்க வேண்டியதை விடச் சின்னதான துளிகளாக விழுந்து முஹூர்த்த லக்னக் கோட்டுக்கு ஜலம் வந்தபோது, வாஸ்தவத்தில் அந்த சுபநேரம் தப்பி, அடுத்த லக்னம் வந்து விட்டது!அது கெட்ட லக்னம். அந்த லக்னத்தில் விவாஹமானதால் லீலாவதி ஜாதகப்படியே ரொம்பவும் பிஞ்சு வயஸில் பதியை இழந்து விட்டாள்!

முத்து விழுந்ததை அந்தக் குழந்தை உள்பட ஒருத்தரும் முதலில் கவனிக்காதலால் இத்தனை பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அப்புறம் விஷயம் தெரிய வந்தபோது விதியை யாரும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டார்கள்."

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

இதைத்தான் ரஜினி ஸ்டைல்ல சொல்லுவாங்களோ? "அவன் குடுக்க நினைக்கிறதை யாராலும் தடுக்க முடியாது, அவன் தடுக்க நினைக்கிறதை யாராலும் குடுக்க முடியாது"!! இதெப்டி இருக்கு?



Sunday, December 15, 2013

'ஹோரா'வில் இருந்து வந்தது 'Hour' !



நிருக்தம் என்பது வேதத்துக்கு அகராதி (dictionary) அகராதி என்பது 'கோசம்'என்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்லப்படும். 'அமர கோசம்'என்று பிரஸித்தமான அகராதி இருக்கிறது. 'நிகண்டு'என்றும் சொல்வதுண்டு. தமிழிலும் 'நிகண்டு'என்றே சொல்வர். ஒவ்வொரு வார்த்தையும் இந்த தாதுவிலிருந்து வந்தது என்று அட்சர அட்சரமாகப் பிரித்து ஒவ்வொரு அட்சரத்துக்கும் அர்த்தம் சொல்வது நிருக்த சாஸ்திரம். இதை Etymology என்கிறார்கள்.

நிருக்தம் வேதபுருஷனுக்கு ச்ரோத்திர ஸ்தானம், அதாவது, காது. வேதத்தில் உள்ள அரிய வார்த்தைகளுக்கு இன்ன இன்ன அர்த்தம் என்று அது சொல்கிறது. ஏன் இந்தப் பதம் இங்கே உபயோகப்படுத்தப்பட்டது என்பதைக் காரணத்துடன் அது சொல்லும்.

நிருக்த சாஸ்திரம் பலரால் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் முக்கியமானது யாஸ்கர் செய்தது. வேத நிகண்டுகளில் ஒவ்வொரு பதத்திற்கும் அது இப்படி உண்டாயிற்றென்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. 'ஹ்ருதயம்'என்றே ஒரு பதம் இருக்கிறது. அது ஏன் இப்படி வந்தது? வேதமே அதன் காரணத்தைச் சொல்லியிருக்கிறது. 'ஹ்ருதி அயம்':'ஹ்ருதயத்தில் அவன் இருக்கிறான்' என்பது அர்த்தம். 'ஹ்ருத்'என்பதே பௌதிகமான ஹ்ருதயத்தின் பெயர். ஆனால் 'அயம்'என்று அதில் கிட்ட உள்ளவனான ஈச்வரனனையும் சேர்த்துச் சொல்வதால் அதன் ஆத்மிகமான முக்யத்வமும் குறிப்பிடப்படுகிறது.எந்த சாஸ்திரமானாலும் ஈச்வரனில் கொண்டுவிட வேண்டும். ஹ்ருதயத்தில் பரமேச்வரன் இருப்பதால், அதற்கு, 'ஹ்ருதயம்'என்று பெயர் வந்தது என்று தெரிய வருகிறது. இபப்டி ஒவ்வொரு பதத்திற்கும் காரணம் உண்டு.

அதை ஆராய்வது நிருக்தம். ஸம்ஸ்கிருதத்தில் எல்லாப் பதங்களுக்கும் தாது உண்டு. தாதுவை "ரூட்"என்று இங்கிலீஷில் சொல்லுவார்கள். இங்கிலீஷில் கிரியாபதங்களுக்கு ( verb s) தாது உண்டே தவிரப் பெயர்ச் சொல்லுக்கும் இன்ன க்ரியையால் இப்படிப் பெயர் வந்தது என்று தாது காட்ட முடிகிறது. அப்படி உள்ள பதங்களின் விகாரங்களை மற்ற பாஷைகக்காரர்கள் எடுத்து உபயோகித்தார்கள். அதனால்தான் அந்த பாஷைக்காரர்கள் எடுத்து உபயோகித்தார்கள். அதனால்தான் அந்த பாஷைகளில் பல வார்த்தைகளுக்கு ரூட் தெரிவதில்லை. அந்த பாஷைக்கே உரிய சொல்லாக இருந்தால்தானே சொல்ல முடியும்?மணியை இங்கிலீஷில் Hour என்று சொல்லுகிறார்கள். அந்தப் பதத்தில் அமைந்துள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை அநுசரித்துப் பார்த்தால், ஹெளர் அல்லது ஹோர் என்றே சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் "ஹோர்"என்றே சொல்லியிருக்க வேண்டும். "ஹோரா சாஸ்திரம்"என்று ஸம்ஸ்கிருதத்தில் ஒரு சாஸ்திரம் உண்டு. 'அஹோராத்ரம்' 
(இரவு பகல்) என்பதிலிருந்து, அந்த 'ஹோரா' என்பது வந்தது. 'ஹோரா'என்பது தமிழில் 'ஒரை'ஆயிற்று. கல்யாணப் பத்திரிக்கைகளில் முஹ¨ர்த்த காலத்தை 'நல்லோரை'என்று போடுகிறார்கள். 

அந்த ஹோராவே இப்போதைய இங்கிலீஷ் ஸ்பெல்லிங்கில் hour -ஆகவும், உச்சரிப்பில் 'அவர்' என்றும் வந்திருக்கிறது. 

இப்படியே heart என்பது ஸம்ஸ்கிருத 'ஹ்ருத்'என்பதிலிருந்து வந்தது. இப்படிப் பல வார்த்தைகள் இருக்கின்றன. இவைகள் பிற பாஷைகளில் தற்காலத்திய ஸ்வரூபத்தை அடைவதற்கு எவ்வளவோ காலம் ஆகியிருக்க வேண்டும். அந்த பாஷைகாரர்களுக்குப் பதங்களின் மூலம் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் இந்தப் பழமைதான்.

- ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Sunday, September 1, 2013

நிமித்தங்கள் நம் பூர்வஜென்ம பலனைத் தெரிவிக்கின்றன!



ஜ்யோதிஷ சாஸ்திரத்தில், "ஸம்ஹிதா ஸ்கந்தம்"என்று ஒரு பிரிவு இருக்கிறது என்றேனல்லவா?ஜலம் எங்கே ஒடுகிறது?பூமிக்குள் நதி under-current ஆக எங்கெங்கே போகிறது. உள்ளே ஜலம் இருப்பதற்கு மேலே என்ன என்ன அடையாளம் இருக்கும்?- என்பவைகளைப் போன்ற பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசனைத் திரவியங்கள் செய்யும் விதம், வீடு கட்டும் அளவு, சகுன சாஸ்திரம், நிமித்த சாஸ்திரம் முதலிய எல்லாம் இந்த ஸம்ஹிதையில் சொல்லப்படும்.

சகுனம் வேறு, நிமித்தம் வேறு. நிமித்தம் என்பதுதான் வரப்போவதை ஏதோ ஒரு தினுஸில் அடையாளம் காட்டுவதற்குப் பொதுப் பெயர். அதில் ஒரு வகையே சகுனம். சகுனம் என்பதற்கு 'பக்ஷி'என்பது அர்த்தம். பக்ஷிகளால் ஏற்படும் நிமித்தங்களுக்குத்தான் சகுனம் என்று பெயர். உலகத்தில் ஒன்றுக்கொன்று ஸம்பந்தமில்லாத வஸ்து ஒன்றும் இல்லை. நடக்கும் காரியங்களும் அப்படியே. ஸரியான கணக்குத் தெரிந்தால் எல்லாம் தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் நடப்பவை எல்லாம் ஒரே ஒருவருடைய ஆக்ஞையால்தான் நடக்கின்றன; ஒரே கணக்காக நடக்கின்றன. அதனால் ஒரு காரியத்தைக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் கண்டு பிடிக்கலாம். கை ரேகை, ஆரூடம், க்ரஹநிலை முதலிய எல்லாம் ஒன்றுக்கொன்று ஸம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. எல்லாம் நிஜம்தான். இவற்றில் ஒன்றே நிமித்தம். அதில் ஒரு அங்கமே சகுனம்.

ஒரு பக்ஷி வலமிருந்து இடம்போனால் இன்ன பலன்;இன்ன பக்ஷி கத்தினால் இன்ன விளைவு ஏற்படும் என்று சகுன சாஸ்திரம் கூறும்.

'நிமித்தம்'என்பதிலேயே, நாம் 'சகுனம் பார்ப்பது'என்று சொல்வதிலுள்ள மற்ற எல்லாம் வரும். Omen என்று பொதுவாகச் சொல்வது நிமித்தம்தான். (கீதை ஆரம்பத்தில்) " நிமித்தானி பச்யாமி விபரீதானி கேசவ " என்று யுத்தம் ஆரம்பிக்குமுன் அர்ஜுனன் பகவானிடம் சொல்கிறான். 'கெட்ட சகுனங்களைப் பார்க்கிறேன்'என்று நாம் சொல்வதைத்தான், 'விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்'என்கிறான். அவன் நிமித்தம் என்பதுதான் சரி. நாம் சகுனம் என்பதே நல்லது அல்லது கெட்டதற்குச் சூசகமான பொதுப்பெயர் என்று நினைப்பது தப்பு. இந்த சூசகங்களில் பக்ஷிகளால் விளைவது மட்டுமே சகுனம். ஒரு பூனை குறுக்கே போனால் அது நிமித்தம். கருடன் குறுக்கே போனால் அது சகுனம்.

பிற்பாடு பகவானும் அர்ஜுனனிடம் 'நிமித்த'த்தைப் பற்றிச் சொல்கிறார். "நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசின்" "சத்ருக்களை வதைப்பதாவது, அதனால் பாவம் வருமே!"என்று அழுத அர்ஜுனனிடம், "இந்த யுத்தத்தில் இவர்களை வதைப்பதாக நான் ஏற்கெனவே ஸங்கல்பம் பண்ணியாகிவிட்டது. அதனால் இவர்கள் இப்போதே செத்துப் போனவர்கள்தான். இவர்களைக் கொல்பவன் நான் தான். c வெறும் கருவி மாத்திரமாக இரு"என்று பகவான் சொல்கிறபோது, 'நிமித்த மாத்ரம் பவ'என்கிறார்.

அதனால் நிமித்தம் என்பது அதுவே பலனை உண்டாக்குவதில்லை;இன்னொன்று நிச்சயம் பண்ணிவிட்ட பலனை இது வெளிப்படத் தெரிவிக்கிறது என்றே ஆகிறது. இதே போல, நம்முடைய பூர்வகர்ம பலனைத்தான் நிமித்தங்கள் யாவும் தெரிவிக்கின்றன.

-       -  ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Friday, August 9, 2013

எல்லா உருவும் பரமாத்மாவே!




சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிறபோது ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள்  குமிழ்களாகத் தோன்றுகின்றன. இன்னொரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள் உடைந்து போகின்றன.பரமாத்மா ஆடாத அசங்காதசமுத்திரம் மாதிரி. மாயை என்கிற நாமெல்லாம் குமிழ் மாதிரி தோன்றியிருக்கிறோம். ஆசாரியாருடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம்மேல் பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளி சமுத்திரத்தோடு ஐக்கியமாகி விடுவதுபோல், நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம்.

சமுத்திர ஜலம் என்றென்றும் அளவு குறையாமலேதான் இருக்கிறது. அதிலிருந்து ஆவி பிரிந்து சென்று மழையாகி, உலகத்தில் பல விதங்களில் நதி, ஒடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று ஜலாசயங்களாக ஆகின்றன சமுத்திரம் வற்றுவதில்லை. அதில் புதிதாக வெள்ளம் வருவதுமில்லை.அதிலிருந்து வந்த ஆறு குளங்கள் வற்றலாம்; அல்லது இவற்றில் வெள்ளம் வரலாம்.வெயில் நாளானால் வீட்டுக் குழாயில் ஜலம் இல்லை; ரெதில்ஸில் ஜலம் இல்லை என்கிறோம். மழைக் காலத்தில் கோதாவரியில் வெள்ளம், காவேரியில் இந்த உலகத்தில் எத்தனை ஜலம் இருந்ததோ அதில் ஒர் இம்மிகூட - க்ரெயின் கூட - இன்றுவரை குரையவில்லை, கூடவும் இல்லை.

பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடு வாங்குவார்கள்; வீடுகளை விற்று பாங்கில் போடுவார்கள்; பாங்குப் பணத்தை 'ஷேர்'களாக மாற்றுவார்கள். மொத்தச் சொத்து மாறாது. அவற்றின் ரூபம்தான் பலவிதத்தில் மாறும். எல்லாவற்றையும் கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும். அப்படியேதான் லோகத்தில் உள்ள  மொத்த ஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும், அல்லது நதியாக, ஏரி, குளங்களாக இருக்கவேண்டும்.

பரமாத்மா பலவாகத் தோன்றியிருக்கிறார். தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாகிறதாகத் தோன்றுகிறது. ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால், எங்குமே கூடுதலும் இல்லை, குறைவும் இல்லை.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Saturday, March 19, 2011

கல்யாணச் செலவைக் குறையுங்கள்!





விவாஹம் என்பது செலவில்லாத ஒரு வைதிக கர்மா தான். இதில் புதுமண தம்பதிகளுக்கு புதிய ஆடைகளும், சிறிய அளவிலான தங்கத்தில் திருமாங்கல்யம், ரொம்பவும் நெருங்கின பந்தங்களை மட்டும் அழைத்துச் சாப்பாடு போடுவது மட்டுமே போதுமானது.


முஹூர்த்த சமயத்தில் ஒரு மங்கள வாத்திய சத்தம் கேட்கச்செய்து அதற்காக ஏதாவது ஒரு தொகை கொடுப்பதும், வாத்தியார் தக்ஷ்ணை ஆகியவற்றை மட்டுமே செய்தாலே போதும். இவ்வாறு மிகச் சிறிய செலவில் திருமணம் செய்வதே சாஸ்திரபூர்வமானது தான். இப்படி சிம்பிளாக கல்யானம் செய்வது ஒரு பியூன் வேலை செய்பவர்களுக்கு கூட எளிதான காரியம் தான்.


பணம் கொழித்தவர்களும் கூட தடபுடல் பண்ணாமல் இப்படிச் சிக்கனமாகவே திருமணம் பண்ண வேண்டும். ஏனெனில் பணம் படைத்தவர்கள் தங்களிடம் பணம் இருக்கிறது என்கிற நினைப்பில் செய்யும் ஆடம்பர திருமணம் டாம்பீகம் போன்றவை மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்னுதாரணமாகிவிடுகிறது. பணம் இல்லாதவர்களுக்கு தாங்களும் இப்படி திருமணம் செய்ய வேண்டியது சமூகக் கட்டாயமாகிவிடுகிறது.


ஆகையால் கச்சேரி, ஆடம்பர விருந்து என்று தாங்கள் செலவிடக்கூடிய இந்தப் பணத்தைக் கொண்டு வச்தியில்லாத ஒரு ஏழைப் பெண்ணுக்கோ, பையணுக்கோ கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் தண்டச் செலவாகப் போகக்கூடிய அவர்களது கரன்ஸி தர்ம கரன்ஸியாக மாறி புண்ணியத்தையாவது கொடுக்கும்.


இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களின் வாடகையே பாதிச் செலவை விழுங்கி விடுகிறது என்கிறார்கள். எத்தனை சின்ன கல்யாணமானாலும் இக்கால அடுக்குமாடிக் குடித்தனத்தில் வீட்டிலேயே செய்துவிட முடியாது தான். அதனால் தர்மசிந்தனை கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து வசதி இல்லாதவர்களுக்காக ஆங்காங்கே சின்னச்சின்ன கல்யாண மண்டபங்கள் இலவசமாக திருமணங்கள் நடக்கும் வகையில் கட்டித்தர வேண்டும். 


கல்யாணம் என்றாலே வெட்கப்பட்டுக் கொண்டு ஓடும் இளம் பெண்களும் பையன்களும் பிற்காலங்களில் தனக்கு கல்யாணம் ஆகுமா என்று வாய்விட்டுக் கதறுகிற பரிதாப நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இந்த துயரத்திற்கு பணமும் ஆடம்பரங்களின் மீதான கட்டாயங்களும் இருப்பது தான் காரணமாகிறது. 


இதனால் நம் பண்பாட்டின் ஜீவநாடியான ஸ்த்ரீ தர்மம் வீணாகி வருகிறது. நடக்கக்கூடாததெல்லாம் ஒவ்வோரிடத்தில் நடந்து விடுகிறது.


ஆகையால் இந்த வைதிக ஸம்ஸ்காரங்களில் செலவை எப்படியும் குறைத்தாக வேண்டும்.


- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 


.