Showing posts with label அவ்வைப்பாட்டி. Show all posts
Showing posts with label அவ்வைப்பாட்டி. Show all posts

Tuesday, August 2, 2011

ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 5






அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு




குதித்துக் கூத்தாடி தாகம் தீர்த்து விளையாடிப் பசியாறிய குளத்தில் நீர் தீர்ந்து போனால் உடனே அந்தக் குளத்தை விட்டு நீங்கி வேறிடம் செல்லும் நீர்ப்பறவை போல, கூடிப்பேசி சிரித்து மகிழ்ந்து விளையாடிய உற்ற உறவினரை வறுமை வந்த போது நீங்குபவர் உறவினரே ஆகமாட்டார்கள். நீர் தீர்ந்த போதும் குளத்தில் அடியில் நீங்காமல் உள்ள கொட்டியும், அல்லியும் நெய்தல் செடிகளைப் போல நீங்காமல் உறவுக்கு உற்ற துணையாக இருப்பவர் யாரோ அவரே உறவினர்கள் ஆவார்கள்.

- தமிழ் பாட்டி ஒளவையார்






.

Wednesday, June 3, 2009

அவ்வைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர்!

"அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா‍-தொடுத்த‌ 
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் 
பருவத்தால் அன்றிப் பழா"

ஓங்கி உயர்ந்த மரங்களாக இருந்தாலும், அம்மரத்தில் பழங்கள் பழுக்க வேண்டிய பருவம் வந்தால் தான் பழுக்குமேயன்றி எல்லாக் காலங்களிலும் பழுக்காது. அதுபோல ஒருவர் தொடர்ந்து முயற்சியுடன் ஒரு செயலைச் செய்து வந்தாலும் அது நிறைவேறும் காலம் வரும் போது தான் நிறைவேறும். ஒருவர் தொடங்கும் செயல் உடனே பலனளித்து விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. முயற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் உரிய காலத்தில் பயன் தானாகவே கிடைப்பது உறுதி என்று ஒளவைப்பாட்டி வலியுறுத்துகிறார்.

அதாவது நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும், நேரம் வரும் போது தானே முயன்ற காரியம் கைகூடும். இதையே தான் பகவான் ஸ்ரீக்ருஷ்னர் பலன்களைப் பற்றி கவலைப்படாமல் கடமையை ஆற்றுவதே உனது பணியாக இருக்கட்டும். அவை நிறைவேறும் தருணத்தை நான் அளிப்பேன் என்று உரைக்கிறார் கீதையில். இதையே பலனில்லாமல் கடமை செய்ய பகவான் சொல்லிவிட்டதாக அபத்தமாக அர்த்தம் கொள்வர் சிலர். உண்மையில் கீதையின் இந்த சாரத்தை அவ்வைப்பாட்டி மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் என்றே கொள்ளவேண்டும்.