"அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா"
ஓங்கி உயர்ந்த மரங்களாக இருந்தாலும், அம்மரத்தில் பழங்கள் பழுக்க வேண்டிய பருவம் வந்தால் தான் பழுக்குமேயன்றி எல்லாக் காலங்களிலும் பழுக்காது. அதுபோல ஒருவர் தொடர்ந்து முயற்சியுடன் ஒரு செயலைச் செய்து வந்தாலும் அது நிறைவேறும் காலம் வரும் போது தான் நிறைவேறும். ஒருவர் தொடங்கும் செயல் உடனே பலனளித்து விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. முயற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் உரிய காலத்தில் பயன் தானாகவே கிடைப்பது உறுதி என்று ஒளவைப்பாட்டி வலியுறுத்துகிறார்.
அதாவது நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும், நேரம் வரும் போது தானே முயன்ற காரியம் கைகூடும். இதையே தான் பகவான் ஸ்ரீக்ருஷ்னர் பலன்களைப் பற்றி கவலைப்படாமல் கடமையை ஆற்றுவதே உனது பணியாக இருக்கட்டும். அவை நிறைவேறும் தருணத்தை நான் அளிப்பேன் என்று உரைக்கிறார் கீதையில். இதையே பலனில்லாமல் கடமை செய்ய பகவான் சொல்லிவிட்டதாக அபத்தமாக அர்த்தம் கொள்வர் சிலர். உண்மையில் கீதையின் இந்த சாரத்தை அவ்வைப்பாட்டி மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் என்றே கொள்ளவேண்டும்.