Showing posts with label தைத்ரிய உபநிஷத்து. Show all posts
Showing posts with label தைத்ரிய உபநிஷத்து. Show all posts

Sunday, August 18, 2013

இன்பத்தின் அளவீடு!


இன்பத்தின் அளவீட்டைப் பார்ப்போம். நல்ல வாலிப மிடுக்கு உடைய அறிவாளியான, சுயக்கட்டுபாடு உடைய, மன உறுதிகொண்ட , பலசாலியான இளைஞன் ஒருவனை அளவுகோலாகக் கொள்வோம். அத்தகையதோர் இளைஞனுக்கு எல்லாவித செல்வங்களாலும் நிறைந்த இந்த பூமி உரியதாவதாக வைத்துக்கொள்வோம். அந்த இளைஞன் பெறும் இன்பம் ஒரு மனித இன்பம். அத்தகைய நூறு மனித இன்பங்கள் சேர்ந்தால் அது ஒரு மனித-கந்தர்வ இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு தேவ-கந்தர்வ இன்பங்கள் நீண்ட ஆயுளை உடைய முன்னோர்களின் ஒரு இன்பத்திற்குச் சமம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு பித்ரு-இன்பங்கள் தேவலோகத்தில் பிறந்த தேவர்கள் அனுபவிக்கின்ற ஒரு தேவ-இன்பம், ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு தேவ-இன்பங்கள் ஒரு கர்மதேவ-இன்பம். செயல்களின் மூலம் தேவ நிலையை அடைந்தவர்கள் கர்ம தேவர்கள். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.


நூறு கர்மதேவ-இன்பங்கள் ஒரு முக்கியதேவ-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு முக்கியதேவ-இன்பங்கள் ஓர் இந்திர-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.


நூறு இந்திர-இன்பங்கள் ஒரு பிருகஸ்பதி-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு பிருகஸ்பதி-இன்பங்கள் ஒரு பிரஜாபதி இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு பிரஜாபதி-இன்பங்கள் ஒரு பிரம்ம-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

இந்த இன்பங்கள் எல்லாம் ஏதோ இறந்த பின்னர் கிடைக்கும் மாயலோக இன்பங்கள் அல்ல. யோக நிலையை பயிற்சி செய்து யாரொருவன் அக உணர்வின் மூலம் ஆன்மாவை நெருங்குகிறானோ அவனது இன்பத்தின் அளவீடு அதிகரிக்கிறது.

அந்த ஆனந்தத்தை அவனே உணர்வான்!


- தைத்ரிய உபநிஷத்து.

Thursday, November 15, 2012

தீமை விளைவிக்காத செயல்களைச் செய்வாய்!




வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியர் மாணவர்களுக்குச் சில அறநெறிகளைப் போதிக்கிறார்:

உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியருக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள். அந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள்.

உண்மையிலிருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள்.

கற்பதிலிருந்தும் கற்றுக் கொடுப்பதிலிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகாதீர்கள்.

தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள். தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள். ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.

தீமை விளைவிக்காத செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது.

நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது.

நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து அவர்கள் அமர இருக்கை அளித்து அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.

நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும். அலட்சியமான மனநிலையோடு தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.

உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவை பற்றி சந்தேகம் எழுந்தால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற மன ஒருமைப்பாடு மிக்க , சுதந்திரமான கோனல் புத்தி இல்லாத, நல்வழியில் நடக்கின்ற அந்தச் சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள்.

- தைத்ரீய உபநிஷத்து