Showing posts with label upanishath. Show all posts
Showing posts with label upanishath. Show all posts

Thursday, November 15, 2012

தீமை விளைவிக்காத செயல்களைச் செய்வாய்!




வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியர் மாணவர்களுக்குச் சில அறநெறிகளைப் போதிக்கிறார்:

உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியருக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள். அந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள்.

உண்மையிலிருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள்.

கற்பதிலிருந்தும் கற்றுக் கொடுப்பதிலிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகாதீர்கள்.

தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள். தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள். ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.

தீமை விளைவிக்காத செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது.

நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது.

நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து அவர்கள் அமர இருக்கை அளித்து அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.

நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும். அலட்சியமான மனநிலையோடு தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.

உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவை பற்றி சந்தேகம் எழுந்தால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற மன ஒருமைப்பாடு மிக்க , சுதந்திரமான கோனல் புத்தி இல்லாத, நல்வழியில் நடக்கின்ற அந்தச் சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள்.

- தைத்ரீய உபநிஷத்து


Tuesday, April 10, 2012

இனியவனே! அவனுக்குத் தலைவன் எவனும் இல்லை!



இனியவனே! இறைவன் தான் இந்த அனைத்துமாக இருக்கிறார். கர்மங்கள், தவம் என்று மட்டுமல்ல அழிவற்ற மேலான பிரம்மமாக இருப்பதும் அவரே. இதயக் குகையில் உறைகின்ற அவரை அறிபவன் அறியாமைத் தளையிலிருந்து இப்போதே விடுபடுகிறான்.

அவனுக்குத் தலைவனாக உலகில் எவனும் இல்லை. அவனை ஆள்பவனும் இல்லை. அவனுக்குக் அடையாளமும் இல்லை. அவனே அனைத்திற்கும் காரணம். கரணங்களுக்கு அதிபனான ஜீவனுக்கு அவனே அதிபன். அவனுக்குத் தந்தையும் இல்லை. அதிபனுமில்லை.

சிலந்திப்பூச்சியும் பட்டுப்பூச்சியும் தனது நூல்களால் தன்னை மறைத்துக் கொள்வது போல் இயற்கையாகவே பிருக்ருதியில் (பிரபஞ்சம்) தோன்றும் பொருள்களால் எந்த தேவன் தானொருவனாகவே தன்னை மறைத்துக் கொள்ளுகிறானோ அவன் நமக்கு பிரம்ம ஸாயுஜ்யத்தை அளிக்கட்டும்.

ஒருவனேயாகிய தேவன் எல்லா உயிர்களிலும் மறைந்துறைகிறான். அவன் எங்கும் வியாபித்தவன். எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மா; எல்லாச் செயல்களையும் மேல்பார்ப்பவனாயும் எல்லா உயிர்களுக்கும் வாசஸ்தானமாயும் அவன் உளன். 

அவன் ஸாஷி, அறிவு வடிவினன், தனித்திருப்பவன். குணங்களால் பற்றப்படாதவன்.

செயலற்றிருக்கும் பலவற்றையும் தன் வசங்கொண்டுள்ள எந்த ஒருவன் வித்தாகிய ஒன்றை பலவாய்ச் செய்கிறானோ, அவனைத் தங்களிடம் உறைபவனாய் எவர் ஆழ்ந்து காண்கிறார்களோ அவர்களுக்கே அழிவில்லாத இன்பமுண்டு. பிறர்க்கில்லை.

நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாகவும், அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய ஆசைகளையும் அளிப்பவனாயும், அனைத்திற்கும் காரணமாயும், ஞான யோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளினின்றும் விடுபடுகிறான்.

இவ்வுலகில் நடுவில் உள்ளவன் ஹம்ஸன் (பரமாத்மா) ஒருவனே. அவனே அக்கினியாகவும் நீரினுள் புகுந்து உறைபவனாகவும் இருக்கிறான். அவனை அறிந்தே ஒருவன் சாவைக் கடந்து செல்லுகிறான்.

- ச்வேதாச்வதர உபநிஷத்து


Wednesday, March 30, 2011

நிவேதனம் செய்து உண்டால் உபநிஷத்து புரியும்!




ஒவ்வொரு குடும்பத்திலும் கடவுள் பூஜை நடக்க வேண்டும். சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகள் செய்யலாம். சௌகரியம் இல்லாவிடுல் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். 


அலுவலகம் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை
என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச்சத்தம் கேட்க வேண்டும்.


பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவை இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கே இருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதர்காக இவ்வளவும் சொன்னேன்.


வீட்டிலே இருந்தால் 'மகா நைவேத்தியம்' செய்யவேண்டும். அதாவது அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். 


நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சப்பிடப்போகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச் செய்வது என்று அர்த்தமே இல்லை. அவருக்குச் சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை
முழுவதுமே தவிர, அவருக்குக் இதனால் ஆவது எதுவுமில்லை.


'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்றுதான் அர்த்தமே தவிர, 'உண்பிக்கிறேன்' என்று அர்த்தமில்லை. 'அப்பனே இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்' என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.


- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 


ஆக இந்த பிரபஞ்சத்தில் நம்மால் ஆனது ஒன்றும் இல்லை எல்லாம் அவனிலிருந்தே தோன்றியது அவனுக்கே அர்ப்பனிக்கப்படுகிறது என்ற உயர்ந்த உண்மை மனதில் பதிந்தால் அகங்காரம் குறையும். உபநிஷத்தின் அடிப்படை சாரமான அவனிலிருந்தே தோன்றியது அவனிடமே
ஐக்கியமாகிறது என்கிற உயர்ந்த பிரபஞ்ச சக்தி பற்றிய உண்மையை சாதாரன நிவேதன காரியத்தின் மூலமாகவே நம் முன்னோர்கள் உணர்த்தி விடுகிறார்கள். 


அதனாலேயே வைனவர்கள் பெரும்பாலும் இறைவனுக்கு நிவேதனம் செய்யாமல் தினசரி உணவே கூட சாப்பிட மாட்டார்கள். எல்லாம் அவனிலிருந்தே வந்தது, நாம் அனுபவிக்கும் எந்த அனுகூலத்திற்கும் அவனது இயக்கமே காரணம் என்றுணர்ந்து அடக்கத்துடன் வாழவே இறைவனுக்கு நிவேதனம் செய்வது பழக்கமாகியது. 


இப்படி பல சம்பிரதாயங்களும் நம் எண்ணங்களைச் செதுக்கி மனிதனை முழுமைப்படுத்த மேற்கொண்ட மனோவியல் வழிமுறைகள் ஆகும். 


பெரியோர்கள் கூறிய வழிமுறைகளை அப்படியே கடைபிடித்து வந்தால் சங்கிலிப் பிணைப்புகளாக பல நன்மைகள் நம்மையறியாமலேயே
நம்மை வந்தடைவதை உணரலாம்.


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!



.

Friday, December 17, 2010

இறைவனிலிருந்தே எல்லாம் தோன்றியது!



உலகின் முக்கியமான மதங்கள் பலவும் இறைவன் என்ற ஒருவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளை படைத்ததாகவும் அவனே ஆணையும் அவனது விலா எலும்பிலிருந்து பெண்ணையும் படைத்ததாக கூறிவருகையில் இந்து தர்மத்தின் உபநிஷத்துக்கள் பிரபஞ்சத்தோற்றத்தை அப்படியே கண் முன் கொண்டு வருவதாக இருக்கிறது என்றால் மிகையில்லை. இந்த பிரபஞ்சம், சூரியன், சந்திரன், கோடான கோடி ஜீவராசிகள் அனைத்தையும் ஒருவர் கிழமைதோறும் படைத்திருக்க முடியாது. ஒன்றிலிருந்து ஒன்று தாமாகவே உருவாகியிருக்க வேண்டும்.

உலகில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் டார்வினின் பரினாமக் கொள்கை கூறுவதும் இதையே! அதனையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உபநிஷத்துக்கள் மூலமாக ரிஷிகளும் முனிவர்களும் நமக்கு எடுத்துரைத்திருக்கின்றனர்.

"எவ்வாறு சிலந்தி தன்னிடமிருந்து வலைநூலை வெளிப்படுத்தவும் தன்னிடமே அடக்கிக் கொள்ளவும் செய்கிறதோ, எவ்வாறு பூமியிலிருந்து செடி கொடிகள் தோன்றுகின்றனவோ, வாழ்கின்ற மனிதனில் எவ்வாறு முடி வளர்கிறதோ அவ்வாறே அழிவற்ற இறைவனிடமிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றுகிறது"

இங்கே 'இறைவனிடமிருந்து தோன்றுகிறது' என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிற இறைவன் என்கிற ஒரு கதாபாத்திரம் இவற்றை தோற்றுவித்தது என்று கூறவில்லை என்பதை குறித்துக் கொள்ளவும். ஆக கடவுள் என்கிற உருவகத்திற்கும் அப்பால் நம்மை இறைவன் என்பது நம் கற்பனைக்கெட்டாத மிகப்பெரிய பிரபஞ்சப்பேரியக்கம் பற்றியது என்கிற உண்மையை நமக்கு உணர்த்துகிறது உபநிஷத்து. தலையில் முடிவளர்வது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் நம் உடலிலிருந்து வெளிப்படும் இறந்த செல்களின் கூட்டாக அது தாமே உருவாகிறது. இது ஒரு உதாரணம் தான். அதே போல பிரபஞ்சத்தின் கற்பனைக்கெட்டாத ஒரு மூலமான மைய சக்தியிலிருந்து இந்த பேரியக்கம் தோன்றி இயங்கிக்கொண்டு இருக்கிறது.

சிலந்தி தான் வசிக்க இடம் வேண்டுமெனில் நூலை வெளியேற்றுகிறது. பிறகு போதுமென்று நினைக்கும் போது அந்த நூலை உள்ளிழுத்துக் கொள்கிறது. அது போல பிரபஞ்சத்திலிருந்து எத்தனை உயிர் பொருட்கள் வெளியே வந்தாலும் அவையனைத்தும் இறுதிக்காலத்தில் மூலப்பிரக்ருதியான அண்டபிரம்மாண்டத்தின் மைய சக்தியையே சென்றடைந்து விடுகிறது.



பிரபஞ்சத்தின் கருஞ்சுழி!

சமீப காலங்களில் ப்ரபஞ்சத்தில் ப்ளாக் ஹோல் எனப்படும் கருஞ்சுழிப் பகுதி பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அண்டவெளியில் இருக்கும் கோடான கோடி கிரகங்களும் சூரியன்களும் நட்சத்திரங்களும் அந்த கருஞ்சுழியின் மையப்பகுதிக்குள் சென்றவுடன் மிகப்பெரிய பிரகாசமான ஒளியைக் கொடுத்துப் பின் நீர்த்துப் போய் கருமை நிறமடைந்து காணாமல் போகின்றன என்பதே அவர்களது ஆய்வுகள் அறிவிக்கின்றன. நாம் இருக்கும் இந்த மில்கி வே கேலக்ஸி கூட அதே கருஞ்சுழியை நோக்கிய நகர்வைக் கொண்டிருக்கின்றது என்பதும் அவர்களது ஆய்வு முடிவுகளே!

ஆக எந்த பிரபஞ்சத்தின் மைய சக்தியிலிருந்து இந்த அண்டத்திலுள்ள அத்தனையும் தோன்றியதோ அதே மைய சக்தியில் அவை கரைந்து முடிகின்றன என்பதும் தெரியவருகின்றன. இப்போது மீண்டும் உபநிஷத்தின் வரிகளைப் படிப்போம்.. "எவ்வாறு சிலந்தி தன்னிடமிருந்து வலைநூலை வெளிப்படுத்தவும் தன்னிடமே அடக்கிக் கொள்ளவும் செய்கிறதோ" அவ்வாறே பிரபஞ்சமும் தன்னிடமிருந்து வெளிவருவருவனவற்றை தன்னுள்ளேயே இழுத்துக் கொண்டுவிடுகிறது.



ப்ளாக் ஹோல்!

இனியவனே! இது உண்மை. கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பிலிருந்து அதே இயல்புடைய ஆயிரக்கணக்கான நெருப்புப் பொறிகள் எவ்வாரு உண்டாகின்றனவோ, அவ்வாறே அழிவற்ற இறைவனிலிருந்து பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன. அவரிலேயே ஒடுங்கவும் செய்கின்றன.
இறைவன் ஒளிமயமானவர், உருவமற்றவர், இதயத்தில் உறைபவர், அகமும் உறமும் நிறைந்தவர், பிறப்பவற்றவர், பிராணன் இல்லாதவர், மனம் இல்லாதவர், தூயவர், மேலானவர், பிரகிருதியைவிட உயர்ந்தவர்.
பிராணன், மனம், புலன்கள், வெளி, காற்று, நெருப்பு, நீர், அனைத்தையும் தாங்குகின்ற பூமி எல்லம் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.
அந்த இறைவனுக்கு சொர்க்கம் தலையாக அமைந்துள்ளது. சந்திர சூரியர்கள், கண்கள்; திசைகள், காதுகள்; வெளிப்பட்ட வாக்கு, வேதங்கள், காற்று, பிராணன், பிரபஞ்சம், மனம், பூமி, கால்கள். அந்த இறைவனே எல்லா உயிர்களின் உள்ளும் உறைகிறார்.
அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டாயிற்று. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரனமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின. இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன.

- முண்டக உபநிஷத்து!

ஆக அந்த இறைவன் என்பவன் கற்பனைக்கெட்டாத பிரபஞ்சத்தின் மைய சக்தி என்பதை நாம் உணர உபநிஷத்து நமக்கு உதவுகிறது. அத்தகைய மைய சக்தி என்பது என்ன? அதன் சக்தி எத்தகையது என்று நம்மால் உணர முடியுமா? அதன் வடிவம் என்ன? அதன் இயக்கம் எவ்வாறு

இருக்கும்? இன்னும் விடைகாணமுடியாத பல கேள்விகள் இருக்கின்றன. அதனை சாதகம் மூலமாகவே உணர முடியும். அவ்வாறு உணர்ந்து அதனை எடுத்துக்கூறியவர்களே மகான்கள், ரிஷிகள். அவர்களால் கூறப்பட்டதே உபநிஷத்துக்கள். அதனை இன்னும் ஆராய்ந்து இறைவன் என்கிற பெரியவனை அறியவும் அடையவும் தொடர்ந்து முயல்வோம்!



.

Tuesday, October 5, 2010

மரணத்திற்கு அப்பால் - 19




"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்ம சஞ்சாரத்தில் மேலான நிலை எது என எமதர்மனிடம் வினவுகிறான் நசிகேதன்!


"நசிகேதா! எப்போது ஐந்து புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ, புத்தி முயற்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை என்று கூறப்படுகிறது"


செயலற்ற நிலை எனப்படுவது சோம்பலாக வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கும் நிலை என எடுத்துக்கொள்வது தவறு. புத்தி விழிப்படைந்த நிலையில் புற உடலும் இகலோக வாழ்வும் வேறு என்றும் உள்ளிருக்கும் ஆன்மா வேறு என்ற நிலையான உண்மையை புரிந்து கொண்டு மனமும் உடலும் ஆழ்ந்த அமைதி கொள்ளும் நிலையை செயலற்ற நிலை என எமதர்மன் விளக்குகிறார். இந்நிலையில் ஆசைகளின் உந்துதலால் மனம் செயல்பட வேண்டிய அவசியம் உண்டாவது தடுக்கப்படுகிறது. எனவே இந்நிலையை ஐந்து புலன்களும் ஓய்வு நிலையில் இருக்கும் சமயமாக எமதர்மன் எடுத்துக் கூறுகிறார்.


"நசிகேதா! புலன்கள் வசப்பட்டு, நிலையாக நிற்கின்ற அந்த நிலை யோகம் என்று கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவன் தன்னுணர்வு உடையவனாக ஆகிறான். ஆனால் யோக நிலை வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது."


ஆன்மாவை உணரும் தருனத்தை தன்னுணர்வு என்று கீதையில் கூறப்படுகிறாது. சுவாமி விவேகானந்தர் 'உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதை பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும். பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவை எல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்' என்கிறார் அவர்.


எமதர்மன் மேலும் தொடர்கிறார் "நசிகேதா! வாக்கினாலோ மனத்தினாலோ கண்களாலோ அந்த அறுதி உண்மையை அடைய இயலாது. 'இருகிறது' என்று சொல்பவனைத் தவிர வேறு யார் அதனை அடைய முடியும்?"


"இந்த உண்மை 'இருக்கிறது' என்று முதலில் அறிய வேண்டும். பிறகு அதன் உண்மைநிலையில் உணர வேண்டும். 'இருக்கிறது' என்ற நிலையில் ஆழமாக உணரும் போது, அதிலிருந்து உண்மை நிலை அனுபூதி, இயல்பாக வாய்க்கிறது".


ஒரு மலை ஏறப்போகிறோம். அடிவாரத்தில் இருந்து கொண்டு 
மலையைப் பார்த்தால் உச்சிக்குப் போக பாதையே இல்லாதது போல தெரியும்.
ஆனால் அருகே செல்லச்செல்ல மலையை ஏறி உச்சியை அடைய அங்கேயும் 
ஒரு பாதை இருந்தே தீரும். பாதை இருக்கிறது என்று நம்பிச் செல்பவனுக்கே
அப்பாதைகள் தெரியவரும். அல்லாமல் பாதை இருக்குமா என்ற 
ந்தேகத்துடனும் பாதை கிடையாது என்று நினைப்பவனும் அடிவாரத்தை
தாண்ட மாட்டார்கள்.


அது போல எல்லையற்ற சக்தி மற்றும் ஆன்மா போன்றவற்றை சந்தேகக் கண்ணோடு மட்டுமே பார்ப்பதும் அதை அறியும் முயற்ச்சியே இல்லாமல் அதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவனாலும் ஆன்மாவை அடையமுடியாது. எல்லையற்ற இறை சக்தியை அறிய முடியாது. எவன் ஒருவன் 'இருக்கிறது' என்று தீர்க்கமாக நம்பி அதை அறியும் பொருட்டு முயற்சிக்கிறானோ அவனே அளப்பறிய இறை சக்தியையும் ஆன்மாவையும் அறிகிறான் என்கிறார் எமதர்மன்.


மனிதன் எப்போது மரணமற்றவன் ஆகிறான் என்று நசிகேதன் கேட்க


எமதர்மன் தொடர்கிறார் "நசிகேதா! மனத்தைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும் போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். இங்கேயே இறைநிலையை அடைகிறான்."


"இதயத்தின் நாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான்."


ஆக ஆன்மாவை ஆசைகளைக்கடந்த மன ஆழ்மன அமைதியுடன் அடைந்து அது தான் நாம் என்பதை உணர்ந்து உச்சந்தலை நாடி மூலம்உடலை விட்டுப் பிரிந்து மரணமற்ற தன்மையை அடையலாம் என்றும் அவ்வாறு அடையும் நிலையை அடைபவன் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடுவான் என்று எமதர்மன் கூறுகிறார்.


கடைசியாக ஆன்மா பற்றி எமதர்மன் இவ்வாறு கூறுகிறார்..


"நசிகேதா! உடம்பில் உறைவதான ஆன்மா பெருவிரல் அளவுடையது; மக்களின் இதயத்தில் எப்போதும் உள்ளது. முஞ்சைப் புல்லிலிருந்து ஈர்க்கும் குச்சியைப் பிரிப்பது போல் அதனைச் சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்க வேண்டும். அந்த ஆன்மா தூயது,  அழிவற்றது என்று அறிந்து கொள். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்து கொள்"


நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய கடைசி உபதேசம் இது. பெருவிரல் அளவுடைய ஒளிப்பொருள் ஒன்று நம்முள் இதயக் குகையில் உள்ளது. அதுவே ஆன்மா. அதனை உடம்பிலிருந்து பிரித்தறிய வேண்டும். அந்த ஆன்மாவே எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதை உணர வேண்டும். இதுவே இந்த இரண்டு வித்யைகளின் பொதுவான கருத்து ஆகும். இந்தக் கடைசி மந்திரத்தில் மீண்டும் ஒருமுறை எமதர்மன் அதை நினைவு நசிகேதனிடம் நினைவுகூறுகிறார்.


இவ்வாறு நசிகேதன் கேள்வி கேட்க எமதர்மன் பதில் கூற கட உபநிஷத்தின் ஆன்மாவை அறிய உதவும் பாடம் இத்துடன் நிறைவு பெறுகிறது.


"எமதர்மனால் சொல்லப்பட்ட இந்த வித்யைகளையும், எல்லா யோக விதிகளையும் ஏற்றுக் கொண்டு நசிகேதன் தூயவனாகி மரணமற்றவன் ஆனான். பிறகு இறைவனை அடைந்தான். மற்றவர்களும் இந்த வித்யையை அறிந்து பின்பற்றும் போது இறைநிலையை அடைகிறார்கள்."


ஆக உபதேசத்தை கேட்பதுடன் நில்லாமல் நசிகேதன் அதை சாதகம் செய்து இறைநிலையை அடைகிறான்.


கடைசியாக நீங்கள் தான் ஆன்மா என்பதை கீழ்கண்டவாறு தொடர்ந்து சிந்துப்பது ஆன்மாவை உணர்வதற்கு உதவும்.


1. அனைத்திற்கும் சாட்சி நான்
2. காலத்தின் தலைவன் நான்
3. ஆதியில் தோன்றியவன் நான்
4. பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி நான்
5. ஆன்ம அக்கினி நான்
6. ஆணையிடுபவன் நான்
7. உடம்பைக் கடந்தவன் நான்
8. உடம்பு வீழ்ந்து, உயிர் வெளியேறிய பிறகும் மாற்றமின்றி இருப்பவன் நான்.
9. அனைத்தும் தூங்குகின்ற போதும் விழித்திருப்பவன் நான்
10. வாழ்க்கையே நான்.


மேலே உள்ளவைகளை படிக்கும் போது 'நான்' என்ற பதம் வாசிப்பவராகிய நீங்கள் தான் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அந்த 'நான்' என்பதே இறைவன். கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார் 'எல்லா உயிர்களிடத்திலும் உறைந்திருப்பவன் நானே' 'நான்' என்று யாரெல்லாம் கூறிக்கொண்டாலும் அவற்றின் உருவகம் ஒன்றே! ஏனெனில் எல்லா உயிர்களிலும் உரைந்திருப்பதும் அழிக்கமுடியாததும் அடையாளம் அற்ற 'நான்' என்ற ஒரே "ஆன்மா".  


"அதுவே நீ"


(முற்றும்)



Saturday, September 11, 2010

மரணத்திற்கு அப்பால் - 18



"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

மூலப் ப்ருக்ருதியான அண்டத்தின் மகா சக்தியை சாதகங்களை செய்தவர்கள் மட்டுமே காண முடிகிறது. ஆன்மாவை உணர்ந்து இறைவனின் ஆற்றலை உணர்ந்தவர்கள் மகா சக்தியை தரிசிக்கிறார்கள். மகா சக்தியை எந்தெந்த லோகத்தில் எந்தெந்த நிலையில் நம்மால் காணமுடியும் என்பதை நசிகேதனுக்கு உரைக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! புத்தியில் கண்ணாடியில் போலவும், பித்ரு லோகத்தில் கனவில் போலவும், கந்தர்வ லோகத்தில் தண்ணீர்ல் போல் தெளிவற்றும் பிரம்ம லோகத்தில் நிழலும் வெயிலும் போல் தெளிவாகவும் அகக்காட்சி வாய்க்கிறது"

இவ்வாறான அகக்காட்சி தெளிவுற்று மனம் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நான் ஆன்மா என்பதை எவன் நிலையாக உணர்கிறானோ அவனே ஞானியாவான். அவ்வாறு குழப்பங்களில் இருந்து விடுபட மனிதன் தான் கொண்ட உடலும், உடலால் உணரப்படும் விஷயங்களையும் தனித்தனியே பிரித்தறிந்து அவை ஆன்மாவிலிர்ந்து வேறுபட்டது என்றும் ஆன்மாவே நிலையானது என்றும் உணர வேண்டும். அதை எவ்வாறு செய்வதென்பதை எமதர்மன் எடுத்துரைக்கிறார்.

"புலன்களின் தனித்தன்மை, அவற்றின் எழுச்சி மற்றும் ஒடுக்கம், தனித்தனியான உற்பத்தி ஆகியவற்றைப் பகுத்தறிகின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்."

மனிதர்கள் உட்பட உலகில் உள்ள யாவும் ப்ரபஞ்சத்திலிருந்து பிரிந்து வந்த ஒரே தன்மையிலான பொருளே! எனவே மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பொருள்களின் தன்மைகளைக் கொண்டதாக இருப்பதே இயல்பு.

உதாரணமாக பெரியோர்கள் இவ்வாறு பகுக்கிறார்கள்!

காது ஒலியை பெறுவதற்கு வின்னை நோக்கி இருக்கும் செலுத்து சக்தி.
மூக்கு காற்றின் அழுத்தத்தத நோக்கி இருக்கும் வாயு சக்தி!
கண் ஒளியை நோக்கி இருக்கும் அக்கினியின் சக்தி!
நாக்கு சுவையைத் தேடி இருக்கும் தண்ணீரின் சக்தி!
உடம்பு மணத்தினால் இயங்கும் பூமியைப் போன்ற இயங்கு சக்தி!

இப்படி ஒவ்வொரு புலனும் பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலிருந்து தனித்தனியாகத் தோன்றின, தனித்தனி செயல்களைச் செய்கின்றன எனலாம். இவைகள் விழிப்பு நிலையில் செயல்பட்டு கனவிலும் தூக்கத்திலும் ஒடுங்கி இருக்கின்றன. இவ்வகைப் புலன்கள் அனைத்தும் உயிர்சக்தியோடும் பிராணனோடும் சம்பந்தப்பட்டவை. இவ்வகைப் புலன்களுக்கும் ஆன்மாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே இதன் மூலப்பொருள் என்பதை உணரவேண்டும்.



"நசிகேதா! புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது."

"மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது.(அவ்யக்தம் என்றால் ப்ரபஞ்சத்தின் ஆற்றல்) அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்"

இவ்வாரு உலக நிகழ்விகளிலிலிருந்து இறைவன் வரை உயர்வானதை எடுத்துக் கூறுகிறார் எமதர்மன். இவ்வாறு கூறக்காரணம் இறைவனை அடையும் லட்சியத்திலிருந்து அதாவது இறைநிலையை நம் ஆன்மா பெற்று, நாமே இறைவன் என்று இரண்டர கலக்கும் நிலையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் கீழே இருக்கிறோம் என்பதை இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

'புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை' என்கிறார். அதாவது உலகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே நம் புலன்களைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இயற்கைக்கு மயங்குகிறோம். மலரைப் பார்த்தால் கண் மயங்குகிறது. வாசனை நாசியை இழுக்கிறது. அழகிய பறவைகள் கவனத்தை இழுக்கின்றன. அதன் சப்தங்கள் செவியை கவர்கின்றன. உணவின் சுவை நாவை கட்டுப்படுத்துகிறது. காமம் உடலைக் கவர்கிறது. ஆனால் இவ்வாறு புலன்கள் செயல்படுவது அவற்றின் தனித்தன்மையே அன்றி இதயக் குகையில் உரைந்திருக்கும் ஆன்மாவிற்கும் புலன் இயக்கங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதை யார் ஆழ்ந்து உணர்கிறார்களோ அவர்களது புலன்கள் மீதான மோகமும் இயக்கமும் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன.

மேலும் மரணமில்லா நிலையை அடையும் வழியை நசிகேதனுக்கு உரைக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக் குகையிலுள்ள ஆன்மாவால் விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் எனப்படுவது அண்டவெளியின் மைய சக்தி எனக்கொண்டால் அதை அனுவிலும் அனுவான மனிதக்கண்களால் காண முடியாது என்பதே உண்மை. இதனை ஆன்மாவை உணர்ந்தவர்கள் ஆன்மரூபத்தில் பிரபஞ்சத்தோடு கலந்தவர்கள் மட்டுமே காண முடியும்.

இதையே கீதையில் பகவான் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார்...

"அர்ஜுனா! உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈஸ்வர யோக நிலையைப் பார்."



ஸ்ரீ க்ருஷ்ணர் அருஜுனன்னுக்குத் தன்னுடைய மேலான ஈஸ்வர வடிவத்தைக் காட்டி அருளினார். அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது.

திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து கொண்டும் திவ்யமான வாசனையைப் பூசிக்கொண்டும், பெரும் வியப்பூட்டும் வகையிலும் ஒளி வீசிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் முகங்களைக் கொண்டதாயும் இருந்தது. வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒளி வீசினால் எவ்வளவு பேரொளி தோன்றுமோ, அவ்வளவு ஒளியோடு அந்த மகாத்மாவின் உருவம் பிரகாசித்தது.



"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."


(ஆன்மாவை அறிவோம்...)


மரணத்திற்கு அப்பால் - 19



Sunday, August 15, 2010

மரணத்திற்கு அப்பால் - 17





"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சி என்றெல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுபவைகள் எல்லாம் உண்மையில் என்ன என்பது பற்றி யாராலும் கூற முடியாது. ஏனினெல் அது அராய்ச்சி செய்து விளக்கமுடிவதில்லை. அவை அனுபவத்திற்கு உரியது. அத்தகைய அனுபவத்தை பெறுவதற்கு சுய ஆராய்ச்சி தேவை. அவ்வாறான ஆராய்ச்சியின் காரணமாக நசிகேதன் இங்கே அதுபற்றி கேட்க எமதர்மனும் சிறுவனான நசிகேதனுக்கு சிறந்ததொரு பதிலைக் கொடுக்கிறார்.

"குறிப்பிட்டு சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த ஆனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப்படுகிறதா? இது பற்றி நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்கிறான் நசிகேதன்.

எமதர்மன் கூறுகிறார்! "நசிகேதா! அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன."

ஆன்ம ஒளியைக் காட்ட புற ஒளியால் இயலாது என்கிறார் எமதர்மன். ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. ஆன்ம ஒளியே நாம் புறப்பொருளைக் காணும் விளக்காக இருக்கின்றது. ஆன்ம ஒளியால் தான் நாம் அனைத்தையும் உணர்கிறோம். ஆகையால் சாதகத்தால் ஆன்ம ஒளியை நீ உணர்வாய் என்கிறார் எமதர்மன். எவனொருவன் ஆன்ம ஒளியை காண்கிறானோ அவன் மரண பயத்தை வெல்கிறான்.

மரணத்தை விட கொடியது மரண பயம். ஆனால் அத்தகைய மரண பயத்தை ஒருவன் எப்படி வெல்ல முடியும் என்பதற்கு எமதர்மன் வழி கூறுகிறார். வாழ்க்கையின் துவக்கத்தையும் முடிவையும் பற்றிய உண்மை நிலையை உணர்பவன் மரண பயத்தை வெல்கிறான் என்கிறார்.

உதாரணமாக ஆற்றங்கரையில் ஒரு அரச மரம் இருப்பதாய்க் கொள்வோம். நாம் அதைப் பார்க்கிறோம். அதன் பிரதிபிம்பம் நீரில் தெரிகிறது. நிலத்தில் வேர்கள் கீழேயும் கிளைகள் மேலேயும் தெரியும், ஆனால் நீரில் அவை தலைகிழாகத் தெரியும். மரம் நீரின் பிரதிபிம்பத்தில் வேர்கள் மேலாகவும் கிளைகள் கீழாகவும் போல! அதாவது வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல. பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம். மரணத்தை துன்பமாகக் காண்கிறோம். அதனைக் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு துன்பம் என்றும் மரணத்தை இன்பம் என்றும் கூறுகிறார்கள். இதுவே மரம் நீரில் பிரதிபிம்பமாக தலைகீழாக தெரிவதற்கு எடுத்துக்காட்டு.



அதுவே உண்மை எனப்படுகிறது. துறவி மரணத்தை நேசிக்கிறான். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். அது போலவே உலகம் அதன் உறவுகள் அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை நிலையானவை என்று நம்புகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. இவ்வாறு நாம் காணும் உண்மைக்கு ஒரு தலைகீழ் நிஜம் இருப்பதை, நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பிரதிபிம்பமான இன்னொரு கோணம் இருப்பதை நீரில் காணும் மரத்தோடு ஒப்பிட்டு விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இந்த அரச மரம் பழமையானது. மேலே வேரும், கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே!"

"இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன. பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பது போல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் மிகப்பெரிய பிரம்மாண்டத்தன்மை கொண்டவன் என்கிற உண்மையை உணர்வதாலேயே இயக்கங்கள் தடங்கலின்றி நடைபெறுகின்றன. பேராற்றலின் சக்தியே பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கத்தையும் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றது என்பதை விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கின்றது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால் தான் தன் தொழிலைச் செய்கின்றன."



இங்கே இறைவன் என்ற பதத்தை மூலப் ப்ருக்ருதி எனக்கொள்ளலாம். அளவிட முடியாத அண்டவெளியும் பிரபஞ்சங்களும் ஒருவித ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டும் ஏதோ ஒரு செலுத்துப் பாதையிலேயே வலம் வந்து கொண்டிருப்பதையும் காணும் போது, இவைகள் எல்லாம் எதிலிருந்து உருவானதோ அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லையற்ற பரப்பளவையும் அவை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதை நாம் உணர முடிகிறது. ஆகவே அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றலின், கட்டுப்பாட்டின் காரணமாகவே அக்னி எரிக்கின்றது என்றும் சூரியன் சுடுகின்றது என்றும், வாயு அதன் வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றது என்றும் எமதர்மன் கூறுவதாகக் கொள்ளலாம்.

"இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியுமானால் அவர்களுக்கு அகக்காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது" - எமதர்மன்.



ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.


ஆன்மாவை அறிவோம்....


மரணத்திற்கு அப்பால் - 18