"நைமிசாரண்ய முனிவர்களே! மானிட சரீரம் எப்படி உண்டாகிறதென்பதே
விநதா புத்திரனின் கேள்வி. அதற்கு ஸ்ரீமத் நாராயணன் கூறிய பதிலைக் கேளுங்கள்"
என்று சொல்லிக் கூறலானார் சூதபுராணிகர்.
"கச்யப குமாரா!" ஆணும், பெண்ணும் தாம்பத்ய உறவு கொள்வதால் கரு உருவாகி சிறிது சிறிதாக
வளர்ந்து பத்து மாதத்தில் குழந்தை பிறக்கிறது.
ஸ்த்ரீயின் மாதவிலக்கு ஆனதிலிருந்து ஆறாவது நாள் முதல்
பதினெட்டாவது நாள் வரையிலான இரட்டை நாட்களில் ஸ்தீர்யுடன் கூடினால்ஆண்மகவு உண்டாகும்.
பொதுவாக ஒரு பெண் மாத விலக்கான நான்காம் நாளிலிருந்து
எட்டாம் நாள் வரை கருவுற வாய்ப்புண்டு.
மதவிலக்கிலிருந்து ஐந்தாம் நாள் முதல் ஸ்திரிகள் பாயசம்
முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப, தாம்பூல வஸ்துக்களை தரித்துக் கொண்டு
குவிந்த சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும்.
அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்ததால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரி
வயிற்றில் கருத்தரித்து,
வளர்பிறைச் சந்திரனைப் போல அந்தக் கருவானது விருத்தியாகும். மன்மதனும் மனமும் ஒத்த
காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதன்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால்
பெண்ணும் பிறக்கும். சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும்.
சேர்க்கை நிகழ்ந்த ஐந்தாவது நாளன்று கர்ப்பப் பையினுள்ளே
ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பெரிதாகும். இருபதாவது நாளில் மேலும் அதற்க்குச் சிறிது
தசையுண்டாகும். இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியாகிறது. ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.
மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன.
நான்காவது மற்றும் ஐந்தாவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும்.
ஆறாவது மாதத்தில் கழுத்தும், தலையும், பற்களும் உண்டாகும்.
ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக்குரியும், பெண் மகவாயின் பெண் இனக் குறியும்
உண்டாகும்.
எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும்
பிரவேசிக்கிறான்.
ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்ற நாடியின் மூலத்தை சிசு
அடைகிறது. பத்தாம் மாதம் தன் பிஞ்சுக்கால்களால் உதைத்து உதைத்து கருவறைக் கதவைத் திறப்பதால்
தாய்க்கு பிரசவ வலி ஏற்படுகிறது.
அன்னையின் கருவில் இருக்கும் போதே உயிருக்கு ஆயுளும், கல்வி, யோகம் ஆகியவைகளும், எந்த நேரத்தில் எந்தவிதமாக இறப்பு
நேரிடும் என்பதும், முன் ஜென்ம பாப, புண்ணியங்களுக்கேறப கர்ம வினைகளும் பிரம்மனால் எழுதப்பட்டு விடுகிறது. பூர்வ ஜென்மத்தில்
செய்த கர்ம வினைகளின்பயனையே ஜீவன் மறுபிறவியில் அனுபவிக்கிறது என்பதில் கொஞ்சமும்
சந்தேகமில்லை.
கருடா! உன் மூலம் உலகத்தவர்களுக்குப் பிறப்பின் ரகசியத்தைச்
சொன்னேன்.
- கருடபுராணம்
