Showing posts with label முல்லா நசுருதீன். Show all posts
Showing posts with label முல்லா நசுருதீன். Show all posts

Friday, May 1, 2009

முல்லா நசுருதீன் கதைகள்


ஒரு நாள் முல்லா ஒரு துணிக்கடைக்குச் சென்றார். 

அங்கு தலைப்பாகைகளும் விற்க்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முல்லா அங்கு சென்றார்.  

அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார்.  

பிறகு தலைப்பாகையை தலையில் அணிந்து கொண்டார்.  

அந்த கடையில் அழகான சால்வைகளும் விற்க்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது.  

அதனால் அவர் கடைக்காரரைப் பார்த்து "இந்த தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன். இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது?" என்றார்.  

உங்கள் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர்.  

முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்துவிட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.  

ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார்.  

"நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாக தானே சால்வையை வாங்கினேன்" என்றார் முல்லா.  

அப்படியானால் தலைப்பாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர்.  

"தலைப்பாகைக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேனே" என்று சொல்லி கம்பீரமாக நடையைக்கட்டினார் முல்லா.  

கடைக்காரர் மிகவும் குழம்பிப் போய் விழிக்கத்துவங்கினார்.

Tuesday, April 28, 2009

முல்லா நசுருதீன் கதைகள்


முல்லா பெரிய அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்ப்பட்டாலும் தம்முடைய அறிவாற்றலாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவார் என்றும் ஊரில் உள்ளவர்கள் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது.  

அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்க்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார்.  

முல்லா வந்து வணங்கி நின்றார்.  

"முல்லா , உமது அறிவை பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும் , நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கிலிடப்படுவீர்" என்றார் மன்னர்.  

முல்லா உண்மை சொன்னாலும் பொய்யைச் சொன்னாலும் அவருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. முல்லா நிலைமையை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்று அவையோர் அவரையே கவனித்தனர்.  

முல்லா மன்னரை நோக்கி, " மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில் போடப்போகிறீர்கள்" என்று பதற்றம் ஏதும் இன்றிக் கூறினார். அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார்.  

முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும். முல்லா கூறியது பொய் என்று வைத்துக் கொண்டால் முல்லாவைத் தூக்கில் போட வேண்டும். 

தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரை தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். 

இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னரை திக்குமுக்காட வைத்துவிட்டார்.  

அவரது அறிவாற்றலை கண்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்து அனுப்பினார்.