Showing posts with label ramaayan. Show all posts
Showing posts with label ramaayan. Show all posts

Tuesday, April 27, 2010

அனுமன் பறந்ததும், ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சியும்!



அறிவியலோடு ஒத்துப்போகாத மதங்கள் இருப்பதை விட அழிவதே மேல். மனிதர்களை தொடர்ந்து இருட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக அந்த மதங்கள் உடனேயே அழிந்து விடுவது மனித குலத்திற்கு நல்லது - சுவாமி விவேகானந்தர்.

இந்து தர்மம் என்றைக்குமே அறிவியலோடு பொருந்திப் போவதாகவே இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. உதாரணமாக ஸ்ரீமன்நாராயணனின் தசாவதார வடிவங்கள் பரினாம வளர்ச்சியின் சித்தாந்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்றால் மிகையில்லை. நீர்வாழ் உயிரியில் தொடங்கி படிப்படியான உருமாற்றத்தால் மனித உருவை வெளிப்படுத்தும் இந்த தசாவதாரக் கருத்தியல் வேறு எந்த மதத்திலும் கண்டறிய முடியாத அறிவியலோடு பொருந்திப்போகும் ஒரு விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேப்பிலை, மஞ்சள் என்று நம் கலாச்சாரத்தில் நாம் அறிவிலை பல வகைகளில் இறையியலோடு தொடர்புபடுத்தி கையாண்டு வந்திருக்கிறோம்.

இப்படி பல்வேறு நிலைகளில் இயற்கையோடும் அறிவியலோடும் நம் மதங்களும் நம்முடைய இதிகாச புராணங்களில் வரும் கதாபாத்திரங்களும் ஒன்றி வாழும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன.

இன்றைக்கு ஒரு இதிகாச கதாபாத்திரத்தைப் பற்றியும் அதன் சிறப்புத் தன்மை எப்படி அறிவியலோடு பொருந்தியிருக்கிறது என்பதைப் பற்றியும் பார்ப்போம்.!

ராமாயணம்!

ராமாயணம் நிகழ்ந்ததுக்கு அடையாளமாக பூகோளம், தொல்பொருள் ஆராய்ச்சி, சரித்திரச் சான்றுகள், கலாசாரச் சின்னங்கள், காவியத்தின் குறிப்புகள் என்று ஏராளமாய்க் கிடைக்கின்றன. டாக்டர் ராம் அவதார் என்பவர் செய்த ராமாயண ஆராய்ச்சியில் 195 இடங்களை ராமரும், சீதையும் சென்ற இடங்களாய்க் கண்டறிந்துள்ளார்.

அவற்றில் சிருங்கிவேரபுரி என்றழைக்கப்பட்ட சிருங்கேரி, பாரத்வாஜ ஆசிரமம் (அலஹாபாத்), சித்ரகூடம், பஞ்சவடி, சீதாசரோவர், சீதாமடி, ஜனக்பூர், தர்பங்கா, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம், ராமநதீஸ்வரம், புள்ளப் பூதங்குடி ஆகிய இடங்களும் இடம் பெறுகின்றன.

ஸ்ரீலங்காவில் சீதை சிறை இருந்த அசோக வனம் தற்போது “அசோக் வாடிகா” என்ற பெயரில் அழைக்கப்பட்டு புண்ய ஸ்தலமாகவும், சுற்றுலா மையமாகவும் பாதுகாக்கப்படுகின்றது.

இந்தோனேஷியாவில் ஸ்ரீராமர் மற்றும் சீதையை கலாசார- ஆதர்ஸ தம்பதிகளாய்ப் பார்ப்பதோடு அல்லாமல், ராமாயணத் திருவிழா “உலக ராமாயணத் திருவிழா”வாக சில ஆண்டுகள் முன்பு கொண்டாடியது. ராமாயணம் இந்தோனேஷியாவின் தேசீய இதிஹாசமாய் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இத்தனை சிறப்பு பெற்ற ராமாயனத்தில் யாரை மறந்தாலும் ஒருவரை மறக்கவே முடியாது.

ஆஞ்சனேயர்!

ஆஞ்சனேயர் என்ற கதாபாத்திரம் இல்லையென்றால் ராமாயனத்திற்கு சிறப்பே இல்லை
எனலாம். முழு ராமாயனத்தையும் கேட்டு முடிக்கும் நம்மக்களுக்கு ராமர் மீது பக்தி வருகிறதோ இல்லையோ ஆஞ்சநேயர் மீது கண்டிப்பாக பக்தியும் விருப்பமும் பாசமும் வந்து விடும். எல்லோரையும் கவரும் அந்தக் கதாபாத்திரம் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியோடு ஒத்துப்போகிறது என்றால் நம்புவீர்களா?
ஆம். கண்டிப்பாக ஒத்துப்போகிறது என்பேன் நான். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

அதற்கு முன்பாக ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரிபற்றி கொஞ்சம் பார்ப்போம். 1905-ல் ஆல்பர் ஐஸ்டீனுக்கு இருபத்தி ஐந்து வயது தான். அப்போதே ஆராய்ச்சியாளர். ஒளியின் வேகத்தைப் பற்றி இன்னபிற ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அதை சில ஆராய்ச்சிகள் மூலம் அதிரடியாக நிரூபித்து அதிரவைத்த அதிர்வேட்டுக்காரர். அதாவது ஒளியின் வேகம் என்பது பூமிப்பந்து சுழலும் திசையிலும் சரி அதன் எதிர் திசையிலும் சரி மாறவே இல்லை. அது எப்படி? என்று ஒரே குழப்பம்.

இதற்கு ஐன்ஸ்டீன் கொடுக்கும் தீர்வு எப்படி ஆஞ்சநேயர் பறப்பதோடு ஒத்துப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்!



ஒளியின் வேகம் பூமிப்பந்து சுழலும் திசையிலும், எதிர் திசையிலும் ஒரே வேகத்தில் எப்படி பிரயானிக்க முடியும் என்பதை இவ்வாறு விளக்குகிறார். ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,282 மைல் என்று கூறப்படுகிறது. இந்த வேகத்தில் ஒரு பொருள் பிரயானித்தால் கண்டிப்பாக அந்த பொருளின் மீது ஒரு மாற்றம் உண்டாகும் என்கிறார் ஐன்ஸ்டீன். அந்த மாற்றத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரயானிக்கும் எந்தப் பொருளும் பூமியின் சுழற்சியின் எதிர் திசையிலும் ஒரே வேகத்தில் பிரயானிக்க முடியும் என்பது அவரது வாதம்.

நமக்குப் புரியும் வகையில் ஒரு உதாரனம் பார்ப்போம். சித்திரைப் பொருக்காட்சிக்குப் போகிறோம். அங்கே ஜெயன்ட் வீல் ராட்டினத்திலோ, அல்லது ரோலர் கோஸ்டரிலோ நாம் பிரயானிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அவை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு நம்மைக் கொண்டுபோய் அப்படியே கீழே விழுந்து விடுவது போல புவியீர்ப்பு விசையின் வேகத்திலேயே நம்மை தரைக்குக் கொண்டு வரும். மயிற்கூச்செரிய உணர்ச்சி மேலிட கூச்சலிடுவோம். நாம் அப்படி கூச்சலிடவும் காரனம் இருக்கிறது. புவியீர்ப்பு விசையின் வேகத்தில் நாம் கீழே இறங்கும் போது ரத்த அழுத்தம் வழக்கத்தை விட மாறுபட்டு உடலின் ரத்தத்தின் வேகம் அதிகரிக்கிறது. இதை சமாளிக்கவே அதில் பயணிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். ஆக ராட்டினத்தில் ப்ரயானிக்கும் போதே நம் உடலில் மாறுதல்கள் உண்டாகுமானால் ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கும் போது ஒரு பொருளின் மீது என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்று கற்பனை கூட செய்ய முடியாது.

ஆனால் ஐன்ஸ்டீன் இதை கற்பனை செய்தது மட்டுமல்ல ஒரு ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தும் விளக்கினார். ஒளியின் வேகத்தில் ஒரு பொருள் பிரயானிக்கும் போது அதன் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. அதன் அளவு பாதியாக குறைந்து விடுகிறது. அதாவது ஆறடி இருக்கும் ஒரு மனிதன் ஒளியின் வேகத்தில் பிரயானித்தால் மூன்று அடியாக மாறிவிடுகிறான் என்கிறார்.



ஒளியின் வேகத்தில் பிரயாணிப்பதால் காலக்கட்டுப்பாட்டை அவர் கடந்து விடுகிறார் என்றும் கூறுகிறார். ஒளியைத் தவிற வேறு எந்த ஊடகமும் ப்ரபஞ்சத்தில் தடையற்ற முறையில் பறக்க முடியாது என்பதாலும், ஒளியின் வேகத்தில் இப்படிப்பட்ட மாறுதல்கள் உண்டாவதாலும் அதன் வேகம் பூமியின் சுழற்சிதிசையிலும், அதன் எதிர் திசையிலும் மாறாமல் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆராய்ச்சிக் கூடத்தில் அனுத்துகள்களைக் கொண்டு இதை ஆராய்ச்சி செய்து சக விஞ்ஞானிகள் மத்தியில் நிரூபித்தும் காண்பித்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் ரெலேட்டிவிட்டி தியரி ஆங்கிலத்தில் இங்கே

சரி அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்ததற்கும் இந்த ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கும் போது ஏற்படும் பொருளின் மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஒரு கற்பனை ஒப்பீடு.

அனுமார் சஞ்சீவி மலையை கொண்டுவர கிளம்பும் முன் தனது உடலை பல மடங்குப் பெரிதாக ஆக்கிக் கொள்கிறார். பிறகு ஒளியின் வேகத்தில் அவர் பறக்கிறார். இப்போது அவரது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

ஏற்கனவே மலைபோல உருவமும் அதற்கேற்ற எடையும் கொண்ட வடிவெடுத்திருக்கும் அனுமார் தன்னுடைய சம எடையுள்ள மலையை கையில் தாங்கிக் கொள்கிறார். பின்னர் ஒளியின் வேகத்தில் அவர் பறக்கிறார் என்று கொண்டால், இப்போது அனுமாரின் எடை இரண்டு மடங்காகி விடுகிறது. அதாவது சஞ்சீவி மலை அவரது எடையில் பாதி. ஆக தனது எடையில் பாதியாக போய்விட்ட சஞ்சீவிமலை அனுமாருக்கு இப்போது கனமில்லை தானே!

மேலும் ஒளியின் வேகத்தில் வரும்போது உருவம் பாதியாகி விடுவதால் பெரிய மலையை தலைக்கு மேல் தூக்கிக் கொள்ள வசதியாகி விடுகிறது. இல்லை யென்றால் சம அளவு பெரிய உருவத்தை கையில் பிடிக்க வசதி இருக்காதே! மேலும் ஒளியின் வேகத்தில் பறப்பதால் காலத்தின் கட்டுப்பாட்டையும் உடைத்தெரிந்து விடுவதால் அவர் நினைத்த வினாடிகளில் ராமரை அடைந்து ராம லக்ஷ்மனரைக் காப்பாற்றி விடுகிறார்.

இப்படி ப்ரபஞ்சத்தின் கால அளவைகளுக்குள் கட்டுப்பட்டும் அறிவியலின் நிரூபிக்கப்பட்ட சித்தாந்ததுக்குள்ளேயே இந்த கதாபாத்திரம் செயல் பட்டிருப்பதால் அனுமார் சஞ்சீவி மலையையே தூக்கிக்கொண்டு பறந்து வந்திருக்க வாய்ப்பிருப்பது சாத்தியமே என்று என்னத் தோன்றுகிறது. ஆக ஒரு மலையைத் தூக்க முடியுமா அல்லது இப்படி தூக்கிக் கொண்டு ஏ பி டி பார்சல் சர்வீஸ் படத்திலிருப்பது போல பறக்கத்தான் முடியுமா? இது ஒரு கட்டுக்கதை. மாயாஜாலம் என்று கூறுபவர்களுக்கு... ஒளியின் வேகத்தில் பறந்து பாருங்கள்...ஐன்ஸ்டீனின் கூற்றுப்படி சாத்தியமே!



தற்காலத்தில் கூட ப்ரானனைக் கட்டுப்படுத்தி புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடக் கற்றுக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் பறந்து காட்டி இருக்கிறார்கள். எந்த உபகரனமும் இல்லாமல் மனிதனால் உடலோடு பறக்கமுடியும் என்பது வரை இந்தக் காலத்திலும் கூட நிரூபிக்கப்பட்ட ஒன்றே. அதை டூப் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒளியின் வேகத்தில் பிரயானிக்கும் அளவிற்கு பயிற்சியெடுத்தவர் யாரும் இல்லை. அப்படி பிரயானித்தால் அப்போது அவர் பெயர் அனுமார்.

இப்படி இந்து தர்மத்தின் பல இதிகாச கதாபாத்திரங்கள் அறிவியல் மற்றும் மனோவியல் சூட்சமங்களோடு ஒத்துப் போகும் தன்மை கொண்டவையாகவே இருந்திருக்கிறது எனலாம்.

ஆகவே தான் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Thursday, March 11, 2010

ஜாதி புத்தி! அல்லது, குல தர்மம் - 2





பண்டைய காலங்களில் மக்கள் தர்மத்தை வலியுறுத்தி வாழ்ந்தனர். ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று உயர்ந்த தர்மங்களை வகுத்து வாழ்ந்தனர். எனவே அவை குல தர்மம் என்று அழைக்கப்பட்டது.

இதையே திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

"நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு."

"நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும். அவ்வாறே,
மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப் படியே அறிவும் ஆகும்"
என்கிறார் வள்ளுவர்.

மேலும் ஒரு குறளில் இவ்வாறு எடுத்தியம்புகிறார் வள்ளுவப்பெருந்தகை..

"மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்"

அதாவது மனிதர்களின் உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும். அதேபோல் இவன் இன்னவன் என்று அறியப்படுவதும் அவனவன் சேர்ந்த
இனத்தாலே உண்டாகும் என்கிறார்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இது போன்ற இனத்தால்
அறியப்படும் குணங்கள் எதுவும் பிறப்பின் அடிப்படையில் உண்டாவதில்லை.
வாழும் வழிமுறைகளால் மனோவியல் ரீதியாக வழிவழியாகக் கடைபிடிக்கப்பட்டும்
ஆழ் மனதில் பதியப்பட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.

இன உணர்வு எனப்படும் குல தர்மம் என்பது பற்றி ஒரு விளக்கம் ராமாயணத்தில் அற்புதாமாக கூறப்படுகிறது. அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

ராமேஸ்வரத்தின் சேதுக்கரையில் நடந்த நிகழ்வாக இதைச் சொல்கிறார்கள் பெரியோர்கள்.
ராவணனின் அதர்மச் செயலை கண்டு பொறுக்காமல் அவனிடமிருந்து விலகி ராமனை நோக்கி அடைக்கலமாக வந்தடைகிறான் விபீஷனன்.

ராமன் விபீஷனனை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சுக்ரீவனுக்கு இதில் உடன்பாடு இல்லை. அவன் விபீஷனனை சந்தேகிக்கிறான். ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.

அப்போது ராமன் சுக்ரீவனைப் பார்த்துக் கூறுகிறார். "சுக்ரீவா! நான் அடைக்கலமாக வந்த ஒரு புறாவிற்க்காக தன் கால் சதையையே வெட்டிக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தியின் குலத்தில் வந்தவன். அடைக்கலமாக வந்தவனைக் காத்தல் எனது குல தர்மம். அதிலிருந்து நான் ஒருகாலும் வழுவ மாட்டேன்" என்றும் கூறுகிறார்.

மேலும் ராமன் சுக்ரீவனுக்கு ஒரு கதையைச் சொல்லுகிறார்.


"சுக்ரீவா! உனக்கு ஒரு கதையை எடுத்துச் சொல்கிறேன் கேள். அது ஒரு குரங்கின் கதை. நீ அந்த குரங்கின் குலத்திலிருந்தே உதித்தவன். அந்த குரங்கின் கதையைக் கேட்ட பிறகு நீ அந்தக் குலதர்மத்தில் வந்தவன் தானா என்பதை நீயே சொல்" என்று கூறி அந்தக் கதையைக் கூறத்துவங்குகிறார்.

ஒரு மனிதன் காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்தான். அவனை ஒரு புலி துரத்தியது. அந்தப் புலியிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடி ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். புலி மரத்தின் மீது ஏறவில்லை. அது மரத்தடியிலேயே அவனுக்காக காத்திருக்கத் துவங்கியது.

ஆனால் இந்த ஆசாமியோ, எவ்வளவு நாளானாலும் பரவாயில்லை. நான் மரத்தின் மீதே அமர்ந்து தன்னைக் காத்துக் கொள்வேன் என்று பிடிவாதமான எண்ணத்துடன் அமர்ந்து கொண்டான். ஆனால் அவன் மரத்தின் மேலே சற்றி அன்னாந்து பார்க்கும் போது அதில் ஒரு பெரிய மனிதக்குரங்கு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

ஏற்கனவே புலியிடமிருந்து தப்பித்தோமென்றிருந்தால், இப்போது மனிதக் குரங்கிடம்
மாட்டிக்கொண்டது போலிருந்தது அவனுக்கு. அவன் பயத்துடன் அந்தக் குரங்கையே பார்த்துக் கொண்டிருக்கையில் குரங்கு அவனிடம் பேசத்துவங்கியது.

மனிதா நடுங்காதே! நான் உன்னை ஒருநாளும் கைவிட மாட்டேன். நீ என் வீடு தேடி
வந்திருக்கிறாய். வீடு தேடி வந்தவனைக் கைவிடுவது எனக்கு வழக்கம் கிடையாது. எனது முன்னோர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தது, யார் வீடு தேடி வந்தாலும் அவர்களை கைவிட்டுவிடக்கூடாது. ஆபத்திலிருந்து காக்க வேண்டும் என்றும் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நீ கவலைப்படாமல் உட்கார்ந்திரு, நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்" என்று குரங்கு கூறியது.


மனிதனும் கொஞ்சம் பயம் விலகியவனாய் நிம்மதியடைந்தான். ஆனால் கீழே புலி கத்துக்கொண்டு இருக்கிறதே. அதற்கு எப்படியும் இந்த மனிதனைத் தின்னாமல் போக மனமில்லையே. அது இவர்களின் செய்கைகளை கவனித்துக் கொண்டே வந்தது.

குரங்கும் மனிதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதாக தீர்மானித்து, குரங்கு உறங்கும் போது மனிதன் விழித்திருந்து பார்த்துக்கொண்டிருப்பதும் மனிதன் உறங்கும் போது குரங்கு விழித்திருந்து அவனைப் பார்த்துக் கொள்வதுமாக இருந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த புலி இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விட்டாலொழிய நான் பசியாற முடியாது என்று எண்ணி ஒரு திட்டம் போட்டது.

அதனால் மனிதன் முழித்துக் கொண்டிருக்கும் போது புலி மனிதனைப் பார்த்துப் பேசியது.."ஏ மனிதனே! இந்த குரங்கை நம்பி நீ உன் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறாயே! அது இப்போது ஒரு மாதிரி இருக்கும். விடிந்த உடன் ஒருமாதிரி ஆகிவிடும். குரங்கு புத்தி என்பது தெரியாதா உனக்கு. அதனால் உன் உயிரை நீ காத்துக் கொள்ள நான் உனக்கு ஒரு உபாயம் சொல்கிறேன் கேள்" என்றது.

மனிதன் அதை கவனித்தான். புலி கூறியது "இப்போது குரங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது.
நீ ஓசைப்படாமல் அதைக் கீழே தள்ளி விடு. நான் அந்தக் குரங்கைத் தின்று பசியாறி விடுகிறேன். உன்னை விட்டு விடுகிறேன். நீயும் தப்பித்துப் போய்விடு" என்றது வஞ்சகமாக.


மனிதனுடைய புத்தி நமக்குத்தான் தெரியுமே! குரங்கே பரவாயில்லை என்றாகிவிடுமே!

மனிதன் யோசித்தான். புலி சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. குரங்கை தள்ளி விட்டு
விடுவோம். அது போய் மாட்டிக்கொள்ளட்டும். நாம் தப்பித்துக் கொள்வோம் என்று நினைத்தான். தனக்கு அடைக்கலம் கொடுத்த குரங்கை மரத்தின் மீதிருந்து புலியிடம் தள்ளிவிட்டான். உறங்கிக் கொண்டிருந்த குரங்கு உருண்டு விழுந்தது. விழும் வேகத்திலேயே விழித்துக் கொண்ட குரங்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தது. அதற்கு மனிதன் தான் தன்னைத் தள்ளி
விட்டிருக்கிறான் என்று புரிந்து போனது.

இனிமேல் புத்திசாலித்தனத்தோடு நடந்தால் தான் நாம் தப்பிக்க முடியும் என்று தீர்மானித்தது குரங்கு. கீழே விழுந்த குரங்கு உடனேயே புலியிடம் பேச்சுக்கொடுக்க துவங்கியது. புலியும் மெதுவாக குரங்கிடம் சென்று கூறியது "எனக்கு குரங்கு மாமிசம் பிடிக்கவே பிடிக்காது. எனக்கு மனிதனின் மாமிசம் தான் பிடிக்கும். ஆனால் ஏன் உன்னைத் தள்ளி விடச்சொன்னேன் தெரியுமா? மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகத்தான்.

மனிதனுடைய மூளை எப்படி வேலை செய்கிறது என்று இப்போது பார்த்தாயா? அவனுக்கு
அடைக்கலம் கொடுத்த உன்னையே தலைகுப்பற கீழே தள்ளி விட்டுவிட்டான். அவனுக்குப்
போய் நீ அடைக்கலம் கொடுத்திருக்கிறாயே! அதனால் நீ ஒரு காரியம் செய். எனக்கு எப்படியும் உன் மாமிசம் பிடிக்காது. நர மாமிசம் தான் பிடிக்கும். எனவே உன்னை இப்போது விட்டு விடுகிறேன். நீ மேலே சென்று அந்த மனிதனைக் கீழே தள்ளி விடு" என்றது.

குரங்கும் தலையை ஆட்டியது. கண்டிப்பாக நான் அவனைத் தள்ளி விடுகிறேன். இனிமேலும் அவனுக்கு நான் அடைக்கலம் கொடுப்பேனா?" என்று கூறிவிட்டு புலியிடம் இருந்து விடுதலைப் பெற்றுக்கொண்டு மரத்தின் மீது ஏறியது.


குரங்கு மரத்தின் மீது ஏறி வர வர மனிதன் நடுங்க ஆரம்பித்தான். குரங்கு நம்மைப் பிடித்து தள்ளிவிடப்போகிறது என்று பயந்தான். ஆனால் குரங்கு அப்படிச் செய்யவில்லை. மேலே ஏறி மனிதனுக்குப் அருகிலே சென்று அமர்ந்து அவனைத் தடவிக்கொடுத்து, "கவலைப்படாதே உன்னை நான் ஒருநாளும் காட்டிக் கொடுக்க மாட்டேன், என் உயிரைப் பணையம் வைத்தாவது உன்னை நான் காப்பேனே ஒழிய காட்டிக் கொடுக்க மாட்டேன். இது எங்கள் குல தர்மம். எங்கள் மூதாதையர்கள் கற்றுக்கொடுத்தது" என்று குரங்கு பேசியது.

மனிதன் திரும்பிக் கேட்டான் "ஆனால் புலியிடத்தில் என்னை தள்ளிவிடுவதாக ஒத்துக்
கொண்டு வந்தாயே! அதைக்கேட்டுத்தான் பயந்தேன்" என்றான்.

அதைக்கேட்ட குரங்கு "அப்படிச் சொன்னால் தானே புலி என்னை விடும். அதனால் தான் அப்படிச் சொன்னேனே தவிற உன்னைக் காட்டிக் கொடுக்கும் எண்ணமே எனக்குக் கிடையாது" என்றது.

மனிதன் வெட்கிப் போனான்.

இதைச் சொல்லிவிட்டு ராமன் சுக்ரீவனைப் பார்க்கிறான். "ஆக நிலையில்லாத குணம் கொண்டது என்றென்னக்கூடிய விலங்கினமாம் குரங்கினமே தனக்கென்று ஒரு குல தர்மம் இருப்பதை அறிந்து அதை விடாமல் பற்றிக் கொண்டு தர்மத்தைக் கடைபிடிக்கிறது என்றால் சுக்ரீவா நீ அந்தக் குலத்தில் இருந்து வந்தவன் தானே!

அப்படி இருக்கும் போது நம்மை அடைக்கலமாக வந்திருப்பவனைக் கைவிடவேண்டும் என்று நீ பேசுகிறாயே, இது உனக்கே ஞாயமாக இருக்கிறதா?' என்று ராமன் சுக்ரீவனிடம் கேட்டார். அப்போது தான் சுக்ரீவனுக்கு சமாதானம் உண்டாகி விபீஷனனை தங்களோடு ஏற்றுக்கொண்டான் என்று சொல்லப்படுகிறது.

ஆக எல்லோருக்கும் ஒரு குலம் இருக்கிறது. குறைந்த பட்சம் வழிவழியாக வந்த குடும்பமாவது இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களது குடும்ப மேன்மைக்காகவாவது இப்படித்தான் நாங்கள் வாழப்போகிறோம் என்று தர்மத்தைக் கடைபிடித்து குல தர்மம் ஒன்றை வழிவகுத்தால் நாமும் நமது சந்ததியினரும் உயர்ந்த வாழ்க்கையை இப்பூமியில் வாழவோம்.

தீய நடத்தைகளை மேற்கோள் காட்டி இது இவனின் ஜாதி புத்தி என்று சொல்லும் காலம்
போய் மனிதர்கள் ஒருவருக்கொருவர் நல்ல விஷயங்களை அடையாளப்படுத்தி இது அவன் குல தர்மம் என்று கூறும் காலம் உண்டாகுமாறு வாழ்வோம்.

ஆக குடும்பம் குடும்பமாய் தர்மத்தை கடைபிடித்து வாழ்வோம். உயர்ந்த குல தர்மத்தை உண்டாக்குவோம்.

நம் குலம் உலகினில் உயர்ந்ததென்று அகிலத்திற்க்குக் காட்டுவோம்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.


Wednesday, March 10, 2010

ஜாதி புத்தி! அல்லது, குல தர்மம்!




ஒருவர் தன் சக மனிதரிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கிறான். முகம்
சுளிக்குமாறும் கோபமூட்டும் படியும் நடந்து கொள்கிறான். இவன் தொல்லை தாங்காத அந்த மனிதன் அவன் போனவுடன் அவனைப் பற்றி சொல்லப்போகும் முதல் அர்ச்சனை என்னவாக இருக்கும்? "அவன் ஜாதி புத்திய காமிச்சிட்டான் பாத்தியா!"

துரோகம் செய்பவரை, ஏமாற்றுபவரை, ஒழுக்ககேடாக நடந்து கொள்பவர்களையெல்லாம்
பலரும் இவ்வாறு பேசியிருக்கக் கூடும். "அந்த ஜாதிப்பய அவன் புத்தியைக் காமிக்க தானே செய்வான்" என்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லா ஜாதிக்காரர்களும் பிற ஜாதிக்காரர்களை அவ்வாறே கூறுவார்கள். யாரும் யாரையும் விட்டு வைப்பதில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது. மரபு வழியாகவே எல்லா மனிதர்களும் இன ரீதியான ஒரு தனிப்பட்ட குணத்தைக் கொண்டிருப்பார்கள் என்று எல்லோருமே நம்புகிறோம். இதில் யாருக்கும் விதிவிலக்கு அளிப்பதில்லை.

இது நிஜமா? இப்படி ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்கள் இனம் சார்ந்த குணம்
இருக்குமா?

இது மனோவியல் ரீதியான ஒரு விஷயம். பொதுவாக மனிதர்கள் குழுக்குழுவாக. வாழும் தன்மையைப் பெற்றவன் என்பதை நாம் அறிவோம். குடும்பமும் ஒரு குழுவே. வாழிடம், மொழி, பழக்க வழக்கங்கள் சார்ந்து ஒன்றாகக் கூடி வாழ்வதும் ஒரு குழு வாழ்க்கையே!

இப்படிக் குழுவாக வாழும் போது மனிதர்கள் தங்களுக்கு என்று ஒரு தனி பழக்க வழக்கங்களையும், வாழும் முறைகளையும் வகுத்துக் கொள்வது இயல்பு. உதாரணமாக சிலர் "இது எங்கள் குடும்ப வழக்கம்" என்று சொல்வதைப் பார்த்திருப்போம். ஒரு குழுவாக ஆன பின்னர் அவர்களுக்கென்று சில விதிமுறைகளை வகுத்துக் கொள்ளுதலும் மனிதர்களின் இயல்பான குணமாக இருக்கிறது.

நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த
நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சில நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று
விதிகளை வைத்திருப்பார்கள். அதுவும் ஒரு குழு உணர்வே. நாம் எந்த குழுவைச்
சார்ந்து இருக்கிறோமோ அந்த குழுவிற்கென்று இருக்கும் சில கட்டுப்பாடுகளையோ
விதிகளையோ கடைபிடிக்க வேண்டும் என்பது மரபாகவே இருக்கிறது.

இந்த உலகத்தின் எந்த மூலையில் வாழும் மனிதருக்கும் ஒரே மாதிரியாக குழு
உணர்வு தான் இருக்கும். மனோவியல் ரீதியாகவே சில வகை உணர்வுகள் மனிதர்களுக்கு
ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதனாலேயே எந்த மூலையில் எந்த
நிறத்தில், எந்த மொழியில் வாழும் மனிதர்களாக இருந்தாலும் பொதுவான
மனோவியல் ஒன்றாக இருப்பதாலேயே இன்றைக்கு உலகம் ஒரே குடையின் கீழ்
ஒன்றி வாழ்தல் அதாவது 'குளோபளைசேஷன்' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில்
ஒரே சமூகமாக வாழ முடிகிறது.

ஆக குழுவும் குழுவின் அடிப்படையிலான குணமும் குழுவினரின் ஒத்த சிந்தனையின் அடிப்படையில் உருவாகிறது. குழுக்களின் அமைவிடம் மற்றும் குழுவாக இனைந்தவர்களின் நோக்கத்தைப் பொறுத்தும் குணம் மாறுவதும் இவ்வாறே உருவாகிறது.

இதையே அந்நாட்களின் குல தர்மம் என்று அழைத்தனர். இதுவும் ஜாதி
அல்லது வர்ண ரீதியாக அறியப்படுவது அல்ல. பண்டைய காலங்களில் மக்கள்
தர்மத்தை வலியுறுத்தி வாழ்ந்தனர். ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று
உயர்ந்த தர்மங்களை வகுத்து வாழ்ந்தனர். எனவே அவை குல தர்மம் என்று அழைக்கப்பட்டது.

இன்றைய காலத்தைப் போல் ஜாதி புத்தி என்று தீய விஷயங்களுக்கு மட்டும் பேசப்படுவதாய் அவை இருந்ததில்லை.

இதையே திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.



"நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு."

"நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும். அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப் படியே அறிவும் ஆகும்" என்கிறார் வள்ளுவர்.

மேலும் ஒரு குறளில் இவ்வாறு எடுத்தியம்புகிறார் வள்ளுவப்பெருந்தகை..

"மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்"

அதாவது மனிதர்களின் உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும். அதேபோல் இவன் இன்னவன் என்று அறியப்படுவதும் அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும் என்கிறார்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இது போன்ற இனத்தால் அறியப்படும் குணங்கள் எதுவும் பிறப்பின் அடிப்படையில் உண்டாவதில்லை. வாழும் வழிமுறைகளால் மனோவியல் ரீதியாக வழிவழியாகக் கடைபிடிக்கப்பட்டும் தர்மங்கள் ஆழ் மனதில் பதியப்பட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.

இன உணர்வு அல்லது குல தர்மம் என்பது பற்றி ஒரு விளக்கம் ராமாயணத்தில் அற்புதாமாக கூறப்படுகிறது.

சுக்ரீவனுக்கு சேதுக்கரையில் அமர்ந்து ராமன் ஒரு கதையைக் கூறுகிறார். ராமேஸ்வரத்தின் சேதுக்கரையில் நடந்த நிகழ்வாக இதைச் சொல்கிறார்கள் பெரியோர்கள்.

அந்தக் கதையை நாமும் கேட்போம்...