ஒருவர் தன் சக மனிதரிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கிறான். முகம்
சுளிக்குமாறும் கோபமூட்டும் படியும் நடந்து கொள்கிறான். இவன் தொல்லை தாங்காத அந்த மனிதன் அவன் போனவுடன் அவனைப் பற்றி சொல்லப்போகும் முதல் அர்ச்சனை என்னவாக இருக்கும்? "அவன் ஜாதி புத்திய காமிச்சிட்டான் பாத்தியா!"
துரோகம் செய்பவரை, ஏமாற்றுபவரை, ஒழுக்ககேடாக நடந்து கொள்பவர்களையெல்லாம்
பலரும் இவ்வாறு பேசியிருக்கக் கூடும். "அந்த ஜாதிப்பய அவன் புத்தியைக் காமிக்க தானே செய்வான்" என்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லா ஜாதிக்காரர்களும் பிற ஜாதிக்காரர்களை அவ்வாறே கூறுவார்கள். யாரும் யாரையும் விட்டு வைப்பதில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது. மரபு வழியாகவே எல்லா மனிதர்களும் இன ரீதியான ஒரு தனிப்பட்ட குணத்தைக் கொண்டிருப்பார்கள் என்று எல்லோருமே நம்புகிறோம். இதில் யாருக்கும் விதிவிலக்கு அளிப்பதில்லை.
இது நிஜமா? இப்படி ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்கள் இனம் சார்ந்த குணம்
இருக்குமா?
இது மனோவியல் ரீதியான ஒரு விஷயம். பொதுவாக மனிதர்கள் குழுக்குழுவாக. வாழும் தன்மையைப் பெற்றவன் என்பதை நாம் அறிவோம். குடும்பமும் ஒரு குழுவே. வாழிடம், மொழி, பழக்க வழக்கங்கள் சார்ந்து ஒன்றாகக் கூடி வாழ்வதும் ஒரு குழு வாழ்க்கையே!
இப்படிக் குழுவாக வாழும் போது மனிதர்கள் தங்களுக்கு என்று ஒரு தனி பழக்க வழக்கங்களையும், வாழும் முறைகளையும் வகுத்துக் கொள்வது இயல்பு. உதாரணமாக சிலர் "இது எங்கள் குடும்ப வழக்கம்" என்று சொல்வதைப் பார்த்திருப்போம். ஒரு குழுவாக ஆன பின்னர் அவர்களுக்கென்று சில விதிமுறைகளை வகுத்துக் கொள்ளுதலும் மனிதர்களின் இயல்பான குணமாக இருக்கிறது.
நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த
நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சில நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று
விதிகளை வைத்திருப்பார்கள். அதுவும் ஒரு குழு உணர்வே. நாம் எந்த குழுவைச்
சார்ந்து இருக்கிறோமோ அந்த குழுவிற்கென்று இருக்கும் சில கட்டுப்பாடுகளையோ
விதிகளையோ கடைபிடிக்க வேண்டும் என்பது மரபாகவே இருக்கிறது.
இந்த உலகத்தின் எந்த மூலையில் வாழும் மனிதருக்கும் ஒரே மாதிரியாக குழு
உணர்வு தான் இருக்கும். மனோவியல் ரீதியாகவே சில வகை உணர்வுகள் மனிதர்களுக்கு
ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதனாலேயே எந்த மூலையில் எந்த
நிறத்தில், எந்த மொழியில் வாழும் மனிதர்களாக இருந்தாலும் பொதுவான
மனோவியல் ஒன்றாக இருப்பதாலேயே இன்றைக்கு உலகம் ஒரே குடையின் கீழ்
ஒன்றி வாழ்தல் அதாவது 'குளோபளைசேஷன்' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில்
ஒரே சமூகமாக வாழ முடிகிறது.
ஆக குழுவும் குழுவின் அடிப்படையிலான குணமும் குழுவினரின் ஒத்த சிந்தனையின் அடிப்படையில் உருவாகிறது. குழுக்களின் அமைவிடம் மற்றும் குழுவாக இனைந்தவர்களின் நோக்கத்தைப் பொறுத்தும் குணம் மாறுவதும் இவ்வாறே உருவாகிறது.
இதையே அந்நாட்களின் குல தர்மம் என்று அழைத்தனர். இதுவும் ஜாதி
அல்லது வர்ண ரீதியாக அறியப்படுவது அல்ல. பண்டைய காலங்களில் மக்கள்
தர்மத்தை வலியுறுத்தி வாழ்ந்தனர். ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று
உயர்ந்த தர்மங்களை வகுத்து வாழ்ந்தனர். எனவே அவை குல தர்மம் என்று அழைக்கப்பட்டது.
இன்றைய காலத்தைப் போல் ஜாதி புத்தி என்று தீய விஷயங்களுக்கு மட்டும் பேசப்படுவதாய் அவை இருந்ததில்லை.
இதையே திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.
"நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு."
"நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும். அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப் படியே அறிவும் ஆகும்" என்கிறார் வள்ளுவர்.
மேலும் ஒரு குறளில் இவ்வாறு எடுத்தியம்புகிறார் வள்ளுவப்பெருந்தகை..
"மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்"
அதாவது மனிதர்களின் உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும். அதேபோல் இவன் இன்னவன் என்று அறியப்படுவதும் அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும் என்கிறார்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இது போன்ற இனத்தால் அறியப்படும் குணங்கள் எதுவும் பிறப்பின் அடிப்படையில் உண்டாவதில்லை. வாழும் வழிமுறைகளால் மனோவியல் ரீதியாக வழிவழியாகக் கடைபிடிக்கப்பட்டும் தர்மங்கள் ஆழ் மனதில் பதியப்பட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.
இன உணர்வு அல்லது குல தர்மம் என்பது பற்றி ஒரு விளக்கம் ராமாயணத்தில் அற்புதாமாக கூறப்படுகிறது.
சுக்ரீவனுக்கு சேதுக்கரையில் அமர்ந்து ராமன் ஒரு கதையைக் கூறுகிறார். ராமேஸ்வரத்தின் சேதுக்கரையில் நடந்த நிகழ்வாக இதைச் சொல்கிறார்கள் பெரியோர்கள்.
அந்தக் கதையை நாமும் கேட்போம்...
2 comments:
பகுத்தறிவான பதிவு
நன்றி ஸ்மார்ட்.
Post a Comment