Saturday, April 10, 2010

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


என் குழந்தைகளே! இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள், அறியாமையில் இருப்பவர்கள் நசுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். இதயமே நின்றுபோகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வந்து சேரும்; உதவி வந்து சேரும்; அசைக்கவே முடியாத உறுதியான வலிமை வந்து சேரும்.


உறுதியுடன் இரு. அதற்கு மேலாகத் தூய்மையாகவு, முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு. உன் விதியில் நீ நம்பிக்கை கொண்டிரு. அது, கையில் காசில்லாத உன்னை நம்பித்தான் இருக்கிறது. 


கொழுந்துவிட்டெரியும் ஆர்வத்தை நாலாபுறங்களிலும் பரப்புங்கள். செயலாற்றுங்கள்! செயலாற்றுங்கள்! வேலை செய்யும்போது ஒரு வேலைக்காரனைப் போல இருங்கள். சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒரு நண்பன் மற்றொருவரைத் தனிமையில் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். எல்லையற்ற பொருமையைக் கடைபிடியுங்கள். வெற்றி உங்களுடையதே!


கவனமாக இருங்கள். உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையில் பிடிப்புள்ளவர்களாக இருங்கள். மெதுவாகவே என்றாலும் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறப்போவது உறுதி.


இன்றைய இளைய தலைமுறைகள் நவீன தலைமுறைகளான உங்கள் மீது தான் எனது நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள். நான் என் கருத்தை வகுத்து அதற்காக என் வாழ்க்கையை அர்பணித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் இந்தக்கருத்துக்கள் பரவும் வரையிலும் , என் மீது பேரண்புகொண்டவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இந்த அரிய கருத்துக்களைப் பரப்பிக்கொண்டே செல்வார்கள்.


மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக்குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மை குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது.


எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது? இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது நல்லதை விட்டுச் செல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால் இந்த மரம், கல் முதலியவற்றுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.


- சுவாமி விவேகானந்தர்.



Monday, April 5, 2010

மீண்டும் மெக்காலே - 2


சரி விதவிதமான பட்டப்படிப்பை வியாபாரம் செய்து தாங்கள் கொடுக்கும் பட்டம் தான் நீ இனி இந்த உலகில் வாழ உன்னைத் தகுதியானவனாக ஆக்கும் என்று நம் மக்களை குழப்பி அவர்களது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் அவலம் ஒரு புறம் நடக்கும் என்று வைத்துக்கொள்வோம். மற்றொரு புறம் ஏற்கனவே மெக்காலேயின் வழிகாட்டுதல் படி, நம் நாட்டு கலாச்சாரம் இழிவானது என்றும் வெள்ளையன் கலாச்சாரம் தான் உயர்வானது என்றும் நம்மக்களை மூளைசலவை செய்தாயிற்று. அதற்கு முக்கியமாக இந்நாட்டு மக்களை அவர்கள் சொந்த மொழியில் படிக்கவிடக்கூடாது என்றும் ஆங்கிலத்தையே மூல மொழியாக்கினால் தான் அது நாம் நினைத்தபடி நடக்கும் என்றும் சதித் திட்டம் தீட்டி அதை அப்படியே நம்மீது தினித்தார்கள். இன்றும் அதே அவலம் தொடர்வதை நாம் பார்க்கிறோம்.

ஆக நமது பாரம்பரிய கலாச்சாரத்தை அழிக்கும் வேலையில் இனி வரும் புதிய வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தாராளமாக நமது அனுமதி உடனேயே ஈடுபடப்போகிறது எனலாம். இதற்குப் பெயர் தான் வேலில போற ஓனானை எடுத்து வேட்டிக்குள்ளே விட்டுக்கொள்வது என்பார்கள். தற்போது இந்தியர்கள் முக்கியமாக சந்தித்துவரும் பிரச்சனை மதமாற்றம்.

இந்து மத பாரம்பரியங்கள் எல்லாமே கட்டுமிராண்டித்தனம் என்றும் ஏசுவைப் பின்பற்றுவதே நாகரீகம் என்றும் மூளைச்சலவை செய்து நம்மக்களை ஏற்கனவே மதமாற்றம் செய்துவருகின்றனர். அவர்கள் இனி பாடங்கள் என்ற பெயரில் நம்நாட்டு பிள்ளைகளின் மூளைகளில் நம்பாரம்பரியத்திற்கு எதிரான கருத்துக்களை இளம்பருவத்திலேயே விதைக்க நல்ல வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

முக்கியமாக பாலியல் கல்விபற்றி நம்மவர்கள் விவாதித்து இன்னும் முடிவெடுக்காத நிலையில், இந்தியாவிற்குள் நுழையப்போகும் பல்கலைக்கழகங்கள் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தினால் என்ன செய்யப் போகிறார்கள்? வகுப்புகளில் ஆண் பெண் இருபாலரை ஒருசேர அமரவைத்து ஆண், பெண் உறுப்புகளைப் படம் போட்டு காண்பித்து பாடம் நடத்தினால் என்ன செய்யப் போகிறார்கள்? இதற்கு எதிர்ப்பு இருக்குமா அல்லது வரவேற்பு இருக்குமா? பின்னர் இது தான் சாக்கு என்று குஷ்புவைப் போல அயல்நாட்டு பல்கலைக்கழக ஆசிரியர்களும் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளலாம். அப்படிச் செய்தால் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்றெல்லாம் சொல்லிக்கொடுப்பார்களே! அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள். அப்படியே சந்தடிச்சாக்கில் திருமணம் என்பதே வேஸ்ட் என்று இந்திய இளைஞர்கள் மனதில் விதைத்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம். அப்படி நடக்குமெனில் மெக்காலே ஆசைப்பட்ட பாரம்பரிய கலாச்சார சிதைவை மீண்டும் கல்வியின் போர்வையில் கொண்டுவரப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிடும்.

இந்தியாவின் வரலாற்றை திரித்துக் கூறி "வரலாற்றுப்படி வெள்ளையர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா?" என்று நாளை நம்பிள்ளைகள் நம்மிடமே உயர்வாகக் கூறும் வாய்ப்பு உண்டாகும். அப்படிப்பட்ட உருவகம் ஏற்பட்டால் சுதந்திரப் போராட்டம் என்ற மாய பிம்பமும் காந்தி என்கிற கான்க்ரீட் உணர்வுகளும் நீர்க்குமிழியைப் போல் ஒன்றுமில்லாத உணர்வாகவே புரிந்துகொள்ளப்படும். இதெல்லாம் ஒரு யூகம் தான்.

ஆனால் நாட்டிற்கு நாடு வரலாற்றைத் திரித்துச் சொல்லிக்கொடுக்கும் விஷயம் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் முகலாய ராஜாக்களின் கொடூர வரலாறுகள் மறைக்கப்பட்டு கட்டிடக்கலைகள் பற்றிய புகழ்ச்சிகளும் இந்துப்பெண்களைத் திருமணம் செய்ததையுமே முன்னிறுத்தி பாடமாக போதித்து வருகின்றனர். உதாரணமாக கஜினி முகம்மது 17 முறை இந்தியா மீது தாக்குதல் நடத்தி பொன்னும் பொருளும் கொள்ளையடித்து ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்த வரலாறு மறைக்கப்பட்டு, 17 முறை போர் தொடுத்து பின்னரே இந்தியாவை வென்றார் கஜினி என்று அவரை தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டானவரைப் போல சித்தரித்து பாடம் நடத்துகின்றனர்.

ஆனால் சிலரோ வெள்ளையர்கள் இந்த விஷயத்தில் ஞாயமான வரலாற்றையே போதிக்கக்கூடும் என்கிறார்கள். அதற்கு அவர்கள் காட்டும் உதாரணம் ஆங்கிலேயர் போதிக்கும் அக்பரின் வரலாறு. "அக்பருக்கு 40 வயது ஆகும்வரை அவர் கடும் இஸ்லாமியவாதியாகவே இருந்துள்ளதாகவும் 40 வயதிற்குப் பின்னரே மதசார்பற்றவராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதாகவும் கூறபடுகிறது. அதாவது அக்பருக்கு 40 வயது ஆகும் வரை இந்துக்களை, “மதம் மாறு அல்லது செத்து மடி” என்ற முறையில் நடத்தியதாகவும், பெரும்பாலானோர் சாவதை விரும்பியதைக் கண்டதால் தன்னுடைய உத்திகளை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 40 வயதிற்குப் பின் அக்பர் இந்துக்களை “மதம் மாறு (அல்லது) உன்னுடைய மதத்திலேயே இரு; ஆனால் இஸ்லாமிய நாட்டில் வாழ்வதற்கான வரியைக் கட்டிவிடு (அல்லது) செத்து மடி” என்ற முறையில் நடத்தியிருக்கிறார்" என்று அக்பரின் நிஜ வரலாறை ஆங்கிலேயர்கள் போதிக்கிறார்கள். எனவே வெள்ளையர்கள் நடத்தும் வரலாற்றுப்பாடத்தை நம்பலாம் எனவும் கூறுகின்றனர்.

ஆனால் வெள்ளையர்களின் குயுக்தி வேறுமாதிரியானது. ஐரோப்பா முழுவதும் இஸ்லாமியர்களின் பெருக்கத்தைத் தடுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராக பல சட்டங்களை இயற்றி கடுமையான வெறுப்பை உண்டாக்கிவருகின்றனர். அதனால் அந்நாடுகளில் அவர்கள் முகலாயர்களின் நிஜ வரலாறுகளை கற்றுத்தரலாம். ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு இந்துக்களை அழிப்பதே குறிக்கோளாக இருந்தால்? இங்கே வரலாறு சமரசப்படுத்தப்பட்டால் மீண்டும் வஞ்சிக்கப்படப் போவது இந்துக்களாகளே!

ஆரியர் திராவிடர் என்பதும், ஆரியர்கள் படையெடுப்பு என்பதும் ஆதாரம் இல்லாத கட்டுக்கதை என்று ஆராய்ந்து சொல்லும் வெள்ளையர்கள் அதைப் பாடமாக தமது பல்கலைக்கழகங்கள் மூலம் இந்தியர்களுக்குச் சொல்லித் தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? அல்லது இந்திய அரசியல் வாதிகளின் மிரட்டல்களால் அவை தொடர்ந்து மறைக்கப்படுமா? பதில், காலத்தின்கையில் இருக்கிறது.

அமெரிக்காவால் மட்டுமே இரண்டு முறை உலகப்பொருளாதாரமே திவால் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடைசியாக உண்டான பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் உலகம் தற்போது தான் மூச்சுவாங்கத் துவங்கி யிருப்பதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இத்தகைய எல்லா வீழ்ச்சியிலும் இந்தியப் பொருளாதாரமே ஸ்திரமாக இருந்து உலகப் பொருளாதர நிபுணர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆனால் அத்தகைய பொருளாதார நடவடிக்கைகளைக் கையாளும் இந்தியர்களுக்கு அமெரிக்கப் பல்கலைகழகம் பொருளாதாரப் பாடம் எடுத்தால் எவ்வகைப் பொருளாதாரம் சரி என்று சொல்லிக்கொடுக்கும். அமெரிக்கப் பொருளாதர முறையே சிறந்தது
என்று நம்மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டால் அதைவிட முட்டாள்தனமும், நம்மக்களுக்கு நம் நாட்டு அரசியல்வாதிகளே செய்யும் மிகப்பெரிய துரோகமும் வேறென்னவாக இருக்க முடியும்?

ஆக மேற்சொல்லப்பட்டவை எல்லாமே ஒரு விவாதத்திற்குரிய யூகமே. எப்படிப்பட்ட கல்விக்கொள்கையுடன் அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அனுமதிக்கப்படப்போகின்றன என்பதை அரசு வெளிப்படையாக மக்களுக்கு விளக்கவில்லை, அல்லது இவர்களுக்கெல்லாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று யோசித்திருக்கலாம். எப்படியோ எதையும் நம்மால் தடுக்க முடியப்போவதில்லை. எனவே மீண்டும் வரும் மெக்காலேவை எதிர்பார்த்து காத்திருப்போம்!

ஈஸ்வரோரக்ஷது!