மனத்தை அடக்க நினைத்தால் அலையும். மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்.
தவறிழைப்பது மனம். இனித்தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான். ஆகவே தவறு செய்யாத வழியைத் தேர்ந்து நடக்க வேண்டியதும் மனமே. மனத்தைப் பழைய நிலையிலேயே வைத்துக் கொண்டு புதிய நல்ல வழியில் எப்படிச் செல்ல முடியும். மனத்தின் குறைகளைப் போக்கியாக வேண்டும். நல்வழியில் தீர்மானமாக நிற்கும் சுயபலத்தை மனத்திற்கு ஊட்டியாக வேண்டும்.
தினந்தோறும் சமையலறையில் பாத்திரத்தை உபயோகிக்கிறோம். அதை சுத்தம் செய்து வைத்தால் தானே மறு நாளைக்கு நன்றாக இருக்கும். அது போல, தினந்தோறும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே மனதை அலைய விட்டுக் கொண்டு அதனால் உடலையும் இன்னும் வாழ்க்கையில் உள்ள நலன்களையும் குழப்பம் செய்து கொள்வதை மாற்றி, தினந்தோறும் தியானத்தின் மூலம் மனத்தைச் சுத்தப்படுத்தி, மனத்தை அதன் உண்மை நிலைக்குக் கொண்டு வந்து வைக்க வேண்டும். அப்போது தான் மனம் அமைதியாக இருக்கும். சிந்தனைகள் தெளிவாக இருக்கும். தவறில்லா வாழ்க்கை அமைத்துக்கொள்ள அதுவே உதவும்.