கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவிலிருந்து சில துளிகள்:
எங்கும் ஈஸ்வரன் இருக்கின்றான் என்று நினை. எல்லாப்பொருள்களிலும் ஈஸ்வரனைப் பார். எல்லா உயிர்களும் இறைவனுடைய வடிவமே என்று உண்மையாக எண்ண வேண்டும். அந்த எண்ணம் நின்மனதில் நிலைத்து நிற்க்குமாயின் உலகில் உன்னால் வெறுக்கத்தக்க மனிதனாவது, உயிராவது, பொருளாவது இல்லை, எல்லாப் பொருள்களிலும் இறைவனைக் காணும் போது எதை வெறுக்க முடியும்? வெறுப்பு நீங்கி விடுகிறது. விரோதம் நீங்கி விடுகிறது. அவிரோத ஞானம் உண்டாகிறது. அப்போது சாந்த நிலை தானே வந்து சேரும். சாந்த வடிவான இறைவன் உனக்கு எங்கும் தோன்றியருள்வான்.
இறைவனை எப்படி தேட வேண்டும். வெறுமனே அவனைப்பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தால் அவனை அடைய முடியுமா?.
நண்பர்கள் இருவர் ஒரு மாந்தோட்டத்துக்குள் சென்றார்கள், ஒருவன் உடனே மாமரங்கள் எத்தனை என்றும், மரத்திற்கு எத்தனை கிளைகளென்றும், ஒவ்வொரு மரத்திலும் எத்தனைப் பழங்கள் இருக்கின்றனவென்று எண்ணிக்கொண்டும், அத்தொட்டத்தின் விலை எவ்வளவிருக்குமென்று மதிப்பிட்டும், அத்தோட்டத்தை வைத்தவன் யார்? அவனுக்கு மக்கள் எத்தனை? என்று விசாரித்துக் கொண்டும், அத்தோட்டம் எத்தனை அடி நீளம்? அகலம் எத்தனை அடி? இவை முதலியன ஆராய்ந்து கொண்டும் இருந்தான்.
மற்றொருவன் தோட்டத்தில் நுழைந்தவுடன் அத்தோட்டத்தின் சொந்தக்காரனிடம் சென்று அவனை நட்பு கொண்டு அவனுடைய அனுமதி பெற்று மெல்ல ஒரு மாந்தருவின் அடியிற் சென்று நன்கு கனிந்தகனிகளைப் பறித்துத்தின்று கொண்டு இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
இவ்விருவரில் யார் உயர்ந்தவர் என்பதைக் கவனியுங்கள். மரத்தையும் இலைகளையும் எண்ணுவதால் பயனென்ன, பசியை நீக்கவல்ல பழத்தையல்லவா உண்டு மகிழ வேண்டும். அதுபோல, உலகத்தவர் பலர் கடலின் ஆழம் எவ்வளவு? உலகில் மனிதர் எத்தனை கோடியுள்ளனர்? ஆணெத்தனை? பெண்ணெத்தனை? எந்த பாஷை உயர்ந்தது? உலகந்தோன்றி எவ்வளவு காலமாயிற்று? ஏன் உலகந்தோன்றியது? இவை முதலியன ஆராய்ந்து கொண்டே நாள் கழிக்கிறார்கள். ஒரு சிலர் நல்ல குருநாதனை அடுத்து அவரருளைப் பெற்று ஈஸ்வர தியானம் புரிந்து மெய்ஞ்ஞான இன்பத்தை நுகர்கின்றனர்.
உலக நிகழ்வுகளை அறிவைக்கொண்டு ஆராய்ந்து குழம்பிக்கொண்டே இராமல் அதன் மூலத்தை நோக்கி நகரத்துவங்குவதே பக்குவம் ஆகும்.