
விக்கிரமாதித்தன் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது வேதாளமும் விக்கிரமாதித்தனும் கொண்ட கதைகள். இவை நமது பாரம்பரியம் சார்ந்த நீதிபரிபாலனக் கதைகளில் ஒன்று. ஒரு நாட்டின் மன்னனாகப்பட்டவன் எப்படி நீதிபரிபாலனம் செய்ய வேண்டும், மக்களை எப்படி காக்கவேண்டும் போன்ற விஷயங்களும் கதைகளில் அடங்கும்.
இக்கதைகள் யாவும் உஜ்ஜயினி நாட்டின் போஜராஜன் என்ற மன்னனுக்கு அதிசயப்பதுமைகள் சொன்ன கதைகளாக வருகின்றன. மிக சுவாரஸ்யமான இக்கதைகளில் வேதாளமும் விக்கிரமாதித்தனும் கொண்ட கதைகளை நாம் பார்ப்போம்.
போஜராஜன் தன் பரிவாரங்களுடன் கொலுக்கூடத்திற்கு வந்தான். அங்கே அதிசய நவர்த்தின சிம்மாசனத்திற்குத் தூபதீபம் காட்டி அதில் ஏறி அமர்வதற்க்காக முதற்படியைக் கடந்து இரண்டாம் படியில் தனது வலது காலை எடுத்து வைத்தான்.
அப்போது அந்தப் பொற்படிக்குக் காவலாக இருந்த மதனாபிஷேகவலி என்னும் சிம்மசனப் பதுமை கை கொட்டிச் சிரித்து, "ஹே, போஜராஜரே! நில்லும், நானறிந்த விக்கிரமாதித்த பூபதியைப் போன்ற வீரப்பிரதாபமும், வல்லமையும், உமக்கிருந்தால் தான் நீ இந்த வினோதமான சிங்காசனத்தில்ஏறி அமர முடியும். இல்லையேல் உனக்கு இந்த சிங்காசனத்தில் அமர அனுமதி இல்லை என்றது.
அதைக் கேட்ட போஜராஜன் "பதுமையே! விக்கிரமாதித்த பூபதியிடம் நீ கண்ட அப்படிப்பட்ட அதிசயமான வல்லமை என்ன? அந்தக் கதையைச் சொல்!" என்றான். "கேளும் பூமானே!" என்று மதனாபிஷேகவல்லிப் பதுமை பின்வரும் வினோதக் கதைகளைச் சொல்லத் தொடங்கியது.
வீரப்பிரதாப விக்கிரமாதித்த மகாராஜன் மந்திரியுடன் விரதப்படி நாடாறு மாதம் காடாறு மாதம் என்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்.
அந்த காலத்தில் உஜ்ஜயினி மாகாளி பட்டினத்திற்கு இரு காத வழி தூரத்தில் ஆரண்ய வனத்தில் துர்க்கையம்மன் கோவில் ஒன்று இருந்தது. அந்த அம்மன் சந்நிதானத்திற்கு நேர் தெற்கே இரண்டு யோஜனை தூரத்தில் ஒரு மயானம் இருந்தது. அந்த மயானத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. அந்த முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக்கொண்டு இருந்தது.
அந்த வேதாளத்தை வசப்படுத்திக் கொள்பவருக்கு சகலவிதமான ஊழியமும் வேதாளத்திடமிருந்து பெறமுடியும்! அந்த வனத்தில் நெடுங்காலமாக தபஸ் செய்து கொண்டிருந்த ஞானசீலன் என்கிற முனிவன் வேதாளத்தையும், துர்க்கையம்மனையும் வசப்படுத்திக் கொண்டு பலவிதமான சித்திகளும் பெற விரும்பினான். அவன் துர்க்கையம்மனின் சந்நிதானத்தின் முன் யாக குண்டம் வளர்த்து துர்க்காதேவியை வேண்டினான். அப்போது அங்கு பிரசன்னமாகிய தேவி ஞானசீலனுக்கு வேண்டிய வரத்தைத் தருவதாக அருளினாள்.
ஞானசீலனோ, "தாயே! நீண்ட ஆயுளும் அரசபதவியும் எனக்கு வேண்டும்! நீ எப்போதும் என்னிடத்தில் இருக்க வேண்டும்! அந்த விக்கிரமாதித்தன் கொலுவேறியிருக்கும் நவரத்தின சிம்மாசனத்தில் நானே ஏறி அழியா ஆயுளுடன் ஆட்சி செய்ய வேண்டும்" என்று பிராத்தனை செய்தான்.
"ஆயிரம் அரசர்களைக் கொன்று யாகம் செய்தால், உன் எண்ணம் ஈடேறும்! மணிமகுடம் புனைந்த மன்னர்களின் சிரசுகளை வெட்டி என் பலிபீடத்தில் போட்டால் நீ கேட்ட வரம் தருவேன்!" என்று காளி கூறிவிட்டு மறைந்தாள்.
முனிவனும் அதற்குச் சம்மதித்து வஞ்சகத்தினால் அரசர்களைக் கொன்று யாகத்திற்குத் தயாராகி வந்தான். தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது மன்னர்களின் தலைகளை வெட்டிக் கொணர்ந்து யாகத்தில் போட்டான். கடைசியாகப் பாக்கியிருந்த ஒரு தலைக்கு யாரைப் பிடிக்கலாம் என்ற யோசனையிலாழ்ந்த போது உஜ்ஜயினியில் கோலாகலமாக ஆட்சி செய்து வரும் விக்கிரமாதித்த மகராஜனின் தலையை பலி கொடுப்பதற்கு முடிவு செய்தான்.
ஆனால் விக்கிரமாதித்தனை நேரடியாக முனிவனால் வெல்லமுடியாதாகையால் கபடமாக விக்கிரமாதிதனை தனது வலையில் விழ வைக்க யோசனை செய்தான். ஒரு நாள் விக்கிரமாதிதனின் சபா மண்டபத்தை அடைந்து ஒரு மாதுளங்கனியைக் கொடுத்தான்.
விக்கிரமாதிதனோ முனிவன் கொடுத்த பழத்தை வாங்கிப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பொக்கிஷ அதிகாரியிடம் கொடுத்தான். இவ்விதம் பல நாட்கள் சென்றன. தினமும் முனிவன் வருவதும், பழம் கொடுப்பதுமாகவே இருந்தது. எப்படியாவது விக்கிரமாதித்தனின் தலையை பலிகொடுப்பது என்று தீர்மானமாக அலைந்தான் முனிவன்.
ஒருநாள் முனிவன் பழம் கொடுத்து விட்டுச் சென்ற பிறகு, விக்கிரமாதித்தன் அதை வழக்கம் போல் பொக்கிஷ அதிகாரியிடம் கொடுக்கவில்லை. தன் பக்கத்திலிருந்த பீடத்தில் அந்தப் பழத்தை மன்னன் வைத்தான். அந்த சமயம் அரண்மனையில் அருமையாக வளர்ந்து வரும் கருங்குரங்கு அங்கு ஓடி வந்து மாதுளம் பழத்தை எடுத்து ஆசையோடு கடித்தது. அதனுள்ளிருந்து இரத்தினக் கற்கள் கலகலவென்று கீழே கொட்டின. இதனைக் கண்ட விக்கிரமாதித்தனும் அரசவையில் இருந்த அனைவரும் பிரமித்து விட்டனர்.
வேதாளம் வரும்...

6 comments:
எழுதுங்க, எழுதுங்க நல்ல முயற்சி
சின்ன வயதில் படித்தது, மீண்டும்...
hi i am jagadeeswaran. your work is very nice.i love small story. today i take all your post to my home and i read slowly...
thank u.
-with love
jagadeeswaran
jagadeesktp.blogspot.com
நன்றி ஜகதீஸ் அவர்களே...
அப்படியே படித்ததை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் உங்கள் வாயாலேயே சொல்லுங்கள். பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்ற பெருமை உங்களைச் சாரும்.
அன்புடன் ராம்.
நல்லா சுவாரஷ்யமா போயிற்றுக்குப் போல !
ஜமாய்ங்க அண்ணா !
நன்றி தம்பி, எல்லம் உங்க சந்தோஷத்துக்குத்தான். படித்து மகிழுங்கள்
அன்புடன்
ராம்
நிகழ்காலத்தில்..எழுதிய நண்பருக்கும் நன்றி
அன்புடன்
ராம்
Post a Comment