Wednesday, August 12, 2009

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தின் அர்த்தங்கள்

"உலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க யுக யுகங்களுக்கும் நான் அவதரிப்பேன்!"

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

இவ்வாறு கண்ணன் பூலோகத்தில் அவதரித்த நாளே க்ருஷ்ண ஜெயந்தி. க்ருஷ்ணன் அவதரித்த நாள் கோகுலாஷ்டமி. இதை ஜென்மாஷ்டமி என்றும் கூறுவார்கள். உலகமெங்கும் உள்ள பக்தர்கள் ஆனந்த பரவசத்துடன் கொண்டாடும் நாள் கோகுலாஷ்டமி. கோகுல கிருஷ்ணன் ஸ்ரவன மாதத்தில், ரோகிணீ நக்ஷத்திரத்தில், அஷ்டமி திதியில் புனித நாழிகையில் அவதரித்தார். அதனால் கோகுல அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பிறக்கும் பொழுதே சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் காட்சியளித்தான் கண்ணன். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்கி சாதாரணக் குழந்தை வடிவெடுத்தான்.


இப்படிப்பட்ட குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எப்பேற்பட்ட பேறு என்று லயித்து "என்ன தவம் செய்தனை, யசோதா! என்ன தவம் செய்தனை... எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க , என்ன தவம் செய்தனை! என்று பூரிப்புடன் பாடி மகிழ்கிறார்கள் பக்தர்கள்.

இறைவன் பூலோகத்தில் பல அவதாரங்கள் எடுத்து அவதரித்திருப்பினும் கிருஷ்ணாவதாரமே "பூர்ணாவதாரம்" ஆகும். குழந்தை வடிவெடுத்து , பாலகனாக குறும்பு செய்து, இளமையில் காதல் கொண்டு, வீரத்துடன் போரிட்டு கம்சனைக் கொன்று, முதிர் பருவத்தில் உலகுக்கு நீதியை எடுத்துச் சொல்லி பரமாத்மாவான தன்னை எல்லோரும் உணரச் செய்து, சர்வமும் நானே என்று உலகிற்கு உணர்த்தினான் கண்ணன்.

ஒரு மனிதன் எந்த நாட்டில் எந்த மதத்தில் , எந்த ரூபத்தில் வாழ்ந்தாலும், கருப்போ சிவப்போ, நகர வாசியோ அல்லது காட்டுவாசியோ, கிருஸ்தவரோ முஸ்லீமோ யாராயிருப்பினும் உலகில் பிறந்த எல்லா மனிதர்களும், தனது வாழ்க்கையின் எல்லாப் பருவங்களிலும் ஸ்ரீ க்ருஷ்ணரைப் போலவே வாழ்வார்கள் என்று ஒட்டு மொத்த மனித வாழ்க்கையை ஒரு ஃபார்முலா போல எடுத்துக் காட்டி இருக்கிறது ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.

உதாரணமாக எல்லோரும் அவரவர் குழந்தைப்பருவத்தையே இதற்கு சுய ஆதாரமாகக் கொள்ள முடியும். சிறு வயதில் வீட்டில் அம்மாவுக்குத் தெரியாமல் திண்பண்டங்களை நைசாக எடுத்து தின்றிருப்போம். குறைந்த பட்சம் ஹார்லிக்ஸையோ பூஸ்ட்டையோ அல்லது சர்க்கரையையாவது எடுத்து திருட்டுத் தனமாக வாயில் போட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்திருப்போம். ஒரு வேளை அம்மா கண்டுபிடித்திருந்தால் அவளிடம் சிக்காமல் தெருவெல்லாம் ஓடியதும் நினைவிருக்கலாம். சிலர் ஒரு படி மேலே போய் தந்தையின் பையிலிருந்து கொஞ்சம் காசை எடுத்து பள்ளிக்கூடக் கடையில் வாங்கி தின்றிருப்பார்கள். கண்ணன் வெண்ணெய் திருடுவதும் இதுவும் ஒன்றே.

"உபநிஷத்து கதைகள்"

அதனால் தான் இதற்கெல்லாம் இ பி கோ தண்டனைகள் எந்த வீட்டிலும் கொடுப்பதில்லை. அதாவது க்ருஷ்ணாவதாரத்தின் மூலம் இந்த வயதில் மனிதன் இப்படித்தான் இருப்பான் என்று ஒரு ஃபார்முலாவை ஏற்கனவே அறிவித்து விட்டார் இறைவன். அதாவது இங்கே சைல்டு சைக்காலஜி ஒரு கதாபாத்திரம் மூலம் விளக்கப்பட்டு விட்டதை யோசிக்காமலேயே புரிந்து கொள்ளலாம்.


இதில் ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். மேலை நாடுகளில் குழந்தைகளே பிடிக்காது என்று சொல்வதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. குழந்தைகளின் சேட்டையை தாங்க முடியாமல் அந்தக் குழந்தையை வாஷிங் மிஷினில் போட்டு கோவத்தில் சுத்த விட்ட பெண்களைப் பற்றியும் செய்திகளில் பார்த்திருப்போம். அவர்களுக்கெல்லாம் குழந்தைகள் ஏன் இப்படி அடங்காத குறும்பு செய்கின்றன. என் சொல் பேச்சை ஏன் கேட்பதில்லை என்பதெல்லாம் புரிவது கிடையாது.

"கீதோபதேசம்"

மாறாகக் குழந்தைகளின் மீது கோபம் கொள்வர். ஆனால் நம் நாட்டில் குழந்தைகளை ஸ்ரீ க்ருஷ்ணராகவே பார்ப்பதால் குழந்தைகள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு மனோரீதியான புரிதல் இந்த அவதார மகிமையால் உண்டாகியிருப்பதாலும் குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கவே செய்வார்கள். இது இந்து தர்மம் கொடுத்த பக்குவம். இந்து தர்மம் இந்நாட்டு மக்களுக்கு கொடுத்த கொடை.

சரி குழந்தைப் பருவத்திலிருந்து வளர் இளம் பருவத்திற்கு வருவோம். அதாவது டீன் ஏஜ். இந்தப் பருவத்தில் ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் வரும் இயல்பான கவர்ச்சி. ஆண்கள் பெண் நண்பிகளுடன் அளவலாவுவதை அதிகம் விரும்புவர். இரு பாலருக்கும் அதில் ஒரு இனம் புரியாத மயக்கம் இருப்பது இயல்பாகவே தெரியவரும். அதே நேரத்தில் இளம் பருவத்தினர் தங்கள் வயதுடைய பெண்களிடம் குறும்பாக விளையாடுவதும் இயற்க்கையாகவே நடக்கக் கூடியதாகும். (இந்தக் காலத்தில் ஈவ் டீசிங் என்று ஜெயிலில் அடைத்து விடுகிறார்கள், இது தற்கால சமூகம்).



இளம்பருவத்தில் க்ருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடுவதும், அவர்களிடம் குறும்பாக விளையாடுவதையும் நாம் காண்கிறோம். இந்த இளம் வயதில் ஆண்பெண் ஈர்ப்பு உருவாகும் என்பதை இந்த அவதாரமகிமை தெளிவாகச் சொல்கிறது. நம் முன்னோர்கள் கூட , அநேகமாக நம் தாத்தா பாட்டிகள் எல்லாம் இந்த வளர் இளம் பருவத்தில் தான் திருமணம் செய்து கொண்டிருப்பார்கள் என்பதை நாம் அறிவோம்.(தற்காலத்தில் அது குழந்தைத் திருமணம்). உறவுக்கு ஆசைப்படும் வயது அதுவே என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லா மனிதரிடத்திலும் இந்த வயதில் இப்படிப்பட்ட உணர்வு தான் இருக்கும் என்று மானிட மனோவியலை அருமையாக எடுத்துச் சொன்ன அவதாரம் க்ருஷ்ணாவதாரம்.

சரி இன்னும் கொஞ்சம் வளர்ந்து இளம் பருவத்திற்க்கு வருவோம். இந்தப்பருவத்தில் மீசை முளைத்த ஆண் மகனாய் நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் ஆண்மகனாக ஒவ்வொருவரும் நடமாடுவதை கண்ணனும் செய்கிறான்.தனது இளமையின் வீரியத்தின் காரணமாகவும் அவதார நோக்கத்தை நிறைவு செய்யவும் கம்சனுடன் போரிட்டு வெல்கிறான்.

எந்த நாட்டிலும் இந்த இருபது வயதைத்தொடும் இளம் வயதில் ஆண்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் நெஞ்சு நிமிர்த்தி நான் வீரன் , தைரியசாலி என்று காட்டிக் கொள்வதற்கும் ஆசைப்படும் வயது இந்த இளம் பருவம். இதை க்ருஷ்ணாவதாரம் கண்முன்னே கொண்டு வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டக்கல்லூரி மாணவர்களின் திமிர் சண்டையும் சரி, ஐரோப்பிய நாடுகளில் கால்பந்தாட்டப் போட்டிகளின் போது இளைஞர்கள் அடித்துக் கொள்வதும் இது போன்ற இளமைச் சண்டைகளே. ஆனால் ஸ்ரீக்ருஷ்ணரின் சண்டையின் நோக்கம் வேறு. இந்த மானிடர்களின் அநாகிரீகச் சண்டையின் நோக்கம் வேறு அவ்வளவே. இந்த வயதுடையவர்களின் உணர்வுகளை மனோவியல் ரீதியாக எடுத்துக் காட்டியது ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.

விதுர நீதி

இந்த இளமைப் பருவத்தையும் தாண்டி மனிதன் முதிர் பருவத்தை அடையும் போது இயல்பாகவே அவன் ஒரு சமூக மனிதனாக தன்னைப் பார்க்கத் துவங்குவான். தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களை கவனிக்கத்துவங்குவான். தன்னைச் சுற்றி இருக்கும் சமூகம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதில் அக்கரை காட்டத் துவங்குவான். தன்னால் முடிந்த வரையில் அந்த சமூகத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளவும் முடிந்தால் வழிநடத்தவும் தயாராவான். அந்த பருவமே ஸ்ரீ க்ருஷ்ணரின் முதிர் பருவமான கீதோபதேசப் பருவம். தன் உற்றாரை உற்று நோக்கினான் கண்ணன். தர்மம் செய்தவனையும் அதர்மம் செய்தவனையும் பிரித்துப் பார்த்தான் கண்ணன். தர்மத்தைக் காத்தான். அதர்மத்தை அழித்தான். உலகிற்க்கு போதித்தான். தன்னையும் தன்னைச் சார்ந்த சமூகத்தையும் மெய் ஞானத்தால் ஆட்கொண்டான். பரம ஞானத்தை கீதையாக உபதேசித்து அவனை நம்புபவர் நம்பாதவர் என அனைவரையும் வழிநடத்தினான் கண்ணன்.

ஒரு குறிப்பிட்ட பருவம் வந்தவுடன் சமூகத்தில் நான் ஏதாவது தடத்தைப் பதித்து விட்டுச் செல்ல வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும் பருவமும் அது தான். எல்லா மனிதருக்கும் உருவாகும் இந்த உணர்வைத் தன்னுடைய அவதார மகிமையால் உணர்த்தினான் கண்ணன்.

இப்படி இந்த உலகில் எந்த மூலையில் பிறக்கும் மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் இந்த பருவங்களையும் அதற்கான உணர்வுகளையும் தாண்டி வாழ்ந்திருக்க முடியாது. ஒரு மனிதனின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று தெள்ளத் தெளிவாக தன்னுடைய அவதாரம் மூலமாகவே எடுத்துச் சொல்லும் கடவுள் வேறு எந்த மதத்திலும் கிடையாது. இதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டால் தெய்வமாக‌, தோழனாக‌, குழந்தையாக‌ ஸ்ரீ க்ருஷ்ணன் ஒரு முழுமையான அவதாரமாக உங்கள் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்பதை மனதார உணர்வீர்கள்.

க்ருஷ்ண ஜெயந்தியன்று மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்திருக்கும். வாசல் முழுக்க கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அரைரை சின்னச் சின்ன கால் சுவடுகளை வரைவது வழக்கம். பலவித இனிப்பு பலகாரங்களுடன் கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய், அவல், பழங்கள், கார வகைகள் ஆகியனவை நிவேதனம் செய்யப்படும். நாள் முழுக்க விரதமிருந்து நிவேதன வெண்ணெயினை உண்டு பெண்கள் விரதம் முடித்துக் கொள்வர். இளைஞர்கள் உரியடித்திருவிழாவைக் கொண்டாடுவார்கள். உயர்ந்த தூண் முழுவதும் எண்ணெய் தடவி, தூணின் உச்சியில் பக்ஷணங்களையும், பணத்தையும் மூட்டையாகக் கட்டி வைத்திருப்பார்கள். இளம் பருவத்து ஆண்கள் வழுக்கும் தூணில் ஏறி மூட்டையை எடுப்பது தான் உறியடித்திருவிழா. இப்படிக் கோலாகலமாக க்ருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாமும் மகிழ்ச்சியுடன் கண்ணனின் நாமத்தைக் கொண்டாடுவோம்.



"யதா யதாஹி தர்மஸ்ய க்ளானிர் பவதிபாரத
அபுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்மயம்"

"பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே!


அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட யுக யுகங்களுக்கும் நான் அவதரிக்கிறேன் - ஸ்ரீ க்ருஷ்ணர்

1 comment:

VIDHYASAGAR said...

நாராயணாய வித்மஹே வாசுதேவே தீமஹி தந்நோ விஷ்ணு பிர்சோதையே