Saturday, August 22, 2009

நல்லது செய்தால் நல்லது நடக்கும்!


"நீ பிறருக்கு நல்லது செய்தால் உனக்கு யாராவது நல்லது செய்வார்கள்!" "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்". இவையெல்லாம் இந்து தர்மத்தில், நமது கலாச்சாரத்தில் தர்மத்தை அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என்பதற்காக காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் வாக்கியங்கள்.

தற்கால சூழ்நிலையில் இதை நம்புவது சற்று கடினமே. நான் ஒருவருக்கு நல்லது செய்தால் அவர் தான் எனக்கு பிரதிபலனாக நல்லது செய்யவேண்டும் அது தானே முறை. எனக்கு சம்பந்தம் இல்லாத வேறு யாரோ ஒருவர் எனக்கு எப்படி நன்மை செய்வார் என்று தோன்றும். தற்காலத்தில் இது வெறும் சமாதானத்திற்கான வார்த்தையாகவே தோன்றும். நான் எல்லோருக்கும் தான் நன்மை செய்கிறேன். ஆனால் எனக்கு உபத்திரவம் செய்பவர்கள் தான் ஜாஸ்தி. நான் விழுந்து விழுந்து நல்லது செய்தாலும் எனக்கு தீமை தான் நடக்கிறது என்று புலம்புபவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதும் சரியாகவே இருக்கும். ஆனால் இவை ஏன் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் இந்த புலம்பலை விட்டு விட்டு மேற்கொண்டு நன்மைகள் செய்யவும் பிறரை செய்யத் தூண்டுவதற்கும் நமது மனம் உந்தப்படும்.


ஆம்! சொர்கத்தையும் நரகத்தையும் நம் கண்முன்னே நமக்கு மிக அருகாமையில் இதோ பார், இது தான் சொர்கம். இதோ பார் இது தான் நரகம் என்று மிக எளிதாக காட்டக்கூடிய ஒரு ஆத்மார்த்தமான தெய்வீக தத்துவத்தை மிக எளிய வாக்கியத்தில் உள்ளடக்கி இருக்கிறது இந்து தர்மம். கண்ணை மூடிக்கொண்டு இந்த வாக்கியத்தை சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் நம்பி அதன் படி வாழ்ந்தாலே போதும், சொர்கத்தை நாம் வாழும் காலத்திலேயே கண்முன்னால் காணலாம்.

தவம் செய்ய வேண்டாம். தியாணம் செய்ய வேண்டாம். துறவு வாழ்க்கை வாழ வேண்டாம். எல்லோரும் எப்படி வாழ்கிறீர்களோ அப்படியே வாழ்ந்தால் போதும். சொர்கம் மிக அருகில் உங்கள் கண் முன்னே இருப்பதை உணர முடியும். அத்தகைய ஒரு அற்புத ஆத்ம தத்துவத்தை இந்து தர்மமும் நமது கலாச்சாரமும் வெறும் ஒற்றை வாக்கியத்தில் உள்ளடக்கியிருப்பது உலகில் வேறெந்த நாட்டிலோ வேறெந்த மதத்திலும் காணமுடியாத அற்புதம் ஆகும்.

சரி, இந்த வாக்கியத்தில் உள்ள சூட்க்ஷமம் என்ன?. இந்த பிரபஞ்சமே ஒரு அலை வடிவாகும். ஆம். நீரிலே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் நீங்கள் காண்பது என்ன?. கல்லின் அதிர்வு உண்டான இடத்திலிருந்து வட்ட வடிவமான அலை ஒன்று புறப்பட்டு நீரின் எல்லா பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த அலை வடிவம் தான் நிரந்தரத் தத்துவம். நாம் பார்க்கும் இந்த வாக்கியத்தின் சூட்சமமும் அது தான். இந்த பிரபஞ்சமும் அதே அலை பரவல் முறையில் தான் இயங்குகிறது. கண்ணுக்குத் தெரிந்த , தெரியாத எல்லா இயக்கங்களும் அலை வடிவிலே தான் உள்ளன.

அண்ட வெடிப்பு ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அந்த அதிர்வில் உண்டான அலை தான் நாம் வசிக்கும், பார்க்கும் இந்த கிரகங்கள். யோசித்துப் பாருங்கள், அலை வடிவம் பிரபஞ்சத்தில் இல்லையென்றால் ஏன் கிரகங்கள் எல்லாம் ஒரு வட்டப் பாதையில் சுற்ற வேண்டும். அலை வடிவமே யாவற்றுக்கும் மூலம். இந்த உலகில் நடக்கும் எல்லா மாற்றங்களுக்கும் பரவும் எல்லா நன்மை தீமைகளுக்கும் இந்த அலை வடிவமே பிரதானம். இதை மனதில் நன்றாக விளங்கிக் கொண்டால் நீங்கள் ஆன்மீகத்தின் அடித்தளத்தையே அழகாக புரிந்து கொள்பவர்களாவீர்கள்.

இந்த அலை வடிவத்திற்கு உதாரணம் சொல்கிறேன் உற்றுப் பாருங்கள். என்னை அல்ல. பூமியை. ஜப்பானில் ஒருநாள் பூகம்பம் வருகிறது. ரிக்டர் அளவில் 6 அல்லது 7 என்று செய்திகளில் சொல்லப்படும். பிறகு சில நாள் கழித்து மீண்டும் ஒரு பூகம்பச் செய்தி வரும். எங்கே? இந்தோனேசியாவில்! பிறகு சில நாள் கழித்து மற்றொரு பூகம்பச் செய்தி வரும். எங்கே? இந்தியாவின் வடக்கே, அல்லது பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான், பிறகு ஆப்பிரிக்காவின் ஒரு நாட்டில், பிறகு அமெரிக்காவின் ஒரு பகுதியில் இப்படியே ஒரு வட்ட வடிவமாக இந்த அலை பிரயானப்பட்டு மீண்டும் துவங்கிய இடத்திலேயே வந்து நிற்கும். "இன்று ஜப்பானில் பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவானது" என்று செய்திகள் வாசிக்கப்படும்.

பூமி ஒரு திடப்பொருளே. ஆனாலும் அதுவும் இந்த அலைவடிவத் தத்துவத்திலிருந்து விலகி இருக்க முடியாது. கடலில் அலை நம் கண்ணுக்குத் தெரிந்ததே. சுனாமி ஒன்றே போதும். எங்கேயோ துவங்கிய அலை ஆப்பிரிக்கா வரை தாக்கிய இந்த அலை வடிவத்தை நாம் கண்கூடாகக் கண்டோம். தென்றல் காற்றும், கொடும் புயலும் அலை வடிவே. இப்படி பிரபஞ்சத்திலும் பூமியிலும் வியாபித்திருக்கும் அலை நம்மிலும் தானே இருக்கும். நம் உடல் மற்றும் மனம் அதாவது உணர்ச்சி இரண்டுமே இந்த அலை வடிவ தத்துவமாகவே இயங்குகிறது.

உடலில் இது எப்படி வேலை செய்கிறது? யோசித்துப் பாருங்கள், பசியால் உங்கள் வயிறு சுருங்கும் போது தலையில் வலி ஏற்படுகிறது. வயிற்றுப்பகுதியில் உணவு இல்லாமல் அழுத்தம் குறைவுபடும்போது அந்த அழுத்தம் தலையில் உண்டாகிறது. தலைவலிக்கு இதுவே காரணம். இது தான் அலைவடிவ விளைவு.


இந்த விளைவு நமது உணர்ச்சியிலும் உண்டு. ஒருவர் முன் உட்கார்ந்து கொண்டு நீங்கள் வாய் விட்டுச் சிரியுங்கள். உங்கள் எதிரில் இருப்பவர் நீங்கள் என்னவென்று சொல்லாமலேயே சிரிக்கத் துவங்குவார். உங்கள் மனதில் உள்ள மகிழ்ச்சியான உணர்வு சிரிப்பு என்ற அதிர்வின் மூலம் வெளிப்பட்டு அலையாகப் பரவி அடுத்தவர்களை சென்று அடைகிறது. இதே போல் நீங்கள் ஒருவரை முறைத்துப் பாருங்கள், காரணம் சொல்வதற்கு முன்னடியே அவர் மனம் ஒரு பதற்றத்திற்கு வந்து விடும். இதுவும் அப்படியே!

தெருவில் உங்களிடம் ஒருவர் கோபப்படுகிறாரா? முன் தெருவில் அவரை யாரோ கோபப்படுத்தியிருப்பார்கள். உங்களிடம் ஒருவர் அன்பு காட்டுகிறாரா, அவர் பிறரால் அன்பாக நடத்தப்பட்டிருப்பார் என்பது நிச்சயம். நீங்கள் ஒரு ஏழைக்கு உதவுகிறீர்களா, அவருக்கு வசதி வந்தவுடன் அவர் பிறருக்கு உதவுவார். அவரால் உதவி பெற்றவர்கள் மற்றவர்களுக்கு, இப்படி மனிதனின் எல்லா நடவடிக்கைகளும் ஒரு அலை வடிவில் இந்த சமூகத்தில் பரவிக் கொண்டே இருக்கிறது. தீமைகளும் அவ்வாறே.
உணர்ச்சியின் அலை வடிவம் தான், நாம் செய்யும் நன்மையும் தீமையும் சுற்றி சுற்றி நம்மையே வந்தடையும் வேலையைச் செய்கிறது. உதாரணமாக நாம் ஒரு சாலையில் செல்கிறோம், எதிரே வாகனத்தில் வருபவர் நம்மீது லேசாக இடித்து விடுகிறார். நாம் அவரிடம் கோபப்படாமல், "பரவாயில்லை பார்த்துச் செல்லுங்கள்" என்று அவரிடம் சமாதானமாகச் சொல்லியனுப்பினால், அவர் செல்லும் போது மனது அமைதியாகவும், சக மனிதர் தன் மீது காட்டிய அன்பை நினைத்தும் பயணம் செய்வார்.

இப்போது அவர் மீது யாரேனும் மோதினால் கூட அதே போல அவரும் சமாதானமாக பேசி அனுப்புவார். இது அன்பின் அலை பரவுவதற்கு உதாரணம். இது மாறாக நடந்தால் என்ன ஆகும். வழியில் நாம் சண்டை போட, அதே கோபத்தில் அவர் இன்னொருவரிடம் சண்டை போட இப்படியே கோபமும் துன்பமும் ஒரு அலையாகப் பரவும். இது நாம் எளிதில் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் தான்.

மகிழ்ச்சி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் போது சமூகத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இப்படி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மகிழ்ச்சி பரவும் போது அந்த மகிழ்ச்சியின் அலையும் அது பரவும் மடங்கும் பல மடங்காக உயர்கிறது. மகிழ்ச்சியும் நன்மையும் மொத்த சமூகத்திற்கும் ஒன்றாகப் பரவினால் முழு சமூகமும் சொர்க்கத்தைப் போல மகிழ்ந்திருக்கும் என்பதற்காகவே இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பல்வேறு பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடுகிறோம்.

இப்படிப் பண்டிகைகளைக் கொண்டாடும் போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோரும் ஒரே நேரத்தில் மகிழ்ந்திருப்பர். அந்த நாளில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருப்பதால் குற்றங்கள் எதுவும் நடக்காது. நல்ல நாளும் அதுவுமாக கோபப்படக்கூடாது என்பதால் கோபங்கள் வெளிப்படாது. குறிப்பிட்ட ஒரு நாளில் யாருமே கோபப்படவில்லையென்றால் எப்படி இருக்கும். அந்த சமூகம் சொர்கம் தானே.எப்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒரே மாதிரியான பண்டிகையைக் கொண்டாடும் போது மொத்த சமூகமும் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டிருக்கிறதோ, அதே போல ஒவ்வொரு தனி மனிதரும் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று நம்பி நன்மை செய்யும் போது முழு சமூகமும் நன்மைகள் கொண்ட சமூகமாகவே இருக்கும். இப்படி வாழ்நாள் முழுவதும் சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் நன்மைகள் மட்டுமே செய்து வாழ்ந்தால் மொத்த சமூகமும் நன்மையும் மகிழ்ச்சியும் நிறைந்த சமூகமாகத்தானே இருக்கும். சமூகத்தில் குறையுள்ள மனிதர்களே இருக்க மாட்டார்களே! குறையற்ற மனிதர்கள் வாழும் சமூகம் சொர்கமே!

இப்படி மகிழ்ச்சி அலையாகப் பரவினால் அந்த சமூகம் சொர்கத்தை கண்ணால் காணும்.

மாறாக தனிமனிதர்கள் தீயகாரியங்களில் ஈடுபட்டு, தானும் துன்பத்தில் ஆழ்ந்து மற்றவர்களையும் துன்புறச்செய்தால் அந்த துன்ப அலையே சமூகத்தில் பரவும். இப்படி துன்பம் இரட்டிப்பாகி மொத்த சமூகத்திலும் அந்த அலை பரவினால் அந்த சமூகம் சச்சரவுகளும் போராட்டங்களு கொண்டதாகவே இருக்கும். யாரும் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படி அமைதியும் மகிழ்ச்சியும் இல்லாத சமூகம் நரகமாகவே கருதப்படும். சொர்கமும் நரகமும் இப்படித் தான் தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி நாம் செய்யும் நன்மை தீமைகள் யாவும் அலைவடிவில் ஒரு சுற்று சுற்றி திரும்பி நம்மையே வந்தடைகிறது என்பதை நன்கு புரிந்து கொண்டால் நாமும் நல்லது செய்வோம் பிறரையும் நல்லது செய்யத் தூண்டுவோம். ஏனெனில் அது தானே திரும்பி நமக்கு வரும். ஆக நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பது உண்மையான தத்துவமேயன்றி வெறும் வாக்கியம் அல்ல. ஆகவே தீர்க்கமாக நம்புவோம். நல்லது செய்தால் நல்லது நடக்கும். நல்லதே செய்வோம்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

கொசுறு: இது இன்னும் புரியவேண்டும் என்றால் சிரஞ்சீவி நடித்த "ஸ்டாலின்" என்ற தெலுங்கு படத்தை பாருங்கள். ஒரு அற்புதமான தத்துவத்தை இவ்வளவு அழகாக காட்சி வடிவில் கொடுத்த ஒரே திரைப்படம் என்று இதை தைரியமாகச் சொல்லுவேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். சரிதானே!

மீண்டும் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்


6 comments:

Kesavan said...

///பரவாயில்லை பார்த்துச் செல்லுங்கள்" என்று அவரிடம் சமாதானமாகச் சொல்லியனுப்பினால், அவர் செல்லும் போது மனது அமைதியாகவும், சக மனிதர் தன் மீது காட்டிய அன்பை நினைத்தும் பயணம் செய்வார்.

இப்போது அவர் மீது யாரேனும் மோதினால் கூட அதே போல அவரும் சமாதானமாக பேசி அனுப்புவார். இது அன்பின் அலை பரவுவதற்கு உதாரணம். இது மாறாக நடந்தால் என்ன ஆகும். வழியில் நாம் சண்டை போட, அதே கோபத்தில் அவர் இன்னொருவரிடம் சண்டை போட இப்படியே கோபமும் துன்பமும் ஒரு அலையாகப் பரவும்.///

இதனை என் சிந்தனையில் ஏற்றிய உங்களுக்கு நன்றி.

ஆற்றல் அலை வடிவமானது. எங்கோ எதிலோ படித்த ஞாபகம்.

hayyram said...

//ஆற்றல் அலை வடிவமானது. எங்கோ எதிலோ படித்த ஞாபகம்// ஞாபகப்படுத்தி சொன்னால் நானும் படிப்பேனே!

நன்றி தம்பி!
அன்புடன்
ராம்

Vaazhga Valamudan said...

Hello Mr. Hayram, I have read all your articles, its very inspiring . I have learned lot from your articles. I explained about your thathuvangal to my collegues. Thanks a lot. Can I have your email id... I would like to post this kind of thoughts..

Yours
Mathi

hayyram said...

நன்றி மதி அவர்களே!

hayyram@yahoo.com ல் தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாரிக்கொள்ளலாமே.
நட்புடன்
ராம்

guna said...

hello Mr.Ram i AM really ispired with your all articals and messages i am 28 years but now only i come to all about our hindu religion its really useful and encourage also

hayyram said...

thanks guna.keep reading. u r always welcome.