Sunday, October 4, 2009

கலாச்சாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்! - 1

1. நண்பனின் மனைவியை அடைவதற்க்காக நண்பனை கொலை செய்தவன் கைது.

2. கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளையை வெட்டி ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த தாய்!

3. ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய பெண் கற்பழித்துக் கொலை.

4. தாய் மகன் கொலை, நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் பெண் மணிக்கனக்கில் பேசியது அம்பலம்.

நாள் தோறும் நாளிதழ் திறந்தால் குறைந்த பட்சம் நாலு செய்திகள் இப்படி நம் கண்களை கவ்விக்கொள்ளும். பெரும்பாலான செய்திகளில் காணப்படுவது என்ன? முறையற்ற உறவும், கூடா நட்பும் தான் இவற்றின் மூல காரணங்கள். அறுவெருக்கத்தக்க விதத்தில் உறவுகளை வளர்த்துக் கொண்டு பின் அதிலிருந்து வெளிவரமுடியாமல் திண்டாடி, காமமாய்க் கசிந்து கோபமாய் மாறி கொலையில் முடிந்து செய்தித்தாளில் புகைப்படமாகி ஊர்வாய்க்கு அவலாய் முடியும் அவலம் வேறெங்கும் இல்லை. கன்னகிக்கு சிலை வைக்க வில்லையென்றால் உயிரையும் கொடுப்பான் தமிழன் என்று மார்தட்டி கற்புக்கரசி சிலைக்காக போராட்டமெல்லாம் நடத்தினார்களே அதே தமிழகத்தில் தான் இத்தனை கேவலங்களும்.

கலாச்சாரத்தின் பிறப்பிடமான நமது நாட்டின் மனித உறவுகள் கட்டற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறதே, யார் காரணம்? ஆண்களா இல்லை ஆண்களைக் கவரும் பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன? சமூகமே அப்படித்தான் இருக்கிறது அதனால் தனிமனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள் எனலாமா? இல்லை இல்லை தனிமனிதர்களின் மாற்றங்கள் இப்போது சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டுமா? கலாச்சாரத்தை அடியோடு ஆட்டம் காண வைக்கும் இது போன்ற தவறான நடத்தைகளுக் கெல்லாம் மூலக்காரணம் நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதே.

கலாச்சாரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதிலேயே பலருக்குத் தெளிவிருப்பதாகத் தோன்றவில்லை. கலாச்சாரம் என்றால் இந்து மத அடையாளங்களென்றும், அவ்வாறான இந்து மத அடையாளங்கள் எல்லாம் நம்பவேண்டிய அவசியம் இல்லாத பழம்பஞ்சாங்க விஷயம் அல்லது மூட நம்பிக்கை என்றும் பலருக்கு போதிக்கப் பட்டிருக்கிறது, தொடர்ந்து போதிக்கப்பட்டும் வருகிறது.

கலாச்சாரம் என்பது சமூகத்தை நல்வழியில் கொண்டுபோக உதவும் ஒரு வழிகாட்டும் முறையே ஆகும். வாழ்ந்து காட்டி வழிகாட்டும் முறை என்றால் மிகையில்லை. குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம். சமூகம் என்பது ஒரு பெரிய குடும்பம். தனி மனிதர்கள் குடும்பத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதுவே சமூக விளைவாகப் பரவும். சமூகத்தில் பரவும் விளைவுகள் யாவும் ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும்.

ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும் சமூகச் சங்கிலிக்குள்ளேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறான வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே மனிதன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகளின் படி வழிவழியாக மக்கள் வாழ்வதையே கலாச்சாரம் என்றழைக்கிறோம்.

ஆதி மனிதன் உணர்ச்சிகளை முறைப்படுத்தி முறையாக வாழ்வதற்கு சரியான வழிதெரியாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து முட்டி மோதி துன்பங்களை அனுபவித்து போதும் போதும் என்று ஆகி, இந்தப்பாதை சரியில்லை இனிமேல் துன்பமின்றி வாழ இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு சரியான பாதையை வகுத்து, அதற்க்கான கட்டுப்பாடு முறைகளை உண்டாக்கி அதன் படி வாழ்ந்து நிம்மதி அடைந்தான். அவ்வாறு தனக்கு நிம்மதியையும் கொடுத்து மகிழ்ச்சியையும் அதிகரித்த நல்ல வழிமுறைகளை தங்களது சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுத்தான்.

அவற்றைப் பின் வரும் சந்ததியினரும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பாதை வழியாகவே பெரும் சமூகத்தை வழிநடத்தினான். அவ்வாறு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ பெரியோர்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டு வழிவழியாகப் பின்பற்றப்படும் வாழ்க்கை முறையே கலாச்சாரம் என்றழைகப்படுகிறது.

இப்படி நம் தாத்தா சொல்ல அப்பாவும் அப்பா சொல்ல நாமும் நாம் சொல்ல நமது பிள்ளைகளும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழும் பொழுது, துன்பங்களை சந்தித்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லாமல் துன்பங்களை தவிர்த்து வாழ கற்றுக்கொள்கிறோம். இந்த வழி தவறு இந்த வழி சரி என்று முதலிலேயே சொல்லப்பட்டு விடுவதால் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்ததே தெரியாமல் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து சென்று விடுவோம். இப்படித்தான் கலாச்சாரம் காலம் காலமாக நம்மை வழிநடத்தி வருகிறது.


திருமணம் நமது கலாச்சாரத்தின் ஆணிவேர். கூட்டமாக மனிதன் வாழத்துவங்கியபோது உறவுகளின் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. இவள் எனது மனைவி இனி வேறு ஆடவன் இவளை அனுகக்கூடாது என்று அறிவிக்க திருமணம் தேவைப்பட்டது. பெண்ணுக்கும் ஆடவன் மீதுள்ள உரிமையை நிலைநாட்ட திருமணம் உதவியது. திருமணம் செய்து கொண்டவர்களும் அந்த உறவுக்கு விரோதமாக நடக்க கூடாது என்றும் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வில் வேறு மனிதர்கள் குறுக்கிட மாட்டார்கள்.

அப்படி வாழ்வது மணம் புரிந்து கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் நிம்மதியைத் தந்தது. இப்படிப்பட்ட அமைதியான வாழ்க்கையை தனித்தனிக் குடும்பங்களாக எல்லா மனிதர்களும் வாழ்ந்ததால் ஒரு சமூகமே அமைதியான் சமூகமாக நிம்மதியான வாழ்க்கையை வாழ முடிந்தது. இவ்வித கட்டுப்பாடுகளை மீறிவாழ்வது சமூக விரோதமாகவும், கேவலமான ஒன்றாகவும் கருதப்பட்டதால் அக்காலத்தில் அப்படி மீறுபவர்கள் சமூகத்திலிருந்தே விலக்கிவைக்கப்படுவதும் நடந்தது. எனவே சமூகத்தில் ஒரு அமைதி நிலவியது.

கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியவன் மனிதன் என்பதால் அவற்றை காகிதத்தில் அச்சடித்து வைக்காமல் மனிதனின் ஆழ்மனதில் அச்சடித்தார்கள். அதற்கு முன்னோர்கள் கடைபிடித்த உபாயம் போதனை செய்தல் மூலமும், இதிகாசக் கதைகளை அடிக்கடி மக்களிடம் சொல்வதன் மூலமும் தர்மங்களை மக்களின் மனதில் எழுதினார்கள்.

கலாச்சாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும் முறையற்ற உறவுகளும் - 2

ஆண் பெண் உறவுகள் பற்றிச் சொல்லும்போது திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:-

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அரனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

பிறன் மனைவியை இச்சையுடன் பார்க்காத பேராண்மை, நல்லவர்களுக்கு அறன் போன்ற காவலாக இருப்பது மட்டுமல்ல அது மிகச்சிறந்த ஒழுக்கமாகும் என்று கூறுகிறார். ஆண்மை என்பது ஆண் தன்மையைக் குறிக்கும் வழக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வள்ளுவரோ பேராண்மை என்று குறிப்பிடுவதன் மூலம் ஆண்மையின் சிறப்பு ஒரு ஆண்மகனுக்கு கொடுக்கும் பெருமையை விட பிறருடைய மனைவியின் மீது ஆசைப்படாமல் வாழ்வதே பெருமை என்று ஆணுக்கு எடுத்துரைக்கிறார்.

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு தீமைகளும் பிறர் மனைவிமீது ஆசைப்பட்டு நாடிச் செல்பவரை விட்டு எப்போதும் நீங்காது என்று கூறிகிறார் வள்ளுவப் பெருந்தகை. கட்டுரையின் ஆரம்பத்தை மீண்டும் படியுங்கள், வள்ளுவரின் வாக்கு சத்தியம் தான் என்பதை ஆழ உணர்வீர்கள்.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்த்தொழுகு வார்.

சந்தேகப்படாமல் நல்லவர் என்று நம்பி வீட்டுக்குள் அனுமதித்தவர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர் என்கிறார் வள்ளுவர். அதாவது நம்பியவர் வீட்டிலேயே அவருக்கு துரோகம் செய்து அவரது மனைவியிடம் இச்சைகொள்ளும் ஆண் செத்த பிணத்திற்குச் சமம் என்கிறார். எப்படி வெளியில் இருந்து பிணத்தை வீட்டுக்குள் அழைத்து நாம் வைத்துக்கொள்வதில்லையோ அதே போல அத்தகைய துரோக குணம் கொண்ட ஆண்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்பதே இதன் பொருள்.

இவ்வாறு ஆணின் பேராண்மையை எடுத்துச் சொன்ன வள்ளுவர் பெண்ணின் கற்பு பற்றிய சிறப்பையும் எடுத்துச் சொல்லுகிறார்.



பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.

கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணைவிடப் பெருமைமிக்கவை உலகில் வேறென்ன இருக்கிறது? ஒன்றுமில்லை என்கிறார் வள்ளுவர். கற்புடன் வாழ்வேன் என்ற உறுதியுள்ள பெண்ணே உலகில் வேறு எல்லா விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று வள்ளுவர் கற்புடன் வாழ்வதன் உயர்வை பெண்ணுக்குச் சொல்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இவ்வாறு இல்லறம் நிம்மதியாக நடைபெற வேண்டுமென்றால் பெண் கற்புடன் வாழ்வேண்டும் அதுவே உயர்ந்த வாழ்க்கை என்று பெரியோர்களால் வலியுறுத்தப்பட்டது.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண். தன் ஒழுக்கத்திலிருந்து தவறாமலும் கற்பு குறையாமல் வாழ்ந்தும் தன் கணவனையும் அன்புடன் நடத்தி இல்லறத்தைக் காப்பதில் சோர்வு அடையாதவளே பெண் என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

ஆனால் இவையெல்லாம் பள்ளிகூடப் படிப்பில் அதுவும் மனப்பாடப்பாடமாக வந்து மார்க் கொடுத்தால் படித்திருப்போம். அதற்குப் பின் வள்ளுவரை நினைவில் கொள்பவர் யார்? பள்ளிப்படிப்பை விட்டு வெளியே வந்தால் மக்களை அப்படியே ஆக்கிரமிப்பது வள்ளுவமா அல்லது மேலைநாட்டு நாகரீகமா என்றால் மேலை நாட்டு நாகரீகமே என்று அடித்துச் சொல்லலாம்.

கலாச்சாரம் என்பது பழம்பஞ்சாங்கம், மேலை நாட்டு நாகரீகம் படி வாழ்வதே அறிவு என்று பரப்புவர்கள் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு!



9 comments:

thiruchchikkaaran said...

Ver good posting. Congrats ram.

hayyram said...

நன்றி thiruchchi சார்.

கலையரசன் said...

அருமையான இடுகை! ஆனா, சில பேரு இத பார்தாங்கன்னா கடிச்சு கொதறிடுவாங்க.. அதபத்தி நீங்க கவலை படாதீங்க பாஸ்... நீங்க இதுபோல நிறைய சிந்தியுங்க!

hayyram said...

நன்றி திரு. கலையரசன் , தொடர்ந்து தளத்திற்கு வாருங்கள்.

ரோஸ்விக் said...

அருமை நண்பா!
நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டுபவர்கள் அதிகமாகிக் கொண்ண்டு இருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

இதை உணர்ந்து நடந்தால் உன்னதம்.

hayyram said...

நன்றி திரு. ரோஸ்விக்

அகோரி said...

நாகரிகம் என்பது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது
இன்று நம் வாழ்க்கையை அழிவின் பாதையில் அழைத்துசெல்கிறது

VIDHYASAGAR said...

அருமையான பதிவிடு. கலாச்சாரத்தை சீர்குலைக்கும் அற்பர்கள் திருந்தட்டும் . நன்றி

Dr.Anburaj said...

ஆயிரம் ஆண்டுகளாக நமது மக்களுக்கு முறையான சமய அனுஷ்டானங்கள் -பிற்பட்ட அட்டவணை சாதி மக்களுக்கு - அளிக்கப்படவில்லை. அதுதான் குறிக்கோள் இல்லாத வாழ்க்கையாகி விட்டதுதான் காரணம். சுவாமி விவேகானந்தர் நூல்களை ஒவ்வொரு இந்துவும் படிக்க வைக்க வேண்டும். நிச்சயம் விடிவு பிறக்கும்