அன்பான சகோதரர்களே! ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஆன்மீகதில் வைராக்கியம் இல்லாதவர்களால் மன அமைதியை உணர முடியாது. மனத்தில் பரிபூரண அமைதியுடன் கூடிய வைராக்கியமும் இல்லாவிடில் முக்தியை அடைய முடியாது.
நாரதர் என்ற தேவ முனிவர் ஒருவர் இருந்தார். மனிதர்களில் பெரிய யோகிகளான முனிவர்கல் இருப்பது போல், தேவர்களிலும் யோகிகள் உண்டு. நாரதர் மிகப்பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார்.
ஒரு நாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன.
அவன் நாரதர் அந்த வழியாகப் போவதைப் பார்த்ததும் நாரதரிடம் 'எங்கே செல்கிறீர்கள்? என்றான். ' நான் சொர்கத்திற்குச் செல்கிறேன்' என்றார்
நாரதரி. 'அப்படியானால், ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும்' என்று கேட்டுக்கொண்டான் அவன்.
நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரிக் கண்டு , 'நாரதரே! எங்கே செல்கிறீர்?" என்று கேட்டான். நாரதரோ 'நான் சொர்கத்திற்குச் செல்கிறேன்' என்றார். 'அப்படியானால், ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி
அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும்' என்று அவனும் கேட்டுக்கொண்டான். நாரதர் சென்றுவிட்டார்.
சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன், 'நாரதரே! என்னைப் பற்றி பகவானிடம் கேட்டீரா?' என்றான். ' ஆம் ' என்றார். நாரதர். 'பகவான் என்ன சொனார்?' என்று கேட்டான் அவன். 'நீ இன்னும் நான்கு
பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார்' என்றார் நாரதர்.
அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி, 'என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன்' இன்னும் நான்கு பிறவிகளா?'. எல்லாம் வீனாகிப்போனதே!" என்று கூறி புற்றை உடைத்து எழுந்து சென்றுவிட்டான்.
நாரதர் அடுத்த மனிதனிடம் சென்றார். 'பகவானிடம் கேட்டீரா, நாரதரே?' என்றான் அவன். 'ஆம், கேட்டேன், அந்தப் புளியமரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான்' என்று நாரதர் கூறினார்.
அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே 'இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே!' என்று கூறினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது 'மகனே! இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன்' என்று கூறியது. அவனது விடா முயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது.
அத்தனைப் பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. அந்த வைராக்கியமே அவனை முக்திக்கு அழைத்துச் சென்றது.
நாளை என்ற நிச்சயமற்ற தன்மைக்காக இன்றைய உயர்ந்த லட்சியத்தை விட்டுவிடாதீர்கள். அடுத்தப் பிறவியில் தானே முக்தி கிடைக்கிறது என்பதற்காக இந்த பிறவியில் அதை அடையும் நோக்கத்தை கைவிட்டு விடாதீர்கள். அதற்கான முயற்சியை இந்தப் பிறவியிலேயே துவங்கி விடுங்கள். இல்லையேல் அடுத்த பிறவியிலும் ஆன்மவிசாரத்தின் ஆரம்ப நிலையிலேயே நீங்கள் இருப்பீர்கள். பிறகு எத்தனைப் பிறவி எடுப்பினும் ஆத்ம முக்தி கைக்கெட்டாததாகவே போய்விடும்.
தியானம் செய்வதன் மூலமாக மன அமைதியை உணரவும் ஆத்மாவை உணரவும் பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இருபது நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்.
குறைந்தபட்சம் மனக்குவிப்பு பயிற்சியில் வைராக்கியம் கொண்டிருப்பவர்களே படிப்படியாக அடுத்த நிலைக்குச் செல்லமுடிந்தவர்களாவார்கள்.
- சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தரின் அரிய புகைப்படம்.
2 comments:
நல்ல கதை வைராக்கியத்தை பற்றி...
ஆத்ம விசாரம் என்றால் என்ன என்பதை சொல்ல முடியுமா...
தியானம் நம்மை ஒருநிலைப் படுத்த உதவுகிறது..மேலும் அந்த நாள் முழுதும் சோர்வு தெரியாமல் இருக்க வாய்ப்பாக மாற்றுகிறது..
நன்றிகள்...
வருகைக்கு நன்றி சரன்யா! நலமா?
//ஆத்ம விசாரம் என்றால் என்ன என்பதை சொல்ல முடியுமா.//
ரமணர் பற்றிய செய்திகளில் இப்படிச் சொல்வார்கள். ரமண மகரிஷியிடம் ஒரு வெள்ளைக்காரர் வந்தாராம். அவரிடம் மகரிந்ஷி நீ யார் என்றாராம். அவர் தனது பெயரைச் சொல்ல, அது உன் பெயர், நீ யார் என்றார் மகரிஷி. அவர் நான் ஒரு போட்டோ கிராபர் என்று சொல்ல அது உன் தொழில் நீ யார் என்றார் மகரிஷி. நான் இந்த நாட்டிலிருந்து வந்தவன் என்று சொல்ல அது உன் இருப்பிடம் நீ யார் என்றார் மகரிஷி. நான் இன்னாருடைய பிள்ளை என்று சொல்ல அது உன் உறவு நீ யார் என்றாராம் மகரிஷி. வந்த வெள்ளையருக்கு தலை சுற்றி விட்டது. அதை தெரிந்து கொண்டு வா பின்னர் பேசலாம் என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.
அவ்வாறு நான் யார் என்று நம்முடைய அடையாளங்களை யெல்லாம் ஒவ்வொன்றாக விலக்கிவிட்டு யோசித்தால் கடைசியில் நமது உடலும் உருவமும் மட்டும் தான் மிஞ்சும். அதையும் தாண்டி ஆழ சிந்திக்கும் போது நமது ஆத்மா பற்றிய உள் உணர்வை நம்மால் உணர முடியும். இது பெரியோர்கள் வாக்கு. அவ்வாறு நம்முடைய ஆத்ம சக்தியை உணர்வதற்கான முயற்சியே ஆத்ம விசாரணை என்பது பெரியோர்களது கூற்று.
அதன் படி ஆத்ம விசாரத்தை நான் செய்து பார்க்கிறேன். முடிந்த வரை முயற்சிக்கிறேன். இன்னும் மனம் ஒருநிலைப் படவில்லை. நீங்கள் முயற்சித்தால் எனக்கு விடை சொல்லுங்கள். அது வரை சேர்ந்து பிரயானிப்போம்.
நன்றி
அன்புடன்
ராம்
Post a Comment