Sunday, October 18, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 9


விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக் கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! "யமுனை நதிக்கரையில் பிரம்மஸ்தலம் ஒன்று இருக்கிறது. அங்கே அக்னிஸ்வாமி என்ற பிராமனன் ஒருவன் இருந்தான். அவன் வேதங்கள் முழுமையும் அறிந்தவன். அவனுக்கு மந்தாரவதி என்னும் அழகிய பெண் ஒருத்தி இருந்தாள்.

படைத்த பிரம்மனே பார்த்து வியக்கும் அழகு கொண்ட அந்த பெண்ணை கண்டவர்களெல்லாம் காதல் கொள்வர். அத்தனை அழகு.

காலம் சென்றது. அவள் இளம் பருவத்தை அடைந்தாள். அவளுக்கு ஏற்ற படி எல்லா அம்சங்களும் நிறைந்த மூன்று பிராமன இளைஞர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவனும் அந்தப் பெண்ணைத் தனக்கே மணம் செய்து கொடுக்குமாறு அவளது தந்தையை வேண்டினர்.

அவளை வேறு யாருக்காவது கொடுத்தால் தன் உயிரையே விட்டுவிடுவதாக ஒவ்வொருவனும் கூறினான். ஒருவனுக்கு மணமுடித்தால் மற்ற இருவர்கள் தற்கொலை செய்து கொள்வார்களோ என்ற பயத்தில் அவளது தந்தை யாருக்கும் அவளை மணமுடிக்காமல் இருந்தான்.

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென நோய் தாக்கி படுக்கையில் விழுந்தாள். குனப்படுத்தவே முடியாமல் இறந்தும் போனாள்.

அவளையே நினைத்து வாழ்ந்து வந்த மூன்று இளைஞர்களும் மிகவும் மனவேதனையும் துக்கமும் அடைந்தனர். அவள் உடல் சுடுகாட்டில் தகணம் செய்யப்பட்டது. அம்மூவருள் ஒருவன் சுடுகாட்டிலேயே தங்கிவிட்டான். அவளது நினைவு மிகவும் வாட்டவே அந்தப் பெண்ணை தகணம் செய்த சாம்பலையே படுக்கையாக ஆக்கி அதிலேயே உறங்கி அங்கேயே தங்கத் துவங்கினான்.

மற்றொருவன் அவள் மூது கொண்ட பாசத்தால் அவளது அஸ்திகளை எடுத்துக் கொண்டு கங்கையில் கரைக்க போனான்.

மூன்றாமவனோ துக்கத்தால் துறவியாக மாறி தேசாந்தரம் போகத்துவங்கினான்.

இப்படி தேசாந்திரமாகத் திரிந்த மூன்றாமவன் ஒருநாள் ஒரு ரிஷியின் வீட்டில் சாப்பிடச் சென்றான். அந்த வீட்டில் அவனுக்கு மரியாதையான உபசரிப்புச் செய்து அவனுக்கு வயிரார உணவளித்தனர். அந்த நேரத்தில் அந்த ரிஷியின் வீட்டில் இருந்த குழந்தை விளையாடிக் கொண்டே அடுப்பில் இருந்த நெருப்புக்குள் விழுந்து விட்டது. கொழுந்து விட்டெரிந்த நெருப்பில் குழந்தை உடல் கருகி சாம்பலானது.

குழந்தையின் தாய் கதறி அழத்தொடங்கினாள். மூன்றாமவனோ செய்வதறியாது திகைத்தான். அப்போது ரிஷி இருவரையும் சமாதானப்படுத்தினார். "கவலை கொள்ளாதீர்கள்! நான் அவனை பிழைக்கவைத்து விடுவேன்" என்று கூறி சஞ்சீவி மத்திரம் அடங்கிய ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, மந்திரங்கள் சொன்னவாறே ஒரு பிடி மண் எடுத்து குழந்தை எரிந்த சாம்பல் மீது வீசினான்.

குழந்தை முன் இருந்தபடியே உயிர் பிழைத்து எழுதுந்தது.

இதனை பார்த்து அதிசயித்துப் போன துறவியாக இருக்கும் இளைஞன் தனது நேசம் மிக்க காதலியை நோய்க்கு கொடுத்துவிட்டு அவள் சாம்பலானதைப் பார்த்து துக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்தான். அதனால் தனக்கும் இந்த மந்திரத்தைக் கற்றுத்தரும்படி இளைஞன் ரிஷியிடம் கேட்டுக்கொண்டான். அவன் மீது இரக்கப்பட்ட ரிஷியும் அவனுக்காக அந்த மந்திரங்களைக் கற்றுக் கொடுத்தார்.

மந்திரங்களைக் கற்றுக்கொண்ட மூன்றாமவன் மந்தாரவதையை தகணம் செய்த இடத்திற்கு விரைந்து வந்தான். அங்கே மற்றவன் சாம்பல் மீதே படுத்துக் கொண்டு அவளையே நினைத்துக் கொண்டிருந்தான். மற்றவன் அவளது அஸ்தியைக் கரத்து விட்டு அப்போது தான் மயானத்திற்கு வந்திருந்தான்.

மந்திரங்களைக் கற்றுக்கொண்ட இளைஞன் நான் மந்தாரவதியை உயிர்பிக்கும் மந்திரம் வைத்திருக்கிறேன் என்றும் அவளை உயிருடன் வரவழைக்கிறேன் என்றும் கூறி சாம்பல் மீது இருந்தவனை விலகச் சொன்னான். இரு இளைஞர்களும் அவனுக்கு விலகி வழிவிட்டனர்.

இப்போது சில மந்திரங்களைச் சொல்லி ஒரு பிடி மண் எடுத்து மந்தாரவதியின் சாம்பலில் போட்டான் இளைஞன். எல்லோரும் வியக்கும் வண்ணம் மந்தாரவதி உயிருடன் எழுந்து
நின்றாள்.

அவளது அழகைக் கண்டு மூவரும் அவள் மிது தாள முடியாத மையல் கொண்டனர். மூவரும் தன்னைத்தான் இவள் மணக்க வேண்டும் என்றனர்.

"அவளை உயிர்பித்தவனோ என் மந்திரத்தால் தானே இவள் பிழைத்தாள் அதனால் இவள் எனக்குத்தான் சொந்தம்" என்றான்.

மற்றவனோ "அவளது அஸ்தியை கங்கையில் கரைத்து அவளது ஆத்மாவை ஜீவனுடன் வைத்திருந்தது நான் தான் அதனால் அவள் எனக்குத் தான் சொந்தம்" என்றான்.

இன்னொருவன் "அவளது சாம்பலிலேயே படுத்துறங்கி அதை பத்திரமாக பாதுகாத்ததால் தானே அவளை உங்களால் உயிர்ப்பிக்க முடிந்தது எனவே, அவள் எனக்கே சொந்தம்" என்றான்.

இப்போது கதையை நிறுத்தி விட்டு வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேட்டது "விக்கிரமாதித்தா! இந்தப் பேரழகி மந்தாரவதி யாரை மணக்க வேண்டும் என்று நீ சரியான தீர்ப்பைச் சொல்" விடை தெரிந்து வாய் திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து விடும் நினைவில் கொள் என்றது.

விக்கிரமாதித்தன் பேசலானான். "எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் மந்திர வலிமையால் அவளைப் பிழைக்கச் செய்தவன் உயிரி கொடுத்தவன் என்ற முறையில் அவளுக்கு தந்தையாவான். எலும்புகளைக் கொண்டு சென்று கங்கையில் கரைத்தவன் ஈமக்கடன் செய்த மகனாவான். அவள் மீது கொண்டுள்ள ஆசையால் அவன் சாம்பலை விட்டுப் பிரியாமல் மயானத்திலேயே தங்கித் தபசு செய்து அதனைத் தழுவிக் கிடந்தவனே அவள் புருஷனாவான்!" என்றான்.

இதனைக் கேட்ட வேதாளம் மிகச் சரியாகச் சொன்னாய் விக்கிரமாதித்தா. ஆனால் நீ வாய் திறந்து பேசியதால் நான் உன்னை விட்டுப் போகிறேன். இதோ பார்...இப்பொழுது முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள் என்று சொல்லி விக்கிரமாதித்தன் பிடியிலிருந்து தப்பி மீண்டும் குகையை நோக்கிப் பறந்தது வேதாளம்.

1 comment:

shanmuga said...

I am sharing some of your pages in my facebook account. Please let me know if you have any issues