ஒரு தேசாந்திரி ஓர் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிட உணவு கொடுக்கும்படி அந்த உணவு விடுதி நடத்தும் பெண்மணியிடம் கேட்டான். அவளோ சாப்பாடெல்லாம் ஆகிவிட்டது ஒன்றும் இல்லை என்றாள்.
"அம்மா பசி காதை அடைக்கிறது. ஒரு தங்க காசு தருகிறேன். ஒரு எலுமிச்சங்காய் அளவு சாதம் போட்டாலும் பரவாயில்லை" என்றான் தேசாந்திரி.
அந்தப் பெண்மணி தேசாந்திரியிடமிருந்து ஒரு தங்க காசை வாங்கிக் கொண்டாள்.
தேசாந்திரியோ கைகால் அலம்பிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான். அவன் முன்னால் ஒரு வாழை இலையைப் போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர் இலையில் ஓர் எலுமிச்சங்காயளவு சாதத்தை வைத்துச் சிறிது குழம்பு விட்டு "சாப்பிடு"! என்றாள்.
நிரம்ப பசியில் இருந்த தேசாந்திரி ஏமாற்றத்துடன் "என்ன, அநியாயமாக இருக்கிறதே! ஏதோ பேச்சுக்காக ஒரு எலுமிச்சையளவு சாதம் என்று சொன்னால் ஒரு தங்கக் காசுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு மட்டுமே சாப்பாடா?, நான் பட்டியியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். உன்
சாப்பாடு வேண்டாம். என் காசைத் திருப்பிக் கொடு" என்றார்.
அந்தப் பெண்மணியோ தான் வாங்கிய பணத்தைத் திரும்பத் தரமுடியாது என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.
அந்த தேசாந்திரிக்கு பெருத்த ஏமாற்றமாகிப் போனது. பசியும் கோபமும் சேர்ந்து கொண்டது. அவர் மரியாதை ராமனைப் பற்றி கேள்விப்பட்டார். நேராக மரியாதை ராமனிடம் சென்று தன் வழக்கைக் கூறினார்.
"அய்யா, ஒரு பேச்சுக்காக அந்த அம்மாவிடம் ஒரு எலுமிச்சை அளவு சாதம் போட்டால் ஒரு
தங்கக் காசு தருகிறேன் என்று கூறினேன். ஆனால் அந்த பெண்மணியோ என்னிடம் ஒரு
தங்கக் காசு வாங்கிக் கொண்டு உண்மையாகவே எலுமிச்சங்காயளவு சாதம் போட்டார்கள்.
சாதம் வேண்டாம் காசைத் திரும்பக் கொடுத்து விடு என்றால் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்" என்றார் தேசாந்திரி.
"இவர் சொல்லுவது உண்மை தானா?" என்று உணவு விடுதிப் பெண்மணியிடம் கேட்டான் மரியாதைராமன்.
அந்தப் பெண்மணியும் ஆமாம் என்றாள். மேலும் "அவர் தான் எலுமிச்சங்காய் அளவுள்ள சாதம் போடு என்றார். நான் அதைத்தானே செய்தேன்" என்றாள்.
உடனே மரியாதை ராமன் "நீங்கள் இவருக்குப் போட்ட சாதத்தைக் கொண்டு வந்து காட்ட முடியுமா?" என்றான்.
அந்தப் பெண்ணும் இலையில் அப்படியே இருக்கிறதென்று சொல்லி இலையில் போட்டபடியே இருந்த அந்த சாதத்தை அப்படியே கொண்டு வந்து காட்டினாள்.
இலையில் இருந்த சாதத்தைக் கூர்ந்து பார்த்த மரியாதை ராமன், "ஒரு சாதம் கூட எலுமிச் சங்காயளவு இல்லையே?" என்றான்.
"எலுமிச்சங்காயளவு சாதமா?" என்று வாயைப் பிளந்தாள் அந்தப் பெண்மணி.
"ஆமாம் இவர் எலுமிச்சங்காயளவுள்ள சாதம் தானே போடச் சொன்னார். நீ மிகச்சிறிய வடிவமாக இருக்கும் பல சாதங்களைக் கொண்டு வந்து எலுமிச்சங்காயளவு போட்டிருக்கிறாய். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீ ஒப்புக்கொண்டபடி எலுமிச்சங்காயளவுள்ள சாதத்தைப் போட முடியுமானால்
போடு. இல்லையேல் இவருக்கு ஒரு தங்க காசை திருப்பிக் கொடுத்து விடு." என்றான் மரியாதைராமன்.
ஒவ்வொரு பருக்கையும் எலுமிச்சங்காயளவு இருப்பதைப் போல சாதத்தை போட முடியாத உணவுவிடுதிப் பெண்மணி தோல்வியை ஒப்புக்கொண்டு தேசாந்திரிக்கு தங்கக் காசை திருப்பிக் கொடுத்தாள்.
உணவு விடுதிப் பெண்ணின் பேராசையை சமயோசிதமாக கையாண்டு தீர்வு சொன்ன மரியாதை ராமனை அனைவரும் பாராட்டினார்கள்.
நமது பாரம்பரிய கதைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.
No comments:
Post a Comment