வாழும் கடவுள் உங்களுக்குள் இருக்கிறார். ஆனால் நீங்கள் சர்ச்சுகளையும் கோவில்களையும் கட்டிக் கொண்டு பல கற்பனைப் பிதற்றல்களை நம்பிக்கொண்டு திரிகிறீர்கள்.
மனித உடம்பில் உள்ள ஆன்மா ஒன்றே வழிபடத்தக்க கடவுள்.
எல்லா விலங்குகளும் கூடக் கோயில்களே. ஆனால் மனிதனே இவற்றுள் மிகச் சிறந்தவன்.
ஒவ்வொருவரும் உடல் எண்ணும் கோவிலினுள் உள்ள ஆன்மா என்ற கடவுளை உணர்கின்ற தருனமே நம்மை கட்டியுள்ள பந்தங்கள் எல்லாம் விலகுகின்றன. மனித மனம் சுதந்திரம் அடைகிறது.
மகான்களின் சக்தியெல்லாம் எங்கே இருந்தது என்பதை உலக வரலாற்றிலிருந்து நீங்கள் அறிய வில்லையா? எங்கே? புத்தியிலா? அவர்களுள் யாராவது தத்துவ நூலோ, மிக நுணுக்கமான தர்க்க நூலோ எழுதியிருக்கிறார்களா. இல்லவே இல்லை. அவர்கள் சிறிதே பேசினார்கள். புத்தனைப் போல் உணர்ச்சி கொண்டால் புத்தனாகவே ஆவாய். உணர்ச்சி தான் வாழ்க்கை, உயிர், வலிமை எல்லாம். உணர்வுப்பூர்வமான தேடல் அன்றி தீவிரமான அறிவு முயற்சியால் கடவுளை அடைய முடியாது.
இறைவன் உள்ளத்தால் தான் காணப்படுகிறார். அறிவால் அல்ல.
இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி (புத்தி) அதை நன்றாகப் பிடித்திருக்கின்றானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான்.
யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும், அடிவாளம் (மனம்) உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப் போகின்றான்.
- சுவாமி விவேகானந்தர்.
No comments:
Post a Comment