Showing posts with label mariyathiraman. Show all posts
Showing posts with label mariyathiraman. Show all posts

Sunday, April 11, 2010

மரியாதை ராமன் கதைகள் - ஜான் நீளமா? முழம் நீளமா?


அந்த ஊரில் வையாபுரி என்பவர் வட்டிக்குக் கடன் கொடுப்பவராக இருந்தார். அவரிடம் முருகேசன் என்ற வியாபாரி நூறு வராகன்கள் கடன் வாங்கி இருந்தார்.

வையாபுரி முருகேசனிடம் பலமுறை அலைந்து கேட்டுப் பார்த்தும் முருகேசனோ வட்டியும் தராமல் அசலும் கொடுக்காமல் அலைக்கழித்தார்.

ஒருநாள் வையாபுரி முருகேசனிடம் தன் பணத்தை வட்டியுடன் சேர்த்து உடனடியாகக் கொடுத்துவிடுமாறு கடுமையாகக் கேட்டார்.

முருகேசனோ "நாளை நான் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது வந்து கேளுங்கள்! கடன் பத்திரத்தையும் கொண்டு வாருங்கள்..அப்போது வட்டியுடன் அசலையும் தருகிறேன்" என்று கூறி அனுப்பி வைத்தார்.

மறுநாள் வையாபுரி கடன் பத்திரத்துடன் முருகேசனின் வயலுக்குப் போனார். வையாபுரியைப் பார்த்த முருகேசன் "உங்கள் கடனைத் தீர்த்து விடுகிறேன். கடன் பத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்றார்.

"இதோ கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறிய வையாபுரி தம் மடியில் இருந்த கடன் பத்திரத்தை எடுத்து முருகேசனிடம் காட்டினார்.

உடனே முருகேசன் சட்டென்று அவர் கையில் இருந்த கடன் பத்திரத்தை பிடுங்கிச் நார்நாராகக் கிழித்து அருகில் எரிந்துகொண்டிருந்த குப்பையோடு குப்பையாக போட்டு எரித்துவிட்டார்.

இதைப் பார்த்து வையாபுரி திகைத்துப் போய்விட்டார்.

முருகேசனோ "இப்போது என்ன செய்வாய்? நான் உனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை. இனி பணம் கேட்டு என்னிடம் அடிக்கடி தோலை செய்யாதே" என்று கடுமையாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மிகுந்த ஏமாற்றமும் அவமரியாதையும் அடைந்த வையாபுரி மரியாதை ராமனிடம் நடந்ததை முறையிட்டார்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மரியாதை ராமன் "முருகேசன் எழுதிக்கொடுத்த கடன் பத்திரம் எவ்வளவு நீளம் இருக்கும்?" என்று கேட்டார்

"ஒரு ஜான் நீளம் தான் இருக்கும்" என்றார் வையாபுரி.

"நாளைய தினம் இதே கேள்வியை உங்களிடம் கேட்பேன். அப்போது நீங்கள் ஒரு முழம் நீளம் இருக்கும் என்று சொல்ல வேண்டும்" என்றார். வையாபுரியும் சம்மதித்தார்.

மறுநாள் வழக்கு மன்றத்திற்கு வந்தது.

மரியாதைராமன் முருகேசனிடம், "நீர் வையாபுரியிடம் நூறு வராகன் கடன் வாங்கியது உண்மையா?" என்று கேட்டார்.

"இல்லை ஐயா!" என்று மறுத்தான் முருகேசன்.

"நீ கடன் வாங்கிக் கொண்டு கடன் பத்திரம் கூட எழுதிக் கொடுத்ததாக வையாபுரி சொல்கிறாரே!" என்றார் மரியாதைராமன்.

"பொய், நான் இவரிடம் கடன் வாங்கவுமில்லை. கடன் பத்திரம் எழுதி கொடுக்கவும் இல்லை." என்றார் முருகேசன்.

மரியாதை ராமன் வையாபுரியைப் பார்த்து "இவர் உம்மிடம் கடன் வாங்கிக்கொண்டு பத்திரம் எழுதிக்கொடுத்தார் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன் நீளம் எவ்வளவு இருக்கும்?" என்றார்.

"ஒரு முழம் நீளம் இருக்கும்" என்றார் வையாபுரி.

உடனே முருகேசனுக்கு கோபம் வந்துவிட்டது. "ஏன் புளுகுகிறாய்? நீ கொடுத்த நூறு வராகனுக்கு ஒரு முழத்திற்கா பத்திரம் எழுதுவார்கள்? ஒரு ஜான் நீளம் கூட இருக்காது" என்றார் ஆவேசமாக.

இதைக்கேட்ட மரியாதை ராமன்"ஆமாம் அவரை அப்படி புளுகுமாறு நான் தான் சொன்னேன். அதனால் தானே இப்போது உம் வாயாலேயே நீர் உண்மையைச் சொல்லிவிட்டீர்" என்றார். பின் வையாபுரிக்கு சேரவேண்டிய நூறு வராகனை வட்டியுடன் அடைக்கவும், பத்திரத்தை கிழித்துப் போட்டுவிட்டு பொய் சொல்லி ஏமாற்ற முயன்றதுக்காக ஐம்பது கசையடிகளும் கொடுக்குமாறு தீர்ப்பு கூறினார்.

மரியாதை ராமன் சாதுர்யமாக உண்மையை வெளிக்கொண்டுவந்ததை ஊர்மக்கள் மிகவும் பாராட்டினார்கள்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.


Sunday, February 21, 2010

மரியாதை ராமன் கதைகள்!


ஓர் ஊரில் இரண்டு ஆயர்குல மாதர்கள் இருந்தனர். அவர்கள் இருவர் வீடும் எதிரெதிரே அமைந்திருந்தன. ஒருத்தி பெயர் யசோதை. மற்றவள் பெயர் துர்கா.

யசோதையிடம் நிறையப்
பசுக்கள் இருந்தன. துர்காவிடம் மிகக்குறைந்த அளவே பசுக்கள் இருந்தன. இருவரும் பால், மோர், தயிர், நெய் விற்பவர்களே. யசோதை ஊதாரித்தனமாகச் செலவுகள் செய்பவள்.

ஆனால்
துர்காவோ சிக்கனமானவள். ஒரு நாள் யசோதை வீட்டிற்கு விருந்தினர் ஏராளமாக வந்து விட்டனர். அவர்களுக்கு விருந்து வைக்கப் பலகாரங்கள் செய்வதற்குப் போதுமான அளவு நெய் அவளிடம் இல்லை. ஆகையால் எதிர் வீட்டுக்காரி துர்காவிடம் சென்று ஒருபடி நெய் கடனாகப் பெற்றுக் கொண்டாள். வெகு நாட்களாகியும் யசோதை துர்காவிடம் நெய்யைத் திருப்பிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

ஆகையால் ஒரு நாள் துர்கா, யசோதை வீட்டிற்குச் சென்று நெய்யைக்
கொடுக்குமாறு கேட்டாள். அதற்கு யசோதை உன்னிடம் எப்போது நான் நெய் வாங்கினேன்? என்று கேட்டு விட்டாள். இதைச் சற்றும் எதிர் பாராத துர்க்கா அதிர்ச்சியுற்றாள். அவள் நெய் போனாலும் பரவாயில்லை இந்த துரோகத்தை நான் வெளிப்படுத்தாமல் விடமாட்டென் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டாள். வழக்கைக் கேட்ட மரியாதை ராமன் இருவரின் நடவடிக்கைகளையும் கொஞ்சம் நோட்டம் போட வேண்டும் என்பதற்க்காக ஒரி காரியம் செய்தான். ஓர் ஆழம் இல்லாத பள்ளம் வெட்டி அதில் சேரும் சகதியும் உண்டாக்கச் செய்தார் அவர். பின் இரண்டு கிளிஞ்சல்களும், இரண்டு செம்புகள் நிறைய தண்ணீரும் பள்ளத்துக்கு அருகில் வைக்கச் செய்தார்.

முதலில் யசோதையையும்
இரண்டாவது துர்காவையும் சேற்றில் இறங்கி நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால்
காலைக் கழுவி வரச் சொன்னார். முதலில் யசோதை சேற்றில் வேகமாக நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவினால். சேறு சரியாகப் போகவில்லை. சேறு அப்படியே இருந்தது.

அடுத்து துர்கா சேற்றில் இறங்கி நடந்தாள். பின் கிளிஞ்சலால் காலிலுள்ள சேற்றைச்
சுத்தப்படுத்திய பின் செம்பிலுள்ள தண்ணீரால் கால்களைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டு
வந்தாள். செம்பிலும் சிறிது தண்ணீர் மிச்சமாக இருந்தது.

அடுத்து மரியாதைராமன், யசோதையை அழைத்து அவள் கருத்தைக் கேட்டார். நான் நிறையப் பசுக்கள் வைத்திருக்கிறேன். எனக்கு அவற்றால் போதுமான அளவு நெய் கிடைக்கிறது. ஆனால் துர்காவிடம் மிகக் குறைந்த அளவே பசுக்கள் இருக்கின்றன. அப்படியிருக்க நான் அவளிடம் நெய் கடனாக வாங்க வேண்டிய அவசியமில்லை. என்னை அவமானப் படுத்த வேண்டுமென்பதற்காக என்மேல் இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளாள் என்றாள் யசோதை.

இதைப் பொறுமையாகக் கேட்ட மரியாதை ராமன் தன் தீர்ப்பைச் சொல்லத் துவங்கினான்.

துர்கா காலிலுள்ள சேற்றை கிளிஞ்சல்களால் வழித்து எடுத்து விட்டு தண்ணீரால் கால்களைச்
சுத்தமாகக் கழுவிய பின் சிறிது தண்ணீரும் செம்பில் மிச்சம் இருக்கிறது. ஆகையால் அவள்
சிக்கனக்காரி. நீயோ காலிலுள்ள சேறு போகாமல் அவ்வளவு தண்ணீரையும் செலவழித்துவிட்டாய். இதிலிருந்தே நீ ஊதாரி எனத் தெரிகிறது. ஆகையால் நீ துர்காவிடம் நெய் கடனாக வாங்கி இருக்கிறாய் என்பது உறுதியாகிறது என்றார் மரியாதைராமன்.

யசோதையும், துர்காவிடம் நெய் கடனாக வாங்கிக் கொண்டதை ஒத்துக் கொண்டாள். பின் கடனாக வாங்கிய நெய்யை துர்காவிடம் கொடுக்க யசோதைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை அனைவரும் பாராட்டினர்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது
நமது கடமையே ஆகும்.


Friday, January 8, 2010

மரியாதை ராமன் கதைகள்!


ராமனும் சோமனும் நண்பர்கள். ஒரு நாள் ராமன் சோமனிடம் வந்தான்.

"சோமா, நான் ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. உன்னுடைய தங்க மோதிரத்தை ஒரு நாள் இரவல் கொடுத்தால் கல்யாணத்திற்குப் போய் வந்ததும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்றான் ராமன்.

சோமனும் தன் கையிலிருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி ராமனிடம் கொடுத்தான்.

மோதிரம் வாங்கிச் சென்ற ராமன் வெகுநாளாகியும் திரும்பி வரவில்லை. சோமன் அவன் வீட்டுக்குச் சென்றான்.

"என்ன ராமா! என்னிடமிருந்து தங்க மோதிரம் இரவலாக வாங்கிப் போனாயே, அதை இன்னும் திருப்பித் தரவில்லையே!" என்றான் சோமன்.

"தங்க மோதிரமா? நான் வைத்திருப்பது எனது மோதிரம் தான். உன்னிடம் இருந்து ஒன்றும் வாங்கவில்லையே!" என்று ஒரு போடு போட்டான் ராமன்.

அவன் விரலில் அணிந்திருந்தது சோமனின் மோதிரம். ஆனால் ராமனோ அது தன்னுடையது என்றான்.

சோமன் நேராக மரியாதை ராமனிடம் சென்று ராமன் தனது மோதிரத்தை வாங்கிகொண்டு ஏமாற்றி விட்டான் என்று முறையிட்டான்.

மரியாதைராமன் ராமனை அழைத்து விசாரித்தான். ராமனோ "ஐயா சோமன் பொய் சொல்கிறான். நான் இவனிடம் மோதிரம் வாங்கவில்லை. என் விரலில் இருப்பத்து என் மோதிரம் தான்" என்றான்.

இதைக் கேட்ட மரியாதை ராமன் "நீங்கள் இருவரும் சொல்வதிலிருந்து உண்மையாகவே மோதிரம் யாருக்கு சொந்தம் என்பது தெரியவில்லை. அதனால் நாளை தங்கத்தை மதிப்பீடு செய்பவரை வரச்சொல்லி மோதிரத்தை உரசிப்பார்ப்போம். அவர் என்ன மதிப்பு சொல்கிறாரோ, அந்த மதிப்பிற்கு அதை விற்று அந்த பணத்தை இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்து விடுகிறேன். இருவரும் சென்று நாளை வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

மறுநாள் ஒரு பொற்கொல்லர் சபைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் மோதிரம் கொடுக்கப்பட்டது.

அவர் அதை உரைக்கல்லில் வைத்துத் தேய்த்தார். நிறுத்தாமல் அதிக நேரம் தேய்த்துக் கொண்டே இருந்தார். இதைப் பார்த்த சோமன் "ஐயா என் மோதிரத்தை இப்படியே தேய்த்து கரைத்து விடுவாய் போலிருக்கிறதே!" என்று கதறினான்.

ராமனோ பேசாமல் இருந்தான். பின்னர் பொற்கொல்லர் தேய்த்து முடித்து மோதிரத்தின் மதிப்பை மிகக் குறைவாக விலை சொன்னார். அந்த விலையைக் கேட்டதும் சோமன் கோபமுற்றான்.

"என்ன அநியாயம் இது! நான் வாங்கிய விலையில் கால்பங்கு கூட இல்லையே! இது தானா நீங்கள் போடும் மதிப்பு?" என்று கூச்சலிட்டான்.

இதைக்கேட்ட மரியாதைராமன், ராமனைப் பார்த்து "உண்மையாகவே இது உன்னுடைய மோதிரமாக இருந்தால் இந்நேரம் நீ பேசாமல் இருந்திருக்க மாட்டாய், உண்மையை வரவழைப்பதற்க்காக நான் தான் அதிகமாக உரைக்கச் சொல்லியும், மதிப்பைக் குறைத்தும் சொல்லச் சொன்னேன். இப்போது மோதிரத்திற்கு உரியவர் யார் என்பது தெரிந்து விட்டது." என்று சொல்லி மோதிரத்தை சோமனிடம் ஒப்படைத்தார்.

சோமனை ஏமாற்றிய குற்றத்திற்காக ராமனுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினான்.

மரியாதை ராமனின் சமயோஜிதமான நடவடிக்கையைப் பார்த்து மக்கள் பாராட்டினார்கள்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

Saturday, December 12, 2009

மரியாதை ராமன் கதைகள்!


கந்தன் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை. நீண்ட நாட்களாக அவைகளை அவர் காப்பாற்றி வந்தார்.

ஒரு முறை அவர் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அந்த இரண்டு முத்துக்களையும் வீட்டில் வைத்து விட்டுச் செல்ல அஞ்சினார். தாம் இல்லாத சமயத்தில் திருடர் எவராவது வீட்டில் புகுந்து திருடிவிடக் கூடும் என்று பயந்த அவர் தம்முடைய நண்பனான கேசவனிடம் அந்த முத்துக்களை கொடுத்து வியாபார விஷயமாக வெளியூர் செல்வதாகவும் திரும்பி வந்த உடன் வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிச் சென்றார்.

கந்தன் சில நாள் கழித்து ஊருக்கு திரும்பி வந்து கேசவனிடம் தான் கொடுத்து வைத்திருந்த நல்முத்துக்களைத் திருப்பித் தருமாறு கேட்டார்.

ஆனால் கேசவனோ "நல்முத்துக்களா? யாரிடம் கொடுத்தாய்? கணவு ஏதாவது கண்டுவிட்டு வந்து உளறுகிறாயா?" என்று கேட்டுவிட்டான்.

தன் நண்பன் இவ்வாறு பேசுவான் என்று சற்றும் எதிர்பாராத கந்தன் மிகவும் மனம் வருந்திப்போனான். இனி இவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்தவன் நேராக மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டான்.

வழக்கை பொறுமையாகக் கேட்டறிந்த மரியாதை ராமன் அந்த வழக்கில் இருந்த சில கஷ்டங்களை எடுத்துச் சொன்னார்.

"அய்யா, உங்கள் வழக்கில் நான் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும்? நீங்கள் விலையுயர்ந்த முத்துக்களைக் கேசவனிடம் கொடுத்த போது பார்த்த சாட்சிகள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது கேசவனிடமிருந்து எப்படி விலை உயர்ந்த முத்துக்களை வாங்க முடியும்? நீங்கள் வீட்டுக்குப் போங்கள். வேறு உபாயம் ஏதாவது செய்வோம்" என்று கூறி கந்தனை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் மரியாதை ராமன்.

மறுநாள் ஓர் ஆள் அனுப்பிக் கேசவனைக் கூட்டி வரச்சொன்னான் மரியாதை ராமன்.

கேசவன் வந்ததும் அவனிடம் ஒரு சிறு பேழையைக் கொடுத்தார். அதற்குள் நிறைய முத்துக்கள் இருந்தன.

"என்னிடமிருந்த முத்துமாலையின் சரம் அறுந்து விட்டது. நீங்கள் முத்துக்களைக் கோர்ப்பதில் நிபுணரென்று கேள்விப்பட்டேன். இதில் 100 முத்துக்கள் உள்ளன. இதை மாலையாகக் கோர்த்து வந்து கொடுங்கள்" என்றான் மரியாதை ராமன்.

கேசவன் மரியாதை ராமன் கொடுத்த பேழையுடன் வீட்டுக்கு வந்தான். பேழையை ஒரு பெட்டியின் மேல் வைத்துவிட்டு அவசரமாகக் கொல்லைப் புறம் சென்றான்.

திரும்பி வந்து பார்த்த போது அந்தப் பேழை கீழே விழுந்திருந்தது. அப்பொழுது தான் ஒரு பூனை அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. பெட்டிக்கு மேல் உள்ள பால் உரிக்காகப் பூனை தாவும் போது பேழை விழுந்திருக்க வேண்டுமெனக் கேசவன் நினைத்தான்.

உடனே கேழே விழுந்து சிதறிக் கிடந்த முத்துக்களை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து எண்ணினான். அதில் 98 முத்துக்களே இருந்ததைப் பார்த்து ஒரு கனம் அதிர்ந்தான் கேசவன். 'அய்யோ! நீதிபதி 100 முத்துக்கள் கொடுத்தனுப்பினாரே! அவற்றில் 2 குறைகிறதே! எங்கே போயிருக்கும்' என்று வீடெல்லாம் ஓர் இடம் பாக்கி விடாமல் தேடினான். கடைசி வரையில் 2 முத்துக்கள் கிடைக்கவேயில்லை.

கேசவனுக்கோ பயம் வந்து விட்டது. 'இப்போது நாம் 98 முத்துக்களை மட்டும் அவசரமாக கோர்த்து எடுத்துப் போய்க் கொடுத்தால் 2 முத்துக்களை நாம் திருடிக் கொண்டோமென்று நீதிபதி கடுமையான தண்டனை விதிப்பாரே! இந்தத் தண்டனையில் இருந்து தப்புவது எப்படி?' என்று நினைத்த கேசவனுக்கு கந்தனிடம் மோசடி செய்த 2 முத்துக்களின் நினைவு வந்தது.

உடனே அந்த இரண்டு முத்துக்களையும் எடுத்துச் சரத்தில் கோர்த்து 100 முத்துக்கள் கொண்ட மாலையாக ஆக்கி விட்டான் கேசவன்.

மறுநாள் கேசவன் முத்துமாலையைக் கொண்டு போய் மரியாதை ராமனிடம் கொடுத்ததும் முதல் வேலையாக மரியாதைராமன் முத்துக்களை எண்ணத் துவங்கினான்.

கேசவனோ நல்லவேளையாக 2 முத்துக்கள் நம்மிடமிருந்தது. இல்லையேல் இப்போது தண்டனை கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

முத்துக்களை எண்ணி முடித்த மரியாதை ராமன் காவலர்களைப் பார்த்து " இவனைக் கைது செய்யுங்கள்" என்றான்.

காவலர்கள் மரியாதை ராமனின் ஆணைப்படி கேசவைக் கைது செய்தார்கள்.

கேசவனோ 'நான் என்ன தவறு செய்தேன், ஏன் என்னைக் கைது செய்கிறீர்கள்' என்றான்.

"நான் உன்னிடம் கொடுத்தது 98 முத்துக்கள் தான். அப்படியிருக்க இந்த மாலையில் மேற்கொண்டு 2 முத்துக்கள் எப்படி வந்தன என்ற விவரத்தை நீ சொலாவிட்டால் உனக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்" என்றான் மரியாதை ராமன்.

தண்டனைக்குப் பயந்த கேசவன் கந்தனிடம் மோசடி செய்து 2 முத்துக்களை அபகரித்து வைத்திருந்ததை சொல்லிவிட்டான்.

அவன் வாயாலேயே உண்மையைத் வரவழைத்த மரியாதைராமன் கந்தனுக்கு அவனது 2 முத்துக்களைக் கொடுத்து விட்டு, கேசவனுக்கு ஏமாற்றிய குற்றத்திற்காக தண்டனையும் கொடுத்தான்.

மரியாதைராமனின் சமயோஜிதமான யோசனையால் உண்மை வெளிவந்ததை எண்ணி மக்கள் ராமனை மிகவும் பாராட்டினார்கள்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.

Sunday, November 22, 2009

எலுமிச்சை அளவு சாதம்!

ஒரு தேசாந்திரி ஓர் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிட உணவு கொடுக்கும்படி அந்த உணவு விடுதி நடத்தும் பெண்மணியிடம் கேட்டான். அவளோ சாப்பாடெல்லாம் ஆகிவிட்டது ஒன்றும் இல்லை என்றாள்.

"அம்மா பசி காதை அடைக்கிறது. ஒரு தங்க காசு தருகிறேன். ஒரு எலுமிச்சங்காய் அளவு சாதம் போட்டாலும் பரவாயில்லை" என்றான் தேசாந்திரி.

அந்தப் பெண்மணி தேசாந்திரியிடமிருந்து ஒரு தங்க காசை வாங்கிக் கொண்டாள்.

தேசாந்திரியோ கைகால் அலம்பிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான். அவன் முன்னால் ஒரு வாழை இலையைப் போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர் இலையில் ஓர் எலுமிச்சங்காயளவு சாதத்தை வைத்துச் சிறிது குழம்பு விட்டு "சாப்பிடு"! என்றாள்.

நிரம்ப பசியில் இருந்த தேசாந்திரி ஏமாற்றத்துடன் "என்ன, அநியாயமாக இருக்கிறதே! ஏதோ பேச்சுக்காக ஒரு எலுமிச்சையளவு சாதம் என்று சொன்னால் ஒரு தங்கக் காசுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு மட்டுமே சாப்பாடா?, நான் பட்டியியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். உன்
சாப்பாடு வேண்டாம். என் காசைத் திருப்பிக் கொடு" என்றார்.

அந்தப் பெண்மணியோ தான் வாங்கிய பணத்தைத் திரும்பத் தரமுடியாது என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

அந்த தேசாந்திரிக்கு பெருத்த ஏமாற்றமாகிப் போனது. பசியும் கோபமும் சேர்ந்து கொண்டது. அவர் மரியாதை ராமனைப் பற்றி கேள்விப்பட்டார். நேராக மரியாதை ராமனிடம் சென்று தன் வழக்கைக் கூறினார்.

"அய்யா, ஒரு பேச்சுக்காக அந்த அம்மாவிடம் ஒரு எலுமிச்சை அளவு சாதம் போட்டால் ஒரு
தங்கக் காசு தருகிறேன் என்று கூறினேன். ஆனால் அந்த பெண்மணியோ என்னிடம் ஒரு
தங்கக் காசு வாங்கிக் கொண்டு உண்மையாகவே எலுமிச்சங்காயளவு சாதம் போட்டார்கள்.
சாதம் வேண்டாம் காசைத் திரும்பக் கொடுத்து விடு என்றால் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்" என்றார் தேசாந்திரி.

"இவர் சொல்லுவது உண்மை தானா?" என்று உணவு விடுதிப் பெண்மணியிடம் கேட்டான் மரியாதைராமன்.

அந்தப் பெண்மணியும் ஆமாம் என்றாள். மேலும் "அவர் தான் எலுமிச்சங்காய் அளவுள்ள சாதம் போடு என்றார். நான் அதைத்தானே செய்தேன்" என்றாள்.

உடனே மரியாதை ராமன் "நீங்கள் இவருக்குப் போட்ட சாதத்தைக் கொண்டு வந்து காட்ட முடியுமா?" என்றான்.

அந்தப் பெண்ணும் இலையில் அப்படியே இருக்கிறதென்று சொல்லி இலையில் போட்டபடியே இருந்த அந்த சாதத்தை அப்படியே கொண்டு வந்து காட்டினாள்.

இலையில் இருந்த சாதத்தைக் கூர்ந்து பார்த்த மரியாதை ராமன், "ஒரு சாதம் கூட எலுமிச் சங்காயளவு இல்லையே?" என்றான்.

"எலுமிச்சங்காயளவு சாதமா?" என்று வாயைப் பிளந்தாள் அந்தப் பெண்மணி.

"ஆமாம் இவர் எலுமிச்சங்காயளவுள்ள சாதம் தானே போடச் சொன்னார். நீ மிகச்சிறிய வடிவமாக இருக்கும் பல சாதங்களைக் கொண்டு வந்து எலுமிச்சங்காயளவு போட்டிருக்கிறாய். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீ ஒப்புக்கொண்டபடி எலுமிச்சங்காயளவுள்ள சாதத்தைப் போட முடியுமானால்
போடு. இல்லையேல் இவருக்கு ஒரு தங்க காசை திருப்பிக் கொடுத்து விடு." என்றான் மரியாதைராமன்.

ஒவ்வொரு பருக்கையும் எலுமிச்சங்காயளவு இருப்பதைப் போல சாதத்தை போட முடியாத உணவுவிடுதிப் பெண்மணி தோல்வியை ஒப்புக்கொண்டு தேசாந்திரிக்கு தங்கக் காசை திருப்பிக் கொடுத்தாள்.

உணவு விடுதிப் பெண்ணின் பேராசையை சமயோசிதமாக கையாண்டு தீர்வு சொன்ன மரியாதை ராமனை அனைவரும் பாராட்டினார்கள்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.

Sunday, November 15, 2009

மரியாதை ராமன் கதைகள்!


நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். அவர்களது பஞ்சுக்கடையில் ஏராளமான எலிகள் சேர்ந்து பஞ்சுப் பொதிகளை நாசமாக்கி விட்டன.

எலிகளை ஒழிப்பதற்காகப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவன் அபிப்பிராயம் சொன்னான். மற்ற மூவரும் அவன் கருத்தை ஆதரித்தனர்.

நால்வருமாகச் சேர்ந்து ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை வந்ததிலிருந்து எலிகளின் உபத்திரவம் குறைந்தது. இதன் காரணமாக நால்வருக்கும் பூனையின் மேல் மிகுந்த அன்பு ஏற்ப்ட்டு விட்டது. பூனைக்குச் சகலவித உபசாரங்களும் செய்ய ஆரம்பித்தனர்.

அத்துடன் நில்லாமல் அதன் கால்களுக்குத் தண்டை கொலுசு முதலியன்வைகளை அணிவித்து அழகுபடுத்த நினைத்தார்கள்.

இதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பல சிக்கலகள் வந்தன. எனவே வியாபாரிகள் நால்வரும் பூனையின் நான்கு கால்களை ஆளுக்கு ஒன்றாகப் பங்கிட்டுக் கொண்டனர். அவரவர்க்குச் சொந்தமான கால்களில் தங்களுக்கு விருப்பமான அணிகலன்களைப் பூட்டி மகிழ்ந்தனர்.

ஒரு நாள் பூனை நொண்டிக் கொண்டே வந்தது. இதைப் பார்த்த வியாபாரிகளில் ஒருவன் தன் நண்பனிடம், "நண்பா, உனக்குச் சொந்தமான காலில் அடிபட்டு விட்டது. ஜாக்கிரதையாக மருந்து போட்டு குணப்படுத்து" என்றான்.

அந்தக் காலுக்கு உரியவனும் பூனையின் காயத்தைத் துடைத்து எண்ணெய்த் துணியால் அதைச் சுற்றி வைத்தான்.

அன்று இரவு பூனை விளக்குப் பக்கம் போகவே அதன் காலில் சுற்றியிருந்த துணியில் நெருப்புப் பிடித்துக் கொண்டது. தன் காலில் சுற்றப்பட்டிருந்த துணியில் நெருப்புப் பிடுத்துக் கொண்டதும் பூனை மிரண்டு போய்ப் பஞ்சு மூட்டைகளின் மேல் ஓடியது. உடனே பஞ்சு மூட்டைகள் அனைத்திலும் நெருப்பு பிடித்துக் கொண்டது.

இதனால் அந்த பஞ்சு மூட்டைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

வியாபாரிகளில் மற்ற மூவரும் துணி சுற்றியவனைப் பார்த்து, "நீ எண்ணெய்த் துணி சுற்றி வைத்ததால் தான் இந்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நீதான் கொடுக்க வேண்டும்" என்றனர்.

அவனோ தான் வேண்டுமென்றே செய்யவில்லை, எதிர்பாராவிதமாக நடந்து விட்டதற்குத் தன்னை மன்னிக்க வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டான்.

ஆனால் மற்ற மூவரும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. பிரச்சனை மரியாதை ராமனிடம் சென்றது. மூவரும் பூனையின் இவனுக்கென்று பிரித்துக் கொடுக்கப்பட்ட கால்களால் தான் இத்தனை நஷ்டம். ஆகவே இவன் தான் அந்த நஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்று கூறினர்.

விஷயம் முழுவதையும் கேட்ட மரியாதை ராமன் இவ்வாறு தீர்ப்பு சொன்னான் 'பூனையின் ஒரு காலில் அடிபட்டுள்ளது. அந்தக்காலால் நடக்கவோ, ஓடவோ அதனால் முடியாது. அந்த சமயத்தில் அது மற்ற மூன்று கால்களால் தான் ஓடியிருக்க வேண்டும். எனவே உங்கள் மூவருக்கும் சொந்தமான கால்களால் ஓடித்தான் அது நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, நீங்கள் மூவரும் தான் இந்த நாலாமவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினான்.

வேறு வழியில்லாமல் மூவரும் நஷ்டத்தை பகிர்ந்து மீண்டும் கடையை நடத்த துவங்கினர். மரியாதை ராமனின் சமயோசிதமான தீர்ப்பை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர்.

Tuesday, September 15, 2009

மரியாதை ராமன் கதைகள்!

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போது அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள்.
அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

அந்த சமயம் பூபாலன் என்ற வழிப்போக்கர் அந்த ஊர் வழியாக வந்தார். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை
கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்தார். கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் கொண்டு சென்றார்கள்.

சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்கப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. தன்னுடைய தீய குணத்தால் தனக்கே தீங்கு உண்டானதை எண்ணி வருந்தினார். மரியாதை ராமனிடம் உண்மையை ஒத்துக் கொண்டு திரண்டிருந்த ஊர் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

தன் தவறுக்குப் பரிகாரமாக கிடைத்த பணத்தில் பாதியை பூபாலனுக்கு பரிசாகக் கொடுத்து மீதியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நகர்ந்தார்.

பூபாலனும் சன்மானம் கிடைத்த மகிழ்வுடன் ஊருக்குச் சென்றார்.

மக்கள் மரியாதை ராமனின் சமயோசிதமான தீர்ப்பை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Saturday, September 5, 2009

மரியாதை ராமன் கதைகள் - 2


ஒரு வியாபாரி, அவர் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாத்தில் பணம் சேர்த்து விட்டர். இந்தச் சமயத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். அவருக்கு ஒரே மகன்.

அவன் சிறிய பையனாக இருந்தான். அந்த வியாபாரிக்கு வேறு உறவினர் எவரும் கிடையாது. 'தாம் இனிப் பிழைக்கமாட்டோமே?" என அஞ்சினார். தாம் இறந்து விட்டால் தன் மகனை எவராவது ஏமாற்றி தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்த பொருளை அபகரித்துச் சென்று விடுவார்களோ! என்று பயந்தார்.

தமக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைக் கூப்பிட்டனுப்பினார். அவரிடம் தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்து வைத்த பத்தாயிரம் வராகன்களையும் ஒப்படைத்தார்.

"நண்பனே, என் மகன் வளர்ந்து பெரியவனானதும் உனக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடு" என்று கூறினார்.

சிறிது நாட்களில் அந்த வியாபாரியும் இறந்து விட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். தம் தகப்பனாரின் நண்பரிடம் சென்றான்.

அவரிடம் தம் தந்தை கொடுத்து வைத்திருந்த பத்தாயிரம் வராகன்களைத் திரும்பக் கொடுக்குமாறு கேட்டான்.

வியாபாரியின் நண்பன் பெரிய மோசக்காரனாக இருந்தான். "உன் தந்தை இறக்கும்போது எனக்கு விருப்பமானதை உனக்குக் கொடுக்கச் சொன்னர். வீணாகப் பூராப் பணத்துக்கும் ஆசைப்படாதே. இந்தா அயிரம் வராகன். இதை எடுத்துச் சென்று எங்காவது போய் பிழைத்துக் கொள்! என்று ஆயிரம் வராகன்கள் அடங்கிய பணமுடிப்பை அவனிடம் கொடுத்தான்.

வியாபாரியின் மகனுக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. மிகவும் நல்லவர் என்று தன் தந்தையார் நம்பிய அவருடைய நண்பனின் செய்கை அவனுக்கு அளவற்ற வேதனையைத் தந்தது. நேரே மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டான்.

மரியாதைராமன் வியாபாரியின் நண்பனை அழைத்தான்.

"இந்தச் சிறுவன் கூறுவது உண்மையா?" என்று அவரிடம் கேட்டான் மரியாதைராமன்.

"ஆம் அய்யா! இவன் தந்தை என்னிடம் பத்தாயிரம் வராகன்களைக் கொடுத்து, இவன் வளர்ந்து பெரியவனானதும் எனக்கு விருப்பமானதைச் சிறுவனுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன்படி நான் இவனுக்கு ஆயிரம் வராகன்கள் கொடுத்துள்ளேன். அதுவே பெரிய தொகை" என்றான் மோசக்காரன்.

"உம்முடைய நண்பர் சொன்னவாறு நீங்கள் நடந்து கொள்ளவில்லையே!" என்றான் மரியாதைராமன்.

மோசக்காரனுக்கு ஒன்ரும் புரியவில்லை. மரியாதை ராமனே தொடர்ந்து பேசலானான். "அய்யா, இவர் தந்தையார் ஒப்படைத்த பத்தாயிரம் வராகன்களில் நீர் ஒன்பதினாயிரம் வராகன்கள் எடுத்துக் கொண்டீர். அதுதான் உமக்கு விருப்பமானது.

எனவே உமக்கு விருப்பமான நீர் விரும்பி எடுத்துக் கொண்ட அந்த ஒன்பதினாயிரம் வராகன்களைத்தான் நீர் இந்தச் சிறுவனுக்குத் தர வேண்டும்." என்று தீர்ப்பு வழங்கினான்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டுச் சிறுவன் மிகவும் மகிழ்ந்தான்.

பேராசைக்காரன் தன்னுடைய பேராசைக்கு இது சரியான தண்டனைதான் என்று நினைத்தவாறே ஒன்பதினாயிரம் வராகன்களை அந்தச் சிறுவனுக்குக் கொடுத்து அனுப்பினான்.

மரியாதை ராமனின் தீர்ப்பை அனைவரும் மெச்சினார்கள்

நமது பாரம்பரிய கதைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.