Sunday, June 13, 2010

பஞ்சாங்கக் கணிப்பும் பூகம்பமும்!



மே மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி கல்யாணப்பத்திரிக்கையும் காலக்கணக்கும் என்ற தலைப்பில் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்கள் துல்லியமாக கணிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி இவ்வாறு எழுதியிருந்தேன்.

"இந்த வருட தமிழ் புத்தாண்டின் போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் கூட இந்த வருட அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் இருக்காது என்று தெரிவித்தார்களாம். வெயிலின் ஆரம்பத்தில் நம்பவில்லையென்றாலும் வழக்கத்திற்கு விரோதமாக இந்த மாதத்தில் வந்து நடனமாடிய லைலா பஞ்சாகத்தில் கூறியதை ஊர்ஜிதம் செய்து விட்டாள் என்பதை நினைவு கூறுகிறேன்.

அது மட்டுமல்ல தமிழகத்தில் இந்த வருடம் பூகம்ப பாதிப்பு உண்டாகும் வாய்ப்பு இருப்பதாக பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டதாம். பக்கத்து வீட்டுப் பாட்டி தாடையில் கைவைத்து சொல்லிக்கொண்டிருந்தார். யாருக்கேனும் பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்தால் நம்பலாமா என்பதைச் சொல்லுங்கள். மற்றபடி நம் கையில் என்ன இருக்கிறது?"

நம்பலாமா என்று கேள்வி எழுப்பி இருந்தேன். இன்று நம்ப வேண்டியதாகி விட்டது. இதோ இன்று பூகம்பம் எங்கள் வீட்டையும் ஆட்டியது. நள்ளிரவில் தரை ஆடுகிறதா அல்லது எனக்குக் கனவா என்ற நினைப்பில் எழுந்து உட்கார்ந்தேன். அதே நேரத்தில் கட்டிலில் படுத்திருந்த எனது தந்தையும் கட்டில் ஆடுவதாக உணர்ந்திருக்கிறார். பூகம்பமாக இருக்கும் என்றேன். அடுத்த வார்த்தை அவர் சொன்னது, "இந்த வருடம் தமிழகத்தில் பூகம்பம் வரும் என்று பஞ்சாங்கம் படிக்கும் போது வாசித்தார்கள். அதுதான் நடக்கிறது போலிக்கிறது" என்றார்.

ஆனால் நாம் அமெரிக்கனின் வானிலை ஆராச்சியைத் தானே நம்புவோம்! கோவில்களில் பஞ்சாங்கம் வாசிக்க தடை வேறு பிறப்பிக்கிறார்கள்.

ஆனால், யார் என்ன கணித்தாலும் சரி, இயற்கையின் சீற்றம் நம்மைத் தாக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் எந்த எச்சரிக்கையாலும் நாம் தப்ப முடியாது. ஏதோ இன்று தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.

இதோ பஞ்சாங்கம் பற்றிய ஒரு தினமலர் செய்தியைப் பார்ப்போம்!
____

மார்ச் 06,2010,00:00 IST

சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள, "விக்ரம சம்வத்ஸரம்' பஞ்சாங்கம் மிகவும் நுட்பம் உடையதாக, மிகச் சரியாக இருப்பதாக ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகை, மார்ச் 1ம் தேதி வந்துள்ளது. இதை வைத்து வட மாநிலங்களில் அனுசரிக்கப்படும் "விக்ரம சம்வத்சரம்' எனும் பஞ்சாங்கம் மிகச் சரியாகக் கணிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்தியப் பருவங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டும், மாதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டும், நாட்கள் சூரிய சந்திரர்களை அடிப்படையாகக் கொண்டும் கணிக்கப்படுகின்றன.பொதுவாக இந்தியப் பஞ்சாங்கங்களின் படி, சந்திரனை அடிப்படையாகக் கொண்டு 12 மாதங்கள் கணிக்கப்படுகின்றன. ஒரு மாதம் என்பது சந்திரனின் இயக்கப்படி 29 நாட்கள், 12 மணிநேரம், 44 நிமிடங்கள், 3 வினாடிகள் கொண்டது. ஆக, இந்தக் கணிப்பின்படி, ஒரு ஆண்டு என்பது, 354 நாட்கள், 8 மணிநேரம், 48 நிமிடங்கள், 36 வினாடிகள் கொண்டதாக இருக்கும்.


ஆனால், ஐரோப்பிய நாடுகளின் காலண்டர் படி, ஒரு ஆண்டு சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. அதன்படி ஒரு ஆண்டு என்பது, 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடங்கள், 46 வினாடிகள் கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு கணிப்புகளுக்கும் இடையில் 10 நாட்கள் வித்தியாசம் இருக்கிறது.இதைச் சுட்டிக்காட்டும் பிரபல ஜோதிடர் பரத் பூஷன் பத்மதேவ் கூறியதாவது:சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையில் உள்ள தூரத்தின் அடிப்படையில் இந்தியப் பஞ்சாங்கங்கள் கணிக்கப்படுகின்றன. மேலும் ஆண்டில் நிகழும் பருவங்களை மையமாகக் கொண்டும் கணிக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி வந்த ஹோலிப் பண்டிகை, இந்த ஆண்டு 10 நாட்கள் முன்னதாக மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்தியப் பஞ்சாங்கம் மிகச் சரியாகக் கணிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.மேலும், இந்தியப் பஞ்சாங்கங்களின் படி, பண்டிகைகள் பருவகாலத்தோடு தொடர்புடையவை. அதனால் அந்தந்தப் பருவத்துக்குரிய பண்டிகைகள் மிகச்சரியாக அந்தப் பருவகாலத்தில்தான் கொண்டாடப்படும். ஆனால், ஐரோப்பிய காலண்டர் படி, தேதிகளின் அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதனால், பருவகாலப் பண்டிகைகளை அவர்கள் பருவம் தப்பியும் கொண்டாட நேரிடுகிறது.இவ்வாறு பரத் பூஷன் தெரிவித்தார்.

____


இப்படி நிரூபணங்களுடன் எடுத்துக்கூறினால் கூட நம்மவர்களின் போலி பகுத்தறிவு நமது பாரம்பரிய அறிவை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பது வெட்க்கக்கேடு. இதாவது பரவாயில்லை, புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்ததே ஐசக் நியூட்டன் தான் என்று வெட்கமில்லாமல் பாடங்களில் சொல்லிக்கொடுக்கச் செய்கிறார்கள் இந்த போலி பகுத்தறிவு வாதிகள். நம்முடைய ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய அறிவைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கும் போலி பகுத்தறிவு வாதிகள் "ஐசக் நியூட்டனுக்கு முன்னாடி யாருமே புவியின் ஈர்ப்பு விசைக்கு ஆளானதே கிடையாதா அல்லது அதை உணர்ந்திருக்கவே முடியாதா?" என்று ஏன் கேட்கவில்லை.

நியூட்டன் "பழம் ஏன் கீழே விழுகிறது?" கேள்வி கேட்டுக்கொண்டிருந்த வருடம் 1666. ஆனால் கி பி 1000 வது வருடங்களிலேயே வானுயர கோபுரம் கட்டினானே ராஜராஜ சோழன் அவனுக்கு இந்த புவி ஈர்ப்பு விசை பற்றி அறிவில்லாமல் தான் இருந்ததா? மிகப்பெறிய பாறைகளைச் செதுக்கி வானுயர சாரங்களை அமைத்து ஆயிரக்கணக்கான யானைகளை வைத்து உயரே கொண்டு போய் கோபுரங்களைக் கட்டிய சோழர்காலத்து கட்டிடக்கலை வல்லுனர்கள் புவியீர்ப்பு விசையை உணராமல் தான் இருந்திருப்பரா? அந்த அறிவே இல்லாமல் தான் வானுயர்ந்த கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டனவா?

மேலே கொண்டு போக வேண்டிய ஒரு பாறையின் கணம் என்ன?, புவியீர்ப்பு விசைக்கு எதிராக அந்தப் பாறையை கொண்டு போக எதிர் விசை எவ்வளவு பயன் படுத்த வேண்டும்?, புவியீர்ப்பு விசைக்கு எதிரான விசையைக் கையாள எளிய வழி என்ன? என்பதை எல்லாம் அறிவுடன் யோசித்து தான் மர உருளைகளைக் கொண்ட சாரங்களைக் கட்டி, பெரிய யானைகளைக் கொண்டு இழுத்துச் செல்ல வைத்து கற்களை அடுக்கி கோபுரம் அமைத்தனர்! ஆனால் நம் பாட புத்தகத்தில் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்ததே ஐசக் நியூட்டன் தான் என்று சொல்லித் தருவார்கள். வெள்ளைக்காரன் சொன்னான் என்ற ஒரே காரணத்திற்காக நம்மூர் போலி பகுத்தறிவு வாதிகள் எதிர்க்கேள்விகள் கேட்காமல் ஆமாம் சாமியும் போடுவார்கள். நம் பிள்ளைகளிடமும் வெள்ளையன் தான் அறிவாளி, நீ ஒரு மகா மக்கு என்ற ரேஞ்ச்சுக்கு பாடம் சொல்லித்தருவார்கள்! என்றைக்கு நம் பாரம்பரிய அறிவை மதிக்கக் கற்றுக் கொள்கிறோமே அன்றைக்குத்தான் நிஜமான சுதந்திர பாரதம் நமக்குக் கிடைக்கப் போகிறது என்றால் மிகையாகாது!

சிரியுங்கள்! ஆங்கிலத் தேதிப்படி பிறந்தநாள் கொண்டாடிய தமிழினத் தலைவர்!

நன்றி தினமலர்!

வழக்கம் போல நான் சொல்வதைச் சொல்லி வைக்கிறேன், -


"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்."


2 comments:

எல் கே said...

பாஸ் இதெல்லாம் எவனும் ஒத்துகொள்ளப் போறது இல்ல,. ஆனா பாருங்க ஒரு நாள் இதுக்கெல்லாம் வருத்தப்படுவாங்க

hayyram said...

வருந்துவதற்கு முன்னாடி திருந்திட்டா நல்லது. நம்மால ஆன முயற்சியச் செய்வோம். என்ன சொல்றீங்க எல் கே. தங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி.