"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."
மரணத்திற்கு அப்பால் மனிதன் என்ன ஆகிறான் என்ற கேள்வி நசிகேதனைத் துளைத்தெடுக்க அதே கேள்வியை ஒரு வேள்வியாகவே நினத்து எமதர்மனிடத்தில் விடாமல் கேட்கிறான் நசிகேதன். அதற்கு எமதர்மன் நசிகேதனுக்கு விளக்கியதை சுருக்கமாக பார்ப்போம்.
இதுவரை நசிகேதனுக்கு ஆன்மா பற்றி எமதர்மன் விளக்கியது:
1. மனிதன் உடல் வேறு ஆன்மா வேறு.
2. ஆன்மா என்பது சலனமற்றது. நிரந்தரமானது. அது அழியாதது. மீண்டும் பிறப்பெய்தக் கூடியது.
3. ஆன்மா தொப்புளிலிருந்து ஒரு ஜான் உயரத்தில் இதயக்குகையில் ஒரு கட்டைவிரல் அளவில் இருக்கக்கூடியது.
4. புலன்களை ஒரு தேரோட்டி போல கட்டுப்படுத்துபவன் மட்டுமே அதனை உணர முடியும்.
5. உலகப் பொருட்கள், மனம், புத்தி, ப்ரபஞ்ச ஆற்றல் இவற்றையெல்லாம் முழுமையாக வசப்படுத்தினால் கடைசிப் புகலிடமான இறைசக்தியை அடையலாம்.
6. பேச்சைக் குறைத்தால் மனம் வசப்படும், மனம் வசப்பட்டால் புத்தி விழிப்புற்றிருக்கும், புத்தி விழிப்புற்றவன் ஆன்மாவை அறிவான்,
என்று எமதர்மன் போதிக்கிறார். இனி எமதர்மன் நசிகேதனுக்கு "அதுவே நீ"" என்று ஆன்மாவை வெவ்வேறு கோணங்களில் விளக்குகிறார்.
எமதர்மன் நசிகேதனுக்கு ஆன்மாவை புரியவைக்க முயற்சிக்கிறார். மரணம் என்பது உடம்புக்கு மட்டுமே நிகழுகிறது. மரணத்தால் பாதிக்கப்படாத ஒன்று இந்த உடம்பினுள் உள்ளது. "அதுவே நீ " என்கிறார் எமதர்மன். "அது" எனப்படுவது ஆன்மாவைக் குறிக்கும் சொல்லாக உருவகித்து ஆன்மாவை பல கோணங்களில் எமதர்மன் உபதேசிக்கிறார்.
நமக்கு உள்ளே இருந்தாலும், ஆன்மாவை நம்மால் உணரமுடியாமல் இருப்பதற்கான காரணத்தை முதலில் விளக்குகிறார் எமதர்மன்.
"நசிகேதா! வெளியில் உள்ளவைகளை உணருவதற்காகவே புலன்களை புறநோக்குடனேயே இறைவன் அமைத்துள்ளார். அதனால் அவை வெளியில் பார்க்கின்றன. அகத்திலுள்ள ஆன்மாவைப் பார்ப்பதில்லை. மரணமற்ற நிலையை விரும்புகின்ற யாரோ விவேகி அக நோக்கு உடையவனாய் ஆன்மாவைப் பார்க்கிறான்."
"மனப்பக்குவம் இல்லாதவர்கள் புறத்திலுள்ள சுகபோகப் பொருட்களை நாடுகின்றனர். எங்கும் இருக்கின்ற மரண வலையில் அவர்கள் வீழ்கின்றனர். ஆனால், நிலையற்ற உலகில் அழிவற்ற நிலையான பொருள் ஒன்று இருப்பதை விவேகிகளே அறிகின்றனர். எனவே அவர்கள் சுகபோகப் பொருட்களை விரும்புவதில்லை." என்கிறார் எமதர்மன்.
அதாவது கண் காது மூக்கு வாய் போன்ற உடலின் அவயவங்கள் யாவும் உடலுக்கு வெளியே இருப்பதை உனரவே உதவுகின்றன என்கிறார் எமதர்மன். கண் புறப்பொருளைப் பார்க்கிறது. குறைந்த பட்சம் கண்ணை உள்பக்கமாக உருட்டி மூளையை பார்க்க முடியுமா? முடியாதே! காது வெளியின் சப்தத்தைக் கேட்கிறது. நமது காது தான், ஆனாலும் நம் காதால் நமது இதயத் துடிப்பையே கேட்க முடியவில்லையே! மேலும் மூக்கு வாய் போன்ற உறுப்புக்கள் யாவும் புறப் பொருளை நுகரவே பயன்படுகின்றன என்பதை யோசிக்க வேண்டும். அதனால் தான் இவைகள் புறப்பொருட்கள் மீது ஒரு மோகத்தை நம்மனத்தில் வளர்த்து விடுகிறது. அவ்வாறு மனம் மயங்கி விடுவதால் ஆன்மதேடுதலை மறந்து உலக நாட்டத்தில் மனம் சிக்கிக் கொள்கிறது என்கிறார் எமதர்மன். மேலும் இவற்றை நன்றாக உணர்ந்து கொள்ளும் விவேகி எவனோ அவன் புலன்களால் உண்டாகும் போகத்தில் மயங்கமாட்டார் என்று விளக்குகிறார் எமதர்மன்.
ஆன்மாவை உருவகப்படுத்த முடியாது. மிகவும் நுட்பமானது. மிகவும் சூட்ஷமமானது. எப்படி காற்றைக் காட்ட முடியாதோ அது போலவே ஆன்மாவையும் காட்ட முடியாது. ஆனால் காற்றை நம்மால் சாதாரணமாக உணரமுடியும். ஆன்மாவை அப்படி உணர்ந்து விடுவதும் கடினம். எனவே ஆன்மாவை பல கோணங்களில் உருவகித்து விளக்குகிறார் எமதர்மன்.
"நசிகேதா! காட்சி, சுவை, மணம், ஒலி, தொடு உணர்ச்சி, உடலின்பம் முதலியவற்றை எதனால் ஒருவன் உணர்கிறானோ, இந்த அனுபவங்கலில் என்ன எஞ்சியிருக்கிறது என்பதையும் எதனால் தெரிந்து கொள்கிறானோ அது வே நீ கேட்ட பொருள்"
உதாரணமாக நாம் உணவைச் சுவைக்கிறோம், அதன் சுவையை சுவைத்து பின் மறந்து போகிறோம். சுவையின் நினைவு நாக்கிலேயே ஒட்டிக் கொள்வதில்லை. அந்த உணவு நன்றாக இருந்தது என்பது மட்டுமே நம் மனதில் வைத்திருக்க முடியும். நாக்கால் உணரப்பட்ட எந்த சுவையையும் நாம் வார்த்தையால் விளக்கி விட முடியாது. ஒரு மாதிரி புளிப்பாய், உப்பாய், கொஞ்சம் துவர்ப்பாய் என்று இழுப்போமே ஒழிய எந்த சுவையையும் வார்த்தைப்படுத்த முடியாது. காரணம் சுவை என்ற புற உணர்வு ஒரு மாயையாகவே இருந்து விடுகிறது. மீண்டும் அதே உணவை சுவைக்கும் போது தான் அந்த சுவையை நம் நாக்கு உணரும். இப்படி ஒரு மாயையான உணர்வை நாம் உணரக் காரணமாக இருப்பது நம்முள் உயிர்ப்புடன் இருக்கும் ஆன்மாவே! ஆக சுவையை மறந்த பின்னும் எஞ்சி இருக்கும் உணர்வு எதுவோ அதுவே ஆன்மா என்று உணர்க என போதிக்கிறார் எமதர்மன்.
"நசிகேதா! கனவு, விழிப்பு ஆகிய இரண்டு நிலைகளையும் எதனால் ஒருவன் உணர்கிறானோ அதுவே ஆன்மா. அது மகிமை வாய்ந்தது. எங்கும் நிறைந்தது. அதனை அனுப்பூதியில் உணர்கின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்."
உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறோம், கனவுகளையும் நிஜம் போல உணர்கிறோம், விழிப்பு நிலையையும் உணர்கிறோம். இப்படி எல்லா நிலைகளிலும் நாம் உணர்வுடன் இருப்பதற்கு காரணமாக எப்போதும் நிலையான விழிப்புடன் இருப்பது எதுவோ அதுவே ஆன்மா என்கிறார்
எமதர்மன்.
"நசிகேதா! கர்ம பலன்களை அனுபவிக்கின்ற உயிருக்கு ஆதாரமான இந்த ஆன்மாவை அருகில் இருப்பதாகவும், அதே வேளையில் இறந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்குத் தலைவனாகவும் அறிபவன் யாரையும் வெறுப்பதில்லை. அதுவே நீ கேட்ட பொருள்."
நமது கடந்த காலங்களின் செய்கைகளே நிகழ்கால விளைவாகிறது. நிகழ்கால நமது நடத்தைகளே எதிர்கால வினையை நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் விருப்பு மற்றும் வெறுப்பு சார்ந்த உணர்ச்சிகளே அவன் கர்மம் செய்யத் தூண்டுதாலாக இருக்கிறது. இவற்றை உணர்பவர்கள் யாரையும் வெறுப்பதில்லை. இதை உணர்பவர்கள் யாரோ அவர்கள் கடந்த காலங்கள் பற்றிய துக்கத்தையும் எதிர்காலம் பற்றிய கவலையையும் துறந்து நிகழ்காலத்தில் வாழ்பவர்களாக திகழ்வார்கள். இவ்வாறு காலக்கட்டுகளைக் கடந்து நிலையாக உணரப்படக் கூடிய பொருள் எதுவோ அதுவே ஆன்மா என்கிறார் எமதர்மன்.
ஆன்மாவை தரிசிப்போம்...
மரணத்திற்கு அப்பால் - 15
8 comments:
மிக அருமையான பதிவு
நன்றி vjvrk
Wonderful and once again a big thanks
thanks pradeep
மிகவும் அருமையான பதிவு. "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பதற்கேற்ப நம்மை உணரவும் இறையை அறியவும் இறையருள் அவசியம்.
உங்கள் பணி சிறக்க இறை அருளும்.
thanks mr.sivasu
ஆன்மா வேறு உடல் வேறு எனபதுதான் தெரியுமே என்று சொல்கிறார்கள் ஆனால் பலரால் உண்மையை அறியவில்லை.
// ஆன்மா வேறு உடல் வேறு எனபதுதான் தெரியுமே என்று சொல்கிறார்கள் // உண்மைதான். ஆனால் அதெரிந்தது வேறு உணர்வது வேறு என்று பலரும் அறிவதில்லை அல்லவா. உணர்வதற்கு முயல வேண்டும் என்பது நம்கையில் தான் இருக்கிறது. இதை புரிந்து கொள்பவர்கள் முயற்சிப்பார்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.rk guru
Post a Comment