Wednesday, June 1, 2011

வேதம் வளர்த்ததெங்கள் தமிழ்நாடு!




கரிகால சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. அது நல்ல சமஸ்கிருத பாஷையில் அமைந்திருக்கிறது.


பாத்ராகலித வேதானாம் சாஸ்தர மார்க்கா நுஸாரிணாம்!
ததேது அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாஸனம்!


கரிகாலன் இதில் தன்னை 'அரிகாலனாகிய கரிகாலன், என்று கூறிக்கொள்கிறான். 'அரி' என்றால் விரோதி என்றும் அர்த்தம். விரோதிகளுக்கு யமனாக இருக்கிற வீராதி வீரன் தான் 'அரிகாலன்'. சரி, கரிகாலனுடைய அந்த விரோதிகள் யார்?


வேத சாஸ்திர மார்கத்தை அனுசரிக்காதவர்கள் அனைவரும் அவனுடைய விரோதிகள் என்கிறான். வேத சாஸ்திர வழியில் செல்கிறவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பதே கரிகாலனின் சாஸனம்.


பிரசித்தி பெற்ற நம்முடைய தமிழ் மன்னர்கள் வைதிக மதத்தை மனமார வலர்த்தார்கள் என்பதற்கு இதுவே சான்று. 


'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்றே ஒரு சங்ககால அரசனுக்குப்
பெயர் இருந்திருக்கிறது. 'வழுதி' என்றால் பாண்டிய ராஜா, பிற்காலத்திலும் கல்வெட்டுக்களில் எங்கு பார்த்தாலும் தமிழரசர்கள் வேத வித்துக்களுக்கு வரியில்லாத 'இறையிலி'யாக நிலத்தை சாஸனம் செய்தது தெரிகிறது. நான்மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக வழங்கப்பட்ட பல கிராமங்கள் 'சதுர் வேதி மங்கலம்' என்ற பெயரில் உள்ளன.




வெளிநாட்டு விஷயம் ஒன்று புதிதாக நம் ஊருக்கு வந்தால், அதற்கு உள்ளூர் மொழியில் வார்த்தைகள் இருப்பதில்லை. ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்குக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வரமாட்டேன் என்கிறது.


வேதம், யாகம் முதலியன சிலர் சொல்கிற மாதிரி தமிழ்நாட்டின் ஆதி நாகரிகத்துக்குப் புறம்பாகப் பிற்பாடு வெளியே இருந்து வந்தவை என்றால், யாகம் வேதம் முதலிய பதங்களுக்குச் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால், மிக மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே 'வேதம்' என்பது 'மறை' என்றும், 'யாகம்' என்பது 'வேள்வி' என்றும் புகழ்ந்தும் பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்த புஷ்டி நிறைந்த பதங்கள் என்பதை
சமச்கிருத பண்டிதர்கள், தமிழ்ப் புலவர்கள் இருவருமே ஒப்புக்கொள்வார்கள்.


தமிழ்மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்பிராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத் தான் முதலிடம். அப்புறம் தான் வேத யக்ஞம். பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின் தான் வேத பூஜை செய்ய வேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.


தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்க வேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத்தாரைச் சொல்லி, அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக வைதிக நம்பிக்கையிலேயே மூதாதையர்களைத் 'தென்புலத்தார்' என்கிறார். ஆக திருவள்ளுவர் வைதிகத்தைத் தான் சொல்லி
இருக்கிறார் என்பது தெளிவாகிறது.


இந்தத் தமிழ்நாட்டில் வேத பாடசாலைகளை வைத்து நடத்துவதில் பிராம்மணரல்லாதார் செய்திருக்கிற கைங்கரியம் கொஞ்சம் நஞ்சமல்ல. நிலமாகவும் பணமாகவும் வாரிக்கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள்.


இப்போதும் கூட ஏதோ அரசியல் காரணங்களுக்காக வைதிகத்திற்கு எதிரான, நாஸ்திகமான அபிப்பிராயங்கள் கொஞ்சம் தலை தூக்கியிருந்தாலும், மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தியும் நம்பிக்கையும் அப்படியே தான் இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்.


எல்லோருடைய அன்பிற்கும் பாத்திரர் ஆகிற மாதிரி பிராம்மணர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆசார அனுஷ்டான சீலர்களாக ஆகிவிட்டால், இங்கே வேத ரஷணம் நிரம்பவும் நன்றாக நடந்துவிடும் என்பதே என் நம்பிக்கை.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.





.

No comments: