Showing posts with label காஞ்சிப் பெரியவர். Show all posts
Showing posts with label காஞ்சிப் பெரியவர். Show all posts

Friday, August 9, 2013

எல்லா உருவும் பரமாத்மாவே!




சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிறபோது ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள்  குமிழ்களாகத் தோன்றுகின்றன. இன்னொரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள் உடைந்து போகின்றன.பரமாத்மா ஆடாத அசங்காதசமுத்திரம் மாதிரி. மாயை என்கிற நாமெல்லாம் குமிழ் மாதிரி தோன்றியிருக்கிறோம். ஆசாரியாருடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம்மேல் பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளி சமுத்திரத்தோடு ஐக்கியமாகி விடுவதுபோல், நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம்.

சமுத்திர ஜலம் என்றென்றும் அளவு குறையாமலேதான் இருக்கிறது. அதிலிருந்து ஆவி பிரிந்து சென்று மழையாகி, உலகத்தில் பல விதங்களில் நதி, ஒடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று ஜலாசயங்களாக ஆகின்றன சமுத்திரம் வற்றுவதில்லை. அதில் புதிதாக வெள்ளம் வருவதுமில்லை.அதிலிருந்து வந்த ஆறு குளங்கள் வற்றலாம்; அல்லது இவற்றில் வெள்ளம் வரலாம்.வெயில் நாளானால் வீட்டுக் குழாயில் ஜலம் இல்லை; ரெதில்ஸில் ஜலம் இல்லை என்கிறோம். மழைக் காலத்தில் கோதாவரியில் வெள்ளம், காவேரியில் இந்த உலகத்தில் எத்தனை ஜலம் இருந்ததோ அதில் ஒர் இம்மிகூட - க்ரெயின் கூட - இன்றுவரை குரையவில்லை, கூடவும் இல்லை.

பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடு வாங்குவார்கள்; வீடுகளை விற்று பாங்கில் போடுவார்கள்; பாங்குப் பணத்தை 'ஷேர்'களாக மாற்றுவார்கள். மொத்தச் சொத்து மாறாது. அவற்றின் ரூபம்தான் பலவிதத்தில் மாறும். எல்லாவற்றையும் கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும். அப்படியேதான் லோகத்தில் உள்ள  மொத்த ஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும், அல்லது நதியாக, ஏரி, குளங்களாக இருக்கவேண்டும்.

பரமாத்மா பலவாகத் தோன்றியிருக்கிறார். தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாகிறதாகத் தோன்றுகிறது. ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால், எங்குமே கூடுதலும் இல்லை, குறைவும் இல்லை.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Sunday, May 6, 2012

சடங்குகள் தேவையா?



நான் சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியன வெல்லாம் வெறும் சடங்குதானே என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள்விஷயம். சடங்குகளோ வெளிக்காரியங்கள். இவை எப்படி ஆத்மாநுபவத்திற்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம்.

உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால் உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா, அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமோ என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக் கொண்டால், நாம் அதற்கு எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும். எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து, எத்தனையோ கர்மாக்களைச் செய்து, அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமாக ஆத்மானந்தத்தை மூடிக்கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்தும் ஸத் வாசனைகளைப் பெருக்கிக் கொண்டுமாதான் பழைய துஷ்கர்மங்களையும் துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கர்மா தானே நின்றுபோகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் வெறும் சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே. 

எனவே, சாமானிய மக்கள் சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எல்லாச் சடங்குகளையும் வழுவற அநுஷ்டிப்பதே முறை. இவற்றால் என்ன பயன் என்பவர்களுக்கு நிதரிசனமாகச் சில பலன்களைக் காட்டலாம். இன்னின்ன கர்மங்களை இப்படியிப்படித் தவறின்றிச் செய்ய வேண்டும் என்று ஒருவன் கூர்ந்த கவனத்துடன் செய்கிறபோது, அவன் மனஸில் ஐகாக்கிரியம் (ஒருமுகப்படுதல்) ஏற்படுகிறது. பிறகு ஆத்ம தியானம் செய்வதற்கு இவ்வாறு மனம் ஒருமைப்படுவது அத்தியாவசியமாகும். அதோடு சாஸ்திரம் கூறுவதுபோலத்தான் இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக இருப்பதால், ஒர் ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு (DISCIPLINE) உட்படுகிறான். இதை சாப்பிடக்கூடாது. இதை போக்கிய வஸ்துக்களைப் அநுபவிக்கக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரப் பிரகாரம் நடப்பது வைராக்கியத்துக்குப் பெருத்த சகாயம் செய்கிறது. எத்தனை சிரமங்கள் இருந்தாலும், குற்றம் குறை இன்றி சாஸ்திரப்படி சடங்குகளைச் செய்யும் போது, சங்கல்ப பலமும் (WILL - POWER) உண்டாகிறது. சொந்த அபிப்பிராயமில்லாமல் சாஸ்திரம் சொல்வதே வழி என்று இருப்பதால், அடக்கம், எளிமை எல்லாம் உண்டாகின்றன.

ஆக, வெறும் சடங்கு என்று சொல்லப்படுவதைத் தவறாமல் அநுஷ்டிப்பதால் சித்த ஐகாக்கிரியம் (மன ஒருமைப்பாடு) , கட்டுப்பாடு, வைராக்கியம், சங்கல்ப பலம், அடக்கம் இத்தனை நல்ல விஷயங்கள் உண்டாகின்றன. மொத்தத்தில் ஒழுக்கத்துக்கு (MORALITY) வழி உண்டாகிறது. நன்னடத்தையும் ஒழுக்கமும் இல்லாமல் ஆத்ம விசாரமும், ஆத்மாநுபவமும் உண்டாகவே முடியாது.

- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!



Sunday, December 18, 2011

லாகவ கௌரவ நியாயம்!



வராஹமிஹிரர் "பிருஹத் ஸம்ஹிதை" என்று ஒரு க்ரந்தம் எழுதியிருக்கிறார். அதில் இல்லாத விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே இல்லை.

வெறும் ஆகாசத்தில் இந்தக் கிரஹங்களெல்லாம் இருக்கின்றனவே, விழாமல் எப்படி நிற்கின்றன? இதற்குக் காரனத்தை நியூட்டன் என்பவர் தான் கண்டுபிடித்தார் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். மிகப் பழைய காலத்தில் உண்டான சூரிய சித்தாந்தத்தின் ஆரம்பத்தில் இருக்கிற சுலோகமே, பூமி விழாமல் இருப்பதர்கு ஆகர்ஷன சக்தி தான் காரணம் என்று கூறுகிறது. பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகர்ஷண சக்தி என்றால் ஈர்க்கும் சக்தி என்று பொருள். ஒரு வஸ்துவை மேலே வீசிப் போட்டால் அது மறுபடியும் கீழே வந்து விழுகிறது. அப்படி விழுவது அந்தப் பொருளினுடைய ஸ்வபாவகுனம் அல்ல. அது பூமியில் ஈர்ப்பு சக்தியே அதற்கு காரணம். ப்ராணன் மேலே போகும்; அபானன் அதைக் கீழே இழுக்கிறது. ஆகவே கீழே இழுக்கிற சக்திக்கு அபானசக்தி என்று பெயர்.

ப்ரச்நோபநிஷத்தில் 'பூமியின் தேவதையே மநுஷ்ய சரீரத்தில் அபானனை இயக்குகிறது' என்று வருகிறது. அதன் பாஷ்யத்தில் ஆசார்யாள், மேலே போட்ட பொருளைப் பூமி ஆகர்ஷிக்கிற மாதிரி மேலே போகிற ப்ராணனை அபானம் கீழே இழுக்கிறது. இந்த இருவகை ஈர்ப்பு மனித உடலில் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் தான் உடல் இயங்குகிறது என்கிறார்.

இவ்வாறு உபநிஷத்திலேயே Law of Gravitation பேசப்படுகிறது. இவைகளைப் போல பல அருமையான விஷயங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன. அவைகள் பற்றி நமக்குத் தெரியாததால் தேசாந்திரத்தில் இருக்கின்றவர்கள் நமக்கு எவ்வளவோ காலம் பிற்பட்டு எழுதியவைகளுக்கு அளவில்லாத கௌரவத்தைக் கொடுக்கிறோம்.

'பூமிதான் நம் பிரபஞ்சத்துக்கு மத்தியாக நின்ற இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஸூர்யனே அதைச் சுற்றி வருகிறான். அதனால் தான் இரவு பகல் உண்டாகியிருக்கின்றன' என்றே மேல் நாட்டுக்காரர்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை நினைத்து வந்தார்கள். இதற்குக் கொஞ்சம் மாறாக யாராவது ஆராய்ச்சி மூலம் சொன்னால் அவரை மதகுருமார்கள் நெருப்பிலே போட்டுக் கொளுத்தினார்கள். ஆனால் ரொம்பவும் பூர்வ காலத்திலேயே நமக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருந்தன.

பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது, சூரியன் பூமியைச் சுற்றுவதில்லை என்ற விளக்கத்திற்கு, ஆர்யபட்டர் ரொம்ப அழகாக 'லாகவ-கௌரவ நியாயம்' என்று பேர் வைத்திருக்கிறார். லகு என்றால் லேசானது, சின்னது என்று அர்த்தம். அதற்கு அட்ஜெக்டிவ் 'லாகவம்'. சின்னதைக் குறித்த 'லாகவம்', லேசாக', 'லைட்டாக ஒன்றை எடுத்துக் கொண்டு செய்வதைத்தான் 'கைலாகவம்', 'ஹஸ்த லாகவம்' என்கிறோம்.

'லகு' வுக்கு எதிர்ப்ப்பதம் 'குரு'. கனமானது. பெரியது எதுவோ அதுவே 'குரு'. கனவான் என்று ஆச்சாரியாரை அழைக்கிறோம். குருவாக இருக்கும் ஆச்சாரியாரை லகுவான சிஷ்யர்கள் சுற்றுவது தானே நியாயம். நம் பிரபஞ்சத்தில் குருவானது சூரியன் தான். லகு பூமி. குருவைத்தான் லகு பிரதக்ஷிணம் செய்யும் என்பதே லாகவ கௌரவ நியாயம். இதன் படி பூமிதான் சூரியனைச் சுற்ற வேண்டும். இப்படி ப்ரபஞ்சத்தை குரு சிஷ்ய கிரமமாகப் பார்த்து, சாஸ்திரமாகவும் ஸயின்ஸாகவும் ஆர்யபட்டர் சொல்லியிருக்கிறார்.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Saturday, November 5, 2011

ஆயுர்வேதம் வளர்ப்போம்!




ஆயுர்வேதம் என்பது ஆயுள் விருத்திக்கு வழி சொல்லும் சாஸ்திரம். ஆயுள் குறைவது அநேகமாக வியாதியால் தானே? ஆகையினால், வியாதி வராமல் தடுக்கவும், வந்தால் குணப்படுத்தவும் வழி சொல்லும் வைத்ய சாஸ்த்ரமே ஆயுர்வேதம் எனப்படுகிறது.

ஈஸ்வர தியானத்தோடுதான், குறிப்பாக, பகவான் மஹாவிஷ்ணு அம்ருத கலசத்தைப் பாற்கடலிலிருந்து கொண்டு வந்த போது எடுத்த தன்வந்திரி என்ற அவதாரத்தை அராதித்துதான் ஆயுர்வேதம் அப்யஸிப்பது வழக்கம்.

நம் மத சாஸ்திரமும் ஆயுர்வேத சாஸ்திரமும் மிகப் பெரும்பாலும் ஒத்துப் போகின்றவையாகும். நம் மத சாஸ்திரத்திற்கு பெரும்பாலும் விரோதமில்லாமல் இருப்பதும் ஆயுர்வேதம் தான். சரகர், ஸுச்ருதர் என்ற இருவரில் சரகர் மருந்து கொடுத்துக் குணப்படுத்துவது பற்றிச் சொல்கிறார். ஸுச்ருதர் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவது பற்றிச் சொல்கிறார்.

'என்ஸைக்ளோபீடியா ப்ரிட்டானிகா' என்ற வால்யூம்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலே ஒவ்வொரு அறிவியல், சாஸ்திரம், கலை பற்றியும் விவரமாகச் சொல்லியிருக்கும். அதிலே ஸர்ஜரி என்ற ரணசிகிச்சை வித்யை இந்தியாவிலேயே முதலில் தோன்றிற்று என்று இருக்கிறது. இங்கே இருந்து அது அரேபியா வழியாக க்ரீஸ் தேசத்துக்குப் போனதாகவும் அங்கேயிருந்து இத்தாலிக்குப் பரவி, பிறகு ஐரோப்பா பூராவும் பரவியதாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த 'ஸுச்ருதம்' என்கிற சாஸ்திரத்தில் நவீன காலத்தில் ஆஸ்பத்திரிகளில் எத்தனை விதமான ரண சிகிச்சை ஆயுதங்கள் உபயோகத்திலிருக்கின்றனவோ அத்தனையைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறதாம். புதிதாக சுவடிகளைப் ஆராய்ந்தும், ரிக் வேதத்திலிருந்து ஆரம்பித்து புராணம், காவியங்கள் முதலியவற்றிலுள்ள கதைகளில் வியாதியை குணப்படுத்துவது பற்றி இருப்பவற்றை இதோடு பொருத்தியும் பல அறிஞர்கள் அநேக ஆச்சர்யமான ஸர்ஜரி நுணுக்கங்களெல்லாம் நம் பூர்விகர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று காரணம் காட்டி எழுதி வருகின்றனர்.

ஆயுர்வேதம் என்றால் 'ஓஷதி' என்கிற மூலிகை, அடுத்ததாக 'ரஸவர்க்கம்' என்கிற தாதுக்கள் ஆகியவற்றால் செய்யும் மருந்து தான் என்றே நினைக்கிறோம். மரம், செடி, கொடி எல்லாமே 'ஓசதி' வர்கத்தில் வந்துவிடும். கந்தகம், பாஷாணம், லோகனங்கள் முதலியவை ரஸவர்க்கம்.

கண்ணுக்குத் தெரிகிற வியாதி மாத்திரமின்றி குடல், மூளை இவற்றின் உள்ளுக்குள்ளேயிருப்பது,  தோல் எலும்பு நரம்பு ரத்தம், நீரிழிவு நோய், மனோ வியாதி என்று கணக்கில்லாமலுள்ள அத்தனை வியாதிக்குமான மருந்திர்கும் ஆயுர்வேதத்தில் வழி சொல்லப்பட்டிருக்கிறது.

அறிவியல் என்றால் சமயாஅச்சாரங்களுக்கு விரோதமாகத்தான் போக வேண்டுமென்றில்லாமல் நம் ஆச்சாரத்திற்கு ஏற்றதாகவும் ஆயுர்வேதம் இருப்பதால் அதனை வளர்க்க நாம் பாடுபட வேண்டும்.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆயுர்வேதத்தில் பல வைத்தியங்கள் ஒரு வாக்கியத்தினாலேயே விளக்கப்பட்டு விடும். 'லங்கனம் பரம ஒளஷதம்' என்பார்கள். 'பட்டினி சிறந்த மருந்து' என்று அதற்குப் பொருள்.

எப்போதும் வயிற்றில் எதையாவது போட்டு வயிற்றைக் குப்பைத் தொட்டியாக்காமல் தண்ணீர் மட்டுமே ஒரு நாள் முழுவதும் குடித்து வயிற்றுக்குப்பைகளை அகற்றினால் அதுவே முழு உடலுக்குமான மருந்துமாக இருக்கும் என்பதாலேயே பல தினங்களில் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். ஏகாதசி விரதம், அமாவாசை விரதம் என்று சில குறிப்பிட்ட தினங்களில் வயிற்றுக்கு வேலை கொடுக்காமல் அதனை தண்ணீரால் சுத்தம் செய்வது ரத்த சுத்திக்கும் ஏற்றது. உடலில் துர்கிருமிகள் குறையவும் வழிவகுக்கும் என்பதாலேயே அதனை கடைபிடிக்கிறார்கள். நம் வாழ்க்கை முறையே மருத்துவம் சார்ந்ததாக இருந்திருக்கிறது. நாமும் அதை கடைபிடித்தால் மருத்துவரைப் பார்க்காமல் இருக்கலாம்.


'லங்கனம் பரம் ஒளஷதம்'



Sunday, October 2, 2011

உறங்கும் முன் உதவுங்கள்!



தினமும் தூங்கப் போகும் முன் இன்று மற்றவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்தோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். பரோபகாரம் செய்யாமலே ஏழுநாள் போயிற்று என்றால், அது நாம் பிறவா நாளே. அன்றைக்கு நாம் செத்துப் போனதற்குச் சமம் என்று வருத்தப்பட வேண்டும். நாமே செத்த மாதிரி என்றால் இது தான் பெரிய தீட்டு.

நாம் எத்தனை சிறியவர்களாக இருந்தாலும் நம்மாலும் முடியக் கூடிய சிறிய தொண்டு இல்லாமல் இல்லை. இப்படி அவரவரும் தனியாகவோ, சேர்ந்தோ ஏதாவது பொது நலத் தொண்டு செதே ஆக வேண்டும். உலகம் சுழல அதுவே வழி. 

தர்மம் பண்ணுவதில் மட்டும் 'அப்புறம்' என்று ஒத்திப் போடாமல், எப்போதும் யமன் உன் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடன் பண்ணி விட வேண்டும்.

வியாஸர், பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின், சிஷ்யர்கள் அவற்றின் சாராம்சத்தை ஒன்றிரண்டு ஸ்லோகங்களில் சுருக்கித் தருமாறு
வேண்டினார்கள். "பதினெட்டு புராணம் மட்டுமின்றி, மொத்தமுள்ள கோடிப் புத்தகங்களின் ஸாரத்தையும் அரை ஸ்லோகத்தில் சொல்கிறேன்"
என்றார்.

"ஸ்லோகார்தேந ப்ரவக்ஷயாமி யதுக்தம் க்ரந்த கோடிஷு
பரோபகார: புண்யாய பாபாய ப்ரபீடிதம்:

அதாவது, "புண்யம் சம்பாதிக்க வேண்டும் எனில் பரோபகாரம் பண்ணு. பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதென்றால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு" என்கிறார் வியாஸர். இருக்கும் அத்தனை கோடி மத ஸாஸ்திர புத்தகங்களுக்கும் உயிர் நிலையான தத்வம் அனைத்தும் போதிப்பது அதுவே.

சந்திரனின் கிரணங்கள் உலகத்திற்கெல்லாம் நன்மை தருகிறது. சந்திரனுக்கு இப்படி உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்து அதனால் செய்யவில்லை. தன் இயல்பாகவே அது உலகநன்மை உண்டாகுமாறு நடந்து கொள்கிறது. அது போல சக ஜனங்கள் தங்களுடைய 'நேச்சர்' படி, இயல்பாக இருப்பதே நடப்பதே பரோபகாரமாகத்தான் இருக்கும். 

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்


Saturday, July 2, 2011

ஆராய்ச்சி செய்யாமல் உபகாரம் பண்ண வேண்டும்!



'அனைத்து அறன்', அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் மனத்துக்கண் மாசிலன் ஆதல்', அதாவது, தங்கள் மனதைத் தாங்களே துளி கூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்து கொள்வது தான் என்கிறார் திருவள்ளுவர். கர்மானுஷ்டானத்தால் அனைவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வைதிக சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.

ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர் என்ன ஜாதி என்ன மதம்,
நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிராமல் நம்மாலான
உபகாரத்தைப் பண்ண வேண்டும். 'யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்' என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது.

வைத்துக் கொண்டு அனுபவிப்பதை விட,கொடுத்து அனுபவித்தால் அதுவே பரம ஆனந்தத்தைத் தருகிறது. மஹாபலி வாரி வாரிக் கொடுத்தான்.
ஆனால், தான் கொடுக்கிறோம் என்ற அஹங்காரத்தால் கர்வம் கொண்டான். இதனால் தான் பகவானே அவனிடம் இந்த அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.

இந்த உலகத்தில் சந்தோஷம் என்பது நிரந்தரம் இல்லை. திருமணம், பட்டாபிஷேகம் எல்லாம் தற்காலிக ஸந்தோஷம் தான். பகவானிடம் போய்ச் சேருவது தான் நிரந்தரமான மங்களம்.

ஆடம்பரமாகச் செலவு செய்து பூஜை செய்ய வேண்டும் என்பதில்லை. காய்ந்த துளசி தளமும் வில்வ பத்திரமும் பூஜைக்குப் போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தை நிவேதனம் செய்தால் போதும்.

"அந்தகாலே சமாம் ஏவஸ்மரன்" - 'என்னை மட்டுமே' என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்ப கஷ்டம் தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்து விடலாம்.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்


Wednesday, June 1, 2011

வேதம் வளர்த்ததெங்கள் தமிழ்நாடு!




கரிகால சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. அது நல்ல சமஸ்கிருத பாஷையில் அமைந்திருக்கிறது.


பாத்ராகலித வேதானாம் சாஸ்தர மார்க்கா நுஸாரிணாம்!
ததேது அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாஸனம்!


கரிகாலன் இதில் தன்னை 'அரிகாலனாகிய கரிகாலன், என்று கூறிக்கொள்கிறான். 'அரி' என்றால் விரோதி என்றும் அர்த்தம். விரோதிகளுக்கு யமனாக இருக்கிற வீராதி வீரன் தான் 'அரிகாலன்'. சரி, கரிகாலனுடைய அந்த விரோதிகள் யார்?


வேத சாஸ்திர மார்கத்தை அனுசரிக்காதவர்கள் அனைவரும் அவனுடைய விரோதிகள் என்கிறான். வேத சாஸ்திர வழியில் செல்கிறவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பதே கரிகாலனின் சாஸனம்.


பிரசித்தி பெற்ற நம்முடைய தமிழ் மன்னர்கள் வைதிக மதத்தை மனமார வலர்த்தார்கள் என்பதற்கு இதுவே சான்று. 


'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்றே ஒரு சங்ககால அரசனுக்குப்
பெயர் இருந்திருக்கிறது. 'வழுதி' என்றால் பாண்டிய ராஜா, பிற்காலத்திலும் கல்வெட்டுக்களில் எங்கு பார்த்தாலும் தமிழரசர்கள் வேத வித்துக்களுக்கு வரியில்லாத 'இறையிலி'யாக நிலத்தை சாஸனம் செய்தது தெரிகிறது. நான்மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக வழங்கப்பட்ட பல கிராமங்கள் 'சதுர் வேதி மங்கலம்' என்ற பெயரில் உள்ளன.




வெளிநாட்டு விஷயம் ஒன்று புதிதாக நம் ஊருக்கு வந்தால், அதற்கு உள்ளூர் மொழியில் வார்த்தைகள் இருப்பதில்லை. ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்குக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வரமாட்டேன் என்கிறது.


வேதம், யாகம் முதலியன சிலர் சொல்கிற மாதிரி தமிழ்நாட்டின் ஆதி நாகரிகத்துக்குப் புறம்பாகப் பிற்பாடு வெளியே இருந்து வந்தவை என்றால், யாகம் வேதம் முதலிய பதங்களுக்குச் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால், மிக மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே 'வேதம்' என்பது 'மறை' என்றும், 'யாகம்' என்பது 'வேள்வி' என்றும் புகழ்ந்தும் பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்த புஷ்டி நிறைந்த பதங்கள் என்பதை
சமச்கிருத பண்டிதர்கள், தமிழ்ப் புலவர்கள் இருவருமே ஒப்புக்கொள்வார்கள்.


தமிழ்மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்பிராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத் தான் முதலிடம். அப்புறம் தான் வேத யக்ஞம். பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின் தான் வேத பூஜை செய்ய வேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.


தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்க வேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத்தாரைச் சொல்லி, அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக வைதிக நம்பிக்கையிலேயே மூதாதையர்களைத் 'தென்புலத்தார்' என்கிறார். ஆக திருவள்ளுவர் வைதிகத்தைத் தான் சொல்லி
இருக்கிறார் என்பது தெளிவாகிறது.


இந்தத் தமிழ்நாட்டில் வேத பாடசாலைகளை வைத்து நடத்துவதில் பிராம்மணரல்லாதார் செய்திருக்கிற கைங்கரியம் கொஞ்சம் நஞ்சமல்ல. நிலமாகவும் பணமாகவும் வாரிக்கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள்.


இப்போதும் கூட ஏதோ அரசியல் காரணங்களுக்காக வைதிகத்திற்கு எதிரான, நாஸ்திகமான அபிப்பிராயங்கள் கொஞ்சம் தலை தூக்கியிருந்தாலும், மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தியும் நம்பிக்கையும் அப்படியே தான் இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்.


எல்லோருடைய அன்பிற்கும் பாத்திரர் ஆகிற மாதிரி பிராம்மணர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆசார அனுஷ்டான சீலர்களாக ஆகிவிட்டால், இங்கே வேத ரஷணம் நிரம்பவும் நன்றாக நடந்துவிடும் என்பதே என் நம்பிக்கை.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.





.

Thursday, May 19, 2011

புராணமும் வரலாறு தான்!







நம் தேசத்தில் சரித்திரம் இல்லை என்று ஒரு குறை சொல்லப்படுகிறது.
புராணமும் சரித்திரம் தான். இக்காலத்தில் கல்விகற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கிறிஸ்துவுக்குப் பிற்பாடு ஒரு இரண்டாயிரம் வருஷத்துக்குள் நடந்தது தவிர மற்ற எதையும் புராணங்களில் சொல்லியிருப்பவைகளை வரலாறாக மதிப்பதில்லை. 


புராணங்கள் பொய் என்று கூறுபவர்கள் தங்களுக்குபிடித்த ஆர்ய, திராவிட பிரிவினைக் கொள்கை மாதிரியான பொய் விஷயங்களுக்கு மட்டும் புராணங்களில் ஆதாரம் இருப்பதாகக் காட்டிவிட்டு, அதில் வருகிற அற்புதமான விஷயங்கள் எல்லாவற்றையும் கட்டுக்கதை, புளுகு மூட்டை என்று தள்ளி விடுகிறார்கள். 


புலன்களுக்கு அகப்படுகிற விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாக எதுவும் எதார்த்தத்தில் நடந்திருக்க முடியாது என்கிற தீர்மானத்தில் இவர்கள் இருப்பதால், அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த புராணக்கதைகளை வரலாறாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். 'மிஸ்ட்ரி' நிறைய இருப்பதால்
அது 'ஹிஸ்ட்ரி' இல்லை என்று ஆகிவிடுமா?


புராணம் என்பது வேதத்திற்கு பூதக்கண்ணாடி மாதிரி. சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் பெரியதாகக் காட்டுகிறது அல்லவா? அப்படி வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்ம விதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணி காட்டுவது தான் புராணம்.


ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனசில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாகச் சொன்னால் நன்றாக மனதில் பதியும். 


கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் கட்டளையிட்டுள்ளவற்றை, புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாக பிரகாசிக்கும்படிச் செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும் கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது.


உண்மையில் வெறும் காலவாரியாக எந்த ராஜாக்கள் எங்கெங்கே ஆண்டார்கள் என்பதையும் யார் யாரோடு சண்டை போட்டார்கள் என்று தெரிந்து கொள்வதாலும் யாருக்கு என்ன பயன்? 


நம் வாழ்க்கைக்கு உதவாதனவாகவும் உபதேசம் இல்லாததாகவும் இருக்கும் சரித்திரம் நமக்கு வேண்டாம். 'ஆத்ம லாபமான சரித்திரங்களையே சொல்வோம்' என்ற அர்த்தத்துடன் எழுதப்பட்டவைகளே புராணங்கள்!

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 


.

Tuesday, May 10, 2011

ஆத்ம பேராணந்தத்தை அடைவது எப்படி?





புத்தியை நிலையாக நிறுத்த முடியாமலிருப்பதற்குக் காரணம் என்ன? நம்முடைய பூர்வ கர்மாதான். பல தினுசான தப்புத் தண்டாக்கள், பாபங்கள், ஜன்ம ஜன்மமாகப் பண்ணிவிட்டோம். அந்தப் பாபங்கள் தீருகிற வரை நமக்கு ஆத்மாநுபவம் என்கிற பேரானந்தம் கிடைக்காது. கர்மாக்களுக்கெல்லாம் பலன் தருகிற ஈஸ்வரன் நம் பாபத்துக்கெல்லாம் தண்டனை கொடுத்துத் தீர்த்து வைத்த பிறகுதான் நமக்கு அந்த சாசுவதமான பேரின்பம் கிடைக்க முடியும். பாபத்தை எப்படித் தீருத்துக் கொள்வது என்றால், புன்ணியத்தால் தான் தீர்த்துக்கொள்ள முடியும்.

"ஒரு ஜன்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவிலிருந்து தீர்த்துக் கொள்ளட்டும்" என்கிற மகா கருணையால்தான் ஈஸ்வரன் மறுபடி ஜன்மா தருகிறார். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இந்த புது ஜன்மாவில் பழைய பாபங்களுக்கு நிவிருத்தியாகப் புதிய புண்ணியங்களைப் பண்ணாமல்
இருப்பதோடு வேரு புதிய பாபங்களைச் செய்து பாப மூட்டையை சேர்த்து விடுகிறோம்.

ஆசையின் வயப்பட்டு ஒரு லட்சியத்தைப் பிடிக்கப் போகிறபோது தான், இந்த லட்சிய பூர்த்திக்காக எந்தத் தப்பையும் செய்யத் துணிகிறோம். இதனால் சித்தத்தில் துவேஷம், துக்கம், பயம் மாதிரி அழுக்குகளை ஏற்றிக் கொண்டு விடுகிறோம். அதனால் பாப கர்மாக்கள் உண்டாகி விடுகின்றன.

சரி, புண்ய கர்மா என்றால் என்ன?

சொந்த லாபத்தைப் பெரிதாக நினைக்காமல், உலக நன்மைகருதியே கர்மாக்களைச் செய்கிற போது அவை எல்லாம் புண்ணிய கர்மாக்களாகி நமக்கு உள்ளூர நன்மை செய்கின்றன. வெளியில் உலக வாழ்க்கையில் அவை சமூகம் முழுவதற்கும் நன்மை உண்டாக்குவதோடு, உள்ளே நம்முடைய பாப
கர்மங்களையும் கழுவித் தீர்க்கின்றன.

அதாவது புண்ணியச் செயல்களே நமது புத்தி சுத்துமாவதற்குப் படிப்படியாக உதவுகிறது.

பாப சிந்தனைகளைப் போக்கும் புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். பொதுவாக இதை அன்பு எனச் சொல்லலாம். இந்த அன்பை சகல ஜீவ ஜடப் பிரபஞ்சத்துக்கும் மூலமான பரமாத்மாவிடம் திருப்பிவிடுவது தான் பக்தி.

அதாவது அன்பு, கருணை, தியாகம் போன்றவற்றை ஜீவன்களிடம் காட்டினால் புண்ணியகாரியம், அதையே இறைசக்தியிடம் காட்டினால் பக்தி.

இரண்டையும் ஒருசேர நிகழ்த்தி வந்தால் ஆத்மாவின் பேராணந்தத்தை அடைய முடியும்!

- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்


.

Saturday, April 30, 2011

ஸ்வாமி என்றால் என்ன?




ஸ்வாமி என்றால் என்ன?


'ஸ்வம்' என்கிற வார்த்தைக்கு 'உடைமை', 'சொத்து' என்று அர்த்தம் 
உடைமைக்குச் சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர் தான் 'ஸ்வாமி'. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை 'உடையார்' என்பது. 


முன்காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் எல்லாம் 'திருச்சிற்றம்பலமுடையார்', 'திருவேங்கடமுடையார்', 'திருநாகேச்சுவர முடையார் என்பது போலவே 'உடையார்' என்கிற பெயரில் தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால் தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ரமாநுஜரை 'உடையர்' என்றே கூறுகிறார்கள்.


'எல்லாம் உன் உடைமையே' என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம் - அவற்றுக்குப் உரிமை கோரும் நாமுள்பட பிறர் எல்லோருமே, எல்லாமுமே இறைவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை. நாமும் இல்லை. உண்மையில் இந்த உலகில் நாம் உரிமை கோரமுடிகிற சொத்துக்கள் எதுவும் இல்லை.


இப்போது 'நான், நான்' என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குத்தான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலைய மாட்டோம்.


நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமை இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதி தான்!


'ஸ்வாமி' என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடமே எந்த சொந்தமும் இல்லை என்பதையும் நாம் இறைவனின் இஷ்டப்படி அட்டுவிக்கப் பட வேண்டிய அவனுடைய சொத்து தான் என்பதை உணர்த்துவதாக் அமைந்திருக்கிறது.


இப்படி உணர்வது தான் பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பதாகும்.


- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!


.

Wednesday, March 30, 2011

நிவேதனம் செய்து உண்டால் உபநிஷத்து புரியும்!




ஒவ்வொரு குடும்பத்திலும் கடவுள் பூஜை நடக்க வேண்டும். சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகள் செய்யலாம். சௌகரியம் இல்லாவிடுல் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். 


அலுவலகம் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை
என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச்சத்தம் கேட்க வேண்டும்.


பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவை இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கே இருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதர்காக இவ்வளவும் சொன்னேன்.


வீட்டிலே இருந்தால் 'மகா நைவேத்தியம்' செய்யவேண்டும். அதாவது அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். 


நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சப்பிடப்போகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச் செய்வது என்று அர்த்தமே இல்லை. அவருக்குச் சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை
முழுவதுமே தவிர, அவருக்குக் இதனால் ஆவது எதுவுமில்லை.


'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்றுதான் அர்த்தமே தவிர, 'உண்பிக்கிறேன்' என்று அர்த்தமில்லை. 'அப்பனே இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்' என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.


- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 


ஆக இந்த பிரபஞ்சத்தில் நம்மால் ஆனது ஒன்றும் இல்லை எல்லாம் அவனிலிருந்தே தோன்றியது அவனுக்கே அர்ப்பனிக்கப்படுகிறது என்ற உயர்ந்த உண்மை மனதில் பதிந்தால் அகங்காரம் குறையும். உபநிஷத்தின் அடிப்படை சாரமான அவனிலிருந்தே தோன்றியது அவனிடமே
ஐக்கியமாகிறது என்கிற உயர்ந்த பிரபஞ்ச சக்தி பற்றிய உண்மையை சாதாரன நிவேதன காரியத்தின் மூலமாகவே நம் முன்னோர்கள் உணர்த்தி விடுகிறார்கள். 


அதனாலேயே வைனவர்கள் பெரும்பாலும் இறைவனுக்கு நிவேதனம் செய்யாமல் தினசரி உணவே கூட சாப்பிட மாட்டார்கள். எல்லாம் அவனிலிருந்தே வந்தது, நாம் அனுபவிக்கும் எந்த அனுகூலத்திற்கும் அவனது இயக்கமே காரணம் என்றுணர்ந்து அடக்கத்துடன் வாழவே இறைவனுக்கு நிவேதனம் செய்வது பழக்கமாகியது. 


இப்படி பல சம்பிரதாயங்களும் நம் எண்ணங்களைச் செதுக்கி மனிதனை முழுமைப்படுத்த மேற்கொண்ட மனோவியல் வழிமுறைகள் ஆகும். 


பெரியோர்கள் கூறிய வழிமுறைகளை அப்படியே கடைபிடித்து வந்தால் சங்கிலிப் பிணைப்புகளாக பல நன்மைகள் நம்மையறியாமலேயே
நம்மை வந்தடைவதை உணரலாம்.


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!



.

Sunday, August 29, 2010

ஜாதிகளை இணைத்தால் பிரச்சனை!



ஜாதிகளை எல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால் தான் சண்டை ஜாஸ்தியாகிறது. வாதத்தால் ஒற்றுமை ஏற்படுத்த முற்படாமல், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்று கூட இல்லாமல், பல பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லோரும் சேர்ந்து செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் உண்டாகி விடும்.

தானம் தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனசின் அஹங்காரம் குறையும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் நீர் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபஹ்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.

"பாடும் பணி" யினால் ஜனங்களின் நெஞ்சம் உருகி பரமேஸ்வரனிடம் சேருமாறு செய்தது, அப்பர் ஸ்வாமிகளின் கைவண்ணம். அதோடு, தேக உழைப்பாக ஓர் உழவர் படையை வைத்துக் கொண்டு கோயில் கோயிலாகப் போய் ப்ராகரத்தில் முளைத்திருந்த புல்லைச் செதுக்கினார். அப்பர் காட்டிக் கொடுத்தபடி, அம்மையப்பரிடம் பக்தி வைத்து எல்லோரும் அந்த ஒருவனின் குழந்தைகள் என்ற அன்பில் ஒன்றுபட்டு சேவை செய்யும் போது களங்கமில்லாத பரிசுத்த ஒற்றுமை ஏற்படும்.

'தனக்கு மிஞ்சி தானம்' என்பதற்கு நான் புது விளக்கம் கொடுக்கிறேன். எது உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமோ அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் "தனக்கு" என்று இங்கே சொல்லியிருக்கிறார்கள். தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தருமத்திற்குச் செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சித் தானம்". நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகச் செலவைக் கட்டுப்படுத்தி தனக்கு மிஞ்சும்படிப் பண்ண வேண்டும்.

எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் அத்தனையையும் கபளீகரம் பண்ணும் நெருப்பு மாதிரிதான் ஆசை. எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்ம க்ஷேமம். 'நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழ வேண்டும்" என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். அதற்கு மேல் ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.