Saturday, August 6, 2011

ரெப்போ ரேட்!

நாட்டில் விலைவாசி அதிகரித்து விட்டது, பண வீக்கம் அதிகரித்து விட்டது என்று மக்கள் புலம்பினால் நம் அதிபுத்திசாலி மிஸ்டர் க்ளீன் பிரதமர் உடனே ரிசர்வ் வங்கியை கடைக்கண்ணால் பார்ப்பார். ரிசர்வ் வங்கியோ உடனே ரெப்போ ரேட்டை புள்ளி இருபத்தி ஐந்து சதவீதம் அல்லது அதற்கு மேலோ கீழோ என்று ஏற்றி விடும். அதாவது சில்லரை வங்கிகளின் பண இருப்பை ரிசர்வ் வங்கியில் அதிகமாக கையிருப்பு வைக்க வேண்டும்.

இதன் காரணம் என்னவெனில், சில்லரை வங்கிகள் அதிகமாக பணத்தை கடன் கொடுக்காமல் நிறுத்தி வைக்கும். கொடுக்கும் கடனுக்கும் வட்டி வீதம் அதிகமாகும். இதனால் வங்கிகளின் மூலம் பணம் புழங்குவது தடுக்கப்படும். இதை தடுத்துவிட்டால் நாட்டில் பணப்புழக்கமே குறைந்து போய் விடுமாம்.

அதாவது, லோன் போட்டு வீடுவாங்குவது, லோன் போட்டு கம்பியூட்டர் வாங்குவது, லோன் போட்டு டூ வீலர் வாங்குவது போன்ற இத்தியாதி சமாச்சாரங்கள் மூலமாக யாரும் பணப்புழக்கதைச் செய்ய மாட்டார்களாம். அதனால் வியாபாரங்கள் டல்லடித்து விலைவாசி குறைந்து பண வீக்கம் வத்திப் போகும் என்று அதிபுத்திசாலித்தனமான ஒரு நடவடிக்கையாக இதைப் பார்க்கிறார்கள்.

அட லூசுகளா! என்னவோ இந்தியத்திருநாட்டில் நடக்கும் எல்லாப்பணப் பரிவர்தனையும் வங்கிகள் மூலமாகத்தான் நேர்மையாக நடப்பது போல பாவலாக்காட்டுகிறார்கள் முண்டாசு சீமான்கள்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஈடான மற்றொரு பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் கருப்புப்பணமாக வங்கிகளுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாமல் புழங்கிக்கொண்டிருக்கையில் வங்கியில் வட்டி வீதத்தை ஏற்றி விட்டால் விலை வாசி குறைந்து விடுமா என்ன? எத்தனை நாள் இப்படி பூனை கண்ணை மூடிவிட்டால் பூளொகம் இருண்டுவிடும் என்கிற ரீதியில் நடிக்கப் போகிறார்கள் இந்த பொருளாதார மேதாவிகள் என்று தெரியவில்லை. கருப்புப்பண புழக்கத்தைக் குறைக்காதவரை பொருளாதார சீர்திருத்தங்கள் எந்த விதத்திலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வளம் பெருக்க உபயோகப்படப்போவதே இல்லை.

சரி இந்த கருப்புப் பணத்தால் யாருக்காவது லாபம் இருக்கிறதா என்றால் சிலருக்கு லாபம் சிலருக்கு நஷ்டம் என்கிற ரீதியில் தான் போகும். எப்போதுமே இல்லாதவனுக்கு கஷ்டம் என்பது நிரந்தர நியதி. அது வேறு விஷயம்.

இந்த கருப்புப்பணத்தால் லாபம் உண்டு. யாருக்கென்றால், ஹோட்டல் நடத்துபவர்கள், துணிக்கடைகள், பெரிய பெரிய நுகர்வுப்பண்டம் விற்கும் யாருக்குமே செம வியாபாரம் நடக்கும். காரணம் கணக்கில் வராத பணம் அதை வைத்திருப்பதால் நுகர்வு செய்தே தீர்க்கப்படும். கருப்புபணம் புழங்கும் காலத்தில் நுகர்வுப்பண்டத்திற்கான தொழிலை சரியான ஏரியாவில் துவங்கினால் சீக்கிரமே லட்சாதிபதி, லட்சாதிபதி துவங்கினால் சீக்கிரமே கோடீஸ்வரர். அதனால் 'கருப்பு பணம்' வியாபாரிகளுக்கு வரம்.

சாபம். இந்திய நிறுவனங்களில் சம்பளம் வாங்கி குடும்பம் நடத்துபவனுக்கு கருப்பு பணம் சாபம். ஏனெனில் கருப்புபணத்தை கத்தை கத்தையாக வைத்திருப்பவனுக்குத் தகுந்தாற் போல விலைவாசி ஏறிவிடும். மாசச் சம்பளக்காரன் வாங்கவும் முடியாமல் திங்கவும் முடியாமல் தினறிக் கொண்டிருப்பான். வருஷத்திற்கு ஐநூறோ ஆயிரமோ அல்லது ஓரிரண்டு ஆயிரங்களோ இன்க்ரீமென்ட்டுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு நாய் போல காத்திருக்கும் அவஸ்தை இந்த இந்திய நிறுவனங்களில் வேலைபார்த்து இந்திய சம்பளம் வாங்கும் நடுத்தரக்காரனுக்குத்தான் உண்டு. கருப்புப்பணம் இவனுக்கு சாபம்.

ரியல் எஸ்டேட் தொழிலில் கடந்த ஐந்து வருடம் விளையாடிய கருப்புப்பணம்
போரூர், குரோம்பேட்டை, அம்பத்தூர் , ரெட்டேரி என ஏற்கனவே ஊருக்கு வெளியே வாடகை வீட்டில் வாழ்ந்தவர்களை எல்லாம் ஸ்ரீ பெரும்புதூர், கூடுவாஞ்சேரி, ஆவடியைத் தாண்டி என பல இடங்களுக்கு துரத்தி அடித்திருக்கிறது.

சாதாரண நடுத்தரக்காரன் இப்போது கடைசித் துளி ரத்தத்தை சிந்தி கால் கிரவுண்டு நிலம் வாங்க வேண்டுமென்றால் கூட சென்னையின் எல்லைக்கோட்டுக்கு வெளியே எங்காவது முள்ளுக்காட்டுக்குள் மிஞ்சி இருந்தால் அதையும் யாரேனும் கருப்புப்பணக்காரன் பிளாட் போட்டு கையகப்படுத்தாமல் விட்டு வைத்திருந்தால் அந்த நிலத்தை வைத்திருக்கும் சொந்தக்காரனின் கையில் காலில் விழுந்து கெஞ்சிக்கூத்தாடி சகாய விலைக்கு அதாவது சதுர அடி 150 முதல் 200 க்குள் வாங்கலாம். இல்லையேல் அவன் வாழ்நாளில் சொந்தமாக துண்டு நிலம் பற்றி யோசிக்கவே முடியாது.

ஆக கருப்புப்பணம் வைத்திருக்கும் மஞ்சள் துண்டு குடும்பத்தினரைப் போன்றவர்கள் தான் விலைவாசியை சந்தை நிலவரத்தை , ரியல் எஸ்டேட் விலைகளை , நடுத்தர வர்கத்தினர் வாழவேண்டுமா அல்லது செத்து மடிய வேண்டுமா என்று நிர்ணயிக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்கையில் இந்த எழவுகளைப் பற்றி எதுவுமே தெரியாத வாயில் விரல் வைத்தால் சப்பக்கூட தெரியாத குழந்தை போல ரிசர்வ் வங்கி வட்டியை மட்டும் உயர்த்தி விட்டு ஆகா மக்களிடம் இனி பணப்புழக்கம் குறைந்துவிடும், விலை வாசி குறைந்து விடும் என்று நினைத்து ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. நூறு நாளில் கருப்புப்பணத்தை எல்லாம் ஊருக்கு மூட்டை கட்டி கொண்டு வந்து போட்டு விட்டு மக்களின் வறுமையை அடியோடு ஒழித்து விடுவேன் என்று உதார்விட்ட கையாலாகாத தலையாட்டிப் பிரதமரும் வங்கியை வைத்து பணவீக்கத்தை குறைத்துவிடுவதாக சவுடால் விட்டுக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் அரசியல்வாதிகள் வங்கி நடவடிக்கைகள் என்கிற கிலுகிலுப்பையைக் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

அரசியல் வாதிகள் மற்றும் பெரிய தொழில் முதலைகள் வைத்திருக்கும் மற்றும் புழங்கச்செய்யும் கருப்புப் பணத்தை ஒழிக்காமல் வங்கிகள் மூலமாக என்ன நடவடிக்கை எடுத்தாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் நல்ல வாழ்க்கை வாழ எந்த வழியும் கிடையாது.

இந்தியா வல்லரசாம்! வேறெந்த நாட்டிலும் புழங்காத அளவு கருப்பு பணத்தை புழக்கத்தில் வைத்திருப்பதாலேயோ?
.

1 comment:

Now what?????????? said...

Very Good Post Sir!!!

But what can we, as common man can do to control both this inflation?