Thursday, August 11, 2011

கிருபானந்த வாரியாரின் பொன்மொழிகள்!ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும்
கிடைக்கும் புண்ணியம், பெற்ற தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.

ஒருவனுக்கு எத்தனை மாட மாளிகைகள் இருப்பினும் அவன் படுக்குமிடம் ஐந்தரை அடி நீளந்தானே. ஒருவனுக்கு எத்தனை ஏக்கர் நிலங்களிருப்பினும் அவன் உண்பது காற்படியரிசிதானே! எத்தனை நூல் துணி ஆலைகள் இருப்பினும் அவன் உடுப்பது நான்கு முழந்தானே! அதனால் போதும் என்ற மனமே ஒருவனுக்கு நிம்மதியை அளிக்கும். அதை ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.

சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.

நூலறிவு, குலத்தின் உயர்வு, கருணை, பெரும்புகழ், செல்வம், கைம்மாரு கருதாது உல்ளதை வழங்குதல், சிறப்பு, ஒழுக்கம், அரிய தவம், நியமம்,
நெருங்கிய நட்பு, சமானமில்லாத வலிமை, உண்மை, தூய்மை, அழகு ஆகிய இத்தனை நலன்களும் அடக்கமின்மை என்ற ஒரு தீயகுணத்தால்
அழிந்து போகும்.

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில்ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும்.

பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

வீட்டின் வாயிலில் நல்லவனை நிறுத்தி தகாதவர்களை விடாதே என்று காவல் காக்கச் சொல்வது போல நெஞ்சில் நல்லுணர்வு என்ற காவலை வைக்க வேண்டும். அதனால் தீய எண்ணங்களை எண்ணுவதற்கு இடமிராது. நல்லெண்ணங்களே தோன்றும்.

குழந்தைகள் உணவு அருந்தாமல் வீதியில் வெயிலில் விளையாடிக் கொண்டேயிருக்குமானால் தாய் அக்குழந்தைகள் மீதுள்ள எல்லையற்ற கருணையால் வலிய வீட்டுக்குள் அழைத்துச் சென்று நீராட்டி ஆடை அணிகலன்களால் அழ்கு செய்து நல்லுணவு தந்து இன்பம் செய்வது
போல், உயிர்களாகிய நாம் பாவமாகிய வெயிலில் விளையாடும் போது தாயினும் மேலான கருணையுள்ள இறைவன் நம்மை தகுந்த காலத்தில்
அழைத்து பக்குவமான நிலைக்கு அழைத்துச் சென்று அருள்புரிவான். ஆனால் தாய் வலியச் சொல்லும் போது குழந்தைகள் மறுக்காமல் அதைக் கேட்டு நடப்பது போல இறைவன் சொல்படி கேட்டு நடக்கும் வகையில் மனதை தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும்.

- திருமுருக கிருபானந்த வாரியார்


.

1 comment:

Sivamjothi said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி