Monday, August 15, 2011

விவாகரத்திற்காக நடக்கும் திருமணங்கள்!


குப்புசாமி: என்ன அப்பு, எங்கே காலையில் இருந்தே ஆளைக் காணோம்?

அப்புசாமி: அதை ஏன் கேக்ற குப்பு, ஒரு பஞ்சாயத்து.

குப்புசாமி: பஞ்சாயத்தா, எந்த ஆலமரத்தடில..

அப்புசாமி: விளையாடாதப்பா, குடும்பத்துல பஞ்சாயத்து.

குப்புசாமி: ஏன் என்ன பிரச்சனை?

அப்புசாமி: என் தங்கச்சி வீட்ல, அவ மவனுக்கும் மருமவளுக்கும் ஒத்துப்போகலை.  விவாகரத்து வரைக்கும் வந்திருச்சு. பிரிஞ்சாலே ஆச்சுன்னு மருமவ ஒத்தக்கால்ல நிக்கிறா.

குப்புசாமி: யாரு, இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சே, உன் தங்கச்சி மகன். அவனுக்கா பிரச்சனை.

அப்புசாமி: ஆமாம் குப்பு, லட்ச லட்சமா செலவு பண்ணி தாம் தூம்னு நடந்த கல்யாணம். ரெண்டு மாசத்துல இவங்க பிரியுவாங்கன்னு யாராவது கனவுலயாவது நினைச்சிருப்போமா?

குப்புசாமி: பிரியரதுன்னே முடிவு பண்ணிட்டாங்களா? பொண்ணு வீட்ல அந்தப் புள்ளைய கண்டிச்சு ஒண்ணும் சொல்லலியா?

அப்புசாமி: நீ வேற! பொண்ணோட அம்மாவும் பொண்ணு கூடவே சேந்துக்கிட்டு வீட்டுக்கு வந்திடு, அந்தப்பய வேணும்னா நம்ம வீட்ல வந்து குடியிருக்கட்டும். இல்லன்னா அவன் உறவே வேண்டாம்னு சொல்லுதாம்.

குப்புசாமி: இதென்னடா வம்பா போச்சு, பெண்ணைப் பெத்தவங்க அந்தப் பெண்ணை நல்லபடியா வாழ வெக்கணுமேன்னு கவலைப்படுவாங்க. இங்கே தலைகீழா இல்ல இருக்கு. சரி, என்ன தான்யா பிரச்சனை கொஞ்சம் விளக்கமா சொல்லேன்.

அப்புசாமி: குப்பு, தங்கச்சி பையன் இஞ்சினியர் படிச்சிருக்கான். ஐடில நல்ல வேலைல இருக்கான். மாசம் எழுதாயிரம் சம்பாதிக்கறான். 25 வயசு தான் ஆச்சு. ஒரே பையன். செல்லமா வளந்திட்டான். அவன் அம்மாவுக்கோ பையனுக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணிப் பாக்கனும்னு ஆசை. பண்ணினா அந்தக் கடமையும் முடிஞ்சி அவன் சந்தோஷமா இருப்பதைப் பார்த்து தானும் நிம்மதியா இருந்திரலாம்னு நினைச்சி பெண் தேடினாங்க.

இன்டெர்நெட்ல போட்டு வெச்ச உடனேயே ஒரு வரன் வந்தது. பார்த்து பேசினாங்க, பையன், பெண் இருவருக்குமே பிடிச்சுப் போச்சு. உடனே கல்யாணமும் நிச்சயம் பண்ணி ரெண்டே மாசத்துல கல்யாணமும் ஆயிடிச்சு. சொன்னா நம்பமாட்ட. இந்த காலத்துல ஒரு பையனுக்கு பெண்பார்க்க
ஆரம்பிச்ச ரெண்டே மாசத்துல கல்யாணமே நடந்திருச்சுன்னா எனக்கே ஆச்சரியாமா இருந்திச்சு.

ஆனா அதுவே பின்னாடி கண்ணு பட்டாப்ல போயிருச்சு. என் தங்கச்சி
மவன் இருக்கானே உண்மையிலேயே சாது. ஆனா அந்தக் குடும்பத்தையே ஜெயிலுக்கு அனுப்ப பாத்திட்டா விளக்கேத்த வந்த மருமவ.

குப்புசாமி: அடடா, ஏன்? யாருமேல என்ன தப்பு?

அப்புசாமி: உண்மையா சொல்லனும்னா என் தங்கச்சிய தான் நான் தப்பு சொல்லுவேன். பையன் இஞ்ஜினியரிங் படிச்சிருக்கான் அதனால அவனுக்கு இஞ்சினியர் பொண்ணத்தான் பார்ப்பேன்னு பிடிவாதமா இருந்தா. எத்தனையோ தெரிஞ்ச எடத்துல பெண்ணெடுக்கச் சொல்லியும், "ஒரே புள்ள. அதனால வரப்போறவ அவனுக்குச் சரிசமமா இருந்தா தானே அவனுக்கும் மதிப்பு, எங்களுக்கும் பெருமை" ன்னு சொல்லி இஞ்ஜினியர் பொண்ணா தேடினா பாத்துக்கோ!

குப்புசாமி: நல்லது தானேயா. படிச்ச பொண்ணுனா குடும்பத்தை நல்லா பாத்துக்கும், அவனுக்கும் உறுதுணையா இருக்கும்னு நினைச்சிருக்காங்க. என்ன தப்பு?

அப்புசாமி: அடப்போ குப்பு, இந்த காலத்துல படிச்ச பொண்ணுங்கதான் குடும்பத்தை நல்லா பாத்துக்கறதை விட கும்பத்தை உடைச்சு நிர்மூலப்படுத்தறதில முன்னாடி நிக்கறாங்கன்னு. படிக்காத பொண்ணுங்களுக்கும் விஷய ஞானம் எல்லாம் உண்டு. ஆனாலும் எத்தனை படிக்காத பொம்பளைங்க கோர்ட்டுப் படி மிதிக்கிறாங்கன்னு சொல்லு? விவாகரத்து வழக்கை எடுத்து பாரு, நல்லா படிச்சு நுனி நாக்குல இங்கிலீஷ் பேசறதுங்க தான் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்கு நடையா நடக்றாங்க.

கொந்தளித்தார் அப்புசாமி.

குப்புசாமி: சரி அப்பு, நீ கோபத்துல பேசற! எல்லா பொண்ணுகளும் அப்படியா இருக்காங்க? இப்ப வாய்ச்சவ என்ன லட்ஷனம். அதைச்சொல்லு.

அப்புசாமி: முக லக்ஷனத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆனா அகங்காரியா போயிட்டாவ. அது தெரியாம போச்சு. பொண்ணும் இஞ்ஜினியரிங் படிச்சிருக்கு. அதுவும் ஐடி கம்பெனில வேலை. இவனுக்கு குறைவில்லாம அவளுக்கும் டாலர்ல சம்பளம். ரெண்டு பேருமே
பெங்களூரு கம்பெனில வேலை பாக்கறதால கல்யாணம் முடிஞ்சி ரெண்டு
பேரையும் அங்கேயே தனிக்குடித்தனம் வெச்சோம். அப்புறம் தான் பிரச்சனையே அரம்பிச்சது.

குப்புசாமி:: ஏன், பையன் வீட்டுக்கு லேட்டா வருவானா? இல்லை பொண்ணை நல்லா கவனிச்சுக்கலையா?

அப்புசாமி: அட சும்மா இரு குப்பு, இப்பல்லாம் பொண்ணுங்கதான் பையன்களை கொடுமைப்படுத்தாம நல்லா கவனிச்சுக்க வேண்டியிருக்கு. நடந்ததை சொல்றேன் கேளு!

பொண்ணு எட்டு மணி வரைக்கும் தூங்குவாளாம். எழுந்த உடன் குளிச்சு அபீஸுக்கு கிளம்பிடுவாளாம்.

குப்புசாமி: அப்போ காபி டிபன்? சாப்பாடு?

அப்புசாமி: அந்தக் கூத்த கேளு, தூங்கி எழுந்த உடனே பையன் கிட்ட "காப்பி போட்டியா?"ன்னு கேட்டிருக்கு அந்தப் பொண்ணு. பையன் ரெண்டு கையையும் தூக்கிட்டு அம்மான்னு கதறி அழுதுகிட்டே வீட்டுக்கு வராத குறையா அதிர்ச்சி அடைஞ்சிட்டான்.

குப்புசாமி: என்ன அப்பு,  காப்பி தானே, ஆசையா பொண்டாட்டிக்கு போட்டுக் கொடுக்க வேண்டியது தானே!

அப்புசாமி: நீ வேற, அவ காப்பி போட்டியான்னு கேட்டு, இவன் அதிர்ந்து போனது மொத நாள்ல இல்லை. தனியா குடித்தனம் போய் ஒன்பது நாளா இவன் தான் காப்பி போட்டு கொடுத்திருக்கான். பத்தாவது நாளாவும் அவ கேக்கும் போது தான் பொறுமையில்லாம போய்ட்டான். டெய்லி இவன் தான்
காப்பி போடனுமாம். லேட்டாச்சுன்னா பொண்ணு கொச்சிக்கிட்டு கெளம்பிப் போய்டுமாம்.

காப்பி கப்பை கையில எடுத்துக்கிட்டு கார்வரைக்கும் போய் "குடிச்சுட்டு போம்மான்னு" குடுத்து வழியனுப்பி வெச்சிருக்கான்யா நம்ம பையான்.

அப்படியும் அவ இவன் மேல எந்த ஒரு மதிப்பும் குடுக்காம இருந்திருக்கா.

குப்புசாமி: அப்போ சமையல் சாப்பாடு எல்லாம்!

அப்புசாமி: ஆங், அப்படி கேட்டுத் தெரிஞ்சிக்கோ. தினமும் காலை டிபன் இவனே சமைச்சி சாப்டுப்பான். மத்யானம் கேண்டீன். ராத்திரி வந்து தான் கூத்தே நடக்கும்.

குப்புசாமி: ஓ, அப்ப ராத்திரி சந்தோஷமாத்தான் இருந்திருக்காங்க.

அப்புசாமி: அடச்சீ., முழுசா கேளுயா! ராத்திரி வீட்டுக்கு வந்ததும் அந்தப் பொண்ணு இவனப்பாத்து ஏதாவது சமச்சு வெச்சியான்னு கேக்குமாம். இவனுக்கு தலையே சுத்திப் போய்டுமாம்.

"இந்தாம்மா, நீ எப்டி உங்க வீட்ல செல்லமா வளந்தியோ அது மாதிரிதான் நானும். எங்கம்மா எனக்கு காப்பி டீ போட சொல்லிகொடுத்திருக்காங்க. சாதம் வடிப்பேன். ஆனா சமையல் பண்ணி பந்தி பரிமாறுகிற அளவுக்கெல்லாம் கத்துதரல. எனக்கும் அது தேவைப்படலை. வந்ததுலேருந்து என்னமோ நீ ஆம்பளை மாதிரி அதிகாரம் செய்யறதும் என்னை பொம்பளை மாதிரி நடத்தப்பாக்கறதுமா இருக்கியே என்ன விஷயம்? உனக்கு சமைக்கத் தெரியாதா இல்ல தெரிஞ்சாலும் செய்ய மாட்டியான்னு?" கோவமா
கேட்டிருக்கான்.

அவளும் பதிலுக்கு "எனக்கும் தெரியாது. நீ சமைச்சா சப்பிடலாம். இல்லன்னா
நான் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடறேன். உனக்குப் பிடிச்சா வா இல்ல என்னமோ பண்ணு" ன்னு சொல்லிட்டு போய்டறாளாம்.

குப்புசாமி: அட்ப்பாவமே!

அப்புசாமி: கேளு, ஏண்டி இப்டி இருக்க. "படிச்சு வேலைக்குப் போற எல்லாப்பொண்ணுங்களும் உன்னை மாதிரியா இருக்காங்க. குடும்ப பொண்ணா லெட்சனமா வீட்ல சமைச்சி சாப்டா என்ன குறைஞ்சா பொய்டுவே?" ன்னு வாக்குவாதம் துவங்கிடிச்சு.

குப்புசாமி: அவன் கேக்றதும் ஞாயம் தானேயா? அவ என்ன சொன்னா?

அப்புசாமி: "இத பாரு, உனக்கு சமைச்சு போட்டு, காப்பி குடிக்கவெச்சு, உன் துணிமணி துவச்சுப் போடவா எங்கம்மா என்ன வளத்தாங்க. உங்க அம்மா உனக்கு சமைச்சிப் போட்டு உன்னைப் பாத்திக்கிட்ட மாதிரியே நானும் நடந்துக்கனும்னு எதிர்பாக்காத?"  ன்னு வெடுக்குனு கேட்டுடிச்சாம்.

இவன் "நீ மட்டும், புருஷனா இருக்கறவன் உங்கப்பாவை மாதிரியே சம்பாதிச்சுப்போடனும்னு எதிர்பாக்கலையா? உனக்கு மட்டும் உங்கப்பா மாதிரி சம்பாதிச்சுப் போடற புருஷன் வேணும். எனக்கு எங்கம்மா மாதிரி எனக்கு சமைச்சுப் போட்டு கவனிச்சிக்கற பொண்டாட்டி வேணாமா?"

அவளும் பதிலுக்கு "அதுக்காக, உனக்கு இஞ்ஜினியரிங் படிச்ச சமையல்
காரி வேணுமா?" ன்னு கேட்டிருக்கா

இவனும் விடலையாம் "உனக்கு சமைக்கற புருஷன் வேணும்னா எழுதப்படிக்காத சமையல்கார ஆம்பளை எவனையாவது கட்டிக்க வேண்டியது தானே. உன்ன ஒக்கார வெச்சு சமைச்சு போட்டிருப்பான்ல, உனக்கு மட்டும் இன்ஞ்ஜினியரிங் படிச்சு ஐடி கம்பெனில லட்சலட்சமா சம்பளம் வாங்கி சொந்த வீட்டுல குடியிருக்கிற பணக்கார சமையல்காரன் வேணுமா எவ்வளோ திமிர்டி உனக்கு" ன்னு கேட்டானாம்!

அவ்வளோ தான்! இப்படி ஆரம்பிச்ச வாக்குவாதம் சண்டையாகி மனக்கசப்புல போய் முடிஞ்சு ஒருத்தருக்கொருத்தர் புடிக்காம போய்டிச்சி.

ஒரு நாள் என் தங்கச்சி புள்ளை கூட ஒரு வாரம் இருந்திட்டு வரேன்னு ஊருக்குப் போனவ பேயறஞ்சாப்பில ஆயிட்டா. "என் பையன் பள்ளிக்கூடம் போறகாலம்தொடங்கி இன்னிவரைக்கும் அவன் கேக்காமலே வேண்டியத
கையிலெ எடுத்துக் கொடுத்து ராஜா மாதிரி வளத்தேன். இப்ப திமிர் பிடிச்ச எவளோ ஒருத்திக்கு வேலைகாரனா இருக்கறதப் பாக்க மனசு பொறுக்குமான்னே" ன்னு கேட்டு எனக்கு போன் பண்ணினா பாரு, எனக்கு கண்ணீரே வந்திடுச்சு.

கண்களில் கசிந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டார் அப்புசாமி.

குப்புசாமி: சரிப்பா, யாரவது போய் பேசிப்பாக்கலாம்ல. ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீடுகள்ள ராத்திரி கணவன் காய்கரி நறுக்கி வெச்சிருவான். காலைல அதை உபயோகிச்சு மனைவி சமையல் செஞ்சிடுவா. அவ சமைக்கிற நேரத்தில கணவன் குழந்தைகளை ஸ்கூலுக்குக்
கிளப்பிடுவான். இப்படி வேலைய பிரிச்சி செஞ்சிக்கறது காலத்தோட தேவையா ஆயிடுது இல்லையா? அது மாதிரி இந்த ரெண்டு பேரையும் சமையல் வேலையோ இல்லை மத்த எதுவாயிலும் சரிசமமா பகிர்ந்து செஞ்சி வாழுங்கன்னு எடுத்துச் சொல்லலாமில்லையா?

அப்புசாமி: குப்பு, நான் முதலிலேயே சொன்னேன். நம்ம பையன் சாதுன்னு. அவன் மாட்டேன்னா சொல்றான். ஆனா அந்தப் புள்ள சமையல் கட்டுக்குள்ள போய் சமைச்சுப் போடற வேலையைச் செய்யறதே தன் கவுரவத்துக்கும் self ego வுக்கும் குறைச்சல்ன்னு நினைக்குதாம்பா.

தெரியாம தான் கேக்கறேன் குப்பு, பொண்ணுங்க படிச்சி நாலு காசு சம்பாதிச்சிருச்சின்னா சமையல் செய்யறது அவமானமான வேலையாயிடுமா என்ன? நம்ம பையன் சமைக்கறது ஆம்பளைக்கு அவமானம்னு நினைச்சி, சமையல் கட்டுக்குள்ள போகாம இருந்து, அதனால பெண்ணும் போட்டிக்கு அப்படி பண்ணினா பையனுக்காவது புத்தி சொல்லலாம். ஆனா
நம்ம பையன் காப்பி போட்டு காருக்கே கொண்டு போய் குடுக்கறவன். அவங்கிட்ட இந்த மாதிரி திமிர் பிடிச்சி ஒரு பொண்ணு நடந்துகிட்டா யார்மேல தப்பு நீயே சொல்லு?

குப்புசாமி: சரி பெண்ணோட அம்மாவை கூப்பிட்டுச் சொல்லலையா?

அப்புசாமி: நீவேற, அந்தம்மா "எங்களுக்கு இல்லாத வசதியா? உங்க பையனை வேணும்னா எங்க வீட்டுக்கு அனுப்புங்க. நாங்க வீட்டோட மாப்பிளையா வெச்சிக்கிறோம்! எம்பொண்ணுக்கென்ன தலையெழுத்தா ஒங்க பையனுக்கு சமைச்சுப் போட? அப்டீன்னு கேக்குதாம்.

குப்புசாமி: அடடா, பிரச்சனையே சமைலால தான் போலருக்கே.

அப்புசாமி: நீ வேற, அந்தப் பையன் இத விட கொடுமைய அனுபவிச்சிருக்கான்.

குப்புசாமி: என்ன சொல்ற அப்பு?

அப்புசாமி: ஆமாம்பா, கல்யாணம் ஆகி ரெண்டு மூணுவாரம் பொகைச்சல்ல இருந்தாலும் கொஞ்சம் சுமூகமா தான் இருந்திருக்காங்க. ஆனா இந்தப் பொண்ணு , நம்ம பையன தொடவிடலையாம். உண்டாயிடிச்சின்னா அப்பறம் என் வாழ்க்கை கெட்டிடும். அவசரப்பட்டு கைவெக்காத" ன்னு சொன்னாளாம் பாத்துக்கோ.

குப்புசாமி: அடப்பாவமே! அப்பறம் எதுக்கு தான் இந்த மூதேவி ஒரு பையனை கல்யாணம் பண்ணிச்சு. பிரியனும் முடிவு பண்ணியே கட்டிக்கிட்ட மாதிரில்ல இருக்கு.

அப்புசாமி: அதுமட்டுமா, நாள் கிழமைன்னு கோவிலுக்கு வாடீன்னா வரமாட்டாளாம், பொட்டு வெச்சிக்க மாட்டாளாம், பூ வாங்கிகுடுத்தா இந்த வாடையே எனக்குப் பிடிக்காதுன்னு தூக்கி எறிஞ்சிடுவாளாம். இப்படி எதுக்குமே ஒத்துவராத ஒரு அடங்காப்பிடாரியா இருந்திருக்கான்னா பரேன்.

சரி அவளுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்குவோமேன்னு பையன் அவ கூப்பிட்டதுக்காக சினிமாக்குப் போயிருக்கான். அவ அனிமேஷன் படம் தான் பிடிக்கும்ன்னு கூட்டிட்டு போயிருக்கா. "பொம்மை படத்தை ரெண்டு மணிநேரம் அசையாம பாக்க நான் என்ன கொழந்தையா மாமா?"
ன்னு என்கிட்ட கேக்றான்பா பையன். எனக்கு என்ன தான் பதில் சொல்றதுன்னே தெரியலை.

குப்புசாமி: அட கஷ்டகாலமே, இப்போ என்ன தான் முடிவாச்சு,

அப்புசாமி: குடும்பத்துக்கேத்த பொண்ணா நடந்துக்கலைன்னு என் தங்கச்சி மருமவள திட்டவும், உங்க பையனும் வேணாம், ஒன்னும் வேணாம்னு மருமவ சாமன் செட்டை தூக்கிட்டு அவ வீட்டுக்கே கிளம்பிட்டா. ராத்திரியோட
ராத்திரியா அவ அம்மாவை வரவழைச்சு நகை நட்டு ஒன்னு விடாம எல்லாத்தையும்  எடுத்திக்கிட்டு போயிட்டான்னா பாறேன்.

குப்புசாமி: இவ்ளோவெல்லாம் பொண்ணுங்க செய்றாங்களாப்பா? என்னால நம்பவே முடியல.

அப்புசாமி: நான் கூட இந்தக்கால பொண்ணுங்க ரொம்ப அராஜகமாவும் திமிராவும் நடந்திக்கிறாங்கன்னு பலபேர் சொல்லும் போது நம்பல குப்பு. ஆனா எங்க வீட்லேயே ஒரு சம்பவம் நடந்த போது அதை இப்போ நம்பறேன்.

அத்தோட விட்டாளா? இன்னும் கேளு...! வீட்டை விட்டுப் போயிட்டவ விவாகரத்து வேணும்னு கேட்டா குடுத்திட்டு நிம்மதியா போயிருக்கலாம். ஆனா அவளோ, போலீஸ்டேஷன்ல போயி வரதட்சனை கேட்டு கொடுமை பண்ணினாங்கன்னு என் தங்கச்சி குடும்பம் மேல கேஸ பொட்டுட்டா!

குப்புசாமி: ஆத்தீ, இதென்னய்யா கூத்து. புடிக்கலைன்னா ஒதுங்கிக்க வேண்டியது தானே. அதுக்கு ஏன் கேஸ் குடுக்கனும்.

அப்புசாமி: அதான்ய இந்த காலத்துப் பொண்ணு! பின்ன, பையன் குடும்பம் தான் நமக்கு வேணாம்னு ஆயிடிச்சு, கல்யாணத்துக்கு செலவழிச்ச காசை ஈடு செய்ய அவங்களை அழவெச்சு பழிய தீத்துக்க வேண்டாம். அதான் காரணம்.

குப்புசாமி: அய்யய்யோ! இந்த வரதட்சினைகெதிரான சட்டம் 498A வை பொண்ணுங்க தவறா உபயோகப்படுத்தறாங்கன்னு நிறைய நியூஸ் வருதே.. இப்படித்தானா?

அப்புசாமி: அப்படியே தான். வரதட்சினைக் கொடுமைச் சட்டம் உண்மையிலேயே இப்போ பிடிக்காத புருஷன்மாறையும் அவங்க குடும்பத்தையும் அடியோடு சின்னாபின்னப்படுத்தி அழிக்கத்தான் பயன்படுது. அதுவும் சுலபமா. ஒரு விசாரணையும் வேண்டாம். யார் நல்லவர், யார் கெட்டவர்ன்னு பாக்க வேண்டாம். பொம்பளைங்க கேஸ்குடுத்தா பிடிச்சு உள்ள போட்டுருவாங்க!

குப்புசாமி: அப்பொ உன் தங்கச்சி..

அப்புசாமி: கூட்டிட்டு போனாங்களே, போலீஸ் ஸ்டேஷனுக்கு. என் தங்கச்சி, தங்கச்சி புருஷன், பையன் எல்லாரும் ஒருநாள் விசாரணைங்கர பேர்ல ஸ்டேஷன்லயே இருந்தாங்க. என் தங்கச்சி புருஷன் கொஞ்சம் ஆளு பேறு தெரிஞ்சவர்ங்கறதால ஸ்டேஷன்ல தங்க வெக்காம அன்னிக்கு அனுப்பிட்டாங்க. இப்போ பெயில்ல தான் இருக்காங்க.

குப்புசாமி: ஐயய்யோ! விஷயம் வெளிய தெரிஞ்சா பையனோட வேலையே போய்டுமே. அவன் எதிர்காலமே பாழாயிடுமேயா!

அப்புசாமி: அதப்பத்தி அந்த பிசாசு பொண்ணுக்கு என்ன கவலை. அழகு, படிப்பும், பணமும் இருக்குங்கற திமிர்ல அவ இன்னும் பந்தாவா வேலைக்கும் போயிட்டிருக்கா. சீக்கிரத்தில அடுத்த புருஷனையும் தேடினாலும் தேடிடுவா? ஆனா நம்ம புள்ளையோட வாழ்க்கை? நினைச்சாலே பயமா இருக்கு.

குப்புசாமி: யப்பா, நீ சொல்றத கேக்கும் போது வயித்த கலக்குது அப்பு!

அப்புசாமி: ம், என்ன செய்ய எல்லாம் நம்ம போதாத நேரம். பெண்ணியம், பெண் சுதந்திரம், ஆணும் பொண்ணும் சமம், அது இதுன்னு பேசி பணம் வந்திட்டா ஆம்பளையா ஒரு அடிமை தனக்கு இருந்தா போதும், புருஷன் வேண்டாம்னு பொண்ணுங்க நினைக்கிற அளவுக்கு பொம்பளைங்க மனச திமிரால நிரப்பி இறுக்கமாக்கிட்டாங்க. குடும்பம்ங்கிற அமைப்பையே மதிக்காம தான்தோனித்தனமா திரியறது தான் பொம்பளைங்க சுதந்திரம்ன்னு இந்தக்கால பெண்கள் மனசுல பதிந்ஞ்சு போச்சு. அதனோட விளைவு இப்போ
அப்பாவி ஆம்பளைங்களும் அவங்க குடும்பத்தினரும் அனுபவிக்கறோம்.

குப்புசாமி: மனச தளரவிடாத அப்பு! நீ தைரியமா இருந்தாதானே தங்கச்சிக்கும், மருமவனுக்கும் ஆறுதல் சொல்ல முடியும். இதுக்கு தான் அந்த காலத்தில தெரியாத இடத்துல பெண்ணோ பையனோ எடுக்க மாட்டாங்க. முடிஞ்சவரை சொந்தத்திலேயே சம்பந்தம் முடிச்சிருவாங்க. கோபதாபம் வந்தாலும் நம்மவீட்டுப் புள்ளதானேன்னு விட்டுக்கொடுக்கவோ இல்லை, தட்டிக் கேட்கவோ உரிமையா செயல் பட முடியும். ஒருதருக்கொருத்தர் ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும் போது சரி என்னதான் இருந்தாலும் நம்ம மனுஷங்க தானேன்னு அனுரிச்சுப் போற மனசு வரும்.

ஆனா இந்த காலத்துல யாரு இதெல்லாம் யோசிக்கறாங்க. பணத்துக்கும் பணத்துக்கும் பொருத்தம் பாக்கறாங்க. சர்டிபிகேட்டுக்கும், சம்பளத்துக்கும் தான் பொருத்தம் பாக்கறாங்க. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தம் பாக்கறது இல்லையே. அதான் இந்த கஷ்டமெல்லாம்.

"சரி அப்பு. நீ வருத்தப்படாத. அவங்களுக்கு தைரியம் சொல்லு. சட்ட உதவி ஏதாவது வேணும்னா நம்ம வக்கீல் நண்பர்கிட்ட சொல்லி நான் ஏற்பாடுபண்றேன். சரியா!" என்று அப்புவிற்கு ஆறுதல் கூறி தேற்றினார் குப்புசாமி.

இருவரும் கனத்த மனதுடன் அவரவர் இல்லம் நோக்கி நடந்தனர்.

குப்புசாமி இல்லவாசலுக்கு அருகே வரும் போது அவரது வீட்டுக்குள் இருந்து ஐந்தாறு பெண்கள் இறங்கி வெளியே வந்தனர். குப்புசாமியின் மனைவி இதோ இவர்தாங்க என் வீட்டுக்காரரு என்று வேறு கையைக் காட்டினார்.
திருதிருவென முழித்த குப்புசாமியை வந்த பெண்கள் சூழ்ந்து கொண்டனர்.

ஒரு பெண் முன்னே வந்து ஒரு நோட்டீஸை குப்பு சாமியின் கையில் திணித்துப் பேசலானாள்.

"சார், நாங்க இந்த ஏரியா மாதர் சங்கத்தில இருந்து வர்ரோம்."

குப்புசாமிக்கு சுற்றென்று ரத்தஓட்டம் தலையில் ஏறியது.

"பெண்ணிய விழிப்புணர்ச்சிக்காக வீடுவீடா பெண்கள் கிட்ட பேசிட்டு வர்ரோம். பெண்களின் நல்வாழ்வும் சுதந்திரமும் பற்றி வீட்டில் இருக்கும் ஆண்களும் தெரிஞ்சிக்கறது அவசியம் இல்லையா. அதான் உங்ககிட்ட பேசறோம்"

குப்புசாமியின் கண்கள் சிவந்தன. "அடிப்பாவிகளா என் குடும்பத்தையும் கலைக்கப்போறீங்களா?" மனதிற்குள் முணுமுணுத்தார்.

"சார், இந்த காலத்தில ஆணும் பெண்ணும் ஒண்ணு தான்"

அவ்வளோ தான் குப்புசாமிக்கு வந்ததே கோபம்.

"ஆணும் பெண்ணும் ஒண்ணுதான்னா, ஒண்ணுக்கு போறதுக்கும் ஒன்னா போகவேண்டியது தானே? எதுக்குடீ அதுக்கு மட்டும் தனித்தனி ரூம்ல
போறீங்க?"

"சார்...!!"

"என்னடீ, சாரு மோரு, ஆணுக்கும் பொண்ணுக்கும் தனித்தனியான பாலுடல் இருக்கு. தனித்தனியான பாலுடலுக்கு தனித்தனி பாலுணர்ச்சி இருக்கும். ரெண்டு பாலருமே சக பாலரிடம் பேசும் போது ஒருமாதிரியாகவும் எதிர் பாலரிடம் பேசும் போது வேறுமாதிரியாகவும் தான் நடந்துப்போம். ரெண்டு பேருக்குமே புத்தி சிந்தனை ஆளுமைன்னு எல்லாத்திலேயும் வித்தியாசம் இருக்கு. இதெல்லாம் இயற்கை. ஆனா வீராப்புக்காகவாவது, ஆணும் பெண்ணும் ஒண்ணுன்னு சொல்லிச் சொல்லி அடுத்த தலைமுறைப் பெண்கள் யாரையுமே ஆம்பளைங்கள மதிக்கவிடாம செய்யறது மட்டுமில்லாம, இன்னிக்கு என் வீட்டுக்குளேயே புகுந்து குழப்பத்தை உண்டு பண்ணிருக்கீங்க."

"இல்ல சார்..அது வந்து..."

"உங்களையெல்லாம் தெருவில நடமாட விட்டா நீங்க அமைதியா இருக்கிற கொஞ்ச நஞ்ச குடும்பத்தையும் கெடுக்கத்தான்டீ போறீங்க! உங்களை
என்ன பன்றேன்னு பாரு" என்று ஆத்திரம் முட்ட கீழே இடமும் வலமும் தேடி தடியொன்றை கையிலெடுக்க..

அலறியடித்துத் தெறித்து ஓடினர் பெண்ணியப் பேய்கள்!

பின்குறிப்பு: இதைப் படித்தவர்கள் வீட்டுக்கதவை மூடிவையுங்கள். ஓடியவர்கள் அவசரத்தில் உங்கள் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது.

ஜாக்கிரதை!
.

10 comments:

saravana kumar said...

திரு.ராம் அவர்களே.....
எனது நெருங்கிய உறவினர் குடும்பத்திலும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. படிப்பு பொருத்தம் மட்டுமே பார்த்து வீணாய்ப்போன திருமணம் அது.அந்த தம்பதிகளின் மணவாழ்க்கை குலைந்ததில் பெண் வீட்டாருக்கே அதிக பங்கு.... நமது கலாச்சாரத்தின் ஆணி வேறான குடும்ப அமைப்பை சீர் குலைக்க வேண்டும் என்ற அந்நிய சக்திகளின் தூண்டுதலால் கொண்டு வரப்பட்டதே குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம்....கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாட்டை தூண்டி , சண்டையாகவும், பின்பு நிரந்தர பிரிவாகவும் மாற்ற இந்த சட்டம் வகை செய்கிறது.
நம் கையைக்கொண்டே நமது கண்ணை குத்தும் இது போன்ற சக்திகளை அடையாளம் காணும் அறிவு நம் மக்களுக்கு வர வேண்டும்......

hayyram said...

உண்மை சரவண குமார். குடும்பங்களை உடைக்கவென்றே சட்டங்களை இயற்றி இருக்கிறார்கள் என்பது தான் தெளிவு. 100 கோடிப்பேரில் சில 100 பேருக்கு நடந்த வரதட்சனைக் கொடுமைக்காக ஒட்டு மொத்த ஆண்களுக்கெதிராகவும் வரதட்சனைக் கொடுமைச் சட்டத்தை இயற்றி ஆண்களையும் அவர்களது குடும்பத்தையும் சீர்குலைக்க வழிசெய்து கொடுத்திருக்கிறார்கள்.

அதே பொலத்தான், சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்று பொய் பிரச்சாரம் செய்து இந்தியர்களின் நெருக்கமான குடும்ப கட்டுக்களை உடைக்கப்பார்க்கிறார்கள். எதைச் சொன்னாலும் நம்பிவிடும் ஆட்டு மந்தை முட்டாள் கூட்டம் இதையும் நம்பிவிட்டு சொந்தக்காரர்கள் ஒன்றினையாமல் சுனாமி அலையில் உறவுகளாய்க் காணாமல் போகிறார்கள்! படித்தவர்களும் இவற்றை அப்படியே ஆராயாமல் நம்பும் முட்டாள்களாக இருப்பது தான் வேதனை! படிப்பு புத்தியை வளர்க்கவில்லை!

saravana kumar said...

திரு.ராம் அவர்களே...

மேலும் ஒரு விஷயம்......இந்த பெண்ணுரிமை வியாதிகள் '' பெண் '' என்று குறிப்பிடுவது மனைவியை மட்டும் தான்.....ஒரு ஆணின் தாய்,தங்கை, அக்கா,பாட்டி போன்றோர் இவர்கள் கணக்கில் பெண்களே இல்லை.....மேற்குறிப்பிட்ட சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படும் இவர்கள் ,பெண்களாக இந்த குருட்டு சட்டத்தின் கண்களுக்கு தெரிவதில்லை போலும்.......

நம் சமூக அமைப்பை பாதிக்கும் இன்னொரு சட்டம் கருணாநிதியால் 1989-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெண்கள் சொத்துரிமை சட்டமாகும்......மேலோட்டமாகப் பார்த்தால் பெண்களுக்கு தந்தையின் சொத்தில் சம பங்கு வழங்குவதால் , இது பெண்களுக்கு நன்மை செய்யும் திட்டம் போல் தோன்றும்.....உண்மை நிலை அப்படியல்ல......

நம் சமூக அமைப்பில் குடும்பத்தலைவன் ஆண் தான்....ஒரு வேளை குடும்பத்தலைவன் இறந்து விட்டால், அந்த குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை மூத்த மகன் ஏற்கிறான்.......தந்தை ஏதாவது கடன் வைத்து விட்டு சென்றிருந்தால் , அதனை அடைக்கும் பொறுப்பு அவன் தலையில் விழுகிறது.....சகோதரிகளை திருமணம் செய்து கொடுப்பது முதல் , இறுதிவரை சீர் செய்வதும் அவனே....இரண்டு மூன்று சகோதரிகள் இருந்தால், அவன் தனக்கு திருமணம் செய்யும் போது நடு வயது கடந்து விடும்......ஒரு வேளை தாய்,தந்தை உயிரோடு இருந்தாலும் ,வயதான காலத்தில் அவர்களை பராமரிக்கும் பொறுப்பு ஆணை சார்ந்தது......
ஆக , குடும்ப பாரம், பொருளாதார சுமைகள் அனைத்தையும் ஆண் தாங்க வேண்டும்.....தந்தையின் சொத்தில் மட்டும் சகோதரிக்கு சமபங்கு தரவேண்டும்.....என்ன நியாயம்...?
நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்ட இந்தக்காலத்தில் , பெண்கள் தானாகவே ஆசைப்பட்டோ, கணவன் வீட்டாரால் தூண்டப்பட்டோ தந்தையின் சொத்தில் பங்கு கேட்டுப்பெறுகின்றனர்....இதனால் நாளாக நாளாக சகோதர பாசம் குறைந்து வருகிறது.......வயதான காலத்தில் பெற்றோரை யார் பராமரிப்பது என்ற பிரச்சினை எழுகிறது.....

நம் குடும்ப அமைப்பு சிதைய இது போன்ற சட்டங்களே காரணமாக அமைவது வேதனை.......... ‌

gujjan said...

சரவணகுமார் தாங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் உண்மை. குடும்ப பாரத்தை ஏற்பது மட்டும் ஆண்மகன் ஆனால் சொத்தில் பெண்ணுக்கு பங்கு கொடுக்க வேண்டுமாம். என்ன நியாயம் இது? இங்கே நான் மற்றொரு உண்மையினையும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

அதாவது சாத்திரப்படி பெண்ணானவள் எப்போது திருமணம் செய்து கொண்டு வேறொரு வீட்டிற்கு சென்று விடுகிறாளோ அப்போதே அவள் புகுந்த வீட்டின் பெண்ணானவளாகி விடுகிறாள். தனது முன்னோர் செய்த பாவங்களின் பலனை அனுபவிக்கப் போவது அவளல்ல. அவளது பிறந்த வீட்டின் ஆண்மகன் தான். எனது உறவினர் ஒருவருக்கு குழந்தை பேறு தள்ளிக் கொண்டே போனது. பிறகு ஒருவர் மூலம் தெரிய வந்தது அது அவரின் முன்னோரின் கரும வினையால் தான் என்று. ஆனால் அவரின் சகோதரி திருமணமானவுடன் பிள்ளைப்பேறு பெற்றுவிட்டாள். பிறகு அந்த உறவினர் பாவ நிவர்த்தி செய்ய காசி இராமேசுவரம் என பல இடங்கள் சென்று யாகம் வளர்த்து அதன் பிறகே பிள்ளைப் பேறினை அடைந்தார்.

இங்கே நான் சொல்ல வருவது என்னவென்றால் முன்னோர் செய்த நல்வினை தீவினை இவற்றின் குருமபலனை அனுபவிப்பது ஆண்மகன் தான். பெண்ணல்ல. முன்னோரின் பாவத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கும் ஆண்மகனுக்கே அவர்களின் சொத்தையும் முழுமையாக அனுபவிக்க தகுதியுடையவன்

hayyram said...

சரவண குமார், மற்றும் குஜ்ஜன் கூறுவது முற்றிலும் உண்மை. பல வீடுகளில் நான் பார்த்திருக்கிறேன், ஆண் மகன் பணத்திற்கு கஷ்டப்படும் ஜீவனம் நடத்தினாலும் அவன் தாய் தந்தையரை அவன் தான் காப்பாற்ற வேண்டும். அவனது சகோதரிகள் நல்ல வசதியான குடும்பத்தில் வாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பெற்றோர்களை, 'சகோதரன் கஷ்டப்படுகிறானே' என்று தாங்களே பார்த்துக் கொள்வது கிடையாது. அப்போது மட்டும் அவர்கள் அடுத்த வீட்டுப் பெண்களாக நின்று பேசுவார்கள். ஆனால் பெற்றோரைப் பார்க்கும் பொறுப்பு ஏழையானாலும் ஆண் தான் ஏற்க வேண்டும். தந்தைக்கோ தாய்க்கோ சொத்து இருந்தால் மட்டும் அதை வாங்கிக்கொள்ள மகள்களும் மாப்பிள்ளைகளும் போட்டி பொட்டுக்கொண்டு ஓடி வருவார்கள்.

இரண்டாவது, பெரும்பாலும் பிறந்த வீட்டின் எஞ்சிய சொத்துக்கள் ஒன்றும் கருணாநிதி சட்டம் கொண்டு வரும் அளவிற்கு மகள்களுக்கு கிடைக்காமல் இருந்ததில்லை நம் குடும்பங்களில். காரணம் தாய் இறந்த பின் தாயின் நகைகளை மகள்கள் வந்து பங்கு போட்டுக் கொள்வதை பல குடும்பங்களில் கண்டிருக்கிறேன். அசையாச் சொத்துக்களில் ஆண்களின் பங்கு இருக்கும். இவை ஒரு புரிதலின் அடிப்படையிலும் பாசத்தின் அடிப்படையிலும் பங்கு போடப்படும். ஆனால் கருணாநிதியின் இந்த பெண்ணிய ஜால்ரா சட்டத்தால் பாசத்திற்கு அப்பாற்பட்டு மகள்கள் சொத்துக்காக மல்லுக்கு நிற்பதை பார்க்க முடிகிறது!

hayyram said...

/// தனது முன்னோர் செய்த பாவங்களின் பலனை அனுபவிக்கப் போவது அவளல்ல. அவளது பிறந்த வீட்டின் ஆண்மகன் தான். ///

ஆம் , உறுதியாகத் தெரியாவிட்டாலும் அனுபவ ரீதியாக இது சரியெனவே படுகிறது.

saravana kumar said...

திரு.ராம் அவர்களே......
எங்கள் கொங்குப்பகுதி மரபில், தாயின் பெயரில் உள்ள சொத்துக்கள் மகளையே சாரும்......அது மட்டுமல்ல ....தாயின் மறைவுக்குப் பிறகு தாய் அணிந்திருந்த நகைகள் , வீட்டில் உள்ள பாத்திரம் பண்டம் எல்லாம் மகள்களுக்கே சொந்தம்.......மரபு , பண்பாடு , கலாச்சாரம் , இவையெல்லாம் என்னவென்றே தெரியாத அறிவிலிகள் கையில் அதிகாரம் கிடைத்தால் தேசத்தின் கதி குரங்கு கை பூமாலை தான்......

498ஏ அப்பாவி said...

test

498ஏ அப்பாவி said...

ஆம் இத​போல் பல குடும்பஙகள் சீரலிகின்றது இதற்கு இந்திய சட்டங்கள் ​பெண்க​ளை பாதுகாக்கின்​றேன் என்ற ​பெயரில் வசதிப​டைத்த மருமகள்க​ளை மட்டும் பாதுகாக்கின்றது...

ஒய்விருந்தால் கீழ்கண்ட வ​லைபூ​வை படித்துப்பார்கவும்

http://ipc498a-victim.blogspot.com

Sundar Vilayannur said...

The thread talks only about families with sons and not families who have only girls as children.