நம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது 'சொந்த பந்தத்துல நல்ல வரன் இருந்தா நம்ம புள்ளைக்கு பாத்திரலாம்' என்பது தான்.
சொந்தத்தில் திருமண பந்தத்தை பெரியோர்கள் நிச்சயிக்க விருப்புவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சம்பந்திகள் சொந்தங்களாக இருப்பதால் உரிமையுடன் பழகமுடியும். சங்கோசமில்லாமல் புழங்க முடியும். மேலும் இரு குடும்பத்தினர் ஒருவரின் நிறை குறைகளை மற்றவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டே உறவாடுவதால், பின்னாட்களில் தம்பதிகளுக்குள்ளோ அல்லது அந்தக் குடும்பத்தினருக்கிடையிலோ உண்டாகும் பிரச்சனைகளின் தன்மை உணர்ந்து அதற்கேற்றபடி அவர்களுக்கு உதவுவதற்கும் அல்லது குறைந்த பட்சம் பிரச்சனைகளைத் பேசித் தீர்க்கவும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.
பழைய கால பாசப்பரிமாற்ற நினைவுகளே பல நேரங்களில் பிரச்சனைகளைத் தீர்க்க உதவிவிடும்.
இப்படி பல நெகிழ் தன்மைகள் இரு வீட்டாருக்கும் இடையில் இருப்பதால் நல்ல நாள் பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்று உறவுகள் மகிழ்ந்து வாழ, வருடங்கள் கடப்பது தெரியாமல் வாழ்க்கை ஓடிவிடும். மேலும் திருமணம் முடித்துக் கொள்ளும் தம்பதிகள் இளம் பருவத்தில் அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களது இளமைக்கால நினைவுகள் அவர்களின் வாழ்க்கையில் நெருக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. ஒரே மாதிரியான குழந்தைப் பிராயத்து நினைவலைகள் அவர்களின் நெருக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பாசத்தையும், உரிமையையும் நெருக்கமாக வெளிப்படுத்திக் கொள்வர். பிறக்கும் குழந்தைகள் மீது அப்படியே அந்த பாசம் பிசகின்றி செலுத்தப்படும்.
இப்படி பல்வேறு நன்மைகள் இருப்பினும், திடீரென மருத்துவ ரீதியாக எனக்கூறி ஒரு பெரிய புரட்டு இடைக்காலத்தில் பரப்பப்பட்டது. அது நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறந்து விடும் என்பதாகும். அதெப்படி? நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தாலே பிறக்கும் குழந்தை எல்லாம் ஊனமாகத் தான் பிறந்து விடுமா என்ன? ஏன் இந்த பித்தலாட்டப் பொய் பரப்பப் பட்டது?
இந்தக் கூற்றை புரட்டு, பித்தலாட்டம் என்று கூறலாமா என உங்களுக்குச் சந்தேகம் வருகிறது. சந்தேகமே வேண்டாம், அது வெறும் புரட்டு தான். பித்தலாட்டம் தான். காரணம் ஒரு கிராமத்திற்குச் சென்று பார்த்தால் அந்த கிராமத்தின் சுற்றுவட்டாரக்காரர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் ஒருவருக்கொருவர் மாமன், மச்சான், சகலை, பங்காளி என சொந்தக்காரனாக மட்டும் தான் இருப்பார்கள். அனைவருமே முறைப் பெண், ஒன்றுவிட்ட அத்தைப் பெண், சின்ன மாமன் மகன் என்று ஏதாவது ஒரு உறவில் மணமுடித்து அப்படியே உறவுக்குள்ளேயே திருமணங்கள் செய்து கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். அப்படி இருப்பதால் மட்டுமே ஒரு கிராமத்திற்குள் இருக்கும் குறிப்பிட்ட பிரிவினர் என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் யாவரும் சொந்தபந்தங்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டாகிறது.
அப்படி ஒரு கிராமமே சொந்தத்தில் திருமணம் செய்து பங்காளிகளாக வாழும்போது அவர்கள் அத்தனை பேருமே ஊனமுற்றவர்களாகவும் நோயாளிகளாகவுமே தான் இருக்கிறார்களா என்ன? இந்த புரட்டின் படி நடக்குமானால் ஒரு கிராமமே ஊனமுற்றவர்களாலும், கொடிய வியாதிக்காரர்களை மட்டுமே கொண்ட கிராமங்களாகத்தானே நம் நாட்டு கிராமங்கள் எல்லாம் இருந்திருக்க முடியும்.
இப்படி விரிவாக எடுத்துக் கூறி கேள்வி கேட்டால் இந்த புரட்டைப் பரப்புபவர்கள் உடனே ஒரு அடிக்கும் ஜல்லி, 'நாங்கள் ஊனமாகத்தான் பிறக்கும் என்று சொல்லிவிடவில்லை. 'நெருங்கிய உறவினர்களுக்குள் சம்பந்தம் செய்தால் ஒரு சில நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்' என்று தான் கூறுகிறோம்'. என்பார்கள்.
இந்தியாவில் இருக்கும் ஜாதி முறையே உறவு முறையிலான மனிதக்குழுக்களின் தொகுப்புதான். அப்படி இருக்கையில் இது போன்ற முடிவுகளை வெளியிடுபவர்கள் எந்த விதத்தில் இந்த சாத்தியக் கூறுகளை ஆராய்ச்சி செய்தார்கள்? எத்தனை நெருங்கிய உறவுத் திருமணத்தை ஆராய்ந்தார்கள்?. இதனை முதன் முதலில் வெளியிட்டவர் யார்? இது போன்ற ஆராய்ச்சியை நடத்தியவர்கள் யார்?
இதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு பெரிய விளம்பரங்கள் ஏதாவது ஒரு அமைப்பினர் மூலம் பரப்பப்படும். அது பெரிய அளவில் பேசப்படும். அவற்றை அப்படியே ஊடகங்கள் செய்திகளாக்கிவிடும். அவ்வளவு தான். நம் மக்கள் உடனே அது தான் சரி என்றும் முடிவு கட்டி விடுவார்கள்.
நாம் தான் படித்த நாகரீக சமுதாயமாயிற்றே. ஏற்கனவே 'சொந்தக்காரர்களை விட ப்ரென்ட்ஸ்
தாம்ப்பா எனக்கு எல்லாம்' என்று சொந்தங்களை வெறுப்பதை ஒரு நாகரீகப் பேச்சாகவே
கொண்டிருக்கும் நம் புதிய தலைமுறை வர்கத்தினர் இது தான் சாக்கென்று 'சொந்தத்தில்
பெண்ணெடுக்கப் போவதில்லை, என் பெண்ணைக் கொடுக்கப் போவதில்லை. குழந்தை
ஊனமாகப் பிறக்குமாமே!' என்று கூறி உறவுக்குள் திருமனத்தை உடைத்தெரிந்து மகிழ்வார்கள்.
ஆனால் இதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சியோ உண்மைத் தன்மையைப் பற்றியோ, இதை ஆராய்ந்து ஏதோ ஆராய்ச்சி முடிவுகளைப் போல இதைப் பரப்புபவர்கள் யார் என்பது பற்றியோ எந்த சிந்தனையும் உதிக்காது.
உதாரணமாக இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறாது எனக் கொள்வோம். ஒருவர் சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் பெண் பார்க்கச் செல்கிறார், பெண்ணின் தந்தைக்கு உடல் முழுவதும் ரோமம் வெள்ளைப் படுதலால் பாதிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் பெண் மிகவும் அழகாக எந்த உடல் குறைபாடும் இல்லாமல் இருக்கிறார். அந்த வீட்டில் பெண் எடுப்பார்களா? பின்னங்கால் பிடறியில் இடிபட ஓட்டம் பிடிப்பார்கள். எவ்வளவு வரதட்சினை கொடுத்தாலும், ஐயா சொத்தையே எழுதித் தருகிறேன் என்றாலும் 'நாம ஏன் ரிஸ்க் எடுக்கனும்?' என்று காணாமல் போய் விடுவார்கள்.
ஏன் இந்த ஓட்டம்? நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் தானே பரம்பரை நோயோ அல்லது தாத்தா பாட்டிகளின் நோயோ பேரன்களுக்கு வரும்? அந்நியத்தில் தானே பெண் பார்த்தோம். பெண்ணின் தந்தைக்கு இருக்கும் சருமப் பிரச்சனை 'அந்நியப்' பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைக்கு எப்படி வரும்?
அந்நியத்தில் பார்க்கும் ஒரு ஆண்மகனுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. நெருங்கிய சொந்தமல்லாத அவனை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை அதே சர்க்கரை வியாதியுடன் பிறக்காது என்று உறுதியாக நம்பி சர்க்கரை வியாதி உள்ள ஒரு ஆணை எந்த பெண் வீட்டிலாவது தனது மகளுக்கு மணம் முடிப்பரோ? அப்பொழுதும் 'எஸ்கேப்' தான்.
ஒரு வீட்டினரின் பெரியவர்களுக்கு இருக்கும் ஏதாவது நோய் அவர்கள் வீட்டுச் சந்ததியினருக்கு மரபணு வியாதியாக தொடர வாய்ப்பிருக்கிறது என்பது ஒரு பொதுவான கருத்து. அது சொந்தமானாலும் அந்நியமானாலும் அப்படியே. ஆனால் சொந்தத்தில் திருமணம் செய்தால் மட்டும் தான் மரபுப்படியான நோய் அடுத்த சந்ததியினருக்கு வரும் என்பது போல செய்தி பரப்புகின்றனர்.
ஆனால் ஏன் இந்த புரட்டு பரப்பப் பட வேண்டும்? இதனால் யாருக்கு என்ன லாபம்? இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு விதமான இறுக்கமான உறவு முறைகள் நிலவுகின்றன. உறவுமுறைத் திருமணங்கள் பெருகி சந்ததினர் ஒரு குழுவினராக அறியப்பட்டு பின்னர் அதுவே ஒரு குறிப்பிட்ட இனக்குழுவாக பின்னாலில் பெரிய ஜாதியாகவும் வளர்ந்து விடுகிறது.
தற்காலத்தில் ஜாதிகளாக இருப்பவைகளில் பல அதற்கு முன்னதாக ஒரு பெரிய குடும்பத்தைக் கொண்ட குழுவாக இருந்திருக்கும். அவைகள் எல்லாமே உறவுகளுக்குள்ளேயே உறவுகளை வளர்த்து சந்ததிகளைப் பெருக்கிக் கொண்ட இனக்குழுக்களாகவே இருந்திருப்பர்.
அப்படித்தான் கிராமங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே சொந்தங்களைக் கொண்ட பங்காளிகளாகவே இருப்பதைப் பார்க்கிறோம். உறவுமுறைக்காரர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆக ஒரு ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஏதாவது ஒரு வகையில் உறவுக்காரர்களாகத் தான் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. இவ்வகையில் தான் ஒரே ஜாதியினர் ஒருவரை ஒருவர் உள்ளுணர்வு உந்த ஆதரித்துக் கொள்வதும் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
இந்த ஜாதீய குழு உணர்வை உடைக்க முயற்சிப்பவர்களில் அதனால் ஆதாயம் தேடுபவர்களில் முக்கியமானவர்கள் மதமாற்றிகளே! காரணம் ஒரு குறிப்பிட்ட மனிதனை இறுக்கமாக பிணைக்கப்பட்ட அவன் ஜாதியில் இருந்து பிரிப்பது மதமாற்றிகளுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை.
மதம் மாற்றிகளின் முக்கியமான வேலை ஒருவரை மதம் மாற்றும் போது, அவனிடமிருந்து பழைய மதத்தில் இருந்த கலாச்சார சம்பிரதாயங்களையெல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்து
விடுதல் தான்.
அவ்வாறு ஒருவர் ஒரு ஜாதியிலிருந்து வெளியேற்றப்படும் போது அவர் பல தலைமுறைகளாக செய்து வந்த ஜாதீய சடங்குகளை அடுத்து வரும் நாட்களில் செய்ய முடியாமல் போய் விடுகிறது.
அது வாழ்நாள் முழுவதும் ஒரு இழப்பாகவே ஆகிவிடுகிறது.
குடும்பத்தின் எந்த ஒரு நிகழ்விற்கும் அவரவர் ஜாதியின் வழக்கப்படி சடங்குள் இருக்கின்றன. உதாரணமாக பெண் வயதிற்கு வந்தால் அதற்கு ஒரு சடங்கு, பிறப்போ இறப்போ அவற்றிர்கு ஒரு சடங்கு, திருமணம் வளைகாப்பு என்றால் அதற்கு ஒரு சடங்கு என்று குடும்பத்தின் எந்த ஒரு முக்கிய நிகழ்வானாலும் ஜாதியின் அடிப்படையிலான சடங்கிற்கு உட்பட்டே அதனை கொண்டாட வேண்டிவருகிறது. அவரோடு சேர்ந்து வீட்டின் முக்கிய நிகழ்ச்சிகளை கொண்டாட வரும் உறவுக்காரர்கள் ஜாதிய சடங்கின்படி நடக்கவில்லையென்றால் அவர்கள் அதனை ஒரு விஷேஷமாகவே கருதாமல் ஒதுங்கிவிடுவர்.
ஆக ஒருவர் தனது ஜாதிக்கட்டுக்குள்ளிருந்து வெளியேறுவது தனது மொத்த சமூகத்தின் ஆனிவேரை இழந்து விடுதலுக்குச் சமமாகிறது. உறவுகளை முழுமையாக இழக்க நேரிடுகிறது.
இதற்கெல்லாம் பயப்படுவோரும், உறவுகளையும், சொந்தங்களையும், பல தலைமுறைகளாக கட்டிக்காத்து வந்த நடைமுறைச் சம்பிரதாயங்களையும் இழக்க விரும்பாதவர்கள் வேற்று மதம் பற்றிய யோசனைக்கே வருவதில்லை.
இந்த உறவுகளுக்குள்ளான நெருக்கமான சங்கிலிப் பிணைப்பு மத மாற்றிகளுக்கு பெரிய உபத்திரவமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனையும் மதம் மாற்ற அதீத பிரயத்தனம்
செய்ய வேண்டி வருகிறது. அதில் களைத்துப் போய் விடுகிறார்கள். ஆக இந்த நெருக்கமான உறவுகளை உடைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஒரு நெகிழ் தன்மை கிடைக்கும். அந்த உறவுகள் எல்லாம் திருமண பந்தத்தின் மூலமாகத்தான் உண்டாகின்றன. எனவே சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்று கதை கட்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளின் நெருக்கங்கள் அந்நியப்பட்டு, பிறகு அப்படியே ஜாதிய அடிப்படையின் ஆணி வேரை அசைத்து விடலாம், தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் சம்பிரதாயங்களை அழித்து விடலாம் என்கிற நோக்கத்தில் பரப்பப்படுகிறது.
எனக்குத் தெரிந்த மனிதர்களுள் சொந்த அத்தை மகளை, மாமன் மகனை, ஏன் தாய் மாமனை திருமணம் செய்து கொண்ட பலரும் மிகவும் ஆரொக்கியமான குழந்தைகளைப் பெற்று சுபிட்ஷமாக இருப்பதைப் இந்தக் காலத்திலும் பார்க்க முடிகிறது. அந்நியத்தில் திருமணம் செய்தவர்களுக்குக் கூட சிறிய வயதிலேயே சர்க்கரை வியாதி வரும் பிள்ளைகள் பிறப்பதும் உண்டு. பிறந்து சில வருடங்களே ஆன குழந்தைக்கு கேன்சர் வந்து இறந்த செய்திகளும் உண்டு. அவர்கள் அந்நியத்தில் திருமணம் செய்தவர்களாகவே இருந்தனர்.
மரபணு பற்றி அராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், குழந்தை கருவிலே உருவாகும் போதே அது ஆண், பெண் என தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்துமே பதிவு செய்யப்பட்டு விடும்.
அதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும் என்று கூறுகிறார்கள். ஆக மரபணுவில் யாருடைய மரபணுவில் என்ன எழுதியிருக்கிறதென்று படித்து தெரிந்துகொள்ள முடியாது என்பது தான் நிதர்சனம். அப்படி இருக்கையில் சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் திருமணம் செய்பவர்களுக்கு, எந்த நோய் நொடியுமே அண்டாத குழந்தைதான் பிறக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதை யார் கொடுக்கப்போகிறாகள்?
மேலும் ஒருவருக்கு நோய் உண்டாவதற்கு வெறும் மரபணு ரீதியான காரணங்கள் மட்டுமே இருந்துவிடப்போவதில்லை என்பதும் நிதர்சனம்.
ஆக எல்லோருக்கும் மரபணு உண்டு, சொந்தத்திலோ அந்நியத்திலோ, எங்கே யாருடன் திருமணம் செய்தாலும் பிறக்கப் போகும் குழந்தையின் நலன் என்பது மனிதர்களால் நிர்ணயிக்கப்படுவது இல்லை என்பது உறுதி. 'நாங்கள் கூறும் வகையில் நீங்கள் திருமணம் செய்தால் தான் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்' என்று கூற யாருக்கும் தகுதி இல்லை.
எனவே நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்பது சுத்தப் பித்தலாட்டம் என்று அறிக. உங்கள் பிள்ளைக்குப் பெண்ணோ, பெண்ணிற்கு பிள்ளையோ உறவுகளில் இருந்தால், அவர்களுடன் திருமண பந்தத்தை பயமின்றி உறுதி செய்து உறவுகள் சிதறாமல் அள்ளிக்கொள்க. புதிய சிந்தனை, கண்டுபிடிப்பு என்றெல்லாம் பெயர் சொல்லி நமது பாரம்பரிய குடும்ப கலாச்சாரத்தை உடைக்கப் பார்க்கும் குப்பைகளை அள்ளி குப்பைத்தொட்டியில் இடுக.
உண்மைகளை உணருங்கள். உறவுகளைப் பேணுங்கள்.
வாழ்க வளமுடன்!
.