Saturday, November 5, 2011

ஆயுர்வேதம் வளர்ப்போம்!




ஆயுர்வேதம் என்பது ஆயுள் விருத்திக்கு வழி சொல்லும் சாஸ்திரம். ஆயுள் குறைவது அநேகமாக வியாதியால் தானே? ஆகையினால், வியாதி வராமல் தடுக்கவும், வந்தால் குணப்படுத்தவும் வழி சொல்லும் வைத்ய சாஸ்த்ரமே ஆயுர்வேதம் எனப்படுகிறது.

ஈஸ்வர தியானத்தோடுதான், குறிப்பாக, பகவான் மஹாவிஷ்ணு அம்ருத கலசத்தைப் பாற்கடலிலிருந்து கொண்டு வந்த போது எடுத்த தன்வந்திரி என்ற அவதாரத்தை அராதித்துதான் ஆயுர்வேதம் அப்யஸிப்பது வழக்கம்.

நம் மத சாஸ்திரமும் ஆயுர்வேத சாஸ்திரமும் மிகப் பெரும்பாலும் ஒத்துப் போகின்றவையாகும். நம் மத சாஸ்திரத்திற்கு பெரும்பாலும் விரோதமில்லாமல் இருப்பதும் ஆயுர்வேதம் தான். சரகர், ஸுச்ருதர் என்ற இருவரில் சரகர் மருந்து கொடுத்துக் குணப்படுத்துவது பற்றிச் சொல்கிறார். ஸுச்ருதர் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவது பற்றிச் சொல்கிறார்.

'என்ஸைக்ளோபீடியா ப்ரிட்டானிகா' என்ற வால்யூம்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலே ஒவ்வொரு அறிவியல், சாஸ்திரம், கலை பற்றியும் விவரமாகச் சொல்லியிருக்கும். அதிலே ஸர்ஜரி என்ற ரணசிகிச்சை வித்யை இந்தியாவிலேயே முதலில் தோன்றிற்று என்று இருக்கிறது. இங்கே இருந்து அது அரேபியா வழியாக க்ரீஸ் தேசத்துக்குப் போனதாகவும் அங்கேயிருந்து இத்தாலிக்குப் பரவி, பிறகு ஐரோப்பா பூராவும் பரவியதாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த 'ஸுச்ருதம்' என்கிற சாஸ்திரத்தில் நவீன காலத்தில் ஆஸ்பத்திரிகளில் எத்தனை விதமான ரண சிகிச்சை ஆயுதங்கள் உபயோகத்திலிருக்கின்றனவோ அத்தனையைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறதாம். புதிதாக சுவடிகளைப் ஆராய்ந்தும், ரிக் வேதத்திலிருந்து ஆரம்பித்து புராணம், காவியங்கள் முதலியவற்றிலுள்ள கதைகளில் வியாதியை குணப்படுத்துவது பற்றி இருப்பவற்றை இதோடு பொருத்தியும் பல அறிஞர்கள் அநேக ஆச்சர்யமான ஸர்ஜரி நுணுக்கங்களெல்லாம் நம் பூர்விகர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று காரணம் காட்டி எழுதி வருகின்றனர்.

ஆயுர்வேதம் என்றால் 'ஓஷதி' என்கிற மூலிகை, அடுத்ததாக 'ரஸவர்க்கம்' என்கிற தாதுக்கள் ஆகியவற்றால் செய்யும் மருந்து தான் என்றே நினைக்கிறோம். மரம், செடி, கொடி எல்லாமே 'ஓசதி' வர்கத்தில் வந்துவிடும். கந்தகம், பாஷாணம், லோகனங்கள் முதலியவை ரஸவர்க்கம்.

கண்ணுக்குத் தெரிகிற வியாதி மாத்திரமின்றி குடல், மூளை இவற்றின் உள்ளுக்குள்ளேயிருப்பது,  தோல் எலும்பு நரம்பு ரத்தம், நீரிழிவு நோய், மனோ வியாதி என்று கணக்கில்லாமலுள்ள அத்தனை வியாதிக்குமான மருந்திர்கும் ஆயுர்வேதத்தில் வழி சொல்லப்பட்டிருக்கிறது.

அறிவியல் என்றால் சமயாஅச்சாரங்களுக்கு விரோதமாகத்தான் போக வேண்டுமென்றில்லாமல் நம் ஆச்சாரத்திற்கு ஏற்றதாகவும் ஆயுர்வேதம் இருப்பதால் அதனை வளர்க்க நாம் பாடுபட வேண்டும்.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆயுர்வேதத்தில் பல வைத்தியங்கள் ஒரு வாக்கியத்தினாலேயே விளக்கப்பட்டு விடும். 'லங்கனம் பரம ஒளஷதம்' என்பார்கள். 'பட்டினி சிறந்த மருந்து' என்று அதற்குப் பொருள்.

எப்போதும் வயிற்றில் எதையாவது போட்டு வயிற்றைக் குப்பைத் தொட்டியாக்காமல் தண்ணீர் மட்டுமே ஒரு நாள் முழுவதும் குடித்து வயிற்றுக்குப்பைகளை அகற்றினால் அதுவே முழு உடலுக்குமான மருந்துமாக இருக்கும் என்பதாலேயே பல தினங்களில் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். ஏகாதசி விரதம், அமாவாசை விரதம் என்று சில குறிப்பிட்ட தினங்களில் வயிற்றுக்கு வேலை கொடுக்காமல் அதனை தண்ணீரால் சுத்தம் செய்வது ரத்த சுத்திக்கும் ஏற்றது. உடலில் துர்கிருமிகள் குறையவும் வழிவகுக்கும் என்பதாலேயே அதனை கடைபிடிக்கிறார்கள். நம் வாழ்க்கை முறையே மருத்துவம் சார்ந்ததாக இருந்திருக்கிறது. நாமும் அதை கடைபிடித்தால் மருத்துவரைப் பார்க்காமல் இருக்கலாம்.


'லங்கனம் பரம் ஒளஷதம்'



3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான பயனுள்ள பதிவு.
படங்களும் அருமை. நல்ல தரிஸனம்.
நன்றி. vgk

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன்.

gujjan said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி