Monday, November 28, 2011

ரம்பைத் த்ரிதியை!
மக்களின் பக்தி ஆன்மீகத்தை வியாபாரமாக ஆக்கி கல்லா கட்டுபவர்கள் இருவர். ஒன்று பத்திரிக்கை, மற்றவர் நகைக்கடைக்காரர்கள். மக்களின் ஆன்மீக நம்பிக்கையை வைத்து அவர்களை குழப்பி முட்டாளாக்கி, இந்த கோவிலுக்குச் சென்றால் படிப்பு வரும், இந்த கோவிலுக்குச் சென்றால் பிள்ளை பிறக்கும், இந்தக் கோவிலுக்குச் சென்றால் பணம் கொட்டும், இதற்கு இன்ன பரிகாரம் என்றெல்லாம் ஒவ்வொரு கோவிலாக மக்களை அலையச் செய்து காசுபார்க்கிறது பத்திரிகைகள். அதே போன்ற வேலையை வேறுவிதமாகச் செய்பவர்கள் நகை வியாபாரிகள்.

அக்ஷயத்ரிதியை அன்று நகை வாங்கினால் வீடெல்லாம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கமாகக் கொட்டும் என்று மக்களிடம் விளம்பரப்படுத்தி கல்லா கட்டுகிறார்கள் நகைக்கடைக் காரர்கள். இப்போது புதிதாக ஒரு நகைக்கடை விளம்பரத்தில் ரம்பைத் த்ரிதியையில் நகை வாங்கினால் வீடெல்லாம் நகை பெருகும் என புதிய தினத்தை அறிமுகம் செய்து கொண்டு இருக்கிறது.

பொதுவாக அக்ஷ்யத் த்ரிதியை தினத்தை வடக்கத்திக் காரர்கள் தொழில் துவங்க, சுப காரியங்கள் துவங்க நல்ல நாள் என்று அந்த தினத்தை கருதி அதை அனுசரித்து முதல் கொள்முதல், முதல் விற்பனை என்று நடத்தி வந்தார்கள். சென்னையைப் பொறுத்தவரை சௌக்கார் பேட்டை நகைக்கடைகளில் மட்டும் தான் அக்ஷயத் த்ரிதியை அன்று பெண்கள் வீட்டிற்கு தேவையான அல்லது நீண்ட நாள் வாங்க நினைத்திருந்த நகைகள் வாங்க அந்த தினத்தை தேர்ந்தெடுத்து வாங்கி வந்தனர். காரணம் ஜெயின் மதத்தினர் தங்களது முக்கிய கடவுளான தீர்த்தங்கரர் ரிஷபவ தேவர் தன் தவக்காலத்தை நிறைவு செய்த நாள் என்றும்  அந்த நாளில் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும் என்றும் நம்புகின்றனர். பின்னாளில் இந்த தினம் அப்படியே தமிழகமெங்கும் விளம்பரப்படுத்தி அதை நகை வாங்கும் நாளாகவே ஆக்கி வியாபாரம் செய்யத் துவங்கிவிட்டனர் நகை வியாபாரிகள்.

சரி ஏற்கனவே இருந்த நம்பிக்கையை இப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்று பார்த்தால், இப்போது ரம்பைத் த்ரிதியையாம். இப்படி புதிது புதிதாக ஏதாவது ஒரு கதை பரப்பி மக்களின் சாதாரண நம்பிக்கையில் கில்லி விளையாடுகிறார்கள் சுயநல வியாபாரிகள்.

மக்களின் பக்தி சார்ந்த நம்பிக்கையை வைத்து ஏமாற்றிப் பிழைக்கும் போலிச் சாமியார்களுக்கும், இது போன்ற நகைக்கடை வியாபாரிகளுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. இது போன்ற சுயநல வியாபாரிகள் விஷயத்தில் விழிப்புடன் இருந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கனிக்க வேண்டும். இப்படி விளம்பரப்படுத்துபவன் கடைக்கு யாரும் சென்று நகைவாங்காமல் தவிர்த்து அவனுக்கு புத்தி புகட்ட வேண்டும். 

இல்லையேல் நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணம் இவர்களால் சுருட்டப்படும். கையில் காசிருந்தால் எப்போது வேண்டுமானாலும் தங்கத்தைக் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட வைக்க முடியும். அதற்கு எந்த த்ரிதியையும் தேவையில்லை.

விழிப்புடனிருப்பீர். கைக்காசைக் காப்பீர்!

.

12 comments:

Madhusudhanan D said...

Even in traditions we practice, we forget the reason for it and adapt those traditions according to our flexibility.

Akshaya Thridiyai is actually not meant to buy gold. In those days, in marriages gold is used for mangalyam, etc. Poor people cannot afford to buy gold. So helping those poor people by giving them gold. ie) buy gold and help some poor girls marriages. That is the concept. But we do only the first part.

hayyram said...

அட்சய த்ரிதியை அன்று வாங்கும் நகையை ஏழைகளுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நகை வாங்கியவர் வீட்டில் தர்த்திர தேவி குடிவருவாள் என்று பரப்ப வேண்டும். ஒரு பயலும் அட்சய த்ரிதியை அன்று நகைக்கடைக்கு போகமாட்டான்.

rk said...

Heyram
Sorry for going off the topic. Can you please clear this doubt? I have been reading articles from the site called " Agniveer". They strongly defend Vedas and are of the opinion that reincarnations as such (like Shri Rama and Shri Krishna) are fundamentally contradictory to Vedas.Rama and Krishna are apparently only enlightened souls.
To me, Rama and Krishna are the reincarnations of Paramathma.Period. If we take away ( structures) Ithikasas, we only have unseen foundations ( Vedas) in Hinduisim.
Here is the link
Thanks
Rama
http://agniveer.com/2728/god-vedas-hinduism/

Madhusudhanan D said...

Rama is incarnation of Lord does not mean that Lord himself left his place and born in this world.

இறைவனின் அம்சம் கொண்டவர் ராமன்.

"Om Poornamadah Poornamidam
Poornat Poornamudachyate Poornasya
Poornamadaya Poornamevavasishyate."

"What is whole, this is whole; what has
come out of the whole is also whole.
When the whole is taken out of the whole,
the whole still remains whole."

Arun Ambie said...

அக்ஷய த்ருதியை அன்று ப்ளாட்டினம் வாங்குங்கள் என்று ஒரு பிரபல் ஜோதிடரை வைத்துச் சொல்ல வைக்கிறார்கள் இவர்கள். "ஸ்வேத முகூர்த்தம் சுபம் லாபம்" என்று மேற்கோள் காட்டுகிறார் அவர். ஸ்வேத முகூர்த்தம் என்பதற்கு வெள்ளி முளைக்கும் வேளையில் வரும் முகூர்த்தம் என்று பொருள் கொள்வதே முறை. அந்த வேளையில் வரும் முகூர்த்தங்கள் சுபத்தையும் லாபத்தையும் தருவன. ஸ்வேத முகூர்த்தம் என்பதை வெள்ளை நிற ப்ளாட்டினம் வாங்கும் முகூர்த்தம் என்று பொருள் சொல்வது ஏமாற்றுவேலை.

அக்ஷயத்ருதியை அன்று ஒரு ஏழைக்கு உணவிட்டு அவனுக்கு ஒரு பானை, அது நிறைய அரிசி/சாதம், குடிக்க நீர்மோர் ஆகியவற்றை வழங்கி கோடை காலத்தைச் சமாளிக்க உதவுவார்கள். இப்போது கடன் வாங்கியாவது அக்ஷய த்ருதியை அன்று நகை வாங்குகிறார்கள். இப்படி வாங்கும் ஒருவரிடம் கேட்டேன். "அக்ஷயத்ருதியை அன்று வாங்குவதெல்லாம் பெருகும் என்றால், கடன் வாங்குகிறீர்களே கடன் பல்கிப் பெருகாதா?" என்றேன். அசூயையாகப் பேசுகிறாய். நீ நாத்திகனா என்றார். அன்னா ஹசாரேக்கு ஜே போடாதவன் ஊழல்வாதி என்பது போல முத்திரை குத்துகிறார்களே என்று நொந்து கொண்டேன்.

hayyram said...

//"அக்ஷயத்ருதியை அன்று வாங்குவதெல்லாம் பெருகும் என்றால், கடன் வாங்குகிறீர்களே கடன் பல்கிப் பெருகாதா?" என்றேன்// நன்றாகக் கேட்டீர்கள். ஒவ்வொரு அட்சய த்ரிதியை அன்றும் இது போல பலரிடம் கேட்டு யோசிக்க வைக்க வேண்டும். சிலர் புத்தாண்டு அன்று யாருடனும் சண்டை போடக்கூடாது. பின்னர் வருடம் முழுதும் சண்டையாக இருக்கும் என்று நம்புவார்களே அது போல. குறிப்பாக நகைக்கடைக் கொள்ளையைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டுமென்று நினைக்கிறேன். அடுத்த அட்சய த்ரிதியைக்குள் போட்டு விடவேண்டும். முடிந்தால் நீங்களும் செய்யுங்கள். ஒரு வேளை ஏற்கனவே செய்திருந்தால் சுட்டி தாருங்கள். நன்றி அம்பி.

Jayachandran said...

எல்லாருக்கும் புதிய பொருட்கள் வாங்குகிற நாளாகவும், தானம் கொடுக்கும் நாளாகவும் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் த்ரிதியை நாளாகிய அட்சய த்ரிதியைதான் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையாகப் பொன் வாங்கும் நாளும், பெண்களுக்கு அழகு கூடும் நாளும் ஒன்று நமது பண்டிகைகள் பட்டியலில் வருவது ஒரு சில பிரிவினருக்கே தெரிந்திருக்கிறது..

அதுதான் ரம்பா த்ரிதியை என்னும் பொன் வாங்கும் நாள். இதை நம் தமிழ் மண்ணில் தங்கத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டியது அவசியம்..
பொங்கல் விழாவுக்கு சூரியனையும், தீபாவளிக்கு நரகாசுர வதத்தையும் மூலமாக வைத்துள்ளதைப் போல ரம்பா த்ரிதியையின் சிறப்புக்கும் ஒரு மூலக்கதை உண்டு..ஒரு சமயம் தேவலோகத்தில் இந்திர சபை கூடியிருந்தது. தேவர் தலைவன் இந்திரன் அரியணையை அலங்கரித்திருக்க, தேவலோக அழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆடிக்கொண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொண்டு, தங்கள் ஆட்டமே சிறந்ததென்று பாராட்டப்படுமென்று கர்வத்துடன் ஆடிக்கொண்டிருந்தனர். ராகம், தாளம், பல்லவி, சரணங்களுக்கேற்ப தங்கள் அபிநயங்களைச் செய்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ரம்பையின் தலையிலிருந்த நெற்றிச்சுட்டியும் பிறைப் பொட்டும் கழன்று கீழே விழுந்துவிட்டது. இதைக் கண்டு ஊர்வசியும் மேனகையும் கலகலவென்று சிரித்துவிட்டு, "பிறகு ஆட்டத்தைத் தொடர்வோம்' என்று சென்றுவிட்டனர். இதனால் அவமானப் பட்ட ரம்பை இந்திரனை ஒரு பார்வை பார்த்தாள். கண்கள் அவமானத்தால் கலங்கியது.

மறுநாள் இந்திரனைத் தனியே சந்தித்த ரம்பை, ""தேவர் தலைவா! எனக்கு ஏன் இந்த அவமானம்? அழகில் சிறந்தவள் ரம்பைதான் என்ற பெயர் பெற்ற நான், உன் அவையில் சிரம் தாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனது பெயரும் அழகின் சிறப்பும் நிலைபெற ஒரு வழியைத் தாங்கள்தான் சொல்ல வேண்டும்'' என்று தலைவணங்கி நின்றாள்..

""தேவருலகின் முதல் அழகியே! உனது வேண்டுகோள் சரிதான். உங்கள் மூவரின் தேவையற்ற போட்டியில் வந்த வினைதான் இது. மூவருமே அழகில் சிறந்தவர்கள்தான். ஆடவருள் போட்டி வந்தால் அரசுகூட அதிருமென்பர் சான்றோர். பூவையருள் போட்டி வந்துவிட்டால் புவியும் அசைந் தாடுமாம்..

இந்திர சபை என்ன உங்களின் கலை பயிலும் கூடமா? அனந்தசேனன் என்ற தேவன் உங்களது தேவையற்ற போட்டி பற்றிக் கூறும்போது, கலைவாணியாக வீற்றுள்ள சக்தி தேவிதான் உனது சிரசிலிருந்த நெற்றியணியைக் கழற்றிவிட்டாள் என்றான்..

Jayachandran said...

தாள விருத்தத்தை அபிநயிக்கும்போது மூன்று கட்டை பதங்களையும் தாண்டி ஐந்தாம் பதத்துக்குச் சென்று ஆடிவிட்டாய்! நல்ல வேளை, உனது ஆடைகளும் பொன்மணிகளும் சிதறாது போனதே என்று நினைத்துக் கொள்!'' என்றான் இந்திரன்..

""தேவேந்திரா! ஆட்டத்தின் விதிப்படி முப்பதங்களைத் தாண்டவில்லை என்பதே என்னுடைய பணிவான பதில். இந்த சம்பவத்திற்குப் பிராயச்சித்தம் கூறுங்கள்'' என்றாள் ரம்பை. ""ஐம்பதங்களைத் தாண்டிவிட்டாய் என்பதைக் கலையரசி வாணியை அழைத்துச் சொல்ல வைக்கட்டுமா? இல்லை, எம் உலக நாட்டிய தாரகை ஸ்வர்ணமுகியை விட்டுச் சொல்ல வைக்கட்டுமா?'' என்று கோபத்துடன் கேட்டான் இந்திரன்..

"தேவேந்திரா! இன்னும் என் மனதைப் புண்படுத்தும் படி செய்ய வேண்டாம். இதற்கான வழியை மட்டும் கூறுங்கள்'' என்று மன்றாடினாள் ரம்பை.

"பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். தேவலோக அழகியான உனக்கு சரியான ஒரு வழியைக் கூறுகிறேன். பூவுலகில் அன்னை பார்வதிதேவி கௌரியாக அவதாரம் எடுத்து ஓர் மகிழ மரத்தின் கீழ் தவம் செய்து கொண்டிருக்கிறாள். அழகன் முருகனை மடியில் வைத்தபடி அந்த அன்னை அனைவருக்கும் அருள் செய்கிறாள். கார்த்திகேயனை மடியில் வைத்துக்கொண்டிருப் பதால் கார்த்தியாயினி என்ற பெயர் அவளுக்கு வந்தது..

உனது அழகும் ஆபரணங் களும் பொன்னும் பொருளும் சேர்ந்திட அந்த தேவியை விரத மிருந்து பூஜை செய். அவளே உனக்குக் காட்சி தந்து பதிலும் சொல்வாள்'' என்றான் இந்திரன்..
கௌரியை பூஜித்த ரம்பை.

இந்திரனுடைய உபதேசத்தைக் கேட்ட ரம்பை, கார்த்திகை மாதத்தில் வரும் த்ரிதியைக்கு முதல் நாள், "திந்திரிணீ கௌரி விரதம்' இருந்து முறைப்படி பூஜை செய்தாள். "திந்திரிணீ' என்றால் மஞ்சள் நிற பதார்த்தங்களைக் குறிக்கும். அதாவது மங்களகரமான பொருட்களைக் குறிக்கும். பூஜையை முடித்து வணங்கிய ரம்பைக்கு, குழந்தை முருகனை மடியில் இருத்தியபடி கௌரி தேவி கார்த்தி யாயினியாகக் காட்சி தந்தாள். தங்கநிற மேனியளாக ஜொலித்த அன்னை ரம்பையைப் பார்த்து, ""உனது பக்தி மிகுந்த பூஜையில் மகிழ்ந்தோம். உனது அழகும் அணிகலன்களும் சேர்ந்திடவே இந்த பூஜையைச் செய்துள்ளாய். இன்று முதல் உனக்கு அழகும் பொன்னும் மிகும். "தேவருலக அழகி ரம்பையே'என்று அனைவரும் பாராட்டுவர். இன்று முதல் உன் பெயராலேயே ரம்பா த்ரிதியை என்று இந்த நாள் விளங் கட்டும்'' என்றாள். மேலும், ""இந்நாளில் வழிபடுவோர் அனைவருக்கும் பொன், பொருள் சேர்ந்து அழகும் முக வசீகரமும் ஏற்படும்'' என்றும் அருள் செய்தாள்..

சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண் களுக்கும் ஒரு வரப்பிரசாத நாளாக விளங்குவது ரம்பா த்ரிதியை நன்னாள். முதல் நாள் கௌரி தேவியைக் குறித்து விரதமிருந்து, மறுநாள் கலசத்தில் அம்பிகையை ஆவாகன பூஜை செய்து எழுந்தருளச் செய்தல் வேண்டும். வரலக்ஷ்மி விரதப் பூஜை செய்முறை போலவே கலசம் ஒன்றை வைத்து, வாசனைத் திரவியங்களோடு நீர் ஊற்ற வேண்டும். மூன்றுவகைப் பழங்க ளோடும், மஞ்சள் நிற அன்னத்தை (எலுமிச்சை சாதம், புளியோதரை) நிவேதனமாக வைத்துப் பூஜை தொடங் கலாம். மஞ்சள் கயிற்றில் மஞ்சள் நிற மலரைக் கட்டி வலக்கையில் ரட்சை யாகக் கட்டிக்கொண்டு, கலசத்திற்கு மேல் பொன் நகைகளைக் கவனமாகச் சாற்றி, முடிந்தால் தேவி முகம் செய்து அழகுபடுத்தலாம்..

தன்னை ரம்பையாக எண்ணிக் கொண்டு மனதுக்குள், "ஸ்வாகதம் ஸ்வாகதம் ரம்பாதேவி' என்று ஆவாகனம் செய்து, தலையில் மலர் வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் விநாயகர் பூஜை தொடங்கி, தேவி ஆவாகனமும் செய்தபின் கௌரி அர்ச்சனையைச் செய்ய வேண்டும்.

ஒரிஜினல் இங்கே"

சுட்டியையும் இணைத்துள்ளேன் விளக்கம் தேவை நண்பரே...

hayyram said...

/////"இந்நாளில் வழிபடுவோர் அனைவருக்கும் பொன், பொருள் சேர்ந்து அழகும் முக வசீகரமும் ஏற்படும்'' ///

ஆக சாமி கும்பிடச் சொல்லியிருக்கிறார்கள். நகைக்கடைகுச் சென்று நகை வாங்கச் சொல்லவில்லை தானே! ஆனால் நகை வாங்கும் நாளென்று அதை மாற்றிக் கூறி கல்லா கட்டப் பார்க்கும் நகைக்கடைக்காரர்களை என்ன செய்யலாம்? ஜோசிக்காரர்களையும் இந்த லிஸ்டில் சேர்க்க வேண்டும் போலிருக்கிறதே!!

Jayachandran said...

சேட்டுக்களை சொந்த ஊர் பக்கம் அனுப்பிவிட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்ததது போல் தான் தோழரே...

hayyram said...

சேட்டுகள் மட்டுமா, தமிழர்கள், தெலுங்கர்கள் மலையாளிகள் என பலரும் தமிழகத்தில் நகைக்கடை நடத்துகிறார்கள். இவர்கள் எப்படியெல்லாம் நகை வியாபாரத்தில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று மக்களுக்குப் புரியவைத்தாலே போதும்..
அதுவும் செய்கூலி சேதாரம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவும் இல்லை கேட்பாரும் இல்லை என்பதே நிதர்சனம்.

Jayachandran said...

உண்மை நண்பரே....