Saturday, March 24, 2012

காலம் தீர்மானிக்கிறது!


"காலமும் நிகழ்வுகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது.
அவற்றை அனுபவிக்கும் மனிதர்கள் மட்டுமே மாறிக்கொண்டே இருக்கிறார்கள்"

நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைப்பான் என்பார்கள். என் விஷயத்தில் பல முறை அவ்வாறு நடந்திருக்கிறது. சில முடிவுகளைத் தேடி நாம் ஏதாவது காரியம் செய்வோம். நிகழ்வதோ வேறொன்றாக இருக்கும். இதற்கான காரணங்கள் எப்பொழுதும் நமக்குப் புலப்படாதவையாகவே பெரும்பாலும் இருக்கும்.

எனது பெரும்பாலான எதிர்பாராத நிகழ்வுகள் நல்லவையாகவே இருந்திருக்கிறது. அது கடவுள் என் மீது காட்டிய கருணையாகவே கருதியிருக்கிறேன். எதிர் வரும் காலம் வெற்றாகவும், எந்த வித யோசனைகளற்றும் வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கையில் அடுத்து வரும் வருடங்கள் என்னவாக இருக்கும், என் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்றெல்லாம் முடிவே தெரியாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் காலங்களில், எதிர்பாராத பல மாற்றங்களை கண்ணில் காட்டி வியக்க வைப்பான் இறைவன். இப்படிப் பலமுறை நடந்திருக்கிறது.

அவை எதுவும் நாம் திட்டமிட்ட வகையில் நடக்காது. அல்லது நாம் ஒன்றைத் திட்டமிட்டுச் செல்லுவோம் அவை வேறொன்றாக நடந்து விடும். சிலருக்கு அந்த எதிர்பாரா நிகவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சிலருக்கு துன்பத்தைக் கொடுத்து விடும். அந்த முடிவுகள் யாவும், நாம் எதை நோக்கிச் செல்கிறோம், நம் பயணத்தின் நோக்கம் நன்மையைக் குறித்தா, அல்லது தீமையக் குறித்தா என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமைகின்றன.

இதையே சுருக்கமாக எல்லாம் அவன் செயல் என்பார்கள் பெரியோர்கள். பொதுவாக எது நடந்தாலும் நமக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா அல்லது எல்லோருக்கும் நம்மைப் போன்றே தான் நடக்கிறதா என்று சந்தேகங்கள் அடிக்கடித் தோன்றும். புராணங்களும் இதிகாசங்களும் இது போன்ற கேள்விகளுக்கு விடை அளிப்பவையாகவே இருந்திருக்கிறது. காலத்தால் மாறுபடாத சில நிதர்சனமான உணர்வுகளை அல்லது உண்மைகளை அவை நமக்கு என்றும் போதிக்கின்றன!

அவைகள் கூறும் படிப்பினை எல்லாம் இதுதான்..."காலமும் நிகழ்வுகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது. அவற்றை அனுபவிக்கும் மனிதர்கள் மட்டுமே மாறிக்கொண்டே இருக்கிறார்கள்"

அப்படி ஒரு நிகழ்வை மகாபாரத்தில் காணலாம். பாண்டவர்கள் நாடிழந்து காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த காலம். அவர்களைக் காட்டிற்கு துரத்தியனுப்பினாலும் துரியோதனனுக்கு அவர்களைச் சீண்டிக் கொண்டிருப்பதில் ஏனோ தனி விருப்பம் இருந்து கொண்டே இருந்தது. தான் அரச மாளிகையில் இன்பமாக இருப்பதால் இருமாப்பு கொண்டு, அதனை வெளிக்காட்டுவதன் மூலமாக காட்டில் வசித்துக் கொண்டிருந்த பாண்டவர்களை பரிகசிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினான்.

பாண்டவர்கள் வாழ்ந்து வந்த த்வைத வனத்திற்கு உல்லாச யாத்திரை போய் வரத் தீர்மானித்தான் துரியோதனன். தன்னுடைய மந்திரிகள். சகோதரர்கள், அந்தப்புரத்துப் பெண்கள், செல்வங்கள், சேனைகள் ஆகிய இவற்றுடன் பாண்டவர்கள் முன் அவர்கள் காணுமாறு ஊர்வலம் சென்று அவர்கள் மனதில் பொறாமை உணர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் அந்த வனத்திற்கு வந்து சேர்ந்தான்.

யுதிஷ்டிரர் குடிசை அமைத்துக் கொண்டு வசித்து வந்த இடத்திற்கு அருகில் ஒரு குளக்கரை இருந்தது. அந்தக் குளத்தில் பாண்டவர்கள் காணும்படியாகக் குளித்துக் கும்மாளமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்து காட்டி ஒரு வேடிக்கையை நிகழ்த்த வேண்டுமென தீர்மானித்திருந்தான் துரியோதனன். இவ்வாறெல்லாம் செய்தால் பாண்டவர்கள் தம்மைப் பார்த்துப் பொறாமை கொண்டு நாணி வருந்துவார்கள் என்பது அவன் எண்ணம். அதனால் தனது பெண்கள், படைகள் சூழ அந்தக் குளக்கரைக்குச் சென்றான்.


அங்கே தான் ஆண்டவன் வைத்தான் ஒரு 'ட்விஸ்ட்'. அவன் ஒன்று நினைத்து வந்து சேர அங்கே வேறொரு காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. துரியோதனன் வருகைக்கு முன்னே அங்கே கந்தர்வர்கள் அந்தக் குளக்கரையை ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் குளத்தில் குளித்து குதூகளித்துக்கொண்டிருந்தனர்.

இதனை சற்றும் எதிர்பாராத துரியோதனனுக்கு கடும் கோபம் உண்டாக அவர்களை வெளியேறுமாறு அழைத்தான். ஆனால் கந்தர்வர்களோ துரியோதனனை மதிக்கவில்லை. இத்தனை படைப் பரிவார ஆரவாரத்துடன் வந்த தனக்கு வந்த நோக்கம் நிறைவடையாது போனால் அசிங்கமல்லவோ என்றெண்ணிய துரியோதனன் அவர்களுடன் போரிடலானான்.

கந்தர்வர்களோ துரியோதனனின் செயல் கண்டு கொதித்தெழுந்து, துரியோதனன் படைகளை அடித்துதைத்து துரியோதனனையும், அவன் அந்தப்புரப் பெண்களையும் கைது செய்து, அவன் சேனைகளையும், பகட்டாய் அவன் கொண்டு வந்திருந்த செல்வங்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.

சிலருக்குச் சிலரை வஞ்சம் தீர்த்தால் மட்டும் போதாது, அதன் மூலம் தான் வென்று விட்டேன் என்பதை விடாது பரைசாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களது ஆழ்மன வன்மம் தீரவே தீராது. அத்தகைய தீயவர்கள் அதே வன்மத்தால் தண்டிக்கப்படவும் செய்வார்கள். அது காலத்தின் சூக்ஷமம். அது தானே நடக்கும். ஏன் எதற்கு எப்படி எப்போது என்பதை இறைவனே தீர்மானிக்கிறான். அது நடக்கப் போவதும், நடந்து முடிவதும் நமக்குத் தெரியாமலே கூடப் போகலாம்! அல்லது காலம் கடந்து புரியவரலாம்! ஆனால் அந்தப் பொறுப்பை ஆண்டவன் கச்சிதமாக முடித்து வைக்கிறான்! துரியோதனனுக்கு இப்போது நிகழ்ந்ததும் அது தான்.

துரியோதனன் தோற்றதையும், அவன் செல்வங்கள் பறிக்கப்பட்டதையும் அறிந்த யுதிஷ்ட்டிரன் காலையுற்றான். அவன் தம்முடைய தம்பிகளை அழைத்து துரியோதனனுக்கு உதவுமாறு வேண்டினான். மற்றவர்கள் தயங்கினார்கள். துரியோதனன் நம்மை கூண்டோடு அழிக்க நினைத்தவன். அவனுக்கு உதவச் சொல்கிறீர்களே என்று குமுறினார்கள். ஆனால் யுதிஷ்ட்டிரரோ "இவர்கள் நம் அழிவை விரும்பிய படியால் நம் பகைவர்களாகிறார்கள் என்றாலும், அவர்களும் நம் சகோதரர்களே! நாம் இருக்கும் போது இவர்களுக்குப் பிறர் கெடுதல் செய்தால் நாம் அதை எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது? அதனால் அவர்களை உடனடியாகக் காக்க வேண்டியது நம் கடமை" என்று எடுத்துக் கூறலானார்.


 சும்மா அழகுக்கு!
 

அண்ணனின் அன்புக் கட்டளைக்குப் பணிந்த அர்ஜுனனும் மற்ற சகோதரர்களும் புறப்பட்டு கந்தர்வர்களை வெற்றி கொண்டு துரியோதனனையும் பிறரையும் பத்திரமாக மீட்டு ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

யாரிடம் தம் செல்வச் செழிப்பைக் காட்டி சுகபோகத்தைக் காட்டி அவர்களை வெட்கித் தலைகுனிந்து நிற்கச் செய்யும் எண்ணத்துடன் ஊர்விட்டு வந்தானோ, அவர்கள் உதவியாலேயே உயிர்பிழைத்து அவர்கள் முன்பாக வெட்கித் தலைகுனிந்து ஊர் திரும்பிப் போனான் துரியோதனன்.

துரியோதனன் ஒன்று நினைத்தான் காலம் அதனை வேறாக செய்து முடித்தது! துரியோதனனின் வருகையும் அவனது நோக்கமும் யுதிஷ்ட்டிரனுக்கும் தெரிந்தே இருந்தது. வந்தால் வரட்டும் என்றிருந்த யுதிஷ்ட்டிரனுக்கும் அவனே எதிர்பாராத வகையில் துரியோதனனுக்கே உதவி செய்து தன் பெருந்தன்மையைக் காட்டும்  சம்பவம் நடந்து விட்டது.

இதிகாசகாலம் ஆனாலும் சரி, இந்தக் கலிகாலம் ஆனாலும் சரி, மனிதனின் முடிவுகளை அவன் மட்டுமே தீர்மானிப்பதில்லை!

காலம் அதனை தீர்மானிக்கிறது. தீர்மானிக்கும் அந்தச் சக்தியையே இறைவன் என்பர் பெரியோர்!


3 comments:

Saravanakumar Karunanithi said...

Nicely said,
Thanks for the post, Keep posting :)

hayyram said...

நன்றி சரவனகுமார், மீண்டும் வருக!

gujjan said...

naam ondru ninaika deivam matrondru ninaikum