இனியவனே! இறைவன் தான் இந்த அனைத்துமாக இருக்கிறார். கர்மங்கள், தவம் என்று மட்டுமல்ல அழிவற்ற மேலான பிரம்மமாக இருப்பதும் அவரே. இதயக் குகையில் உறைகின்ற அவரை அறிபவன் அறியாமைத் தளையிலிருந்து இப்போதே விடுபடுகிறான்.
அவனுக்குத் தலைவனாக உலகில் எவனும் இல்லை. அவனை ஆள்பவனும் இல்லை. அவனுக்குக் அடையாளமும் இல்லை. அவனே அனைத்திற்கும் காரணம். கரணங்களுக்கு அதிபனான ஜீவனுக்கு அவனே அதிபன். அவனுக்குத் தந்தையும் இல்லை. அதிபனுமில்லை.
சிலந்திப்பூச்சியும் பட்டுப்பூச்சியும் தனது நூல்களால் தன்னை மறைத்துக் கொள்வது போல் இயற்கையாகவே பிருக்ருதியில் (பிரபஞ்சம்) தோன்றும் பொருள்களால் எந்த தேவன் தானொருவனாகவே தன்னை மறைத்துக் கொள்ளுகிறானோ அவன் நமக்கு பிரம்ம ஸாயுஜ்யத்தை அளிக்கட்டும்.
ஒருவனேயாகிய தேவன் எல்லா உயிர்களிலும் மறைந்துறைகிறான். அவன் எங்கும் வியாபித்தவன். எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மா; எல்லாச் செயல்களையும் மேல்பார்ப்பவனாயும் எல்லா உயிர்களுக்கும் வாசஸ்தானமாயும் அவன் உளன்.
அவன் ஸாஷி, அறிவு வடிவினன், தனித்திருப்பவன். குணங்களால் பற்றப்படாதவன்.
செயலற்றிருக்கும் பலவற்றையும் தன் வசங்கொண்டுள்ள எந்த ஒருவன் வித்தாகிய ஒன்றை பலவாய்ச் செய்கிறானோ, அவனைத் தங்களிடம் உறைபவனாய் எவர் ஆழ்ந்து காண்கிறார்களோ அவர்களுக்கே அழிவில்லாத இன்பமுண்டு. பிறர்க்கில்லை.
நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாகவும், அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய ஆசைகளையும் அளிப்பவனாயும், அனைத்திற்கும் காரணமாயும், ஞான யோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளினின்றும் விடுபடுகிறான்.
இவ்வுலகில் நடுவில் உள்ளவன் ஹம்ஸன் (பரமாத்மா) ஒருவனே. அவனே அக்கினியாகவும் நீரினுள் புகுந்து உறைபவனாகவும் இருக்கிறான். அவனை அறிந்தே ஒருவன் சாவைக் கடந்து செல்லுகிறான்.
- ச்வேதாச்வதர உபநிஷத்து
1 comment:
நல்லப்பதிவு.விரும்பி படித்தேன்.மிக்க நன்றி சகோ.
சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..
Post a Comment