Showing posts with label உபநிஷத்து. Show all posts
Showing posts with label உபநிஷத்து. Show all posts

Saturday, December 29, 2012

'கனபாடிகள்' எனப்படுபவர் யார்?


எமதர்மனிடம் சென்ற நசிகேதன் கதை பற்றி ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். எமதர்மனால் காத்து நிற்க வேண்டி வந்ததால் நசிகேதனுக்கு மூன்று வரங்களை எமதர்மன் வழங்கினான். அப்போது இரண்டாவது வரத்தைக் கேட்கலானான் நசிகேதன். "எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத் தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லக்கூடிய யாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். கவனமுடன் புரிந்துகொண்டு அதன் படி நடந்து சொர்கத்தை அடைய விரும்பும் எனக்கு அத்தகைய யாகத்தைப் பற்றி சொல்வாயாக. இதனை எனது இரண்டாவது வரமாகக் கேட்கிறேன்" என்றான்.

எமதர்மனும் அதை ஏற்றுக்கொண்டு ஆதிகாலத்தில் நிகழ்த்தப்பட்ட அத்தகைய யாகங்களை விளக்கிச் சொன்னான். நசிகேதனும் அதனைக் கேட்டு புரிந்து கொண்டான். தான் கேட்டதை அப்படியே திருப்பிச் சொல்லி தெளிவாகக் கற்றுக் கொண்டான். நசிகேதனின் கவனமும் புரிந்துகொள்ளும் தன்மையும் கண்ட எமதர்மன் மிகவும் மகிழ்ந்து போனான். வண்ணமயமான தனது மாலை ஒன்றை பரிசாகக் கொடுத்தான். பின் கூறினான் "நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப் பற்றி நீ விரும்பிய படியே எடுத்துக் கூறிவிட்டேன். மக்கள் அந்த யாகத்தை இனி உன் பெயராலேயே அழைப்பார்கள்" என்றான்.

இங்கே கற்பித்தல் மற்றும் கற்றல் பற்றிய ஒரு விஷயத்தை நாம் அவசியம் கவனிக்க வேண்டும். நசிகேதன் எமதர்மன் சொல்லிக் கொடுத்த யாக வித்யைகளை அப்படியே அவர் சொல்லிக் கொடுத்தபடியே ஒன்று கூட மறக்காமல் அக்ஷரம் பிசகாமல் திருப்பிச் சொல்லி தான் புரிந்து கொண்டதன் ஆழத்தை வெளிப்படுத்தினான். அவ்விடத்தில் எமதர்மன் ஒரு குருவாகவும் நசிகேதன் ஒரு சிஷ்யனகவும் மாறியிருந்தார்கள். தகுதிவாய்ந்த சீடனிடம் குருவிற்கும் ஏற்படுகின்ற உணர்ச்சியாகவே எமதர்மன் நசிகேதனின் பெயராலேயே அந்த யாகம் நடைபெறட்டும் என்ற வரத்தையும் வழங்கினான்.

நம் பழங்கால கற்றல் முறையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுகிறது. ஏறக்குறைய வெள்ளையர்கள் தங்களது ஆங்கில வழிக்கல்வியை பாரதத்தில் தினிப்பதற்கு முன்பாக குருகுலக் கல்வி இந்த முறை தான் இருந்தது. அதாவது சொல்லிக்கொடுக்கப்படும் பாடத்தை மனதில் வாங்கி அதனை மனனம் செய்து அப்படியே பிசகின்றி திருப்பிச் சொல்லி மனதில் மதியவைக்கும் முறை. இம்முறையில் பாடம் கற்றால் அப்பாடம் இறக்கும் வரை மறக்காது.

சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் வாய்ப்பாடு படித்திருப்போம். ஓரெண்ட் ரெண்டு, ஈரெண்டு நாலு, முவி ரெண்டு ஆறு என்று சொல்லிச் சொல்லி படிக்கும் வாய்ப்பாடு. அவ்வழி கற்ற வாய்ப்பாடு வாழ்நாள் முழுதும் நினைவிருக்கும். மேலை நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அங்கே சிலர் கால்குலேட்டர் கொண்டு கணக்குப் போட்டு முடிக்கும் முன்னர் மனக்கணக்கில் அதன் விடையைச் சொல்லுவதைப் பார்த்து அந்நாட்டவர் ஆச்சரியப்படுவதுண்டு என்று கேள்விப்படுகிறோம். இவ்வாறு மனனம் செய்யும் கல்விமுறை வேகமாக புரிந்து கொள்ளுதலுக்கு உதவுகிறது. 

இன்னொரு விஷயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்க. மனனம் செய்வது என்றால் வெறும் உதவாத பாடத்தை பத்தி பத்தியாக மனனம் செய்யும் கல்வியாக அக்காலக் கல்வி இருந்ததில்லை. சூத்திரங்களை மனப்பாடம் செய்தல் தான் மூலக்கல்வி. அவற்றை மனப்பாடம் செய்துவ்ட்டால் அச்சூத்திரங்களை மனதில் கொண்டு பிற வேலைகளை மிகவும் எளிமையாக முடித்து விடலாம். அது தான் அதன் சூக்ஷமம். நாம் கற்ற வாய்ப்பாடு என்பது கணிதம் போடுவதற்கான அடிப்படை சூத்திரம். அது மனதில் ஆழப்பதிந்திருந்தால் எந்தகணக்கையும் எளிதாக மனக்கணக்காவே போட்டுவிடலாம். இக்கால மாணவர்கள் படிப்பது போல குப்பைகளானாலும் மணப்பாடம் செய்தால் மதிப்பெண் என்கிற முறையாக அக்காலத்தில் இல்லை. சூத்திரங்களை மனப்பாடம் செய்தலே முக்கியத்துவம் பெற்றிருந்தது.

வேதங்களையும் அப்படிப்பட்ட மனனம் செய்தல் முறையிலேயே கற்றும் கற்பித்தும் வந்திருக்கிறார்கள். காரணம் வேதங்கள் ஓதுகையில் சப்தங்களின் அளவு மிக முக்கியமானதாகும். அவை இம்மி பிசகாமல் அக்ஷரசுத்தம் மாறாமல் சொல்லப்பட வேண்டியவை என்பதலால் அதை குரு வாயால் கூறக்கேட்டு அதனை மாணவர்கள் அவ்வழியே திருப்பிச் சொல்லி மனனம் செய்தார்கள். இன்றைக்கும் வேதம் ஓதும் பயில்விப்பு அப்படியே நடந்து வருகிறது.

வேதம் ஓதும் கடினமான பல வழிமுறைகள் பற்றி நம் பெரியோர்கள் மேலும் இப்படி விளக்குகிறார்கள். பத பாடம், கிரம பாடம் என்று இரண்டு வழிகள் உள்ளது. அதன் பின்னர் மனனம் செய்து ஒப்பிப்பதில் எட்டு விதமான வழிமுறைகள் உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஜடை, மாலை, சிகை, ரேகை, த்வஜம், தண்டம், ரதம், கனம் என்று இது போன்ற எட்டு பெயர்களில் அவை அழைக்கப்படும். ஜடை என்ற உடன் நமக்கு கூந்தலை ஒன்றோடொன்று இணைத்து பிரிக்க முடியாமல் பிண்ணுதல் ஞாபகம் வரலாம். மாலையும் அப்படியே. ஓதப்படும் சொற்களை பல வார்த்தைக் கோர்வைகளால் ஆக்கி பிசகில்லாமல் ஒப்பித்தல். இது ஒரு கடினமான ஒப்புவித்தல் முறையாகும். அதாவது முதல் வார்த்தையுடன் இரண்டாவது வார்த்தை, இரண்டாவது வார்த்தையுடன் மூன்றாவது சேர்த்துப் பிரித்து ஒப்பித்தல்.

உதாரணமாக, "அம்பிகையே மகாசக்தி அகிலாண்ட நாயகியே" என்பது மந்திரம் என வைத்துக் கொள்வோம், அதனை "அம்பிகையே அம்பிகையே மகா மகா அம்பிகையே சக்தி.." என்று தொடர்தல் அல்லது "அம்பிகையே மகாசக்தி, சக்தி சக்தி அம்பிகையே, மகா மகா சக்தி சக்தி அகிலாண்ட அம்பிகையே, நாயகியே நாயகியே அம்பிகையே மகா சக்தி.." "அகிலாண்ட அகிலாண்ட அகிலம் ஆண்ட அகிலம் ஆண்ட அகிலாண்ட மகாசக்தி" என்று இப்படி வார்த்தைகளை வெவ்வேறு கோர்வைகளாக பாடிப்பாடி மனப்பாடம் செய்தால் அந்த வார்த்தைகளும் ஒலியும் உச்சரிப்புக்களும் நரம்பு நாளங்கள் அனைத்திலும் பதிவாகி காலம் முழுதும் ஞாபகம் இருக்கும். இதில் கனம் என்கிற வகையில் மனனம் செய்வதில் உள்ள சொற்கோர்வைகள் மிகவும் சிக்கலானவையாக இருக்கும் என்றும் கூறுவார்கள். இதை நன்கு கற்றறிந்து, இவ்வழியில் ஓதுவதில் வித்தகர்களாக விளங்குபவர்களையே, கனம் பாடம் அறிந்தவர்கள் - அதாவது "கனபாடிகள்" என்று பெரியோர்கள் அழைக்கிறார்கள்.

ஆக இவ்வாறு கற்று கற்றதை அப்படியே க்ரஹித்து ஒப்பித்தும் நசிகேதன் எமதர்மனின் ஆசியைப் பெறுகிறான். ஆக நசிகேதன் இவ்வழியான பாரத மண்ணின் பழம்பெரும் அறிவான கற்கும் வித்தையை நமக்கு நினைவூட்டுகிறான்.

Tuesday, April 10, 2012

இனியவனே! அவனுக்குத் தலைவன் எவனும் இல்லை!



இனியவனே! இறைவன் தான் இந்த அனைத்துமாக இருக்கிறார். கர்மங்கள், தவம் என்று மட்டுமல்ல அழிவற்ற மேலான பிரம்மமாக இருப்பதும் அவரே. இதயக் குகையில் உறைகின்ற அவரை அறிபவன் அறியாமைத் தளையிலிருந்து இப்போதே விடுபடுகிறான்.

அவனுக்குத் தலைவனாக உலகில் எவனும் இல்லை. அவனை ஆள்பவனும் இல்லை. அவனுக்குக் அடையாளமும் இல்லை. அவனே அனைத்திற்கும் காரணம். கரணங்களுக்கு அதிபனான ஜீவனுக்கு அவனே அதிபன். அவனுக்குத் தந்தையும் இல்லை. அதிபனுமில்லை.

சிலந்திப்பூச்சியும் பட்டுப்பூச்சியும் தனது நூல்களால் தன்னை மறைத்துக் கொள்வது போல் இயற்கையாகவே பிருக்ருதியில் (பிரபஞ்சம்) தோன்றும் பொருள்களால் எந்த தேவன் தானொருவனாகவே தன்னை மறைத்துக் கொள்ளுகிறானோ அவன் நமக்கு பிரம்ம ஸாயுஜ்யத்தை அளிக்கட்டும்.

ஒருவனேயாகிய தேவன் எல்லா உயிர்களிலும் மறைந்துறைகிறான். அவன் எங்கும் வியாபித்தவன். எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மா; எல்லாச் செயல்களையும் மேல்பார்ப்பவனாயும் எல்லா உயிர்களுக்கும் வாசஸ்தானமாயும் அவன் உளன். 

அவன் ஸாஷி, அறிவு வடிவினன், தனித்திருப்பவன். குணங்களால் பற்றப்படாதவன்.

செயலற்றிருக்கும் பலவற்றையும் தன் வசங்கொண்டுள்ள எந்த ஒருவன் வித்தாகிய ஒன்றை பலவாய்ச் செய்கிறானோ, அவனைத் தங்களிடம் உறைபவனாய் எவர் ஆழ்ந்து காண்கிறார்களோ அவர்களுக்கே அழிவில்லாத இன்பமுண்டு. பிறர்க்கில்லை.

நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாகவும், அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய ஆசைகளையும் அளிப்பவனாயும், அனைத்திற்கும் காரணமாயும், ஞான யோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளினின்றும் விடுபடுகிறான்.

இவ்வுலகில் நடுவில் உள்ளவன் ஹம்ஸன் (பரமாத்மா) ஒருவனே. அவனே அக்கினியாகவும் நீரினுள் புகுந்து உறைபவனாகவும் இருக்கிறான். அவனை அறிந்தே ஒருவன் சாவைக் கடந்து செல்லுகிறான்.

- ச்வேதாச்வதர உபநிஷத்து


Wednesday, March 30, 2011

நிவேதனம் செய்து உண்டால் உபநிஷத்து புரியும்!




ஒவ்வொரு குடும்பத்திலும் கடவுள் பூஜை நடக்க வேண்டும். சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகள் செய்யலாம். சௌகரியம் இல்லாவிடுல் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். 


அலுவலகம் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை
என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச்சத்தம் கேட்க வேண்டும்.


பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவை இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கே இருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதர்காக இவ்வளவும் சொன்னேன்.


வீட்டிலே இருந்தால் 'மகா நைவேத்தியம்' செய்யவேண்டும். அதாவது அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். 


நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சப்பிடப்போகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச் செய்வது என்று அர்த்தமே இல்லை. அவருக்குச் சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை
முழுவதுமே தவிர, அவருக்குக் இதனால் ஆவது எதுவுமில்லை.


'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்றுதான் அர்த்தமே தவிர, 'உண்பிக்கிறேன்' என்று அர்த்தமில்லை. 'அப்பனே இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்' என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.


- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 


ஆக இந்த பிரபஞ்சத்தில் நம்மால் ஆனது ஒன்றும் இல்லை எல்லாம் அவனிலிருந்தே தோன்றியது அவனுக்கே அர்ப்பனிக்கப்படுகிறது என்ற உயர்ந்த உண்மை மனதில் பதிந்தால் அகங்காரம் குறையும். உபநிஷத்தின் அடிப்படை சாரமான அவனிலிருந்தே தோன்றியது அவனிடமே
ஐக்கியமாகிறது என்கிற உயர்ந்த பிரபஞ்ச சக்தி பற்றிய உண்மையை சாதாரன நிவேதன காரியத்தின் மூலமாகவே நம் முன்னோர்கள் உணர்த்தி விடுகிறார்கள். 


அதனாலேயே வைனவர்கள் பெரும்பாலும் இறைவனுக்கு நிவேதனம் செய்யாமல் தினசரி உணவே கூட சாப்பிட மாட்டார்கள். எல்லாம் அவனிலிருந்தே வந்தது, நாம் அனுபவிக்கும் எந்த அனுகூலத்திற்கும் அவனது இயக்கமே காரணம் என்றுணர்ந்து அடக்கத்துடன் வாழவே இறைவனுக்கு நிவேதனம் செய்வது பழக்கமாகியது. 


இப்படி பல சம்பிரதாயங்களும் நம் எண்ணங்களைச் செதுக்கி மனிதனை முழுமைப்படுத்த மேற்கொண்ட மனோவியல் வழிமுறைகள் ஆகும். 


பெரியோர்கள் கூறிய வழிமுறைகளை அப்படியே கடைபிடித்து வந்தால் சங்கிலிப் பிணைப்புகளாக பல நன்மைகள் நம்மையறியாமலேயே
நம்மை வந்தடைவதை உணரலாம்.


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!



.

Saturday, September 11, 2010

மரணத்திற்கு அப்பால் - 18



"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

மூலப் ப்ருக்ருதியான அண்டத்தின் மகா சக்தியை சாதகங்களை செய்தவர்கள் மட்டுமே காண முடிகிறது. ஆன்மாவை உணர்ந்து இறைவனின் ஆற்றலை உணர்ந்தவர்கள் மகா சக்தியை தரிசிக்கிறார்கள். மகா சக்தியை எந்தெந்த லோகத்தில் எந்தெந்த நிலையில் நம்மால் காணமுடியும் என்பதை நசிகேதனுக்கு உரைக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! புத்தியில் கண்ணாடியில் போலவும், பித்ரு லோகத்தில் கனவில் போலவும், கந்தர்வ லோகத்தில் தண்ணீர்ல் போல் தெளிவற்றும் பிரம்ம லோகத்தில் நிழலும் வெயிலும் போல் தெளிவாகவும் அகக்காட்சி வாய்க்கிறது"

இவ்வாறான அகக்காட்சி தெளிவுற்று மனம் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நான் ஆன்மா என்பதை எவன் நிலையாக உணர்கிறானோ அவனே ஞானியாவான். அவ்வாறு குழப்பங்களில் இருந்து விடுபட மனிதன் தான் கொண்ட உடலும், உடலால் உணரப்படும் விஷயங்களையும் தனித்தனியே பிரித்தறிந்து அவை ஆன்மாவிலிர்ந்து வேறுபட்டது என்றும் ஆன்மாவே நிலையானது என்றும் உணர வேண்டும். அதை எவ்வாறு செய்வதென்பதை எமதர்மன் எடுத்துரைக்கிறார்.

"புலன்களின் தனித்தன்மை, அவற்றின் எழுச்சி மற்றும் ஒடுக்கம், தனித்தனியான உற்பத்தி ஆகியவற்றைப் பகுத்தறிகின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்."

மனிதர்கள் உட்பட உலகில் உள்ள யாவும் ப்ரபஞ்சத்திலிருந்து பிரிந்து வந்த ஒரே தன்மையிலான பொருளே! எனவே மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பொருள்களின் தன்மைகளைக் கொண்டதாக இருப்பதே இயல்பு.

உதாரணமாக பெரியோர்கள் இவ்வாறு பகுக்கிறார்கள்!

காது ஒலியை பெறுவதற்கு வின்னை நோக்கி இருக்கும் செலுத்து சக்தி.
மூக்கு காற்றின் அழுத்தத்தத நோக்கி இருக்கும் வாயு சக்தி!
கண் ஒளியை நோக்கி இருக்கும் அக்கினியின் சக்தி!
நாக்கு சுவையைத் தேடி இருக்கும் தண்ணீரின் சக்தி!
உடம்பு மணத்தினால் இயங்கும் பூமியைப் போன்ற இயங்கு சக்தி!

இப்படி ஒவ்வொரு புலனும் பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலிருந்து தனித்தனியாகத் தோன்றின, தனித்தனி செயல்களைச் செய்கின்றன எனலாம். இவைகள் விழிப்பு நிலையில் செயல்பட்டு கனவிலும் தூக்கத்திலும் ஒடுங்கி இருக்கின்றன. இவ்வகைப் புலன்கள் அனைத்தும் உயிர்சக்தியோடும் பிராணனோடும் சம்பந்தப்பட்டவை. இவ்வகைப் புலன்களுக்கும் ஆன்மாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே இதன் மூலப்பொருள் என்பதை உணரவேண்டும்.



"நசிகேதா! புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது."

"மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது.(அவ்யக்தம் என்றால் ப்ரபஞ்சத்தின் ஆற்றல்) அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்"

இவ்வாரு உலக நிகழ்விகளிலிலிருந்து இறைவன் வரை உயர்வானதை எடுத்துக் கூறுகிறார் எமதர்மன். இவ்வாறு கூறக்காரணம் இறைவனை அடையும் லட்சியத்திலிருந்து அதாவது இறைநிலையை நம் ஆன்மா பெற்று, நாமே இறைவன் என்று இரண்டர கலக்கும் நிலையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் கீழே இருக்கிறோம் என்பதை இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

'புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை' என்கிறார். அதாவது உலகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே நம் புலன்களைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இயற்கைக்கு மயங்குகிறோம். மலரைப் பார்த்தால் கண் மயங்குகிறது. வாசனை நாசியை இழுக்கிறது. அழகிய பறவைகள் கவனத்தை இழுக்கின்றன. அதன் சப்தங்கள் செவியை கவர்கின்றன. உணவின் சுவை நாவை கட்டுப்படுத்துகிறது. காமம் உடலைக் கவர்கிறது. ஆனால் இவ்வாறு புலன்கள் செயல்படுவது அவற்றின் தனித்தன்மையே அன்றி இதயக் குகையில் உரைந்திருக்கும் ஆன்மாவிற்கும் புலன் இயக்கங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதை யார் ஆழ்ந்து உணர்கிறார்களோ அவர்களது புலன்கள் மீதான மோகமும் இயக்கமும் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன.

மேலும் மரணமில்லா நிலையை அடையும் வழியை நசிகேதனுக்கு உரைக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக் குகையிலுள்ள ஆன்மாவால் விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் எனப்படுவது அண்டவெளியின் மைய சக்தி எனக்கொண்டால் அதை அனுவிலும் அனுவான மனிதக்கண்களால் காண முடியாது என்பதே உண்மை. இதனை ஆன்மாவை உணர்ந்தவர்கள் ஆன்மரூபத்தில் பிரபஞ்சத்தோடு கலந்தவர்கள் மட்டுமே காண முடியும்.

இதையே கீதையில் பகவான் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார்...

"அர்ஜுனா! உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈஸ்வர யோக நிலையைப் பார்."



ஸ்ரீ க்ருஷ்ணர் அருஜுனன்னுக்குத் தன்னுடைய மேலான ஈஸ்வர வடிவத்தைக் காட்டி அருளினார். அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது.

திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து கொண்டும் திவ்யமான வாசனையைப் பூசிக்கொண்டும், பெரும் வியப்பூட்டும் வகையிலும் ஒளி வீசிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் முகங்களைக் கொண்டதாயும் இருந்தது. வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒளி வீசினால் எவ்வளவு பேரொளி தோன்றுமோ, அவ்வளவு ஒளியோடு அந்த மகாத்மாவின் உருவம் பிரகாசித்தது.



"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."


(ஆன்மாவை அறிவோம்...)


மரணத்திற்கு அப்பால் - 19



Sunday, August 15, 2010

மரணத்திற்கு அப்பால் - 17





"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சி என்றெல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுபவைகள் எல்லாம் உண்மையில் என்ன என்பது பற்றி யாராலும் கூற முடியாது. ஏனினெல் அது அராய்ச்சி செய்து விளக்கமுடிவதில்லை. அவை அனுபவத்திற்கு உரியது. அத்தகைய அனுபவத்தை பெறுவதற்கு சுய ஆராய்ச்சி தேவை. அவ்வாறான ஆராய்ச்சியின் காரணமாக நசிகேதன் இங்கே அதுபற்றி கேட்க எமதர்மனும் சிறுவனான நசிகேதனுக்கு சிறந்ததொரு பதிலைக் கொடுக்கிறார்.

"குறிப்பிட்டு சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த ஆனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப்படுகிறதா? இது பற்றி நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்கிறான் நசிகேதன்.

எமதர்மன் கூறுகிறார்! "நசிகேதா! அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன."

ஆன்ம ஒளியைக் காட்ட புற ஒளியால் இயலாது என்கிறார் எமதர்மன். ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. ஆன்ம ஒளியே நாம் புறப்பொருளைக் காணும் விளக்காக இருக்கின்றது. ஆன்ம ஒளியால் தான் நாம் அனைத்தையும் உணர்கிறோம். ஆகையால் சாதகத்தால் ஆன்ம ஒளியை நீ உணர்வாய் என்கிறார் எமதர்மன். எவனொருவன் ஆன்ம ஒளியை காண்கிறானோ அவன் மரண பயத்தை வெல்கிறான்.

மரணத்தை விட கொடியது மரண பயம். ஆனால் அத்தகைய மரண பயத்தை ஒருவன் எப்படி வெல்ல முடியும் என்பதற்கு எமதர்மன் வழி கூறுகிறார். வாழ்க்கையின் துவக்கத்தையும் முடிவையும் பற்றிய உண்மை நிலையை உணர்பவன் மரண பயத்தை வெல்கிறான் என்கிறார்.

உதாரணமாக ஆற்றங்கரையில் ஒரு அரச மரம் இருப்பதாய்க் கொள்வோம். நாம் அதைப் பார்க்கிறோம். அதன் பிரதிபிம்பம் நீரில் தெரிகிறது. நிலத்தில் வேர்கள் கீழேயும் கிளைகள் மேலேயும் தெரியும், ஆனால் நீரில் அவை தலைகிழாகத் தெரியும். மரம் நீரின் பிரதிபிம்பத்தில் வேர்கள் மேலாகவும் கிளைகள் கீழாகவும் போல! அதாவது வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல. பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம். மரணத்தை துன்பமாகக் காண்கிறோம். அதனைக் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு துன்பம் என்றும் மரணத்தை இன்பம் என்றும் கூறுகிறார்கள். இதுவே மரம் நீரில் பிரதிபிம்பமாக தலைகீழாக தெரிவதற்கு எடுத்துக்காட்டு.



அதுவே உண்மை எனப்படுகிறது. துறவி மரணத்தை நேசிக்கிறான். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். அது போலவே உலகம் அதன் உறவுகள் அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை நிலையானவை என்று நம்புகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. இவ்வாறு நாம் காணும் உண்மைக்கு ஒரு தலைகீழ் நிஜம் இருப்பதை, நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பிரதிபிம்பமான இன்னொரு கோணம் இருப்பதை நீரில் காணும் மரத்தோடு ஒப்பிட்டு விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இந்த அரச மரம் பழமையானது. மேலே வேரும், கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே!"

"இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன. பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பது போல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் மிகப்பெரிய பிரம்மாண்டத்தன்மை கொண்டவன் என்கிற உண்மையை உணர்வதாலேயே இயக்கங்கள் தடங்கலின்றி நடைபெறுகின்றன. பேராற்றலின் சக்தியே பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கத்தையும் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றது என்பதை விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கின்றது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால் தான் தன் தொழிலைச் செய்கின்றன."



இங்கே இறைவன் என்ற பதத்தை மூலப் ப்ருக்ருதி எனக்கொள்ளலாம். அளவிட முடியாத அண்டவெளியும் பிரபஞ்சங்களும் ஒருவித ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டும் ஏதோ ஒரு செலுத்துப் பாதையிலேயே வலம் வந்து கொண்டிருப்பதையும் காணும் போது, இவைகள் எல்லாம் எதிலிருந்து உருவானதோ அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லையற்ற பரப்பளவையும் அவை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதை நாம் உணர முடிகிறது. ஆகவே அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றலின், கட்டுப்பாட்டின் காரணமாகவே அக்னி எரிக்கின்றது என்றும் சூரியன் சுடுகின்றது என்றும், வாயு அதன் வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றது என்றும் எமதர்மன் கூறுவதாகக் கொள்ளலாம்.

"இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியுமானால் அவர்களுக்கு அகக்காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது" - எமதர்மன்.



ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.


ஆன்மாவை அறிவோம்....


மரணத்திற்கு அப்பால் - 18

Saturday, July 24, 2010

மனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா?




"பாவிகளே! உங்கள் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்கிறான். இங்கே வாருங்கள்!" என்று கூவிக்கூவி அழைப்பவர்கள் இருக்கிறார்கள்! ஏதோ பாவம் என்ற பொருளை இறைவன் 'ரீபர்ச்சேஸ்' செய்து கொள்கிறார் என்பது போல் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு அந்தக் கடைகளுக்குச் சென்று தங்கள் பாவங்களை குறைந்த விலைக்கு விற்றும் வருகிறார்கள். இறைவன் அதை வாங்கிக்கொள்கிறான் என்பது இந்த அப்பாவிகளின் நம்பிக்கை. பாவம்!

அப்படி பாவங்களை விற்றவர்கள் பற்றி இங்கே , இன்னொன்று இங்கே.

உண்மையில் பிறக்கும் மனிதர்கள் எல்லோரும் பாவிகளா என்றால் இல்லை என்கிறது இந்து தர்மம். நாம் செய்யும் கர்மங்களின் வினைப்பயனாகவே பிறப்பும் இறப்பும் அமைந்து விடுகிறது என்கிறது இந்து மத உபதேசங்கள்.


சரி கர்மம் என்றால் என்ன? கர்மம் என்றால் செயல்கள் என்று பொருள். செயல்களில் பாபமும் அடக்கம், புண்ணியமும் அடக்கம். அதற்கான வினைப் பயன் நமது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. இது ஒரு சங்கிலித் தொடர் போன்று அமைகிறது. நன்மை செய்பவனும், தீமை செய்பவனும் அதற்கேற்ற பிறவிகளை அடைகிறான் என்கிறது உபநிஷத்து.

"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்" என்கிறார் உபநிஷத்தில் எமதர்மன்.

சரி இப்படி இருக்கும் போது பாபங்களை இறைவன் எடுத்துக் கொள்வான் என்று கூறப்படுவது சரியா? இறைவன் மனிதர்களின் பாபங்களை எடுத்துக் கொள்வாரா? ஓரிடத்திலிருந்து குப்பையை அகற்றினால் இன்னொரு இடத்தில் கொட்ட வேண்டும். குப்பைகள் கொட்டப்பட்ட புதிய இடம் நாற்றமடிக்கும். அந்நாற்றத்தை அகற்ற வேண்டுமானால் அங்கே இருந்தும் அதே குப்பைகளை அகற்ற வேண்டும். பாபங்களும் அப்படித்தானே! மனிதர்களின் பாபங்களை இறைவனிடம் கொடுத்து விட்டால் இறைவன் பாவியாயிற்றே! அவன் தன் பாபத்தை கழிக்க அதை யாரிடம் கொடுப்பார்? சரி எல்லா பாபங்களையும் வாங்கி ஜீரணிக்கும் அளவு சக்தி படைத்தவன் இறைவன் என்று வைத்துக் கொள்வோம், அப்படி பாபம் செய்யும் மனிதர்களை அவன் படைப்பானேன் பின் அதனை தானே வாங்கிச் சுமப்பானேன்? பாபங்களே செய்யாத மனிதர்களை இறைவன் படைக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?

இங்கே தான் நாம் படைப்பின் ரகசியம் பற்றிய ஒரு தெளிவைப் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. இறைவன் கோடான கோடி உயிரினத்தையும் , பல கோடி விண்மீன்களையும், நட்சத்திரங்களையும் மெனக்கெட்டு உட்கார்ந்து படைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனம். இவை யாவும் பொதுவாக வியாபித்திருக்கும் ஒரு சக்தியில் இருந்து உண்டானது. பரிணாமங்களும் அதன் வளர்ச்சியும் தானே நடக்கும் செயல்கள். அதாவது கர்மங்கள். அந்த கர்ம வினைகளின் பலனாகவே பாபமும் புண்ணியமும். இவை யாவும் தானாகவே நடந்தேருபவை. இவைகளை இறைவன் என்ற ஒரு உருவகம் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று என்பதை இந்து தர்மத்தின் பல்வேறு விளக்கங்களை படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.

தானாகவே உண்டான படைப்பின் ரகசியத்தை முண்டக உபநிஷத்து இவ்வாறு தெளிவாக்குகிறது.

தஸ்மாதக்னி: ஸமிதோ யஸ்ய ஸூர்ய:
ஸோமாத் பர்ஜன்ய ஓஷதய: ப்ருதிவ்யாம்|
புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்
பஹ்வீ: ப்ரஜா: புருஷாத் ஸம்ப்ரஸுதா:||

தஸ்மாத் - அவரிடமிருந்து; அக்னி - நெருப்பாலான க்ரகங்கள்

பஹ்வீ - பலவிதமான; ப்ரஜா: - உயிரினங்கள்; ஸம்ப்ரஸுதா: - உண்டாகின்றன.

"அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டானது. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரணமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின. இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன." - முண்டக உபநிஷத்து.



இங்கே இறைவன் என்பதை ப்ரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் அளவிட
முடியாத சக்தி என்று கொள்வோம். அந்த அளவிட முடியாத சக்தியின் வாயிலாகவே எல்லாம் தோன்றியது என்று முண்டக உபநிஷதம் விளக்குகிறது. கவனிக்க, இறைவன் ஒவ்வொரு கிழமையாக ஒன்னொன்றையும் படைத்தான் என்று கூறவில்லை. இறைவனிடமிருந்து தோன்றியது என்று தான் கூறுகிறார்கள். ஆக இறைவனிடமிருந்து தோன்றியதே தவிற அவன் உட்கார்ந்து ஓவர் டைம் போட்டு படைக்கவில்லை. அதனாலேயே இறைவன் என்பதை ப்ரபஞ்சத்தின் சக்தியாக நாம் புரிந்து கொள்வோம். அப்படி எடுத்துக் கொண்டால் படைப்பின் (ப்ரம்மத்தின்) ரகசியத்தை இன்னும் எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

சரி, படைப்பு என்பது ப்ரபஞ்சத்தில் இருந்து ஒரு சங்கிலித் தொடராக உண்டானது என்று கொண்டால், கர்மவினை, பாபம், புண்ணியம் போன்றவை எங்கிருந்து துவங்கியது என்பதையும் அறிய முற்படுவோம் அல்லவா. அந்தச் சங்கிலித் தொடரைப் பார்க்கலாம்.

அறிவியலாளர்களின் பிக் பேங்க் தியரியும் - முண்டக உபநிஷத்தின் மேற்கண்ட ப்ரம்மத்தின் தோற்றமும் ஒன்று படுவதை இங்கே கவனிக்கலாம். ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது தான் நாமிருக்கும் இந்த அண்ட வெளி என்கிறார்கள் அறிவியலாளர்கள். "அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டானது" - முண்டக உபநிஷத்து. இறைவன் = ப்ரபஞ்ச சக்தி.

இப்போது முதல் கர்மம், கர்மவினை அதனால் உயிர்த் தோற்றம் அவற்றினால் உண்டான பாபம் புண்ணியம் போன்றவற்றை முண்டக உபநிஷத்தின் வழியில் விளக்கமாகப் பார்ப்போம்!

ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது தான் நாமிருக்கும் இந்த அண்ட வெளி. நம்முள் எந்த பொருளுக்கு ஆத்மா என்று பெயரோ அதே பொருள் தான் சூரியனின் மையப்பகுதியிலும் இருக்கிறது. பூமியின் மையத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்பு பிழம்புதான் பூமிப்பந்தின் ஆத்மா எனக் கொள்வோம். சுழலுவதும் மழை பெய்வதும் அதன் கர்மா! அந்த மழையால் இடியும் மின்னலும் உண்டானது கர்ம வினை. அந்த கர்ம வினையின் பயனாகத் தோன்றிய முதல் உயிரி அமீபா! அந்த அமீபாவின் கர்மம் இனவிருத்தி என்று கொண்டால் அந்த கர்ம வினையின் பயன் பரினாம வளர்ச்சி, செடி கொடி முதல் மனிதர்கள் வரை.



ஆக பிரபஞ்சத்தின் நிலையில்லா கர்மமும் அதன் வினையும் தான் 'நாம்'. ஆக நாம் பிறந்ததும் நம்முடைய வாழ்க்கை சுழல்வதும் நமக்கு மேல் இருக்கும் மிகப்பெரிய சக்தியான பிரபஞ்சத்தின் கர்மத்தால் உண்டானது. ஆக பிக் பேங்க் வெடிப்பு முதல் கர்மம் என்று நமது சிற்றறிவிற்கு எட்டியவரைக் கொள்ளலாம். ஆக முதல் கர்மாவிலும் முதல் உயிரின் தொடக்கத்திலும் பாவம் புண்ணியம் இருக்கவில்லை. பின் உயிர்கள் ஒன்று இரண்டான போது ஒன்றின் பசிக்கு இன்னொன்று உணவானபோது தான் பாவமும் புண்ணியமும் பிறந்திருக்க வேண்டும். பின்னர், முதல் பாவம் அதற்குப் பலனாக வேறு பிறப்பு, பின்னர் அதில் பாவம் அதனால் இன்னொரு பிறப்பு என்று நீண்டு 'நம்' வரை வந்திருக்கிறோம்.

ஆக இந்த ப்ரம்மத்தின் ரகசியத்தைப் புரிந்து கொண்டு அதை உணர்ந்து வாழ்பவர்கள் யாரோ அவர்களே ஞானிகளாகின்றனர். அவர்கள் தங்களது ஞானத்தால் உணர்வுகளை இறைவனிடமே (அல்லது ப்ரபஞ்சத்தின் சக்தியிடமே) நிலை பெறச்செய்து இறுதியில் அதனுடனேயே கலந்து விடுகிறார்கள். அவ்வாறு இறைசிந்தனையில் ஆழ்ந்து கர்மங்களை தொலைப்பவர்கள் பாபங்களில் இருந்து தாமாகவே விடுபடுவார்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணர் இதை மெய்ப்பிக்கிறார்.

கீதைக்கு வருவோம், ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார் - "அர்ஜுனா! செயல்களையோ அவற்றைச் செய்யும் உரிமையையோ, செயல்களின் பயனோடு ஒன்றுபடும் தன்மையையோ இறைவன் இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்வது இயற்கையின் வேலை" என்கிறார்.

மேலும் "அர்ஜுனா! எங்கும் நிறைந்த இறைவன் எவருடைய பாவத்தையோ, புண்ணியத்தையோ வாங்கிக் கொள்வதில்லை. எவருடைய குணங்களையும் பொருட்படுத்துவதில்லை, அறிவு அறியாமையால் மறைக்கப்பட்டுள்ளது. எனவே உயிர்கள் மாயையில் மூழ்கி உள்ளன." என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

"அர்ஜுனா! யோகிகள் அறிவை இறைவனிடத்தில் நிலைக்கச் செய்வதாலும், அவர்கள் ஆன்மாவும் அதுவாகவே இருப்பதாலும், அதிலேயே நிலை பெறுவதாலும், அதுவே அவர்களுடைய மேலான லட்சியமாக இருப்பதாலும், அவர்களுடைய பாபங்கள் அனைத்தும் ஞானத்தால் அழிக்கப்பட்டு மீண்டும் பிறவாத நிலையான மோட்ச பதவியை அடைகிறார்கள்." - ஸ்ரீ க்ருஷ்ணர், ஸந்யாஸ யோகம்.

அதாவது பாபங்கள் யாருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கப்படுவதில்லை. தன்னுடைய உணர்வுகளை இறைவனிடத்திலே செலுத்தி கர்மங்கள் அதாவது பாபமோ, புண்ணியமோ எந்த விதமான உணர்ச்சிப்பூர்வ செயலிலும் ஈடுபடாமல் இறை சிந்தனையிலேயே கலந்து விடுபவர்கள் தன்னுடைய பாபங்களில் இருந்து தானே விடுபடுகிறான் என்பதே கீதோபதேசம்.


ஆக இந்து தர்மத்தின் எந்த உயர்ந்த உபதேசங்களும் இயற்கைக்கு மாறான நம்பிக்கையை வளர்ப்பதில்லை. அவை நிதர்சனமான உண்மையையும் இயற்கையின் சக்தியை முழுவதுமாகப் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றன. இதனை புரிந்து கொள்ளும் மனிதர்கள் பாபம் செய்ய மாட்டார்கள். செய்த பாபத்தை வாங்கிக்கொள்ள (buy back) ஒரு சாமி வரும் என்று பாபத்தை விற்க வரிசையில் நிற்க மாட்டார்கள்!. இதனை நாமும் புர்ந்து கொள்வோம். மற்றவருக்கும் எடுத்துச் சொல்வோம்! அதாவது..

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!