Friday, June 22, 2012

விவேகானந்தரின் பொன்மொழிகள்!



பெரியவர்கள் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம்.

இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து நீ தப்பி ஓட முயற்சி செய்யாதே. வெற்றியா தோல்வியா என்று நீ கவனித்துக் கொண்டிருக்காதே. பரிபூரனமான தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு. வெற்றி பெறுவதர்காகவே பிறந்துள்ள மனம், உறுதியுடன் தானாகவே இணைந்து, விடா முயற்சி செய்கிறது என்பதி உணர்ந்து கொள்.

கடவுளிடம் நம்பிக்கையில்லாதவன், தத்துவ தர்சனங்கள் இல்லாதவன், மதப்பிரிவு எதிலும் சேராதவன், எந்த ஒரு கிறிஸ்தவக் கோயிலுக்கும் ஹிந்து கோவிலுக்கும் செல்லாதவன், லௌகிகப் பற்றிலேயே தோய்ந்து போனவன் என்று இப்படியெல்லாம் ஒருவன் இருந்தாலும் கூட அவனும் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதைப் புத்தர் பெருமானுடைய வரலாறு காட்டுகிறது.

ஒரு யாகத்தில் விலங்குகளைப் பலியிடுவதைத் தடுத்து நிறுத்த தம் உயிரை வழங்க முன்வந்தவர் அவர் ஒருவரே! " நீ சொர்கம் போவதர்கு ஒரு ஆட்டுக்குட்டியைப் பலியிடுவது உதவி செய்யுமென்றால், ஒரு மனிதனைப் பலியிடுவது அதைவிடவும் அதிகமாக உனக்கு உதவி செய்யும். எனவே என்னை நீ பலியிடு" என்றார். அதைக் கேட்ட அந்த அரசன் வியப்படைந்து போனான்.

நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள். மற்றவர்களுடைய நன்மைக்காக அறிஞன் தன்னைத் தானே தியாகம் செய்துவிட வேண்டும். உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாகத்தான் என்னுடைய நன்மையை நான்பெற முடியும். இதைத் தவிர வேறு ஒரு வழியுமில்லை.

கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கும் பரந்த இந்த உலகத்திற்கும் நன்மை செய். மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கும் செல்ல வேண்டும். மரணம் வருவது இவ்வளவு உறுதியாக இருக்கும் போது நல்ல ஒரு காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.