Friday, August 24, 2012

விதுர நீதி - செயல்கள் மூலம் உயர்ந்து நில்!



தன் மகன் துரியோதனது நடவடிக்கையினால் வருந்தி கையறுநிலையில் இருக்கும் திருதிராஷ்டிரனிடம் விதுரர் இவ்வாறு கூறுகிறார்.

பிறரால் தக்கப்பட்டுக் காயமடைந்தவனும், தனது நெருங்கிய நண்பனுக்குத் துரோகம் செய்தவனும், தன் சொத்து-சுகத்தையெல்லாம் இழந்தவனும் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அது போலவே ஒருவன் தான் அறிந்த உண்மையைத் துணிச்சலாக வெளியிடாவிடில் தன் வாழ்நாள் முழுவதையும் துயருடன் கழிப்பான்.

ஒருவன் தனது வளர்ப்பு பிராணிக்காக பொய் சொன்னால் அவனுடைய முன்னோர்களில் ஐந்து பேர் நரகத்தில் தள்ளப்படுவர். தனது பசுவிற்காகப் பொய் சொன்னால் பத்து முன்னோர்களும், தனது குதிரைக்காகப் பொய் உரைத்தால் நூறு முன்னோர்களும் நரகத்தில் தள்ளப்படுவர். தனக்கு வேண்டிய மனிதனுக்காகப் பொய் கூறினால் அவனையும் சேர்த்து ஆயிரம் முன்னோர்கள் நரகத்தை அடைவார்கள்.

தங்கம் பெறுவதற்காகப் பொய் கூறுபவன், தன் குடும்பத்தினர் அனைவருக்கும், எதிர்காலத்தில் தன் குடும்பத்தில் பிறக்கப் போகிறவர்களுக்கும் அழிவு ஏற்படச் செய்கிறான். நிலம் சம்பந்தமாகப் பொய் கூறுபவன் தன்னிடம் உள்ளவையும் தன்னைச் சார்ந்தவையும் எதுவும் மிஞ்சாமல் அழிந்துவிடும். ஆகவே ஒருபொழுதும் நிலம் பற்றிப் பொய் கூறக்கூடாது.

முதுமைத் தளர்ச்சி நமது அழகையும், ஆசை பொறுமையையும் சீர்குலைக்கும். சாவு உயிர் முச்சை நிறுத்தி விடும். பொறாமை நன்னெறியில் செல்வதைத் தடுக்கும். கோபம் செல்வச் செழிப்பையும், தீயோர் நட்பு நமது நன்னடத்தையையும் பாதிக்கும். காமம் மான-அவமான உணர்வை மரத்துப் போகச் செய்யும். கர்வமோ நம்மிடமுள்ள அனைத்தையும் அழித்தொழித்துவிடும்.

இரவு நேரத்தில் தீகுச்சியைக் கொளுத்தினால் பொருட்கள் கண்ணுக்குத் தெரியும். அதுபோலவே ஒருவன் செய்கின்ற செயல் மூலம் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என அறியலாம்.

ஆகவே மன்னா, தங்கள் புதல்வர்களை அவர்களின் செயல்களின் மூலம் உயர்ந்தவர்களாக இருக்கச் செய்யுங்கள்!

- மகான் விதுரர்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...