Sunday, July 14, 2013

அறம் இல்லாத துறை - 2


இம்மாதம் இந்துமுன்னனியின் மாநில செயலாளராக இருந்த திரு. வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட தினத்தன்று வெள்ளையப்பனின் முக்கியப்பணி என்னவாக இருந்தது தெரியுமா? இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை நடத்திக் கொன்டிருந்தார். செய்திகளில் வெளியான அந்த சம்பவத்தைப் பார்ப்போம்.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலை கடந்த வாரம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வெள்ளையப்பன், ஜலகண்டேஸ்வரர்  ஆலய நிர்வாகத்தை மீண்டும் தரும ஸ்தாபனத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தி வந்தார். இதற்காக பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர் போராட்டத்தையும் தொடங்கி இருந்தார்அதன் ஒரு பகுதியாக நேற்று காலை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், அந்த கோவிலை மீட்பதற்கான கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. வெள்ளையப்பன் தலைமையில் நடந்த அந்த கூட்டுப்பிரார்த்தனை மதியம் வரை நடந்தது. அடுத்தக்கட்டமாக இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து இன்று வேலூரில் கடையடைப்பு போராட்டத்துக்கு இந்து முன்னணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வெள்ளையப்பன் ஆலோசனை நடத்தி விட்டு, பிற்பகல் 3 மணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு தான் தங்கி இருக்கும் ராமகிருஷ்ணா மடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வருவதை எதிர்பார்த்து அந்த பகுதியில் ஒரு மர்ம கும்பல் காத்திருந்தது. 3.10 மணிக்கு வெள்ளையப்பன் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கியதும், மறைந்து இருந்த மர்ம கும்பல் திடீரென அவரை வீச்சரிவாளால் வெட்ட ஓடி வந்தது. இதை கவனித்து விட்ட வெள்ளையப்பன் மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அந்த மர்ம கும்பல்  அவரை ஓட ஓட விரட்டிச் சென்று சுற்றி வளைத்து தலை, கழுத்து, கால் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியது. அவரது தலையில் 5 இடங்களிலும், கழுத்து, வலது கால் முட்டியிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் வெள்ளையப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வெள்ளையப்பன் தனது கடைசி மணித்துளிகளை இந்து அறநிலையத்துறை கோவில்களை கையகப்படுத்தக் கூடாது என்று அறிவித்தே இறந்து போனார். அப்படி ஒருவர் உயிரைக் கொடுத்து அறநிலையத்துறையை எதிர்க்க என்ன காரணம்? கோவில்களில்களை நிர்வாகம் செய்கிறோம் எனக்கூறிக்கொண்டு இவர்கள் செய்யும் முறைகேடுகள் கொஞ்சநஞ்சமல்ல என்பதால்.

ஒரு கோவிலை நிர்வகிக்க செயல் அலுவலர், உதவி ஆணையர், துணை ஆணையர், இணை ஆணையர், கூடுதல் ஆணையர், சிறப்பு ஆணையர், அரசுச் செயலர் என்று பல்வேறு பதவிகளில் பலர் கூடி கும்மியடிப்பார்கள். சாதாரணமாக பிற அரசுத்துறையில் ஈடுபடும் ஊழல்களை விட இத்துறையில் அதிக முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கோவில் வருவாயிலிருந்து இத்துறை 12% நிர்வாகம் செய்வதற்கும், 4% தணிக்கை செய்வதற்கும் எடுத்துக் கொள்கிறது. இச்செலவினங்களுக்காக ஆண்டுதோறும் உள்வரும் வருவாயிலிருந்து மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் கோவிலின் நில புலன்கள், தங்கம், வெள்ளி முதலியன விற்றத் தொகை, நன்கொடைகள் முதலியனவற்றிலிருந்தும் நிதியை அறநிலையத்துறை எடுத்துக் கொள்கிறது.

பெரும்பாலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டு விடுகிறது. கோவில் நிலங்கள் காக்கப்படுவதில்லை.

கோவில் வருவாயில் 40% ற்கு மேல் செலவினங்களுக்கு எடுத்துக் கொண்டாலும் பலபெரிய கோவில்களில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் மிகவும் தரக்குறைவாக நடத்தப்படுகின்றனர். காரணம் கோவில் அதிகாரிப்பணி என்பது அரசு உத்யோகமாக ஆகிவிட்ட நிலையில் கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிட கைக்கூலிகளும் இப்பணிகளில் நுழைந்து விடுவதால் அவர்கள் கோவில் அர்ச்சகர்களையோ அல்லது கோவில் திருப்பணி பூஜைகளையோ மதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இது பற்றிய தனது நேரடி அனுபவத்தை ஜனதா கட்சி சட்டப்பிரிவு பொதுச்செயலாளர் திரு ரமேஷ் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

பல வருடங்களாக வெளிநாட்டில் இருந்துவிட்டு ஊருக்கு வந்த நண்பர் ஒருவருடன் திருச்சியில் உள்ள ஒரு பெரிய கோவிலுக்குச் சென்றோம். அக்கோவிலில் ஒருவர் மிடுக்குடன் நடந்து வந்தார். கோவில் கருவறையின் விளிம்பில் நின்று, அங்கிருந்த வயதான அர்ச்சகர் ஒருவரை நோக்கி ஒருமையில் பேசத் தொடங்கினார்"உன்னை சாமி நைவேத்யம் எல்லாம் ஒரே வேளையில் தானே செய்யனும்னு சொன்னேன். அப்படி செய்யக்கூடாதுன்னு சொன்னியாமே? இங்க ஒழுங்கா நான் சொன்னபடி கேட்டா இருக்கலாம். நான் நெனச்சா எப்ப வேணாலும் உனக்கூ ரிட்டையர்மென்ட் போட முடியும் தெரியுமா?" என்று கோபம் கொப்பளிக்க பேசியவரைப் பார்த்து அர்ச்சகர் பவ்யமாகத் தலையாட்டினார். அந்த நபருக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்தார். அத்தீர்த்தத்தை அலட்சியமாக ஒரு கையால் வாங்கிய அந்த நபர் அதை பருகாமல் தரையில் விட்டார். அங்கு நிற்பவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏதோ சத்தம் போட்டுக் கொண்டே வெளியேறினார்.

என்னுடன் வந்திருந்த வெளிநாட்டு நண்பரோ "பெரிய ஆலயங்களைக் கட்டிய ராஜராஜ சோழன் போன்ற பேரரசர்கள் எல்லாம் மிகுந்த அடக்கமாகவும், பன்பாட்டுடனும் நடந்து கொள்வார்கள் என்று கேட்டு இருக்கிறோம். ஆனால் கோவிலில் இப்படி தரக்குறைவாக பேசி பெருமாள் தீர்த்தத்தை தரையில் விடும் இந்த ஆணவக்கார நபர் யார்?" என்று கேட்க அருகில் இருந்த உள்ளூர் பக்தர் ஒருவர் மிக்க சோகத்துடன் சொன்னார் "இவர் தான் இந்தக் கோவில் E. O." அதாவது எக்ஸிகியூட்டிவ் ஆபீஸராம். அவர் நாத்திகராம். அதனால் தான் பெருமாள் தீர்த்தத்தை பருகாமல் தரையில் விடுகிறார்" என்றும் கூறினார்.

திரு ரமேஷ் மேலும் தனது "அறிந்து கொள்வோம் அறம் நிலையாத் துறை" புத்தகத்தில் இவ்வாறு பூஜைவிவகாரங்களில் தலையிட அதிகாரிகளுக்கு உரிமை இல்லை என்பதை விளக்குகிறார்.

"கோவில் பூஜை விவகாரங்களில் தலையிடுபவர்களாகவே பல கோவில்களில்  க்கள் இருக்கிறார்கள். இப்படி மத நம்பிக்கைகள் பூஜை முறைகளில் தலையிட இந்த அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வில்லை. மதம், மத நம்பிக்கை , வழிபாடு சம்பந்தமான பூஜை, திருவிழாக்கள், கும்பாபிஷேகம், தொன்மையான கோயில் பழக்க வழக்கங்கள் போன்ற விஷயங்களில் தலையிட செயல் அலுவலருக்கோ, ஆணையருக்கோ, அறங்காவலர்க்கோ, அரசுக்கோ, அறக்கட்டளைத்துறைக்கோ எந்தவித அதிகாரமும் கிடையாது. இதனைச் சட்டம் மிகத் தெளிவாகச் சொல்கிறது. அவ்வாறு பூஜைகளில் , கோயில் மத வழக்கங்களில் தலையிடும் அல்லது மாற்றச்சொல்லி கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்கவும் முடியும்" என்கிறார்.

திருச்செந்தூர் கோவிலில் குறிப்பிட்ட இடத்தில் யாகம் செய்யக் கூடாது என்றும் அர்ச்சனை செய்யக்கூடாது என்றும் கோவில் அதிகாரிகள் வாய்வழி உத்தரவிட்டு கோவில் வழக்கத்தில் குறுக்கீடு செய்தனர். அதே போல ராமேஸ்வரம் கோவிலில் இரண்டு தீர்த்தக்கிணறுகளை பராமரிக்க முடியவில்லை எனக்காரணம் கூறி அதிகாரிகள் மூடிவிட்டனர். இது போல மக்கள் நம்பிக்கைகளிலும் கோவில் பழக்கங்களிலும் குறுக்கீடுகள் நிகழ்வது வன்மையாக கண்டிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய அதிகாரிகளைக் கொண்ட அறநிலையத் துறை கோவில்களை நிர்வகிக்கத்தான் வேண்டுமா? இது போன்ற ஒரு போராட்டத்தில் கலந்து கோண்டு கோவில்களைக் காக்கப் போராடிய நிலையில் ஒருவர் உயிரிழக்கத்தான் வேண்டுமா?

தனது கடைசி மூச்சில் அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இறந்து போன திரு. வெள்ளையப்பனின் ஆன்மாவிற்கு தமிழக அரசும் , முறையற்ற அறநிலையத்துறையும் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் அறநிலையத்துறை எவற்றையெல்லாம் கோயில்களில் செய்யக்கூடாது என்பதையும் அவைகளெல்லாம் எப்படி மீறப்பட்டு வருகின்றன என்பதையும் தொடர்ந்து பார்ப்போம்.


No comments: