Tuesday, July 2, 2013

உள்ளுணர்வால் உறவாடுங்கள்!விஷயத்திற்குள் போகும் முன் ஒரு சுவாரஸ்யமான ஆய்வொன்றைப் பார்ப்போம்.

லண்டனில் வசிக்கும் மனோதத்துவ ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் ராபர்ட் மாரிஸ் ஆச்சரியமான சோதனை ஒன்றை நடத்தினார்.

ஆழ்மனதின் சக்தியை துல்லியமாகக் காட்டிய சோதனை அது.

ஒரு கூண்டுக்குள் 19 எலிகள் விடப்பட்டன. அவற்றின் முதுகில் 1, 2, 3 என எண்கள் எழுதப்பட்டன. மாரிஸ் ஒவ்வொரு நிமிஷ இடைவெளி விட்டு 2, 4, 6, 8 என்ற ரெட்டைப்படை வரிசையில் எலிகளைக் மின்சாரம் பாய்ச்சி கொல்லத்துவங்கினார். அதாவது 2, 4, 6, 8, 10, 12 14 என்ற வரிசையில் எலிகள் கொல்லப்பட வேண்டும். 6 வது எலி கொல்லப்பட்டவுடன் 8,10, 12, 14, 16, 18 வரிசை எண்கள் கொண்ட எலிகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டன. நடக்க முடியாமல் துவண்டு போயின. அதே நேரம் 1, 3, 5, 7 வரிசை எண் கொண்ட எலிகள் சாதாரணமாக பயமில்லாமல் வளையவந்தன. அதாவது வரிசைப்படி மாரிஸ் எங்களைக் கொல்லமாட்டார் என்பது புரிந்தது போல. '4ம் எண் கொண்ட எலி செத்துவிட்டது, அடுத்து 6 ம் எண் கொண்ட எலி நான் தான்' என்ற கணிதமும் லாஜிக்கும் எலிகளுக்குத் தெரியவாய்ப்பில்லை. ஆனால் டாக்டர் மாரிஸ் மனதுக்குள் எடுத்திருந்த முடிவை சம்பந்தப்பட்ட எலிகள் ஏதோ உள்ளுணர்வால் புரிந்து கொண்டிருக்க வேண்டும். மாரிஸ் இந்தச் சோதனையை நடத்திக் காட்டியவுடன் மேற்பார்வையிட்ட பல விஞ்ஞானிகள் விளக்கம் சொல்ல முடியாமல் விழித்தார்கள்.
- மனிதனும் மர்மங்களும், மதன்.

மேற்கண்ட செய்தியின் மூலமாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மனிதர்களுடைய உள்ளுணர்வைப் புரிந்து கொள்ளும் சக்தி உண்டு. இவ்வகையான புரிதல்களின் வழியே அந்ததந்த விலங்குகள் அல்லது பறவைகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு மனிதர்கள் அவற்றிலிருந்து செய்திகளை எடுத்துக்கொண்டிருந்தான். இயற்கையோடு இசைந்து வாழ்ந்த மனிதர்களுக்கு இவை பழக்கப்பட்டவை.

இயற்கை - அது மனிதனை விட்டு விலகுவதுமில்லை அவனைக் கைவிடுவதுமில்லை. மனிதன் தான் இயற்கையை கைவிட்டு விலகிச் சென்றுகொண்டிருக்கிறான். அவைகளுடன் சேர்ந்து வாழ்தலே நாகரீகமற்ற காட்டுவாசி வாழ்க்கை முறை என்று நாம் எண்ணிக்கொண்டோம். இயற்க்கையை அழித்து அவற்றை நம் இஷ்டங்கள்ப்படி மாற்றி வாழ்வதே நாகரீக வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டோம். பழமை அனைத்தையும் மூடத்தனம் என எள்ளிப் புறந்தள்ளிவிட்டோம்.


சோறு போட்ட வீட்டுக்கூரையில் நின்று காகமொன்று விடாமல் கத்தினால் வீட்டைத்தேடி விருந்தாளி வருவராம். காகம் தரும் செய்தியை காலம் பார்த்து உணர்ந்து வீட்டுக்கு வரும் விருந்தினரை எதிர்பார்த்தனர் நம் முன்னோர். நம் வீட்டு விருந்தாளிக்கு காக்கை ஏன் 'காலிங் பெல்' ஆனது? காக்கைக்கு தினமும் சோறு போடுதல் என்ற வழக்கும் இன்றும் பல வீடுகளில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. தினசரி சோறு போடும் வீட்டினரோடு காகம் உணர்வுப்பூர்வமாக உறவாடுகிறது. அவர்கள் வீட்டில் நடக்கும் சுக துக்க நிகழ்வுகளை கவனிக்கிறது. எந்தெந்த நாட்களில் தனக்கு விருந்து சாப்பாடு கிடைக்கும் என்பதையும் அவை புரிந்து கொள்கின்றன. வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அந்த நாளில் இலை போட்டு பந்தி பரிமாறப்படும். வடை பாயாசத்துடன் தனக்கு உணவு கிடைக்கும். இதனைப் புரிந்து கொள்ளும் காகங்கள் தனக்கு வழக்காமாக அமுதுபடைக்கும் அன்பரின் இல்லத்திற்கு விருந்தினர் வருவதைக் கொண்டாடுகிறது.

அது மட்டுமல்லாமல் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் காகம் கீழே நடப்பனவற்றை உள்ளுணர்வால் புரிந்து கொள்கிறது. இரண்டு தெருவிற்கு அப்பால் நடந்து வரும் மனிதர்களைப் பின் தொடர்ந்து பறந்து அவர்கள் யார் வீட்டை எண்ணிக்கொண்டே வருகிறார்கள் என்பதை உள்ளுணர்வின் மூலம் உணர்ந்து கொள்கிறது. அந்த வீட்டிற்கு அவர்களுக்க்கு முன்னாலேயே போய் 'உங்கள் வீட்டிற்கு ஆள் வருகிறார்கள்' என்று கத்திச் சொல்லி அறிவிக்கிறது. தினசரி உணவு கொடுத்து உறவாடும் மனிதர்களுடன் காகம் உணர்வு கொண்டு உறவாடும் செயல். அதே வீட்டிற்கு விருந்தினர் அடியெடுத்து வைக்கையில் 'வாங்க வாங்க, அதான் காக்கா ரொம்ப நேரம் கத்திக்கிட்டே இருந்திச்சா, யாரோ வர்ராங்க போலருக்கேன்னு நினைச்சிட்டே இருந்தேன்' என்று கூறிக்கொண்டே விருந்தினரை வரவேற்பர்.

இதில் நம்பிக்கை மூட நம்பிக்கை என்ற பேச்சுக்கு இடமில்லை. இயற்கையோடு ஒன்றி வாழும் மனிதர்களோடு இயற்கை அதே உணர்வுடன் தனது அன்புக் கரங்களை நீட்டும் உள்ளுணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்.


நாய் ஊளையிட்டால் கெட்டது நடக்கும் என்பது நம்பிக்கை என்பார்கள். காரணம் நாய்கள் நம் சந்தோஷங்களையும் நமக்கான அபாயங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் சக்தி படைத்தவை. பாசத்துடன் நாய் வளர்க்கும் ஒருவர் ரெண்டு தெருவிற்கு முன்னால் வரும்போதே நாய் வீட்டுக்குள்ளே அங்கும் இங்கும் ஏதோ ஒரு சந்தோஷத்தில் அலைபாயத்துவங்குக். வாசற்கதவை அந்த நபர் திறக்கும் சப்தம் கேட்டவுடன் நீண்ட நேரம் அந்த வரவை எதிர்ப்பார்த்து போல ஓடிச் சென்று மேலே விழுந்து வரவேற்கும். தன்னை விரும்பி வளர்ப்பவர் எங்கோ வரும்பொழுதே அதனை தனது உள்ளுணர்வால் அறிந்து கொள்ளும் சக்தி நாய்க்குண்டு.

அது போலவே தன்னை வளர்ப்பவர் வீட்டில் ஒரு துக்கம் வரப்போகிறது என்பதையும் இன்னும் சில மணித்துளிகளில் தன் மீது பிரியமாக இருப்பவர் ஏதோ துக்கத்தில் ஆழப்போகிறார் என்பதை அல்லது அவருக்கு ஏதோ நேரப்போகிறது என்பதையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு அந்த துக்கத்தை தன் பாணியில் வெளியிடுகிறது. சில நாய்கள் ஒரு இழுவையான சப்தத்தில் குறைக்கும், சிலவகை ஊளையிடும். சிலவகை உறுமிக்கொண்டே இருக்கும். இவையெல்லாம் விலங்குகளோடு நெருங்கிப் பழகும் போது அவைகள் நம்மோடு தத்தனது உள்ளுணர்வினால் உறவாடும் சங்கதிகள். இவற்றை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் பலநேரங்களில் அறிவை பயன்படுத்தி மூடநம்பிக்கை எனச் சொல்லி ஒதுக்கி விடுவோம், அல்லது அவற்றை லட்சியப்படுத்த மாட்டோம். ஆனால் இயற்கையும் ஜீவராசிகளும் நம்மோடு உள்ளுணர்வால் என்றும் உறவாடிக்கொண்டே தான் இருக்கின்றன.

மரம் செடி கொடிகளுக்குக் கூட இது போன்ற உள்ளுணர்வு இருப்பதை நாம் மறந்து விட்டோம். அவற்றை ஜடமென நினைத்து மிதித்து விட்டோம். அதெப்படி, உணர்ச்சியற்ற ஒருவனை 'மரம் போல நிற்கிறாயே' என்றல்லவா கேட்போம்? மரத்திற்காவது உணர்ச்சியாவது என்று கேட்பீர்கள். அதனை புரிந்து கொள்ள நான் ஒரு வழி சொல்கிறேன். செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் நட்டு வைத்து வளர்ந்த மரம் அல்லது செடி நீண்ட நாட்கள் காய்க்கமலோ அல்லது பூக்கமலோ இருக்கிறதா? பருவத்திற்கு காய் பழங்கள் கொடுப்பதில்லையா? அந்த மரத்திடம் போங்கள். அதனை செல்லமாக ரெண்டு தட்டு தட்டுங்கள். அதனிடம் பேசுங்கள் 'நல்லா காய்க்கனும் என்ன, அடுத்த வாட்டி காய்க்காம இருந்தா உன்னை வெட்டிப்புடுவேன்' என்று ஒரு அடி போடுங்கள். கேட்பதற்கு கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த பருவத்தில் அது வரை காய்க்காத மரம் உங்கள் மனதை குளிரச்செய்யும். நான் கேரண்டி.

வீட்டில் துளசி, வெற்றிலை, மலர்ச்செடிகள், அல்லது கீரை, மிளகாய் என எந்தச் செடி போட்டாலும் அவற்றுக்குத் தினமும் உங்கள் கையால் தண்ணீர் ஊற்றுங்கள். தண்ணீர் ஊற்றும் போது நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவது போன்ற பாச உணர்வு பொங்க ஊற்றுங்கள். உங்கள் உள்ளுணர்வு செடிகளுக்குப் புரியும். ஓரிரண்டு நாட்கள் அவற்றின் இலைகளை பிஞ்சுக்குழந்தைகளின் பாதங்களைத் தொடுவது போன்று தொட்டு ஆனந்தப் படுங்கள். ஒவ்வொரு இலையாக தண்ணீர் ஊற்றி குளிர்வித்துக் கொஞ்சுங்கள். நல்லா வளரனும் செல்லங்களா என்று மனதில் நினைத்துக்கொண்டே அவற்றிற்கு நீரூற்றுங்கள். 4 நாட்களில் அவைகள் பச்சைபசேல் என நீங்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் அடர்த்தியாக வளர்ந்துவிடும். பரிசோதனைக்காக அதே செடியை செடி வளர்க்கும் விருப்பமே இல்லாத உங்கள் பக்கத்து வீட்டுக்காரரையும் நட்டு வைத்து வளர்க்கச் சொல்லுங்கள். அவர் உங்கள் வீட்டுச் செடி மட்டும் எப்படி இவ்வளவு அடர்த்தியாக வளர்ந்தது எனக்கேட்டு ஆச்சர்யம் தெரிவிப்பார். இவை அனுபவ உண்மைகள்.

நம் வேத சாஸ்திரங்களில் இயற்கையுடன் நேரடியாக உறவாடுவதெப்படி எனச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நாம் அதை மதிப்பதில்லை அல்லது மறந்து விட்டோம். ஒரு மரத்தை வெட்டினால் கூட அது வயோதிகாமான மரமாக இருக்கவேண்டும். அதனிடம் வெட்டுவதற்கு முன்னால் சில சப்தங்களுடன் கூடிய மன்னிப்பு கேட்கும் விதமான மந்திரங்களைச் சொல்லி அதனிடம் அறிவித்து விட்டு வெட்ட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆனால் நாம் அப்படியா செய்கிறோம். வேறோடும் வேறடி மண்ணோடும் பல மரங்களை தயவு தாட்சன்யம் இன்றி வெட்டுகிறோம். ஊட்டி முதல் உத்திரகாண்ட் வரை மணலைப் பிடித்து வைத்து நாம் வசிக்க இடம் கொடுத்து நம்மைக் காப்பாற்றிய மரங்கள் பறி போனதால் இன்று மணல் அனைத்தும் சரிந்து மலைகள் தரைகளாகின்றன. இயற்கையோடு உறவாடும் அனைத்து முன்னோர்களின்  நற்பழக்கங்களையும் மூடத்தனம் எனப் புறக்கணித்து அவைகளை விட்டு அந்நியப்பட்டு நிற்கிறோம். பின்னர் புரிந்து கொள்ள முடியாமல் இழப்புகளைச் சந்திக்கிறோம்.

 
இயற்கை நம்மோடு உள்ளுணர்வால் மட்டும்தான் உறவாடும். நாம் அந்த மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதைச் சொல்லிக் கொடுப்பவை தான் சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும். நாம் என்றைக்கு அந்த மொழிகளை மறந்தோமோ அன்றைக்கே இந்த புவியை இழந்தோம் என ஆகிறதுஇயற்கையைச் சார்ந்து வாழ்தல் பழமை என்றும் மனிதனை மனிதன் சார்ந்திருந்தால் போதும் இயற்கையை அவனிஷ்டத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் நினைத்துக் கொண்டோம். உதாரணமாக நாம் சாலையில் செல்கிறோம், மின்சாரத்தை அனுபவிக்கிறோம், குடிநீர் குடிக்கிறோம். இதற்கான வசதிகளெல்லாம் பிற மனிதர்கள் ஒவ்வொரு பணிகளை ஏற்று நடத்திக் கொண்டிருப்பதால் நம்மால் அனுபவிக்க முடிகிறது. இவ்வகை வசதிகளுக்கு நாம் சக மனிதர்களை சார்ந்து பெற்று விடுகிறோம். அதனால் இயற்கையைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்று எண்ணிவிட்டோம். சகல வசதிகளும் கொண்டு வீடு கட்டுகிறோம். மரம் வளர்க்க மாட்டோம். சகசார்புயிரி ஜீவனான காக்கை குருவிகளுக்கு வாழ இடம்தர மாட்டோம்.

வீட்டுக்குள் உலாவரும் சார்புயிரியான பல்லிகளை மருந்தடித்துக் கொல்லுவோம். வீட்டுக்குள் நுழைந்துவிடும் கண்ணுக்குத் தெரியாத விஷ வண்டுகள் பூச்சிகளை நமக்கே தெரியாமல் உணவாகத் தின்று நம்மை அவற்றிலிருந்து காத்துவரும் பல்லிகளை வாழவிடாமல் துரத்துவோம். ஆனால் சார்புயிரிகள் நம்மோடு சேர்ந்து வாழ என்றும் விருப்பம் கொண்டவை. அவைகள் நம்மைப் புரிந்து கொள்ள எப்போதும் முயன்று கொண்டே இருப்பவை.

இப்படி இயற்கையோடு சேர்ந்து வாழ்தலில் இருந்து வெளியேறியது நாம் தானேயன்றி இயற்கை அல்ல. ஆனால் இயற்கைக்கு இதனால் எந்த கஷ்டமும் இல்லை. இயற்கை தன்னைத் தானே என்றும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என ஆவதற்குள் நாம் தான் இயற்கையை வணங்கி அதனோடு இணைந்து அதன் மடியை நாட வேண்டும்.

இயற்கை - அது மனிதனை விட்டு விலகுவதுமில்லை அவனைக் கைவிடுவதுமில்லை.

No comments: