Sunday, July 7, 2013

அறம் இல்லாத துறை!

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலை அறநிலையத்துறை கையக்கப்படுத்தி இருக்கிறது. கோவில் ட்ரஸ்ட்களில் முறைகேடுகள் இருப்பதாகத் தெரியவந்தால் அறநிலையத்துறை அந்தக் கோவிலை கையில் எடுத்துக்கொள்ளுமாம். அதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.

ஆனால் ஒரு கோவிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வதற்கு புகார்கள் அல்லது முறைகேடுகளை எதிர்பார்ப்பது போலத் தெரிவதில்லை. ஒரு கோவிலில் நல்ல வசூல் இருப்பதாகத் தெரிந்தாலே 'இந்த கோவிலை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்' என்று அடவடியாகக் கூறி உள்ளே புகுந்து கணக்கு வழக்கு கேட்டு ஓடி வந்துவிடுகிறது அறநிலையத்துறை என்று கூறப்படுகிறது.

பத்துக்குப் பத்தே அளவுள்ள தெருக்கோவில் ஒன்று தாம்பரம் - பெருங்களத்தூர் பாதையில் உள்ளது. அந்தச் சிறிய கோவிலில் புதிய வாகனம் வாங்குபவர்கள் பூஜை போடுவது வழக்கம். பாடிகாட் முனீஸ்வரன் மாதிரி. அந்தகோவிலை அறநிலையத்துறை கைப்பற்றி இருக்கிறது. அதற்கான பெயர்பலகையும் உள்ளது. விளக்கேற்றக் கூட வழியில்லாத மன்னர் காலக் கோவில்கள் நூற்றுக்கணக்கில் இருக்க காசை மட்டுமே குறியாக வைத்து இது போன்ற சில்லரைக்கோவில்களில் அரசு கவனம் செலுத்திக் கொண்டிருப்பது கிட்டத்தட்ட வழிபறிக்கொள்ளைக்காரர்கள் போன்ற செயலாகவே தோன்றுகிறது.

குறிப்பாக நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலை அறம் இல்லாத்துறை கையகப்படுத்தியதற்கு இவர்கள் கூறும் காரணங்களில் ஒன்று "கோவிலின் வருமானம் முழுவதும் அல்லது பகுதியோ அதை சார்ந்த ட்ரஸ்ட் க்கு மாற்றப்பட்டுள்ளது" என்பதாகும்.

ஆனால் இதில் என்ன தவறு இருக்கிறது. கோவில் ட்ரஸ்ட் உடையது தான் என்றால் அதன் வருமானமும் ட்ரஸ்ட்டுக்குச் சொந்தம் தான். அதனை ட்ரஸ்ட் எடுத்துக் கொள்ளகூடாது என்று நிர்பந்தமும் செய்ய முடியுமா? ஹிந்து அறநிலையத் துறைக்காசை எடுத்து ஹஜ் யாத்திரைக்கு காசு கொடுத்தால் மட்டும் ஞாயமா? ஜெருசலேம்க்கு கிறிஸ்தவர்கள் போவதுக்கு ஹிந்து அறநிலையத்துறை காசை ட்ரான்ஸ்பர் செய்வது மட்டும் ஞாயமா? அரசு கோவில் பணத்தை அரசு எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்பது ஞாயம் என்றால் ஒரு ட்ரஸ்ட் கோவில் பணத்தை ட்ரஸ்ட் பேருக்கு மாற்றுவதும் அந்த ட்ரஸ்ட் அதை அந்த அமைப்பின் பிற நற்காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதும் ஞாயம் தான். இதனை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை?

சரி, இப்படி கோவில்களில் முறைகேடு நடக்காமல் காக்கவே அறம் நிலையத்துறை கோவில்களை எடுத்துக் கொள்கிறது என்றால் நம் முன்னே சொல்லப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இத்துறை என்ன பதில் வைத்திருக்கிறது.

உண்டியல்கள் பணம் எண்ணும் போது ஐநூறு ஆயிரம் நோட்டுக்களை தனியாக எடுத்துத்தரும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்து அந்தக்காசை அடித்துக்கொண்டு பிரித்துக் கொள்வார்கள் அறமற்ற துறை அதிகாரிகள் என்று குற்றச்சாட்டு எழுகிறது.

கோவில் அர்ச்சகர்கள் தட்டுக்காசிலும் பங்கு கேட்டு பிடுங்கிக் கொள்வார்கள் என்பதும் அர்ச்சகர்கள் வழியே வரும் குற்றச்சாட்டுகள்.

மேலும் விபூதியை பொட்டலமாகக் கட்டி ரெண்டு முதல் ஐந்து ரூபாய் வரை காசு போடுபவர்களுக்கு பொட்டலம் விற்று அந்தக் காசை எந்த ரெக்கார்டும் இல்லாமல் பங்கு போட்டுக்குள்ளும் வியாபாரமும் அறமில்லாதுறை அதிகாரிகள் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் அர்ச்சகர்களை மிரட்டி தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால் நம் மக்கள் இது புரியாமல் அர்ச்சகர் காசு குடுத்தாத்தான் பொட்டலம் விபூதி கொடுக்கிறான் பார் என்று அவரை திட்டிக்கொண்டே வெளியே வருவோம்ஆனால் அர்ச்சகர்கள் தங்கள் பிழைப்பைக் காப்பாற்றிக் கொள்ள அவசியம் இருப்பதால் இந்த பின்புலன்கள் பற்றி வெளியே பேசாமல் தன்னைத்தானே நொந்து கொண்டு வேலை பார்க்கிறார்கள் என்றே கூறப்படுகிறது.

அர்சகர்கள் கிடைக்கும் சொற்ப வருவாய்க்கு கட்டுப்பட்டும் 'சாமி சாமி' என்ற விளிக்கு மயங்கியும் வாய்திறக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இது போன்று அதிகாரிகள் கொள்ளையடிக்கும் கோவில்களில் வேலைபார்க்கும் அர்ச்சகருக்கோ மாதச்சம்பளம் ரூபாய் 200 முதல் 2000 வரை மட்டுமே இருக்கும். ஆம், இந்தக்காலத்திலும் அதே சம்பளம் தான். ஆனால் அதிகாரிகளுக்கோ குறைந்தபட்சம் 10000 ம் முதல் 40000 வரை சம்பளம் நீளும். அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை டிக்கெட் விற்கும் காசில் பங்கு மட்டுமே கொடுக்கப்படும். பெரும்பாலான பெரிய கோவில்களில் அர்ச்சகர்களுக்கு சம்பளமே கிடையாது. டூரீஸ்ட்கள் அதிகமாக வரும் பெரிய கோவில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள் ஒப்பேற்றி விடுவார்கள் என்று கொண்டாலும் விளக்கேற்றக்கூட ஆள் வராத கோவில்களில் இருக்கும் அர்ச்சகர்களின் நிலை என்ன?

மேலும் கோவிலுக்கு பெயிண்ட் அடிக்கிறேன், கட்டிட வேலை செய்கிறேன் என்று எதையாவது கூறி இருக்கும் புராதனத்தைக் கெடுத்து அந்த காசையும் கணக்கெழுதி அடித்துக் கொண்டு விடுவார்கள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இப்படி அறநிலையாத்துறையினர் ஆயிரம் மோசடிகளைச் செய்வது நிதர்சனமாகத் தெரியும் போது தனியாரிடம் மோசடி நடக்கிறது என்று அக்கோவிலைக் கைப்பற்ற இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

இப்படிப்பட்ட மோசடிகளில் அம்பலாமன சிலவற்றை ஜனதா கட்சியின் சட்டப்பிரிவைச் சேர்ந்த திரு. டி ஆர் ரமேஷ் 'அறிந்து கொள்வோம் அறம் நிலையாத்துறையை' என்ற தனது புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

தணிக்கைத்துறையின் மூலமாகவே வெளிப்படுத்தப்பட்ட ஊழல்கள் இவை:

1. திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டன சீட்டுக்களின் அடிக்கட்டைகளில் (counterfoils) மூலமாக ஒரு வருடத்தில் செய்யப்படும் ஊழல்கள் ரூ.1.5 கோடி.

2. கோவில் பஞ்சாமிர்த உள்ளிட்ட பிரசாத விற்பனையில் ஒரு வருஷத்திற்கான ஊழல் 56 லக்ஷங்கள்.

3, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் திருச்செந்தூர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில்லிருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

4. பழனி முருகன் கோவில் வருவாயிலிருந்து பேருந்து நிலையம் ஒன்றைக் கட்டுவதற்காக 3. 5 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.

5. இன்னொரு அயோக்கியத்தனத்தைப் பாருங்கள். மாசாணி அம்மன் கோவில் வருவாயை எடுத்து  பல வசதிகள் கொண்ட இன்னோவா கார் ஒன்று வாங்கப்பட்டது. அந்தக்காரை வாங்கி வந்து அதே அம்மன் கோவில் வாசலில் வைத்து பூஜை போட்டார்கள். பின்பு நேராக அந்தக் கார் சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அறநிலையத்துறை அரசுச் செயலருக்கு கொடுக்கப்பட்டது. அரசு அவருக்கு அளித்துள்ள காருடன் இந்த சொகுசு காரையும் அவரே அனுபவித்து வந்தார். இதற்கு மாதாமாதம் பெட்ரோல் செலவும் கோவிலில் இருந்தே கொடுக்கப்பட்டது.

6. பல கோடி மதிப்புள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் கோயில் அதிகாரியின் துணையோடு முஸ்லீம்களுக்கு கிரயம் செய்யப்பட்டுள்ளன அல்லது வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கிரயத்தொகையாக ரூ.19000/- க்கும் குறைவாக நீதிமன்றத்தில் கட்டப்பட்டு அந்தத் தொகையையும் கோயில் அதிகாரி பெறாமல் இருக்கிறார்.

7. கோவில் வீடுகளுக்கு பெறப்படும் வாடகைத்தொகை இன்றளவும் 1. 75 ரூபாய் மற்றும் எழுபத்தைந்து காசுகள் , .12 காசுகள் என்று இருக்கின்றன.

8. அமைச்சர் கார் ஓட்டுனருக்கு அண்ணாமலையார் கோவில் வருவாயிலிருந்து சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

(பசலி ஆண்டு 1415) ன் தணிக்கை அறிக்கையின் படி மேற்கண்ட ஊழல்களெல்லாம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் என்ன?

கோவிலை சொந்தமாக நடத்தும் ஒரு தனியார் ட்ரஸ்ட் அந்த கோவில் வருவாயை அதன் பெயருக்கு மாற்றுவது குற்றம் என்றால் ட்ரட்ஸ்ட் பெயரில் அந்தக்காசில் ஏதாவது சொத்துக்கள் வாங்குவது குற்றமென்றால் அறநிலையத்துறை என்ற பெயரில் இவர்கள் கோவில் பணத்தில் சுகவாசம் அனுபவிப்பது மட்டும் எந்த வகையில் ஞாயம்?

இதுமட்டுமல்லாமல் அதிகாரிகள் அர்ச்சகர்களை எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் தெரியுமா? 

தொடர்ந்து பார்ப்போம்...


கவனிக்க: இப்படிப்பட்ட ஊழல்கள் நிறைந்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து போராட்டம் நடத்திய தினத்தன்று தான் வேலூரில்  இந்து முன்னனி மாநிலச் செயலாளர் திரு. சு வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

No comments: