Tuesday, July 23, 2013

உலகமெல்லாம் வேதமதம்!



மிகமிகப் பழங்கால புதைபொருள் ஆராய்ச்சிகளை பார்த்தால் எல்லா அந்நிய தேசங்களிலுமே நமது வேத சமய சம்பந்தமான அம்சங்களை நிறையப் பார்க்கிறோம். உதாரணமாக கிறிஸ்துப்பிறப்பதற்குச் சுமார் 1300 வருஷங்களுக்கு முன்னால் எகிப்து தேசத்து இரண்டு அரசர்கள் செய்துகொண்ட உடன்படிக்கை சாசனம் பூமிக்கடியிலிருந்து கிடைத்திருக்கிறது. அதில் 'மித்ராவருண' சாட்சியாக இந்த உடன்படிக்கை செய்யப்படுவதாக சொல்லி இருக்கிறது. மித்ரா வருணர்கள் நமது வேதத்தில் சொல்லப்பட்ட தேவதைகள். மடகாஸ்கரில் உள்ள ஊர்களில் 75% சமஸ்கிரத மூலத்திலிருந்து வந்ததாக தெரிகிறது. அந்நாட்டின் 'ராமேஸஸ்' என்ற ராஜ பெயருக்கும் நம் ராமனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

பூகோளத்தின் கீழ்ப் பாதியிலும் இத்தகைய அடையாளங்களே உள்ளன. மெக்ஸிகோவில் நமது நவராத்திரிப் பண்டிகையின்போது ஒர் உற்சவம் நடக்கிறது. அதற்கு 'ராமஸீதா' என்று பெயர். அங்கே பூமியை வெட்டும் இடங்களிலெல்லாம்பிள்ளையார் விக்கிரம் அகப்படுகிறது. ஸ்பெயின் தேசத்தார் புகுந்து அந்த நாட்டை வசப்படுத்தும் முன் அங்கு ஆஸ்டெக்ஸ் (Aztecs) பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். ‘(Aztecs)’ இது 'ஆஸ்திக' என்பதன் திரிபே. பெருவில் சரியாக விஷு புண்ணிய காலத்தில் சூரியாலயத்தில் பூஜை செய்கிறார்கள். இவர்களுக்குப் பெயரே இன்காஸ். 'இனன்' என்பது சூரியமனுடைய பெயர். 'இனகுல திலகன்' என்று ராமனைச் சொல்கிறோமே!

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் நிர்வாணமாக ஆடுகிற படங்களை ஒரு புஸ்தகத்தில் பார்த்தேன். (ஸ்பென்ஸர், கில்லன் என்பவர்கள் எழுதிய Native Tribes of Central Australia என்கிற புத்தகத்தில் 128, 129 என்ற எண்ணுள்ள படங்கள்). அதன்கீழ் சிவா டான்ஸ் என்று போட்டிருந்த்து. நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். ஆடுகிற ஒவ்வொருவர் நெற்றியிலும் மூன்றாவ்து கண் வரைந்திருக்கிறது.

போர்னியோ தீவைல் பிரம்ம சிருஷ்டி முதல் யாருமே உள்ளே நுழையாத காடு (Virgin Forest) என்று ஒரு பெரிய காட்டைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதில் உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்தபோது, நம் கிரந்த லிபியில் எழுதியது போல் ஒரு சாஸனம் அகப்பட்டது. அதில் இன்ன மகா ராஜா, இன்ன யக்ஞம் செய்தான். இன்னவிடத்தில் யூபஸ்தம்பம் நட்டான். பிராமணர்களுக்கு கற்பக விருட்ச தானம் செய்தான் என்று கண்டிருக்கிறது. இதை Yupa Inscription of Mulavarman of Koeti என்கிறார்கள். நம் மதத்தை ரொம்பப் பரிகாசம் செய்த இங்கிலீஷ்காரர்கள்தான் இத்தனை விஷயங்களையும் கண்டுபிடித்துச் சொல்லியிலிருக்கிறார்கள்.

இவையெல்லாவற்றையும்விட, எனக்குத் தோன்றுகிற ஒன்று சொல்கிறேன். வேடிக்கையாக இருக்கும். 'ஸகரர்கள்யாகக் குதிரையைத் தேடிப் பாதாளத்துக்கு வெட்டிக் கொண்டே போனார்கள். அப்போது  உண்டான கடலே ஸகரர் பெயரில் 'ஸாகர' மாயிற்று. கடைசியில் கபில மகரிஷியின் ஆசிரமத்துக்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள்அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை ஹிம்சித்தார்கள். அவர் திருஷ்டியினாலே அவர்களைப் பொசுக்கிச் சாம்பலாக்கி விட்டார்'. இது ராமாயணக் கதை. நம் தேசத்துக்கு நேர் கீழே உள்ள அமெரிக்காவைப் பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம் -- (மதுரை என்பது மருதை என்கிற மாதிரி) கலிபாரண்யமாக -- கலிபோர்னியாவாக -- இருக்கலாம். அதற்குப் பக்கத்தில் குதிரைத் தீவு (Horse Island), சாம்பல் தீவு (Ash Island) இவை உள்ளன.

ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது, ஸஹாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்கிறார்கள். ஸாகரம் தான் ஸஹாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

No comments: