Showing posts with label திருவள்ளுவர். Show all posts
Showing posts with label திருவள்ளுவர். Show all posts

Wednesday, January 5, 2011

வள்ளுவர் வாக்கு! - இனிய உளவாக இன்னாத கூறல்!


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்க காயைத் தின்பது போன்றதே
என்கிறார் வள்ளுவர்.

பல நேரங்களில் நாம் இனிமையாக பேசுவதை விட வள்ளென்று விழுவது நம்மையறியாமலே நடந்து விடும். அதையே கொஞ்சம் மென்மையாக சொல்லி இருந்தால் சங்கடங்களைத் தவிர்த்திருக்கலாமோ என்று பின்னால் தோன்றும். அலுவலகத்தில் வேலை செய்யும் போது பல நேரங்களில் பலரும் இப்படி உணர்ந்திருப்பார்கள். சே! கொஞ்சம் மென்மையா பேசியிருக்கலாம் என்று.

முன்பெல்லாம் சரியாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனது அலைபேசியில் அழைப்பு வரும்..

அன்றும் அப்படித்தான்...

"ஏய், டெல்லி!" என்று அந்தப் பெண்குரல் அதிகாரமாக அழைக்கும் போது கொஞ்சம் மிரட்சியாக இருக்கும்.

"யாருங்க?" என்பேன்

"டெல்லி தானே?"

"இல்லீங்க, ராங் நம்பர்"

"இன்னாது..?"

"ஹலோ, ராங்க் நம்பருங்க!" என்பேன் எரிச்சலாக.

"ஆங்.." தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஒரே நபரிடம் எத்தனை முறை "ராங் நம்பர்" என்று சொல்லிக்கொண்டே இருப்பது. அதனால் பதில் கடுப்பாகவே வெளிப்படும். "கனியிருப்ப காய்கவர்ந்தற்று!"

மறுநாள்..

அதே பெண் குரல்.

"ஏய், டெல்லீ.."?

"ஹலோ.. ராங் நம்பருங்க!"

"இன்னது ராங் நம்பரா.. ஏய் எங்கடா இருக்க நீ?"

"ஏங்க ராங் நம்பர்ங்க...!"

அதற்குள் எதிர் தரப்பில் ஆண்குரல் "டேய்... த்தா..இன்னா ராங் நம்பரா? டேய் நாயே.. ****** ******, ********* , *************, ******** , ****************, மீண்டும் பெண்குரல் டேய்...**** *****". 'ஸேம் ப்ளட்"

ஆத்தாடி தொடர்பை நானே துண்டித்து விட்டேன்..... ராங் நம்பர்ன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?

நான் வாங்கிய அலைபேசி எண் இதற்கு முன்னர் டெல்லிக்கோ பம்பாய்க்கோ இருந்திருக்கலாம் என்று புரிந்து கொண்டேன்.

சரியாக ஆறு மாதம் கழித்து மீண்டும் அதே பெண் குரல்

"யாரு டெல்லியா?"

இந்த முறை எச்சரிக்கையாக பேச வேண்டும். எரிச்சலாக "ராங் நம்பர்" என்று சொல்லக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

மிகவும் அன்பொழுக அதி மரியாதையாக "மேடம், நீங்க தப்பா டயல் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்... கொஞ்சம் செக் பண்றீங்களா
மேடம்!" என்றேன்.

உடனே "ஆங் சரி!" துண்டித்துக்கொண்டார்.

மீண்டும் ஒரு முறை அதே ஊரை கூப்பிட்டார்...அந்தப் பெண்.

மறுபடியும் மிகவும் மரியாதையாக அன்பாக அதே போல் பேசினேன்.

இவ்வளவு மரியாதையாக நம்மிடம் பேசுகிறான். எனவே இவன் நிஜமாகவே நாம் அழைக்கும் டெல்லி இல்லை என்று ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பார் போலும். ராங் நம்பர் தொல்லை அத்தோடு முடிந்தது.

வள்ளுவர் வாக்கும் பலித்தது.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

வாழ்க வள்ளுவர்!

Friday, November 19, 2010

வள்ளுவர் வாக்கு!



தெரிந்து வினையாடல்:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்


விளக்கம்: இந்தச் செயலை, இன்ன காரனத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து அந்தச் செயலை செய்யும் பொறுப்பை அவனிடமே வழங்கினால் கொடுக்கப்பட்ட காரியம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்படும்.

திரு வள்ளுவர் எழுதிய இந்தக் குறள் சரியாக பொருட்பால் - அரசியல் அதிகாரத்தில் வருகிறது. அதாவது ஒருவரை ஒரு வேலைக்கு நியமிக்கும் போது அவன் அந்த வேலையை சரியாகச் செய்து முடிப்பானா, அதற்கான திறமைகள், தகுதிகள் இருக்கிறதா என்று பார்த்து தான் அவரை அந்த வேலைக்கு நியமிக்க வேண்டும் என்று கூறுகிறது குறள்.

ஆனால் தங்களைத் தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் யாரும் திருக்குறளைக் குறிப்பாக இந்தக் குறளைப் படிக்கவே இல்லையோ என்று தோன்றுகிறது. தவறான ஆட்களை தவறான பணிக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள்!





தூ... வெக்கம் கெட்ட திருடர்கள்!

.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"


- நான் திருக்குறள் படி சரியா செஞ்சிட்டேன்ல....!


"ஸ்பெக்ட்ரம் என்னவோ கருணாநிதியின் குடும்பச் சொத்தாகவே ஆகிவிட்டது. நாடு, நாட்டு நலன் என்பதெல்லாம் பற்றி அவர்கள் கவலைப் படவே இல்லை. ஏற்கனவே சினிமா கருணாநிதியின் குடும்பத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இனி அதை வெளியே கொண்டு வருவது கடினம். ரியல் எஸ்டேட் அவர்கள் கையில், அதையாவது முயன்றால் வெளியே கொண்டுவரலாம். இன்னொரு முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு தாங்காது என்று பொது ஜனங்களே பேசிக்கொள்ளும் அளவிற்கு வந்து விட்டது - திரு சோ. இன்றைய ஜெயா செய்தியிகளில்"

மீண்டும் மேற் சொன்ன குறளை நினைவு படுத்திக் கொண்டிருக்கும் போது எனக்கு அந்த சின்னப்பெண்ணின் நினைவு தான் வந்தது.




சின்னப் பெண் ஒருத்தி ஒரு நாள் ஒரு பசுவை இழுத்துக் கொண்டு சென்றுகொண்டு இருந்தாள்...

அதைப் பார்த்த ஒரு பெண்மணி "என்னம்மா இவ்ளோ கஷ்டப்பட்டு இந்தப்பசுவை இழுத்துக்கிட்டு போறியே, என்ன சமாசாரம்?" என்றாள்..

"இது எங்க அப்பாவோட பசுங்க ...இதை அடுத்த தெருவில் உள்ள காளை மாட்டுக்கிட்ட கூட்டிடுப் போறேன்.... "

"என்னம்மா அநியாயம் இதை உங்க அப்பாவே செய்யக்கூடாதா? " என்றாள் அந்தப் பெண்மணி..

"இல்லைங்க ....காள மாடு தான் செய்யணும்.."


"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" - சிந்திப்பீர்.


Wednesday, August 26, 2009

வள்ளுவர் வாக்கு


யானென தன்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது' எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன் வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.

விளக்கம்: வாழ்வியல் சுகங்கள் மீதும் இந்த உடல் மற்றும் உயிர் மீதும் அதீத ஆசைகளைக் கொண்டிருந்தால் அவற்றை விட்டு மீள முடியாது. இறப்பிற்கு பின்னும் ஆத்மா இந்த பூலோக ஆசைகள் மீதே சஞ்சரித்துக் கிடக்கும். பிறகு நிம்மதியான பிரபஞ்சத்தோடு கலக்க முடியாமல் மீண்டும் விட்டுப் போன இடத்தைத் தேடி ஆத்மா வந்தடையும். இது ஆத்மா சாந்தியடையும் நிலையினைக் கெடுத்துவிடும்.

அவ்வாறு உடல், பொருள்கள் மீது எனது என்று பற்று வைக்காமல் நான் என்பது ஆத்மா தான். உடலும் பொருளும் நாம் வாழ உதவும் ஒரு கருவியே என்று மனதார நினைத்துக் கொண்டால், இறப்பிற்குப் பின்னும் ஆத்மா வாழ்ந்து வந்த பொருள்கள் மீது ஆர்வம் கொள்ளாது கற்ப்பனைக் கெட்டாத இந்த பரந்த பிரபஞ்சத்தில் சஞ்சாரித்து அதனுடன் கலந்துவிடும்.

இந்த பக்குவம் ஒரே நாளில் வந்து விடாது. தினம் தினம் நாம் ஆத்மா என்பதை யார் ஒரு முறையேனும் தியானிக்கிறார்களோ அவர்களுக்கு மெல்ல மெல்ல கைகூடும். இன்பமும் துன்பமும் ஒன்றாகும். ஆத்மா சமநிலை அடையும். காலம் கடந்த பின் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நிம்மதியான மேலுலகம் அடைவார்கள்.

இதையே வள்ளுவர் இரண்டடிகளில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற்று வந்த சீடன் ஒருவனுக்கு தேகாபிமானம் மட்டும் குறையவே இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆசையும் கூடவே பயணித்தது.

உயிர் மீது கொள்ளும் ஆசை உடலைக் காக்கச் சொல்லும். உடல் மீது கொள்ளும் ஆசை அதனைக்காக்கும் பொருட்டு பொருளீட்ட வைக்கும். பொருளீட்டத் துவங்கினால் அதற்கு எல்லையே இல்லாமல் போகும். விரும்பியதை அடைய முற்படுவதிலேயே பவகாரியங்களும் தோன்றிவிடுகிறது. இத்தகைய ஆசைகள் முடிவற்றவை. எனவே பற்றுதல் அற்று இரு என்று சீடனுக்கு எவ்வளவோ போதித்தும் அவன் கேட்கவில்லை. சரியான தருணம் வரும் போது அவனுக்கு உணர்த்தலாம் என்று குரு காத்திருந்தார்.

திருமணத்தின் போது அக்னியைச் சுற்றி ஏழு அடிகள் நடப்பது ஏன்?

ஒரு முறை குருவும் சீடர்களும் கடுமையான குளிர் பிரதேசத்திற்குச் சென்றார்கள். அங்கே வெட்ட வெளியில் சீடர்களை அமரவைத்தார் குரு. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

எல்லோரும் அமைதியாக இருந்த நிலையில், தேகத்தின் மீது பற்றுதல் கொண்ட சீடன் கேட்டான் "குருவே, குளிர் இன்னும் அதிகமானால் என்ன செய்ய?"

குரு கூறினார் "கைகளை தேய்த்து முகத்தில் ஒற்றிக்கொள்"

"குருவே! குளிர் அதை விட அதிகம் என்றால்?"

"ஒரு கம்பளி எடுத்து போர்த்திக் கொள்?"

"கம்பளி போர்த்தியும் தாங்க முடியாத குளிர் என்றால்"

"நெருப்பை மூட்டி கதகதப்பாய் இரு"

"குருவே! நெருப்புக்கும் அடங்காத குளிர் என்றால்?"

"உறைந்து போ!" என்றார் குரு.

உணர்ந்து கொண்டான் சீடன்.

Saturday, July 11, 2009

வள்ளுவர் வாக்கு

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

பிறிதொரு உயிரின் துன்பத்தை தன் துன்பம் போலக் கொள்ளாத இடத்தில் அறிவினால் ஆகும் பயன் தான் ஏதும் உண்டா!

ஒரு சிறிய எடுத்துக்காட்டு என்னவெனில், ஊரே வியக்கும் வண்ணம் மிகப்பெரிய வீடு கட்டி அந்தஸ்தில் தான் எத்தகையவன் என்று உற்றாருக்கும் ஊருக்கும் எடுத்துக் காட்டும் மனிதர்கள், கடும் மழையில் சிறு நாய்க் குட்டி அந்த வீட்டின் ஒரு ஓரத்தில் ஒதுங்கினால் அடித்து விரட்ருவார்கள். வாழ இடமில்லாமல் அலையும் ஒரு ஜீவன் தானே என்ற ஒரு சிறிய பரிவு கூட இந்த மனிதர்களிடம் இருக்கவில்லையெனில் இவர்களது அறிவு இந்த சமூகத்திற்க்கு என்ன நன்மையைச் செய்து விடப்போகிறது!

Sunday, June 14, 2009

வள்ளுவர் வாக்கு


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்

விளக்கம்: இந்தச் செயலை, இன்ன காரணத்தால் இவன் செய்து முடிப்பான் என்று கண்டுகொண்டு அந்தச் செயலை முடிக்கும் பொறுப்பை அவனிடமே விடவேண்டும்.

இது மேனேஜ்மென்ட் தியரி. எம் பி ஏ படிப்பில் ஹியூமென் ரிசோர்ஸ் பாடத்தில் தொழிளாலர்களிடம் உற்சாகம் குறையாமல் வேலை வாங்குவது எப்படி என்ற பகுதியில் ஒரு தொழிளாலர்க்கு எந்த மாதிரியான வேலை கொடுக்கப்பட்டால் அவர் உற்ச்சாகமுடன் அதைச் செய்கிறார் என்று கவனிக்க வேண்டும். அந்த வேலையையே அவருக்கு தொடர்ந்து கொடுத்து அதில் ஊக்கமளித்தால் நிறுவனப் பணிகள் சிறப்புடன் நடக்க அது சரியான மேளாலரின் முடிவாக இருக்கும். இவ்வாறு எம் பி ஏ படிப்பவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் அதற்க்கு அவர்கள் லட்சக் கணக்கில் செலவு செய்து இரண்டு வருடங்கள் படிக்க வேண்டும்.

இதையே திருவள்ளுவர் இரண்டடியில் ஏழு வார்த்தையில் நறுக்கென்று விளக்கி விட்டார். இதைப் படித்தால் வேலை கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமைடா சாமி? உலகம் முழுவதும் தமிழையும் வள்ளுவரையும் பரப்ப வேண்டும். பாதிரியார்கள் மதம் மாற்றுவது போல உலக மக்களையெல்லாம் தமிழால் தமிழராய் மாற்ற வேண்டும். இருக்கும் வேத புத்தகங்களையெல்லாம் தூக்கியெறிந்து மக்கள் திருக்குறள் தான் தமது வேதம், திருவள்ளுவர் தான் ஒரே தெய்வம் என்று ஒட்டு மொத்த உலக மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போம்.

பின்குறிப்பு: நான் என் குஜராத்தி நண்பனுக்கு திருக்குறள் சொல்லிக்கொடுக்க துவங்கி விட்டேன். வாய்பிளந்து இவவளவு விஷயம் அதில் இருக்கா என்று அவர் அதிசயித்துப் போவதை ரசித்து மகிழ்கிறேன். முடிந்தால் நீங்களும் ஒரு வேற்று மொழிக்காரருக்கு திருக்குறள் சொல்லித்தாருங்கள்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

Sunday, May 31, 2009

வள்ளுவர் வாக்கு


பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்.  

தான் கொண்ட கணவனுக்கு துரோகம் செய்யாத வாறு கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால் அந்தப் பெண்ணைவிடப் பெருமை மிக்கது உலகில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை.

திருக்குறள்; 
அறத்துப்பால் ‍- இல்லறயியல்