



தெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி "நேரமாகி விட்டதே! சீக்கிரம் சாப்பிட வாருங்கள்" என்று அழைத்தாள். 





தெனாலிராமன் வரலாறு:
சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.
சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை. சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான். காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான்.
அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.
காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்:
அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.
அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர். இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார்.
அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன்.
இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார்.
இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள்.
அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள்.
பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி

ராஜகுருவை பழி வாங்குதல் :
ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.
குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர் முன் தோன்றினான்.
தெனாலிராமன் எனது துணிமணிகளைக் கொடு என்று கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ உன் துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான்.
ராமா........ என் துணிமணிகளைக் கொடுத்துவுடு. இன்னும் சிறிது நேரத்தில் நன்கு விடியப்போகிறது. இக்குளத்துக்கு பெண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்.
அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என் நிபந்தனைக்கு உட்பட்டால் உம் துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது என்று கூறி விட்டான்.என்னை அரண்மனை வரை உன் தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் தருகிறேன், இல்லையென்றால் தரமுடியாது என்று கூறி விட்டான்.
தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார். பின் துணிமணிகளை ராஜகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட ராஜகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார். இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்ககை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும் உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார். உடனே தனது காவலாளிகட்கு உத்தரவிட்டார். அதாவது தோள் மேல் இருப்பவனை நன்கு உதைத்து என்முன் நிற்பாட்டுங்கள் என்று.
உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் ஐயா என்னை மன்னியுங்கள். ராஜகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால் என் தோள் மீது தாங்கள் அமருங்கள். நான் உங்களை சுமந்து செல்கிறேன் என்றான். அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராஜகுரு தெனாலிராமன் தோள்மீது உட்கார்ந்து கொண்டான். தெனாலிராமன் ராஜகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். ராஜகுருவை நையப்புடைத்து மன்னர் முன் நிற்பாட்டினார்கள். இதைப் பார்த்த மன்னர் ராஜகுருவை ஏன் அடித்தீர்கள் என வினவினார் அதற்கு காவலாட்கள் தெனாலிராமன் தோள் மீது அமர்ந்து இருந்தவர்தான் இந்த ராஜகுரு. தாங்கள் தானே தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே செய்துள்ளோம் என்றனர்.
மன்னர் ராஜகுருவை அழைத்து விவரத்தைக் கேட்டார். ராஜகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார்.தெனாலிராமன் செய்கை மன்னருக்கு நகைச்சுவையுண்டு பண்ணினாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார்.
ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர அரண்மனை காவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினார்கள். தெனாலிராமன் நீ ராஜகுருவை அவமானப்படுத்திவிட்டாய். மேலும் அவரை உதையும் வாங்க வைத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகவே உன்னை சிரத்தேசம் செய்ய உத்தரவு இடுகிறேன் என்றார் மன்னர்.
இதைக் கேட்ட தெனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினார். அவன் தன் இஷ்ட தேவதையான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான். காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர். இனி இவ்வூரில் இருக்காதே, வேறு எங்காவது போய்விடு என்று சொன்னார்கள். அவர்களிடம் அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான். காவலாட்களும் ஒரு கோழியை அறுத்து அதன் இரத்தத்தை வாளில் தடவி மன்னரிடம் தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம் என்று சொல்லி விடடனர். மன்னரும் இதை உண்மை என்று நம்பினார்.
தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.
இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர். உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார். இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.
மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.
அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.
இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள். அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார். இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.
இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார். இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னல் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.
அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு.
மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார். உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார்.
இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.

குறைந்த விலைக்கு குதிரையை விற்றல்:
ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.
பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.
தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.
"சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான். அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்" என்றான்.
தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான். பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான்.
அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே............ இது என்ன நியாயம்" என்றான்.
சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது. மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.


அதிசயக்குதிரை:
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.
அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.
குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.
ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.
அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.
"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.



பாத்திரங்கள் குட்டி போட்ட கதை:
விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.
இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.
அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.
அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.
இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.
அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.
இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.
இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.
"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.
ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.
அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.
இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.
"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும் வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட். இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.
எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.
தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.