Wednesday, July 1, 2009

தெனாலிராமனும் திருடனும்!

தெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி "நேரமாகி விட்டதே! சீக்கிரம் சாப்பிட வாருங்கள்" என்று அழைத்தாள்.

இராமன் கைகால்களைக் கழுவிக் கொண்டு வர, வீட்டின் பின் பக்கம் கிணற்றடிக்குச் சென்றான். குவளையில் தண்ணீர் முகந்து வாயைக் கொப்பளித்து பக்கத்திலிருந்த செடிக்கு அருகிலே துப்பினான்.

துப்பி சிறிது நேரமாகியும் செடி அசைந்து கொண்டே இருப்பதை உற்றுக் கவனித்தான். அந்தச் செடி மறைவிலே ஒரு திருடன் ஒளிந்து கொண்டிருந்தான். எச்சில் தண்ணீர் பட்டவுடனே அவன் உடம்பைச் சிலிர்த்துக் கொண்டான். அதனால் தான் செடி அசைந்தது.

அந்தச் செடி மறைவிலே இருப்பவன் பலசாலியாகக் கூட இருக்கலாம். கையில் தாக்குவதற்கு ஏதாவது கூர்மையான ஆயுதத்தயும் வைத்துக் கொண்டிருக்கலாம். தான் தனி ஒருவனாக அந்த திருடனைப் பிடிக்க முடியுமா? யோசித்தான். அந்தப் பானையிலிருந்த அவ்வளவு தண்ணீரையும் கொப்புளித்து கொப்புளித்துத் துப்பிக் கொண்டேயிருந்தான். பானைத் தண்ணீர் தீர்ந்து விட்டது.

"அடியே! 'வாடி இங்கே' கிணற்றிலிருந்து வாளியில் நீர் இறைத்துக் கொடு. வாய் கொப்புளிக்க வேண்டும்" என்று கூவினான். அவன் மனைவி உள்ளே இருந்து கத்திக் கொண்டே கிணற்றடிக்கு வந்தாள். உங்களுக்கு வாய் கொப்புளிக்க ஒரு பானை தண்ணீர் கேட்கிறதா? எவ்வளவு நேரம் வாய் கொப்பளிப்பது? உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?" என்று கேட்டு விட்டாள் அவன் மனைவி.

'பளீர்' என்று அறைந்து விட்டான். "உனக்கு இவ்வளவு கொழுப்பா? தண்ணீர் கேட்டால் மொண்டு கொடுக்க வேண்டியது தானே! இது என்ன உன் அப்பன் வீட்டுத் தண்ணீரா!" என்று மீண்டும் அறையப் போனான்.

அவள் மிகவும் பயந்து போய், லபலப வென்று வாயில் அடித்துக் கொண்டு 'ஐயய்யோ! இது என்ன அநியாயம்? வீட்டை விட்டுப் போன போது நன்றாகத் தானே இருந்தார். இப்போது பைத்தியம் பிடித்துவிட்டாதே! நான் என்ன செய்வேன்?" என்று கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டாள் கமலம்.

அவள‌து அழு குரலைக் கேட்டு, 'என்னமோ ஏதோ' என்று அக்கம் பக்கத்திலிருந்தவர்களெல்லாம் அடித்து புடைத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். "என்ன ராமா! உனக்கு என்ன ஆயிற்று! புத்தி பேதலித்து விட்டதா? என்ன‌?" என்று ஆளாளுக்கு தெனாலிராமனை பிடித்து உலுக்கினார்கள்.

"என்னை விடுங்கள். நான் அவளைச் சும்மா விடப் போவதில்லை. கொஞ்சங்கூட அவளுக்குப் பொறுமையே இல்லையே! எவ்வளவு தண்ணீரானால் என்ன? அவ்வள‌வையும் கொப்பளித்துக் கொப்பளித்து நான் துப்பிக் கொண்டேயிருக்கிறேன். அந்தச் செடி மறைவிலே எவ்வள‌வு பொறுமையாக அமர்ந்திருக்கிறார் ஒருவர். அவர் யாரோ ஒருவர்..அவருக்கு இருக்கிற பொறுமை கூட என் மனைவிக்கு இல்லயே!" என்றான் ராமன்.

அவன் குறிப்பாக என்ன சொன்னான் என்பதைப் புரிந்து கொண்டதும் சில பேர் அந்தச் செடியருகே ஓடினார்கள். அங்கே அதுவரை மறைந்திருந்த அந்தத் திருடன் எழுந்து ஓட முயன்றான். ஆனால் எல்லோரும் சேர்ந்து அவனை வளைத்துப் பிடித்து நையப் புடைத்தார்கள்.

சாமர்த்தியமாக அந்தத் திருடனைப் பிடிக்க ராமன் செய்த தந்திரமே அது என்பதைப் புரிந்து கொண்டார்கள். தெனாலிராமனை எல்லோரும் பாராட்டினார்கள். தன் கணவரை எல்லோரும் பாராட்டுவதைக் கண்டு அப்படியே பூரித்துப் போய் விட்டாள் அவன் மனைவி.