Showing posts with label மகாபாரதம். Show all posts
Showing posts with label மகாபாரதம். Show all posts

Wednesday, July 11, 2012

மகாபாரத்தில் ஒரு நாள் - நான் ஒரு முடிவெடுத்தா...!





மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். கலியுக மனிதர்களைக் காட்டும் கண்ணாடி. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது. அது பாரதக் கதையில் சாத்தியம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் கூட வாழும் மனிதர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது.

பொதுவாக நம் எல்லோருக்குமே எந்த ஒரு சூழ்நிலையிலும் சரி தவறுகளை ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் திறன் இருக்கத்தான் செய்யும். மானைத் திண்ணும் புலிக்கு அதை எப்படி எப்போது சாப்பிடுவது என்று முடிவெடுக்கும் திறன் இருந்தால் அதனால் திண்ணப்படப் போகும் மானுக்கும் அதே புலியிடமிருந்து எப்போது எப்படி தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் திறனும் இருக்கும். இதில் புலியோ மானோ ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. ஆனால் ஒன்று மற்றொன்றுடன் தோற்கும் நிகழ்வைத் தீர்மானிப்பது அதனதன் சூழலே ஆகும்.

மனிதனும் அதே போன்ற சூழ்நிலைக் கைதிதான் என்பது இயற்கையின் நியதி. சூழ்நிலைகள் தான் பெரும்பாலும் நம்முடைய எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு கடந்து வருபவன் சூழலை வெற்றி பெருகிறான். கடந்து வரமுடியாமல் சுழலுக்காட்பட்டு அதனால் தூண்டப்பட்ட எண்ணங்களினால் அலைக்கழிக்கப்படுபவன் பல துன்பங்களுக்கு ஆளாகிறான். ராமாயனம் , மகாபாரதம் மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் அதுபோன்று துன்புறுபவர்களை நாம் காணமுடியும்.

உதாரணமாக சிலருக்கு தான் முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் நிலைத்திருக்கும். தன்னைப் பற்றி அவர்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் விஷயமாகவும் அது அமைந்திருக்கும். ஆனால் சூழ்நிலைகள் அவர்களை அறியாமலேயே அவர்களை மோசமாக வழிநடத்தும் போது அந்த பெருமிதம் துணைவராது. தன் முடிவு சரியென்ற நம்பிக்கையில் செயல்பட்டுப் பின் துன்பமுறுபவர்களை நாம் பார்க்கலாம்!

இதற்கு காரணம் எல்லாம் சீராகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம் முடிவுகள் சரியாக இருக்கும். ஆனால் அது பற்றிய சிந்தனை நம்  கண்களை மறைத்து ஒருவித கர்வத்தைக் கொடுத்துவிடும். அந்த மாயை நம் செயல்களின் மீது தெளிவு கொள்ளச் செய்யாது.பிறருடைய யோசனையைக் கேட்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றாது. அத்தகைய மாய வலையில் நாம் சிக்கிக் கொண்டால் பின்னர் நம்முடைய முடிவுகளுக்கும் அதனால் விளையும் நன்மை தீமைகளுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்.

அப்படி ஒரு சூழலில் தான் அன்று தர்மராஜன் யுதிஷ்ட்டிரர் இருந்தார். அந்த ஒரு நாள் பாண்டவர்களின் வாழ்வில் பல திருப்பங்களைக் கொண்டு வந்து நமக்கு கீதை கிடைக்கக் காரணமான நாள். மகாபாரத்தில் ஒரு நாள்!

ஆம், அரக்கு மாளிகை சூழ்ச்சியிலிருந்து தப்பிவந்த பாண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த காண்டவ வனத்தை நாடாக மாற்றி இந்திரபிரஸ்தம் என்கிற நாட்டை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இனி நமக்கு துன்பமில்லை என்கிற மகிழ்ச்சியில் வாழ்ந்து கொண்டிருந்த தருமபுத்திரரை சூதாட அழைக்கின்றான் துரியோதனன். தர்மபுத்திரர் யுதிஷ்டிரரும் அவனது அழைப்பை ஏற்று சூதாட்டக்களத்தில் அமர்கிறார்.

மகிழ்ச்சியான வாழ்க்கை ஓட்டத்தில் சூதுவாதுகள் புரிவதில்லை. காரணம் இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்த சூதாட்ட அழைப்புக்கு முன்பாக ஒருநாள் சகுனி வெறுமனே விளையாடிக் கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த யுதிஷ்ட்டிரனை ஒரு ஆட்டம் போடு எனக் கூப்பிட அந்த ஒரே ஆட்டத்தில் யுதிஷ்ட்டிரன் வென்று சகுனி தோற்கிறார். அதாவது தோற்பது போல யுதிஷ்ட்டிரனிடம் நடிக்கிறார்.


காரணம் இது தான், யுதிஷ்ட்டிரன் தனது முடிவுகள் மீது நம்பிக்கை கொண்டவனாக ஏற்கனவே இருந்து வருகிறார். அவனிடம் ஒரு முறை தோற்றுக் காண்பித்தால் கண்டிப்பாக தனது முடிவுகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்கிற மனத்திரை பலமாக விழுந்து விடும் என்று சகுனி நம்பினார். அது பலித்தும் விட்டது.

சகுனி திட்டம் தீட்டிய அந்த நாள் வந்தது. சூதாட்டக் களத்தில் பாண்டவர்கள் ஒரு புறம் துரியோதனன் சகுனி மற்றும் கௌரவர்கள் மறு புறமும் அமர்ந்திருக்க ஆட்டம் துவங்கியது. அந்த வேளையில் துரியோதனன் வஞ்சகமாகச் சொல்கிறான் "அவையோர்களே, என் சார்பாக என் மாமா சகுனி காய்களை உருட்டி விளையாடுவார்." என்று அறிவித்தான். அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். யுதிஷ்ட்டிரனும் புண்ணகையுடன் ஏற்றுக் கொண்டார். காரணம் ஏற்கனவே யுதிஷ்ட்டிரன் மனதில் சகுனி நம்மிடம் ஒரு முறை தோற்றவர் தானே என்றும் விளையாட்டில் நாமும் அவரை வெல்ல முடியும் என்றும் நம்பிக்கை இருந்தது. ஆனால் யுதிஷ்ட்டிரன் தான் சூழலின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததை உணரவில்லை.

ஆட்டம் துவங்கியது. தன் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும் என்கிற அவரது நம்பிக்கை பொடிப்பொடியானது. சகுனியின் சூதாட்டத் திறனுக்கு முன்னால் யுதிஷ்ட்டிரன் ஒரு முறை கூட ஜெயிக்க முடியவில்லை. தன் நாட்டை, செல்வங்களை, சகோதரர்களை, ஏன் தன்னையே வைத்து சூதாடி பின் தங்கள் மனைவியையும் வைத்துச் சூதாடி அனைத்தையும் இழந்து தலை குனிந்து நின்றான். சூழலின் மாயத்தோற்றத்தால் , அந்த மாயை தந்த மயக்கத்தால் யுதிஷ்ட்டிரன் தன்நிலை மறந்து தோல்வியுற்று நின்றான். தான் செய்யும் செயல்கள் அனைத்துமே சரியானதாக இருக்கும் என்றும் தன்னுடைய முடிவுகள் எப்போதும் வெற்றியையே தேடித்தரும் என்றும் பிறருடைய ஆலோசனைகள் தனக்குத் தேவைப்படாது என்றும் நினைப்பவர்களுக்கு அந்த நாள் ஒரு பாடமாக இருந்தது.

ஆட்டம் துவங்கும் முன்பாக யுதிஷ்ட்டிரன் ஒரு முறை தனக்கு உதவத் துணை வேண்டுமென்று நினைத்திருந்தால் இந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியிருக்கும். துரியோதனன் தனக்குப் பதிலாக தன் மாமா சகுனி விளையாடுவார் என்று அறிவித்த அடுத்த நொடி யுதிஷ்ட்டிரனும் தனக்குப் பதிலாக தன் உறவினனும் உற்ற நண்பனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கே விளையாடுவார் என கண்ணனை அழைத்திருந்தால் அவன் நாடிழந்திருக்க மாட்டான். தன் சகோதர்களை இழந்திருக்க மாட்டான். மனைவி திரௌபதிக்கு அவமானம் தேடித்தந்திருக்க மாட்டான்.

அந்த ஒரு நாள் சூழல் மயக்கத்தால் யுதிஷ்ட்டிரர் செய்த தவறு குருக்ஷேத்திரத்திற்கு வழிவகுத்தது!

'என் முடிவே சரி! எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்!" என்று உங்கள் அருகில் யாரேனும் பேசுகிறார்களா!

அவர்களிடம் சொல்லுங்கள்!

குருக்ஷேத்திரம் காத்திருக்கிறது!


Wednesday, October 13, 2010

மஹாபாரதத்தில் ஒரு நாள் - 4 செய்வனத் திருந்தச் செய்!




மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். கலியுக மனிதர்களைக் காட்டும் கண்ணாடி. அத்தகைய உயர்ந்த இதிகாசமான மகாபாரதத்தில் அதிதிகளை உபசரிக்கும் உயர்ந்த தர்மத்தை அதன் பாத்திரங்களே வாழ்ந்து காட்டியுள்ளன. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது.

பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. யுத்தம் தொடங்குவதற்கு முன் பகவான் ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையே நடந்த உரையாடலே ஸ்ரீமத் பகவத் கீதையாகும்.

நமது உறவினர்களையே கொலைபுரியும் இந்தப் போர் தேவைதானா? என்று அர்ஜுனன் செயலற்ற நிலையில் நின்றிருந்தபோது, "அர்ஜுனா, போர் செய்வதும் தர்மத்தை நிலைநாட்டுவதும் க்ஷத்ரியனான உனது கடமை. உன் கடமையிலிருந்து நீ தவறாதே" என்று எடுத்துரைத்து கடமையாற்றுவதால் அடையக்கூடியதான பூரண நிலையைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.

"அர்ஜுனா! தன்னுடைய கடமையில் பற்றுள்ள ஒவ்வொருவனும் பூரண நிலையை அடைகிறான். தன் கடமையைச் செய்து கொண்டே அவனால் எவ்வாறு பூரண நிலையை அடைய முடிகிறது என்பதைச் சொல்லுகிறேன். கேள்.!"

"இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் யாரிடமிருந்து தோன்றி உள்ளனவோ,
யாரால் இந்த உலகம் எல்லாம் நிறைந்துள்ளதோ அந்த கடவுளை தனக்குரிய கடமையைச் செய்து கொண்டே வழிபடும் மனிதன் மேன்மை அடைகிறான்."

"பார்த்தா! சிறப்புடையதாக இல்லாவிட்டாலும், தனக்குரிய கடமையைச் செய்வது, சிறப்போடு மற்றவர்களின் கடமையைச் செய்வதை விட சிறப்பானது. தனக்கு என இயல்பாக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் ஒருவன் துன்பம் அடையமாட்டான்."

"குந்தியின் மகனே! குறை உள்ளது என்றாலும் தனக்கு என இயல்பாய் அமைந்த கர்மத்தை விட்டுவிடக் கூடாது. தீயைப் புகை சூழ்வது போன்று வினைகள் எல்லாம் கேடுகளால் சூழப்பட்டுள்ளன. அவற்றை நீக்கி நீ உன் கர்மத்தை தவறாது செய்வாய்" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

இவ்வாறு ஒரு குருவின் ஸ்தானத்தில் இருந்து அர்ஜுனனுக்கு போதித்தார் ஸ்ரீ க்ருஷ்ணர். அப்படிப்பட்ட அர்ஜுனன் தன் குருவாக இருந்த ஸ்ரீ க்ருஷ்ணரின் செயல் கண்டு பதறிய நாள் ஒன்று வந்தது.

ஸ்ரீ க்ருஷ்ணர் எதை அர்ஜுனனுக்கு போதித்தாரோ அவ்வாறே அவர் வாழவும் செய்ததாலேயே வாழும் கடவுளாக அர்ஜுனன் கண்ணனைக் கைதொழுதான்.

அந்நாட்களில் இரவில் போர் புரியும் வழக்கமில்லை. போர் வீரர்கள் இரவில் ஓய்வெடுப்பார்கள். தேரோட்டிகள் குதிரைகளை கட்டி வைத்து அவைகளுக்குத் தீனியும் போட்டு மறுநாள் போருக்குத் தயார் செய்துகொண்டிருப்பார்கள்.

பகல் முழுக்கப் போரிட்டகளைப்பால் அர்ஜுனன் அன்று நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால் பகல் முழுக்கத் தேரோட்டி களைத்திருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஓய்வு கொள்ளாமல் குதிரைகள்மேல் கவனம் செலுத்துவான்.

வெந்நீர் வைத்து குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான். கட்டுக் கட்டாக பச்சை புல் வெட்டி வந்து குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான். கொள்ளை வேக வைத்து, அதைத் தன் பட்டுத் துணியில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் தருவான். அவை உண்பதைக் கண்டு மகிழ்வான். குதிரைகள் வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அந்த நேரத்தில் கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடியத் தொடங்கிவிடும். உடனே குதிரைகளைப் பூட்டி போருக்குச் செல்ல தேரைத் தயாராக்கிவிடுவான்.

ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.

ஒரு நாள், அர்ஜுனனுக்கு நள்ளிரவில் உறக்கம் கலைந்தான். எழுந்து கண்ணன் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்றான். அங்கு கண்ணன் இல்லை. தூங்கி ஓய்வெடுக்காமல் கண்ணன் எங்கு சென்றிருப்பான் என்று எண்ணியவாறு தேடினான் அர்ஜுனன்.

இறுதியில் கண்ணன் குதிரை லாயத்தில், குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.


உடனே ஓடிச் சென்று கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, ""கண்ணா! குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா? வேறு யாரிடமாவது கூறினால் செய்ய மாட்டார்களா?'' என்றான்.

"அர்ஜுனா! குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா? பகைவரை வெல்ல முடியுமா? வேறு யாரை யாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா? அது மட்டு மல்ல; இப்போது நடக்கும் போர் முடியும்வரை நாம் மைத்துனன் மார் அல்ல. நீ எஜமானன்; நான் உனக்கு சாரதி. ஆதலால் உன் கடமை போர் செய்வது; என் கடமை தேர் ஓட்டுவது. குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில்; மறுநாள் போருக்காக நன்கு ஓய்வு எடுத்துக் கொள்வது எஜமானன் தொழில். இருவரின் தொழில்களும் செம்மையாக நடைபெற்றால் தான் போரில் வெற்றி கிட்டும்! அதனால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள். என் கடமையைச் செய்யவிடாமல் குறுக்கிடாதே'' என்றான் கண்ணன்.

கீதை உபதேசம் கேட்ட நாளைவிட அன்று கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ஜுனன் நெஞ்சை நெகிழச் செய்தது.

அந்தநாள் முதல் தன் கடமையை சோர்வின்றி மகிழ்வுடன் செய்து வெற்றியைக் குவித்தான் அர்ஜுனன்.

போதனைகளை ஊருக்கெல்லாம் கூறிவிட்டு தான் மட்டும் சொகுசாக வாழும் தலைவர்களைக் கொண்ட இந்த சமூகத்திற்கு ஸ்ரீ க்ருஷ்ணர் ஒரு வாழும் பாடமே! ஆம், மகாபாரதம் வாழும் தர்மம்!



"பார்த்தா! சிறப்புடையதாக இல்லாவிட்டாலும், தனக்குரிய கடமையைச் செய்வது, சிறப்போடு மற்றவர்களின் கடமையைச் செய்வதை விட சிறப்பானது. தனக்கு என இயல்பாக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் ஒருவன் துன்பம் அடையமாட்டான்."

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


*******************

இவர் கலியுக க்ருஷ்ணரோ?


.

Saturday, July 10, 2010

மஹாபாரதத்தில் ஒரு நாள் - 3 அதிதி தேவோ பவ!




அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் புலம்

முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது இருப்பாள்.

வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

மேற்கூரிய வரிகள் விருந்தோம்பலின் சிறப்பினைப் பற்றியும் விருந்தினர்களை பேணுவதன் சிறப்பைப் பற்றியும் எடுத்தியம்புகிறார் வள்ளுவப் பெருந்தகை. இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது விருந்தினரைப் பேணுதல். அதனாலேயே வள்ளுவர் அதற்கு தனி அதிகாரமே படைத்திருக்கிறார் எனலாம். இந்த உயர்ந்த பொருளை மகாபாரதம் அற்புதமாக எடுத்துக் கூறுகிறது.

மஹாபாரதம், இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். அத்தகைய உயர்ந்த இதிகாசமான மகாபாரதத்தில் அதிதிகளை உபசரிக்கும் உயர்ந்த தர்மத்தை அதன் பாத்திரங்களே வாழ்ந்து காட்டியுள்ளன. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது. அதை விளக்கமாகப் பார்ப்போம்.

மகாபாரத்தில் ஒரு நாள்....

பாண்டவர்கள் ராஜ்ஜியத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்களே என்ற காரணத்தால் துரியோதனன் அவர்களை கூண்டோடு அழிக்க முற்பட்டான். அரக்கால் மாளிகை செய்து பாண்டவர்களுக்கு பரிசளித்தான். அவர்களை அதில் தங்கச்செய்து இரவோடு இரவாக அரன்மனையை தீயிட்டுக் கொளுத்தி பாண்டவர்களை ஒழிக்க முற்பட்டான் துரியோதனன்.

இத்திட்டத்தை முன்னமேயே அறிந்து கொண்ட பாண்டவர்கள் தாய் குந்தி தேவியுடன் அரன்மனையை விட்டு ரகசியமாக வெளியேறி விடுகின்றனர். இவ்வாறு வெளியேறியவர்கள் அந்தனர் வேஷம் பூண்டு தலைமறைவாக கிராமம் கிராமமாக செல்கின்றனர். இவ்வாறு இருக்கையில், ஏகசக்ர புரம் என்ற ஓர் கிராமத்தில் அந்தனர் ஒருவரின் வீட்டில் அதிதியாக அவர்கள் தங்க வாய்ப்பு கிடைக்கிறது.

அந்தனக் குடும்பத்தினர் அனைவரும் பாண்டவர்களையும் தாய் குந்தி தேவியையும் மிகவும் அன்புடன் நடத்தினார்கள். அந்தனரின் குழந்தைகள் குந்தி தேவியிடம் மிகுந்த மரியாதையுடனும் பாசத்துடனும் பழகின. தம் வீட்டிற்கு விருந்தினராக வந்தவர்களின் முகம் எள்ளளவும் கோனாமல் அவர்களிடம் பழகி வந்தனர் அந்தனரின் குடும்பத்தினர்.

அந்த அமைதியை கெடுக்க வந்தது அந்த நாள் பகாசுரன் ரூபத்தில். பகாசுரன் என்ற அரக்கன் அந்த கிராமமக்களை மிகவும் கொடுமைக்கு ஆளாக்கி இருந்தான். கண்டவர்களை எல்லாம் தின்று விழுங்கி வந்தான். அவனது கொடுமையை எதிர்க்க திராணியற்ற அக்கிராம மக்கள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். அவர்கள் பகாசுரனிடம் சென்று ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "பகாசுரனே! நீ எல்லா மனிதர்களையும் இரக்கமின்றி கொன்று விடுகிறாய். ஆகவே வாரம் ஒரு வண்டி உணவும், ஒரு மனிதனையும் வீட்டிற்கு ஒரு முறை வைத்து நாங்களே உனக்கு அளிக்கிறோம்" என்று ஒப்பந்தம் போட்டு விடுகிறார்கள்.


ஆம், இன்று அந்தனரின் குடும்ப முறை. பகாசுரனுக்கு உணவாக அந்தனர் தயாராகி தன் மனைவி குழந்தைகளிடம் விடை பெற நினைக்கிறார். ஆனால் குடும்பத்தினர் அவரை விட தயாராக இல்லை. மனைவியோ "இன்பம் அல்லது துன்பம் எதுவாகிலும் உம்மோடு உடனிருப்பேன் என்று கூறித்தானே மனம் புரிந்து கொண்டேன்! ஆகையால் உங்கள் துன்பத்தை நானே ஏற்று பகாசுரனுக்கு உணவாக நானே செல்கிறேன். குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுங்கள்!" கூறினாள். அவர்களது வயது வந்த மகளோ, தாய் தந்தையரைக் காப்பது பிள்ளைகளின் கடனென்றும் அதனால் தானே பகாசுரனுக்கு உணவாகச் செல்கிறேன் என்றும் கூறினாள். அவர்களது கடைக்குட்டியான மகன் தனது பிஞ்சுக் குரலில் அப்பா, நான் செல்கிறேன்" என்றான்.

ஆனால் இந்தப் போராட்டங்களை வீட்டிற்கு அதிதியாக வந்திருக்கும் குந்தியிடமோ, பாண்டவர்களிடமோ அந்தனர் குடும்பம் தெரிவிக்கவில்லை. மேலும் தாங்கள் பேசிக்கொள்வது கூட குந்தி தேவிக்குத் தெரியக்கூடாது என்று கவனமாக இருந்தனர். ஆனால் வீட்டினுள் நுழைந்த குந்தி தேவியோ இதை கேட்டுவிட்டாள். உடனே மூட்டை முடிச்சுகளுடன் பாண்டவர்களைக் கூட்டிக் கொண்டு இடத்தை காலி செய்திருக்கலாம். ஆனால் குந்தி அவ்வாறு செய்யவில்லை. மாறாக அந்தனரிடம் சென்று "நாங்கள் இந்த வீட்டில் அதிதியாக தங்கி இருக்கிறோம். ஆதலால் உங்கள் துயரம் எதுவோ அது எங்களின் துயரமும் கூட. உங்கள் வீட்டில் நாங்கள் சுகமாக விருந்துன்ன, எங்களுக்குத் தெரியாமல் நீங்கள் துயரத்தை அனுபவிப்பது தர்மம் அல்ல. ஆதலால் உங்கள் துயரை நான் ஏற்கிறேன், இது அதிதியின் கடமை. இன்று இந்த வீட்டின் முறையாக என் மகன் பீமன் பகாசுரனைச் சந்திப்பான்" என்று கூறினாள்.



ஆனால் அந்தனர் அதனை கடுமையாக எதிர்க்கிறார். "அது நடக்காது, அதிதியாக வந்திருப்பவர்களைக் காப்பது எமது கடமை" என்கிறார்.

குந்தியோ "ஒரு வீட்டில் விருந்தினராக வந்திருப்பவர்களுக்கு அந்த வீட்டின் சுகங்கள் எப்படிக் கிட்ட வேண்டியதோ, அதேபோல அந்த வீட்டினர் எதிர் கொள்ளும் சங்கடங்களை பகிர்ந்து கொள்ளும் கடமையும் இருக்கிறது" என்று கூறி பீமன் தான் அன்றைய தினம் பகாசுரனை சந்திப்பான் என்று தீர்மானமாகக் கூறுகிறாள்.

தாயின் சொற்களை வேத வாக்காக மதித்து பீமனும் வண்டி நிறைய உணவுப்பண்டங்களை பகாசுரனுக்குக் கொண்டு சென்றான். பகாசுரனின் குகை வாசலில் அமர்ந்து அத்தனை உணவுப் பொருட்களையும் தாமே தின்று பகாசுரனுடன் யுத்தம் செய்து அவனைக் கொன்றான். அந்த கிராமத்தினர் அனைவரையும் பகாசுரனின் துன்பத்திலிருந்து விடுவித்தான்.

இவ்வாறு அதிதியாகச் சென்றிருப்பவர்களும் அதிதியை உபசரிப்பவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கதாபாத்திரங்கள் மூலம் அற்புதமாக விளக்குகிறது மகாபாரதம். தற்காலத்தில் இப்படி உயர்ந்தவர்களாக நாம் நடந்து கொள்கிறோமா?

குறைந்தபட்சம் சில விஷயங்களை மனதில் கொள்ளவோம்!

தற்காலத்தில் அதிதிகளை வரவேற்கும் வீட்டாருக்கு..

விருந்தினர் முன்பாக கணவன் மனைவி சண்டை போட்டுக்கொள்வதை தவிர்க்கலாம். தாங்கள் வந்ததனால் தான் இவர்கள் சண்டை போடுகிறார்கள் போலும் என்ற தோற்றம் உண்டாவதைத் தவிர்க்கலாம்.

வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் வீட்டுப் பிள்ளைகள் கொஞ்சம் அதிக உற்சாகம் அடைந்து அவர்களிடம் விளையாடும். தன்னுடைய குறும்புத்தனத்தை காட்டும். அது குழந்தைகளின் ஹீரோயிஸம். ஆனால் அதைப் பெரிதுபடுத்தி குழந்தைகளை அவர்கள் முன்பாக அடித்து அழவைத்தால் விருந்தாளிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். அதனால் பிள்ளைகளுக்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்பாகவே அறிவுரைகளைக் கூறிவைக்கலாம். இது அநாவசிய சங்கடங்களைத் தவிர்க்கும்.

சிலர் விருந்தினர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு விளம்பர இடைவேளையில் மட்டுமே பேசுவார்கள். இது வந்தவர்களை முகம் சுளிக்க வைக்கும் மட்டுமல்லாது அடுத்த முறை உங்கள் வீட்டிற்கு மரியாதை நிமித்தமாக வருவதைக் கூட தவிர்க்க நினைப்பார்கள். (நல்லது தானே என்கிறீர்களா!)

அதே போல் விருந்தினராக ஒருவரின் வீட்டிற்க்குச் செல்பவர்கள் சில விஷயங்களை மனதில் கொள்வது நல்லது.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். மூன்று நாட்களுக்கு மேல் ஒரு வீட்டில் தங்க நேர்ந்தால் குறைந்த பட்சம் அந்த வீட்டின் காப்பி போடுவதற்காகவாவது இருவேளை பால் வாங்கிக் கொடுக்கலாம்.

குடும்பத்தினர் மொத்தமும் ஒரு வீட்டிற்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்தால் அனைவரின் சாப்பாட்டிற்கும் சேர்த்து குறைந்தபட்சம் காய்கறி வாங்கிக் கொடுக்கலாம்.

முக்கியமாக, அவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் என்ன சானல் ஓடுகிறதோ அதையே நாம் பார்ப்பது நல்லது. சிலர் சீரியல் பைத்தியமாக இருக்கலாம். அவர்களிடம் போய் 'சீ நான் இந்த சீரியலெல்லாம் பார்ப்பதே கிடையாது எப்படித்தான் பார்க்கிறீர்களோ' என்று அவர்களை நெளிய வைக்கக்கூடாது. நாம் சென்றிருக்கிறோம் என்பதால் நமது டி வி விருப்பத்தை அவர்கள் மீது தினிக்கக் கூடாது. ஏனெனில் நாம் அதிதிகளாகச் சென்றிருக்கிறோம், அவ்வீட்டின் அதிகாரிகளாக அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். அது சொந்த அண்ணன் தம்பி வீடாக இருந்தாலும் சரி.

என்னதான் உறவினர்கள் என்றாலும் அவர்களின் குழந்தைகள் சேட்டை செய்தால் கண்டிக்கிறோம் பேர்வழி என்று கடுமையாக திட்டுவதோ அடிப்பதோ கூடாது. அவ்வீட்டினரின் மனவருத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

தங்கியிருகும் வீட்டினரோடு வெளியே செல்லும் போது வழிச்செலவை பகிர்ந்துகொள்வது நல்லது. நம் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்தவர்களாயிற்றே என்று அவர்களே செலவு செய்ய முற்படுவார்கள். ஆனாலும் செலவுகளை பகிர்ந்து கொள்வதே நல்லது.

கடைவீதிகளுக்குச் சென்று நமது பிள்ளைகளுக்கு ஏதேனும் பொருட்கள் வாங்கினால் உறவினர் வீட்டுப்பிள்ளைகளுக்கும் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம். உறவினர்களின் மனது மகிழும். நாம் வந்து சென்றதை மகிழ்ச்சியுடன் நினைத்திருக்க அது வழி வகுக்கும்.

நமது வீட்டில் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் விருந்தினர்களாக ஒரு வீட்டிற்குச் சென்றிருக்கும் போது அவற்றை மனம் விட்டுப் பேசுகிறேன் பேர்வழி என்று அழுது புலம்பக் கூடாது. ஏனெனில் அவர்கள் வீட்டிலும் வேறு விதமான பிரச்சனைகளோடு அவர்கள் வாழக்கூடும். அதையும் தாண்டியே நம்மை விருந்தினர்களாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். நம்முடைய மனக் கஷ்டத்தையும் அவர்கள் தலையில் இறக்கி வைக்க நினைத்தால், அடுத்த முறை நாம் வருவோம் என்று ஊகித்தால் கூட கந்துவட்டிக்கு கடன் வாங்கியாவது திண்டுக்கல் பூட்டிற்கு ஆர்டர் கொடுத்து விடுவார்கள்.

விருந்து முடிந்து கிளம்புகையில் பிரிகிறோமே என்று கொஞ்சம் கண்ணீர் கசிந்தால் அடுத்த விருந்து வரை மனதில் நிற்கும்.

ஒரு வீட்டிற்கு விருந்தினர்களாகச் செல்லும் போதும், விருந்தினர்களை வரவேற்கும் போதும் இப்படி சில விஷயங்களை மனதில் வைத்து மகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொண்டால் உறவுகள் பலப்படும்.

சிந்திப்போம். அதிதி தேவோ பவ!


Wednesday, March 31, 2010

மகாபாரதத்தில் ஒரு நாள் - 2



பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் கொள்!



அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

பிறிதொருவர் துன்பத்தைத் தன் துன்பம் போல கொள்ளாதவன் மிகப்பெரிய அறிவாளியானாலும் அவனால் உலகிற்கு ஆகப்போகும் பயன் தான் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார் வள்ளுவப் பெருந்தகை.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அன்பும் இரக்கமும் கொண்டவரே ஆத்ம சாந்தி அடைவார்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.

உண்மையான ஆன்மா எப்போதும் பிற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல பாவித்து விடும். ஒரு காலத்தில் நம் மக்கள் அறிவை விட உணர்ச்சியாலேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஒவ்வொரு மனிதரும் தனது பருவத்திற்குத் தகுந்த உணர்வை முழுமையாக ஏற்று வாழ்ந்து வந்தனர்.

பல குழந்தைகளின் தாயானவள் வேறு பிள்ளைகளின் துன்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் பிள்ளையின் துன்பமாகவே கருதி அந்த பிள்ளைக்கு உதவுவாள். எங்கேனும் யாரேனும் துன்புற்றால் கூட யார் பெற்ற பிள்ளையோ இப்படி கஷ்டப்படுகிறதே என்று இன்னொரு தாயின் மனதை தங்கள் மனதால் வெளிப்படுத்தும் களங்கமற்ற மக்களைக் கொண்டதே நமது பூமி.

இதன் சிறப்பும் பாரம்பரியமும் இந்நாட்டு கலாச்சாரக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் இருக்கிறது. ஆன்மீகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறது.

அப்படிப்பட்ட தியாகத்தை இந்துக்களின் புராணங்களும் இதிகாசங்களும் எல்லா இடங்களிலும் கற்றுக் கொடுத்து நம்மை வழிநடத்தி வந்திருக்கின்றன.



மகாபாரத புராணத்தில் இப்படி ஒரு கருணை மிக்க நாள் ஒன்றைப் பற்றி நாம் பார்ப்போம். மகாபாரத புராணம் மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் சண்டைச் சச்சரவுகளைக் கொண்ட கதையாகத் தோன்றினாலும், அந்த அற்புத இதிகாசத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தை வலியுறுத்தும் போதனைகளாகத்தான் காட்சி தருகின்றன.

இந்த இதிகாசத்தில் தர்மபுத்திரரான யுதிஷ்டிரரும், தனது அந்திமக் காலத்தின் கடைசி நிமிடத்தில் கூட ஒரு பிராணியின் துன்பத்தைத் தன் துன்பம் போல கருதி அதற்கு பின்னரே சொர்கம் சென்றார் என்ற அழகான நிகழ்வு சொல்லப்படுகிறது. அந்த அழகான கதையைக் கொஞ்சம் பார்ப்போம்.

தங்கள் வாழும் காலம் முடிந்ததையரிந்து சொர்கலோகத்திற்கு பஞ்சபாண்டவர்கள் திரௌபதியுடன் இமாலயத்தின் உச்சத்தில் கால்நடையாக நடந்து சென்றுகொண்டே இருந்தார்கள். செல்லும் வழியில் முதலில் திரௌபதி விழுந்தாள். சிறிது தூரம் சென்றவுடன் நகுல சகாதேவர்கள் ப்ராணன் பிரிந்து விழுந்தார்கள். பிறகு அர்ஜுனன், அதன் பின் பீமன் என்று ஒவ்வொருவராக விழுந்தார்கள்.

இப்போது தர்மபுத்திரர் மட்டும் தான் மிச்சம். அவர் கூடவே ஒரு நாய் ஒன்று பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

இப்போது தர்மர் சொர்காரோகனம் என்றழைக்கப்படும் சொர்க்கத்தின் பாதையை அடைந்து விட்டார். இனி சொர்கத்திற்கு ஏற வேண்டியது தான் பாக்கி. அப்போது கூடவே வந்து கொண்டிருந்த நாய் கேட்டது. "தர்மராஜரே! எனது உடம்பின் மீது நிறைய கிருமிகள் படர்ந்துவிட்டது. அவைகளால் நான் மிகவும் துயரத்தில் இருக்கிறேன். அந்த கிருமிகளிடமிருந்து எனக்கு விடுதலையைக் கொடுத்து விட்டு நீ சொர்கத்திற்கு போயேன்!" என்றது.

தர்மரும் சரி என்று கூறி "கிருமிகளைத் தட்டி உதறிவிட்டுவிடலாம். அவைகள் உன் உடலிலிருந்து சிதறி கீழே விழுந்து விட்டால் நீ விடுதலை அடைந்து விடுவாய்" என்று கூறி நாயின் உடலைத் தட்ட முற்பட்டார்.

அப்போது கிருமிகள் எல்லாம் பதறிப்போய் பேசலாயின "தர்மபுத்திரரே! கிருமிகளாகிய நாங்கள் இந்த நாயினிடத்தில் இருப்பதை உண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே வேறு உணவு கிடைக்காது. நீங்கள் நாயை உதறி எங்களை கீழே தள்ளிவிட்டுவிட்டால் எங்கள் எல்லோருடைய
ஜீவனும் போய்விடுமே! அதனால் சற்று கருணைகாட்டுங்கள். அப்படிச் செய்து விடாதீர்கள்" என்று கிருமிகள் கூறின.

இதனைக் கேட்ட தருமபுத்திரரின் மனம் மிகவும் வருந்தியது. நாயின் கோரிக்கையை நிறைவேற்றாமல் சொர்கம் செல்ல முடியாது. நாயைக் காப்பாற்றும் பொருட்டு கிருமிகளைக் கொன்றுவிட்டாலும் சொர்க்கத்தை அடைய முடியாது. நாயையும் காப்பாற்ற வேண்டும். கிருமிகளையும் காப்பாற்ற வேண்டும். நானும் சொர்கத்திற்கு போக வேண்டும். எல்லோரும் வாழ வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசிக்கலானார் தர்மபுத்திரர்.

என்ன செய்தார் தெரியுமா? நாயின் மீதிருந்த கிருமிகளை எல்லாம் தன் உடல் மீது போட்டுக் கொண்டார். இப்போது கிருமிகளும் பிழைத்தன. நாய்க்கும் நன்மை பிறந்தது. கிருமிகளின் துன்பத்தையும் தன் துன்பமாக நினைத்து தன்னையே தியாகம் செய்தார் தருமர்.

பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் நோக்காதவனிடம் அறிவிருந்து என்ன பயன் என்றார் வள்ளுவர். இங்கே தர்மபுத்திரர் பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல கொண்டு அவர்களைக் காக்க அறிவை உபயோகப்படுத்துகிறார். அறிவும் கருணையும் ஒன்றாக இருந்தால் அதுவே சொர்கத்திற்கு வழி என்று ஒரு கதா பாத்திரத்தின் வடிவில் நின்று அற்புதமாக விளக்குகிறார் தர்மபுத்திரர்.

இவ்வாறு பிறரின் துன்பத்தை தன் துன்பமாகவே கருதிய தர்மருக்கு இந்திரனும், எமதர்மராஜனும் காட்சிதந்து அவரை அன்போடு சொர்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த அவசர யுக வாழ்க்கையில் பெற்ற தாய் தந்தையரின் துன்பத்தைக் கூட தனது துன்பமாக ஏற்று கருணையோடு காக்கும் குணம் இயந்திரமயமான மனிதர்களிடம் இருப்பதில்லை என்று பரவலாக அறியப்படுகிறது. ஆனாலும் நமக்குள்ளே இருக்கும் குறைந்தபட்ச இரக்க உணர்வை வெளிப்படுத்துவோம். அனைவரிடத்தும் அன்பும் கருணையும் காட்டியே வாழ முயல்வோம். அதுவே நமது கடமையென நமது புராணங்களும், இதிகாசங்களும், ஆன்மீகமும் நமக்கு போதிக்கின்றன. அதையே பின்பற்றி வாழ்ந்து நாமும் அமைதி என்ற சொர்கத்தை எய்துவோமாக.