ஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவும், வெவ்வேறு வள்ளல்களால் ஆதரிக்கப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.
அவர்கள் சிறப்பான நூல்கள் அல்லது பாடல்கள் பாடியுள்ளனர். தற்போது காணப்படும் வரலாறுகளை வைத்து ஒளவையார் கதைகளைத் தொகுத்தால் கீழ்க்கண்ட நால்வர் பற்றிய வரலாறுகளைத் தனிமைப்படுத்தலாம்.
1. சங்க கால ஒளவையார்
2. பாரி மகளிர் - பெண்ணை நதி என்ற கதைகளோடு தொடர்புடைய ஒளவையார்.
3. சோழர் கால ஒளவையார்
4. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார்
5. தனிப்பாடல்களின் அடிப்படையில் இன்னும் இரு ஒளவையார்கள்.
இப்போது நாம் காண இருப்பவர் சோழர் கால ஒளவையார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். ஒளவையார் மிகவும் மதி நுட்பம் கொண்டவர்.
சோழ அரசர்களுக்கு ஒளவையார் மீது தனிப்பிரியம் இருந்தது. அரசு விழாக்களில் பங்கேற்க ஒளவையாருக்கு எப்போதும் தனி அழைப்பு வந்து விடும்.
அன்றும் அப்படியே, குலோத்துங்க சோழ மன்னன் முடிசூட்டும் நாள். அமைச்சர்களும் பல புலவர்களும் அரசரை வாயார வாழ்த்தி பாடல்களைப் பாடி மன்னரை மகிழ்வித்து தாங்களும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒளவையார் மன்னனை வாழ்த்திப்பாட எழுந்தார். மன்னரும் அவையோரும் ஒளவையார் என்ன பாடப்போகிறார் என்று மிகவும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒளவையார் ‘வரப்புயர’ எனச் சொல்லி, அமர்ந்துவிட்டார்.
இதைனைக் கேட்டோர் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. பின்னர் ஒளவையாரே இத்தொடரைப் பின்வருமாறு விளக்கியதாகக் கூறுவர்.
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
என்று பாடி மன்னனை வாழ்த்தி முடித்தார் ஒளவையார். மன்னரும் அவையோரும் பெரு மகிழ்ச்சியடைந்து ஒளவையாரை பாராட்டினார்கள்.
அது சரி 'வரப்புயர' என்ற வார்த்தை மூலம் மன்னனை எப்படி வாழ்த்தினார்? இப்படித்தான்..
விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்றும் ஒளவைப் பாட்டி விளக்குகிறார்.
அதாவது மன்னனின் பணி மக்கள் பசிப்பிணி போக்குவதே என்பதையும், விவசாயம் நல்ல முறையில் நிகழ்ந்தால் தான் நாடு சுபிக்ஷமாக இருக்கும் என்றும், ஒரு நாட்டு மன்னனின் பெருமை ஒரு வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே இருக்கிறது என்றும் உணர்த்த ஒரே வார்த்தையாக 'வரப்புயர' என்று சொல்லி பின்னர் விளக்கியிருக்கிறார் ஒளவையார்.
இதிலிருந்து ஒளவைப்பாட்டி உழவுத் தொழில் நுட்பத்தை பற்றியும் நன்கு உணர்ந்தவர் என்பதையும் ஒரு வார்த்தையின் மூலமே மிகப்பெரிய அர்த்தங்களை உணர்த்துவதில் மிகுந்த மதிநுட்பம் கொண்டவர் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா!
நம் கலாச்சாரத்தில் பெண்கள் என்றும் அடிமைகளாக இருந்ததில்லை. ஆணோ பெண்ணோ அவரவர் பெற்ற ஞானத்திற்கும் அறிவுக்கும் தகுந்த மரியாதை எக்காலத்திற்கும் கிட்டும் என்பதற்கு ஒளவைப்பாட்டியே சான்று.
9 comments:
/// சுழன்றும் ஏர்பின்னது உலகம் ///
நானும் ஒரு விவசாயி தான் உங்களின் இந்த ஒளவை நுட்ப விளக்கத்தால் நான் என் ஊரிற்கே சென்று வந்துவிட்டேன்.
நன்றி.
விவசாயத்தையும் விவசாயியையும் நாட்டையும் மன்னனையும் அவர்கள்
ஒளர்ச்சி பற்றியும் அருமையாக விளக்கியுள்ளார்..!
விவசாயத்தையும் மக்களையும் மன்னனையும் பற்றிய அருமையான
விளக்கம்..!
இந்த விளக்கம் தவறு வரப்பு என்று அவ்வையார் கூறுவது குளத்தின் கரையை நெல் வயலின் வரப்பை உயர்த்தி நீரை தேக்கினால் பயிர் பாதிப்படையும்
இப்போதுள்ள மாற்றம் செய்யபட்ட நெல்லை வைத்து நமது ஔவை கூறவில்லை. நமது பாரம்பரிய நாட்டு ரகங்கள் நெடிய வளருபவை. அதனால் ஔவை கூற்றில் தவறேதும் இல்லை... இப்போதும் பாரம்பரிய நெல் காப்போரிடம் அந்த நெல் ரகங்கள் உள்ளது...
இந்த விளக்கம் தவறு வரப்பு என்று அவ்வையார் கூறுவது குளத்தின் கரையை நெல் வயலின் வரப்பை உயர்த்தி நீரை தேக்கினால் பயிர் பாதிப்படையும்//
நெல் பயரில் நீரை தேக்கினால்
பாதிப்படையும் என யார் சொன்னது ? நெற்பயிரில் தண்ணீர் மட்டும்
இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்
மட்டுமே நல்ல விளைச்சைலை
நெற்ேனிகள் கானும்❗
வரப்பு என்பது= கரை அது அணை. ஏரி, குளம், வயல் மூன்றுக்குமே பொருந்தும்.அவ்வை அதையே குறிப்பிடுகிறார் அது போன்ற காரணத்தால் தான் கல்லணை போன்றவை கட்டப்பட்டது!
வரப்புயர என்பது நிலத்தில் எல்லையை அதிகமாகிக்கொண்டே சென்றாள் அதிக அளவில் நீர் சேமிக்கப்படும் இதனால் அதிக இடங்களில் நெற்பயிர்களை பயிரிட முடியும் இதனால் அதிக விளைச்சல் உண்டாகும் இதனால் மக்கள் மகிழ்ச்சியாக வரி செலுத்துவர் இது நம் நாடு மேலும் வளர்ச்சி அடையும்
வாழ்த்துக்கள்
Post a Comment